“சுப்ரீம் கோர்ட்டின் வீரம் இந்துக்களிடம் மட்டும் தானா? முஸ்லீம்களிடம் தனது வீரத்தை காட்டுமா?” – இதை யார் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

எச்.ராஜா, ராமகோபாலன், அர்ஜூன் சம்பத், ஜெயமோகன் என பல பெயர்களை நீங்கள் யூகிக்ககூடும். ஆனால் இவர்கள் யாரும் இல்லை.இதை சொல்லியவர் ’லிபரல் ஜனநாயகவாதி’ என பெயரெடுத்த முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு.

கட்ஜு, மேலும் ஒருபடி மேலே போய் “நீதிபதிகளுக்கு சமநிலையும், கட்டுப்பாடும் இல்லை”  என்று கூறியிருக்கிறார். மேலே கூறப்பட்ட வாசகங்கள், “உயர் நீதிமன்றமாவது மயிராவது” என எச்.ராஜா பேசிய வசனத்தின் பாலிஷான வடிவம் என்றும் சொல்லலாம்.

லிபரல் கருத்துக்களைப் பேசும் ’தி வயர்’ இணையதளத்திலும், காவி பயங்கரவாதிகளின் ஆதரவு இணையதளமான ’ஸ்வராஜ்யா’ தளத்திலும் பத்தி எழுதிவருகிறார் கட்ஜூ. ஒருவர் ஒரே சமயத்தில் லிபரல் கருத்துக்களை பேசும் தளத்திலும், மதவெறியைப் பரப்பும் தளத்திலும் எழுத இயலுமா என்று உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா? எனில் நீங்கள் லிபரல் பார்ப்பனர்கள் என்கிற பதத்தை இதுவரை கேள்விபட்டதில்லை என்று நினைக்கிறேன்.

அது என்ன லிபரல் பார்ப்பனர்கள்?

இதற்கு ஒவ்வொருவரும் பலவித அர்த்தம் சொல்கிறார்கள். அசைவம் சாப்பிடும் பார்ப்பனர்களை லிபரல் பார்பனர்கள் என்பதாகவும் இன்னும் பலவாறாகவும் பலர் பல வறையறைகளை வைத்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் மணிரத்னம் படம் குறித்து பதிவர் யுவகிருஷ்ணா அவருக்கே உரிய பாணியில் எழுதியிருந்தார். அது லிபரல் பார்ப்பனர்களைப் பற்றிய ஒரு அறிமுகமாக வாசகர்களுக்கு இருக்கும் எனக் கருதுகிறேன். “முற்போக்கு பார்ப்பனர்கள் ஒரு எல்லை வரைதான் அனுமதிப்பார்கள். மணிரத்னம் பற்றி குறைகூறினால் வாய் மீதே போடுவார்கள்” என்று எழுதியிருந்தார் யுவகிருஷ்ணா.

லிபரல் பார்ப்பனர்களுக்கான ஒரு சிறப்பான உதாரணமாக நான் மார்க்கண்டேய கட்ஜுவை முன்வைக்கிறேன். அதற்கான ஆதாரத்தை நான் உங்களுக்கு புதிதாகத் தரப் போவதில்லை. கட்ஜுவே அனைத்து ஆதாரங்களையும் ஏற்கனவே தந்திருக்கிறார். அதை எடுத்தியம்பும் வேலையை மட்டுமே நான் இங்கு செய்யப் போகிறேன்.

கட்ஜு ஒரு லிபரல் பார்ப்பனர்தான் என்பதை நிருபிக்க மூன்று உதாரணங்களைத் தொகுத்தளிக்கிறேன்.

உதாரணம் #1: சபரிமலை வழக்கு vs முத்தலாக் வழக்கு

சபரிமலை வழக்கு குறித்து கட்ஜூ பின்வருமாறு சுவராஜ்யா தளத்தில் எழுதியுள்ளார்.

“ நீதிபதி இந்து மல்ஹோத்திரா தனது சிறுபான்மை தீர்ப்பில் சமநிலையுடன், சுயகட்டுப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் மற்ற நீதிபதிகளிடம் அவை இருப்பதாக சொல்ல முடியவில்லை. பல நூற்றாண்டு பழக்கவழக்கத்தில் தலையிடுவதன் மூலம் பிரச்சினைகளின் ஊற்றுக்கண்ணை திறந்திருக்கிறார்கள். நீதித்துறையை பெரும் பழி சுமக்க வைத்திருக்கிறார்கள்.

நீதித்துறை மத பழக்கவழக்கங்களில் தலையிடக் கூடாது. மதம் நம்பிக்கை சார்ந்தது. ஒவ்வொரு மதமும், வகையறாவுமே தங்களது மத நடவடிக்கைகளை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். (அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கில் இப்படித்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது)

பெரும்பான்மையான பள்ளிவாசல்களில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அனுமதிக்கப்படும் சில பள்ளிவாசல்களில் கூட தனியாக தொழுவதற்குத்தான் அனுமதிக்கப்படுகிறார்கள். நீதிமன்றம் முஸ்லீம்களிடம் தனது வீரத்தை காண்பித்து ஆண்களும் பெண்களும் சேர்ந்து தொழ உத்தரவு அளிப்பார்களா? இல்லை சுப்ரீம் கோர்ட்டின் வீரம் இந்துக்களுக்கு மட்டும்தானா?”

உச்சநீதிமன்றம் இந்துக்களுக்கு அநீதி இழைத்து முஸ்லீம்களுக்கு ஆதரவாக செயல்படுவது போன்ற தோற்றத்தை இதன் மூலம் உருவாக்குகிறார் கட்ஜு.

மேற்கண்ட கட்டுரை எழுதுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னதாகவே, மீண்டும் சொல்கிறேன், முன்னதாகவே தி வயரில் முத்தலாக் குறித்து பின்வருமாறு எழுதியிருக்கிறார் கட்ஜு.

பின்வருமாறு ஒரு வாதம் வைக்கப்படுகிறது. முத்தலாக் செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் முத்தலாக் சொல்வது என்பது மனைவியை கைவிடுவது என்பதாகிறது. அப்படியானால் மனைவியை கைவிடுவது ஏன் குறிப்பிட்ட மதத்தோடு தொடர்பு படுத்தப்படுகிறது. எந்த மதமாக இருந்தாலும் மனைவிகளை நிராதரவாக கைவிடும் கணவர்கள் அனைவரையும் ஏன் தண்டிக்கக் கூடாது?.

அப்படி செய்யலாம் என்றாலும் ஒரு தரப்பினரை சட்டவரம்புக்குள் கொண்டுவராமல் இருப்பதாலேயே அச்சட்டம் தவறு என்று ஆகிவிடாது. உதாரணமாக மருத்துவமனைக்கு அருகில் ஸ்பீக்கர் வைக்க அனுமதி இல்லை என்கிற சட்டத்தை அதே மருத்துவமனைக்கு அருகில் வண்டி ஹார்ன் சத்தம் தடை செய்யப்படவில்லை என்ற காரணத்திற்காக நீக்க முடியாது.

ஒரு சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது, அனைவரும் இயற்கையாகவோ இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலோ ஒரே நிலையில் இருப்பதில்லை.

முத்தலாக் என்பது முஸ்லீம்களுக்கு தனிசிறப்பானது. ….. பிறமதத்தின் கணவர்களுக்கு தண்டனையில்லை என்பதற்காகவே முஸ்லீம்களிடம் நிலவி வரும் நிலப்பிரபுத்துவ பழக்கவழக்கத்தை ஒழிக்கும் சட்டத்திற்கு விலக்கு அளிக்க முடியாது.”

இப்போது நமது கேள்விகளுக்கு வருவோம்.

முத்தலாக் பிற்போக்கிலிருந்து வெளிவருவதாம். சபரிமலையில் மட்டும் மதத்திற்குள் நீதித்துறை தலையிடக்கூட்டாதாம் நம் மனுநீதியரசர் கட்ஜுவுக்கு

1. உச்ச நீதிமன்றம் முஸ்லீம்களின் மத விவகாரத்தில் தலையிட்டு தீர்ப்பளித்துள்ளது என்பது நமது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு-க்கு நன்றாகவே தெரியும். எனினும் அத்தீர்ப்பையும் அதைத் தொடர்ந்து அரசு இயற்றிய சட்டத்தையும் ஆதரித்து கட்டுரையும் எழுதியுள்ளார் கட்ஜு.

உச்சநீதிமன்றமும் அரசும் முசுலீம்களின் மத விவகாரத்தில் தலையிட்டுள்ளன என்பது தெரிந்தும், சபரிமலை விசயத்தில் ”முஸ்லீம்கள் மீது கை வைக்க திராணி இருக்கிறதா?” என்று உச்சநீதிமன்றத்தை கேட்கிறார் கட்ஜூ. இதன் மூலம் இந்துக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த கட்ஜு முயல்வது ஏன் ?

 1. “ஒரு தரப்பினருக்கு பொருந்தாவிட்டாலும் சட்டம் சரியானதுதான். அவருக்கு பொருந்துமா? இவருக்கு பொருந்துமா? என்றெல்லாம் பார்க்கக் கூடாது” என்று 7 நாட்களுக்கு முன்னர் முத்தலாக் விவகாரத்தில் வகுப்பெடுத்துவிட்டு இப்போது சபரிமலை விசயத்தில் முஸ்லீம்களுக்கு பொருந்துமா என்று கேள்வி எழுப்பது ஏன் ?

முத்தலாக் விசயத்தில் பெரிய பண்டிதரை போல பல தீர்ப்புகளையும் அமெரிக்க நீதிபதியையும் மேற்கோள் காட்டிவிட்டு சபரிமலை என்றதும் ஒரு சங்கியைப் போல பொங்குகிறார் கட்ஜு.

படிக்க:
♦ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் !
கடிதம் மூலம் தலாக்! ஆணாதிக்கத்தின் வக்கிரம்!!

நன்றாக கவனித்தும் பார்த்தால், கட்ஜு ’ஸ்வராஜ்யா’ என்கிற காவி பயங்கரவாத இணையதளத்தில் சபரிமலை குறித்து எழுதுகிறார்.   ‘தி வயரில்’ தம்மை முற்போக்காக காட்டிக்கொண்டு முத்தலாக்கை எதிர்த்தும் கட்டுரை எழுதுகிறார். முன்னதில் அவர் காஷ்மீரத்து பார்ப்பன கட்ஜு, பின்னதில் அவர் லிபரல் கட்ஜு.

உதாரணம் #2: அருந்ததிராய் மற்றும் பார்ப்பனியம் குறித்து கட்ஜு

” கட்ஜு லிபரல்தான். இந்த விவகாரத்தில் மட்டும் கொஞ்சம் நடுநிலை இழந்துவிட்டார் என்று சிலர் நினைக்கலாம். இல்லை கட்ஜூ இந்துக்களுக்கு ஆதாரவாக நிற்கிறார் என்றுகூட சில இந்துமத அப்பாவிகள் நம்பலாம். அவர்களுக்காவே அவரது எழுத்தில் இருந்தே இரண்டாவது உதாரணம்.

பார்ப்பனியம் என்ற சொல்லின் மூலம் தலித்துகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறாராம் அருந்ததி ராய்

இதில் அருந்ததிராயை ஒரு அறிவிலியாக நிருபிக்க நினைத்து எழுதியிருக்கிறார்.

பார்ப்பனர்களின் எண்ணிக்கைக்கும் அரசுத்துறையிலும் அதிகாரத்திலும் அவர்கள் வகிக்கும் பதவிகளுக்குமான விகிதாச்சாரம் குறித்த புள்ளிவிவரங்கள் தொடர்பாக அருந்ததிராய் எழுதியிருக்கும் கருத்தை கோடிட்டு கட்ஜூ எழுதுகிறார்

” அவர் (அருந்ததிராய்) பார்ப்பனியம் என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார். சாதி அமைப்பு என்கிற வார்த்தைக்கு பதிலாக பார்ப்பனியம் என்கிற வார்த்தை பார்ப்பனர்களைக் காயப்படுத்துகிறது.” என்கிறார்.

அப்படி காயம்பட்ட பார்ப்பனர் யார் தெரியுமா ? அது வேறு யாருமல்ல.. நம் காஷ்மீரத்து பார்ப்பனர் கட்ஜுதான். தான் வாங்கிய அடிகளை, தன் கட்சிக்காரன் தாக்கப்பட்டதாகக் காட்டி மேடையில் பேசும் வடிவேலுவின் நகைச்சுவையை இது ஒத்திருந்தாலும் இப்படி காயம்படும்படி அடிக்கவேண்டுமா என்றும் சிலர் கேள்வி எழுப்பக்கூடும்.

பார்ப்பனியம் என்கிற வார்த்தை கட்ஜுவுக்கு ஏன் கோபத்தை வரவழைக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தோழர் மருதையன் எழுதிய கட்டுரையிலிருந்து சில வரிகளை கோடிட்டுக் காட்டுவது இங்கு பொருத்தமானதாக இருக்கும்.

” சாதி ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் யாருக்கும் தான் பிறந்த சாதியை விமரிசிக்கிறார்களே என்று சிந்தனையே எழவில்லை. தான் பிறந்த சாதியை யாரேனும் விமரிசிக்கும்போது அதன் காரணமாகக் கோபப்படுகிறவர் சாதி உணர்வைத் துறந்தவராக இருக்க முடியாது.”

மேலும் அருந்ததிராயின் மீது பின்வருமாறு தானே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தானே தீர்ப்பும் எழுதுகிறார் கட்ஜு.

“பார்ப்பனர்களையும், பார்ப்பனியத்தையும் எதிர்த்து எழுதும் அருந்ததிராய் தலித்துகளை ஆதரிக்கிறார். இது தலித் மக்களுக்கு நன்மை பயப்பதல்ல மாறாக ஊறு விளைவிப்பது.

பார்ப்பனர்கள் தங்களது விகித்தாசாரத்து அதிகமாக பதிவிகளில் இருந்தாலும் அவர்களிலும் ஏழைகளும், வேலை இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.

‘பார்ப்பனியத்தை விமர்சிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது’ என்று அருந்ததிராய் கூறுவது அறிவிலித்தனமானது, சிறுபிள்ளைதனமானது.

அருந்ததிராயின் அறிவுஜீவி முகமூடியை கிழிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது”

 

– என எழுத்திலேயே சத்ரு சம்ஹார யாகம் நடத்தியிருக்கிறார் கட்ஜு.

முத்தலாக் vs சபரிமலை விசயத்திலேயே, தான் ஒரு அடிப்படை நேர்மைகூட இல்லாத நபர் என்பதைக் காட்டிய கட்ஜு, இப்போது பூணூலை பிடித்துக்கொண்டு சண்டமாருதம் செய்கிறார்.

படிக்க:
இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்
பாலிலும் இருக்குதய்யா பார்ப்பனியம்

சரி, இங்கு நாம் கட்ஜுவிடம் கேட்க வேண்டிய சில கேள்விகளுக்கு வருவோம் !

 1. பார்ப்பனியம் என்று அழைப்பது எப்படி தலித்துகளுக்கு எதிரானதாகும்?
 2. பார்ப்பனியம் என்று கூறுவது எப்படி மக்களை பிளவுபடுத்துவதாகும்? இப்படிக் கருதும் கட்ஜு எப்பேர்பட்ட சாதி வெறியராக இருக்க வேண்டும்?

கட்ஜூவுக்கு இருப்பது வெறும் சாதி உணர்வுதான், காழ்ப்பு கிடையாது என்று கூட சிலர் நினைக்ககூடும்.

அவரை வர்ணாசிரம மனுதர்ம கருத்துடையவர், சாதி வெறியர் என்றெல்லாம் கருத எனக்கும் கூட விருப்பமில்லைதான். ஆனால் அடுத்த உதாரணம் தவிர்க்கவியலாமல் அக்கருத்துக்குத்தான் நம்மை இட்டு செல்கிறது.

உதாரணம் #3: கருணாநிதி vs ஜெயலலிதா

கட்ஜூ என்கிற நீதிதேவர் ஒரு ஊழல் எதிர்ப்புப் போராளி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அப்படி தெரியாதவர்களுக்காக கருணாநிதியின் இறுதி நாட்களில் தமிழக மக்கள், ஊடகங்களில் கருணாநிதியைப் புகழ்ந்து கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருந்தபோது டிவிட்டினார் கட்ஜூ.

“ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதி குறித்து தமிழர்கள் பலர் கவலைப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் கேட்கவேண்டியது கருணாநிதி அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அவர் சொத்து எவ்வளவு ? இப்போது அவர், அவர் மனைவிகள், ஸ்டாலின், கனிமொழி, மாறன் உள்ளிட்டவர்களின் குடும்ப சொத்து எவ்வளவு? காமராசர் இறக்கும் போது அவரிடம் சொத்து இல்லை. எவ்வளவு பெரிய வேறுபாடு? “

கருணாநிதி குறித்து தமிழர்கள் கவலைப்படுவது கட்ஜூவுக்கு உள்ளக்குமுறலை ஏற்படுத்தியிருக்கிறது.

“அடேங்கப்பா ! லஞ்ச ஊழலை கொஞ்சம் கூட சகித்துக் கொள்ளாத பெரிய கோபக்காரர் போலத் தெரிகிறதே? எந்த ஊழல் குற்றச்சாட்டிலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படாத கருணாநிதிக்கு எதிராகவே இப்படிப் பொங்குபவர், பல ஆண்டுகள் நீதிமன்றத்தை அலைக்கழித்து வாய்தா வாங்கி, இறுதியில் ஊழல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவை கிழித்துத் தொங்க விட்டிருப்பார் போலத் தெரிகிறதே” என நினைக்கிறீர்களா ?

நமது முன்னாள் நீதிபதி ஜெயலலிதாவுக்கு என்ன நீதி சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம். கருணாநிதியைப் போலவே ஜெயலலிதாவும் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் கட்ஜூ எழுதியது,

“ஜெயலலிதா ஒரு சிங்க குட்டி. அவரின் எதிரிகள் குரங்குகள். அவர் மீண்டு வருவார். பணிக்கு திரும்புவார். என் இளமை காலத்தில், அது அவரின் இளைமை காலமும்கூட, நான் அவர் மீது காதல் வயப்பட்டிருந்தேன்.”

ஒரு வேளை ஜெயலலிதாவின் ஊழல் குறித்து கட்ஜூவுக்கு தெரியாமல் இருந்திருக்குமோ? ஜெயலலிதாவுக்கு பயந்து கர்நாடகாவுக்கு மாற்றப்பட்ட வழக்கில் கணக்குப் பிழையுடன், “கூடுதலாக கொஞ்சம்தான் சொத்து சேர்த்திருக்கிறார் பரவாயில்லை” என்று குமாரசாமி வழங்கிய தீர்ப்புக்கு பிறகுதான் வாய்தா ராணி ஜெயலலிதா குறித்து “அவர் முதல்வராக இருந்தபோது நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்தவர். அவர் நீதித்துறையின் மீது செல்வாக்கு செலுத்த நினைத்ததில்லை” என்று குறிப்பிட்டார் கட்ஜு.

ஜெயலலிதா இறந்து பின்னர் உச்சநீதிமன்றத்தால் ஜெயா, சசிகலா குற்றவாளிகள் என தீர்ப்பான பிறகும் ஜெயலலிதா மீது தனக்கு இருந்த காதலை சிலாகித்து எழுதி மகிழ்ந்தார் கட்ஜூ.

ஊழல்களின் பேரரசி – கட்ஜுவின் ‘சிங்கக் குட்டி’ – ’அம்மா’

இன்று ஆறுமுகசாமி விசாரணைக்கு காரணமாக இருக்கும் ஜெயாவின் அப்பல்லோ மர்ம காலத்தில், ஜெயாவின் படங்களை வெளியிட கோரிக்கை வைத்திருந்தார் கருணாநிதி. அப்போது கட்ஜு, “கருணாநிதி என்ன மாதிரியான மனிதர். அவருக்கு மரியாதை தெரியாதா? ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிடக் கோருவது அவமானம், வெட்ககேடு, மூர்க்கமானது. கருணாநிதிக்கு நாகரிகமே கிடையாது”  என்று எழுதியிருந்தார்.

சட்டப்படியே, எந்தவித நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகள் இல்லாத,  எந்த ஊழல் வழக்கிலும் தண்டனை பெறாதவர் கருணாநிதி. ஆனால் ”கருணாநிதிக்காக ஏன் கவலைப்படுகிறீர்கள்?, அவரிடம் சொத்துக் கணக்கு கேளுங்கள்” என தமிழக மக்களிடம் கோரும் நமது முன்னாள் நீதியரசர், உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஏ1 குற்றவாளி  ஜெயலலிதா குறித்து மாய்ந்து மாய்ந்து காதல் கொள்கிறார்.

அதாவது ”கருணாநிதி எனும் சூத்திரனுக்கு ஒரு நீதி, ஜெயலலிதா எனும் பார்ப்பனத்திக்கு ஒரு நீதி” என்பதுதான் கட்ஜுவின் நீதி – அதாவது மனுநீதிதான் கட்ஜுவின் நீதி என்பதே இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது.

படிக்க:
ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”
மனு நீதி மன்றம் : சொத்துக் குவிப்பு வழக்கு உணர்த்தும் உண்மைகள் !

மேற்கண்ட மூன்று உதாரணங்களில் எடுத்தாளப்பட்ட கட்ஜுவின் சொந்த எழுத்துக்களின் முரண்களிலிருந்தே, ஒரு கிளாசிக்கல் லிபரல் பார்ப்பனருக்கான ‘டெக்ஸ்ட் புக்’ உதாரணம்தான் கட்ஜு என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

கொஞ்சம் பொறுங்கள்.. முடியவில்லை.. இன்னும் இருக்கிறது..

’ஸ்வராஜ்யா’வில் அவரது ”சமஸ்கிருதம் – ஒரு அறிவியல் மொழி” என்ற கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதேபோல தமிழின் குறைகளையும், தேவநாகரியின் மேன்மையையும் விளக்கி தமது முகநூலில் எழுதியிருக்கிறார்.

தமிழ், திராவிட இயக்கத்தின் மீதான வெறுப்பு அதனையொட்டி, கருணாநிதியின் மீதான தீராத வெறுப்பு, முத்தலாக் என்று வரும்போது லிபரல் பூச்சு, சபரிமலை விவகாரத்தில் பிற்போக்கு, பார்ப்பனியம் என்று பேசினால் நோவுவது, அதே சமயம் பத்திரிகை சுதந்திரம், சகிப்பின்மை, அது இது என கைவலிக்க டிவிட்டுவது – இதுதான் மார்க்கண்டேய கட்ஜு.

ஒரு லிபரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் கட்ஜுவை புரிந்து கொள்வது எப்படி? முன்னர் குறிப்பிட்ட தோழர் மருதையனின் கட்டுரையில் ஹேராம் படம் வெளியான போது நடந்த நிகழ்வு ஒன்றை குறித்துக் கூறியிருப்பார்.

“புதிய கலாச்சாரம் இதழில், ‘ஹே ராம்’ திரைப்படத்துக்கு எழுதப்பட்ட விமரிசனத்தில் ஞாநிக்கு உடன்பாடு இல்லை.

பார்ப்பன நடுத்தர வர்க்கத்தை நீங்கள் அளவுக்கு அதிகமாக வில்லனாகப் பார்க்கிறீர்கள். அவர்கள் பெரும்பாலும் பயந்தாங்கொள்ளிகள். ஆபத்தற்றவர்கள்” என்றவாறு அவரது(ஞாநி) கருத்து அமைந்திருந்தது.

“மேற்பரப்பில் தெரியும் அவர்களது மென்மையைக் கண்டு ஏமாறக்கூடாது. அதன் தன்மைதான் நமது கவனத்துக்குரியது. பொருத்தமான தருணத்தில் அது விகாரமாக வெளிப்படும்” என்பது அன்று என் பதிலாக இருந்தது. என் கருத்தை அவர் ஏற்கவில்லை“

– என்று எழுதியிருப்பார். கட்ஜுவின் லிபரல் மேற்பரப்பு மென்மைக்குப் பின்னால், குடி கொண்டிருக்கும் பார்ப்பன ’மனு’நீதி அரசர் கட்ஜு விகாரமாக வெளிப்பட்ட சந்தர்ப்பங்களைத்தான் நாம் மேலே பார்த்தோம்.

’தி வயர்’, ’ஸ்க்ரோல்’, ’தி இந்து’ போன்ற பத்திரிகைகளில் கட்டுரை எழுதுவதாலேயே சிலரை முற்போக்கானவர்கள் என நம்மில் பலரும் நம்புகிறோம். அதனால்தான் கட்ஜுவோ, பி.ஏ.கிருஷ்ணனோ முற்போக்காளர்களாக நம்முன் நிறுத்தப்படுகிறார்கள்.

தன் தளத்தில் பத்தி எழுதும் கட்ஜூ, ’ஸ்வராஜ்யா’வில் மதவெறியைத் தூண்டும் வகையில் எழுதுவது குறித்து ‘தி வயர்’-க்கு பிரச்சினையில்லை. இதை ’நேர்மையற்ற அறிவுஜீவித்தனம்’ (Intellectual Dishonesty) என்று கருதுவதில்லை. மாறாக, கருத்து சுதந்திரம் என்பதாக இதை எடுத்துக் கொள்கிறார்கள்.

இதை கருத்துச் சுதந்திரமாக எடுத்துக் கொள்ள முடியுமா ? பாசிசத்தின் இருள் நம் மீது கவிந்து கொண்டிருக்கும் சூழலில் இத்தகைய லிபரல் பார்ப்பனர்களை அம்பலப்படுத்துவதே காலத்தின் கட்டாயமாகும்.

 • ரவி

10 மறுமொழிகள்

 1. நல்ல பதிவுதான். ஆனால், அடிப்படை நேர்மையைப்பற்றி பேச கம்யூனிஸ்ட்டுகளுக்கும் தகுதி இல்லை. ஜோசப் ஸ்டாலின் செய்த கொடூரக் கொலைகளைப்பற்றி ஒரு பதிவையும் இங்கு பார்த்ததில்லை. நீங்கள் ஒன்றும் மோரல் ஹை கிரவுண்டில் இல்லை.

 2. Only communists have the moral high ground. Joseph stalian saved humanity and especially jews from the hands of hitlar. Second world war hero who saved the world from fascism.

 3. யுவ கிருஷ்ணாவை எல்லாம் முட்டுக்கு எடுக்கும் நிலைக்கு வந்த வினவுவை நினைக்கும் போது துக்கம் தொண்டையை அடைகின்றது

  • மாமா பதிவுல ஷொல்லியிருக்க விசயத்தை பத்தி கருத்து என்ன? சம்பந்தம் இல்லாம அவா பேரு போட்டிருக்கீங்கோ இவா பேர போட்டுருகீங்கோனு ஏன் பொங்குறேள்?

 4. 1) யுவகிருஷ்ணா யார், முற்போக்காளாரா. அவர் பதிவுகள் எல்லாமே முற்போக்கானவையா இல்லை புரட்சிகரமானவையா. ஜொள்ளுவிடும் பதிவுகளை அவர் எழுதியதில்லையா. அவரை முன்வைத்து ஒரு வாதம் வைக்கிற நிலையில் வினவு இருக்கிறார்(கள்).
  2) டி.எம்.கிருஷ்ணாவை எப்படி வகைப்படுத்துவீர்கள். ஏன் கட்ஜீவை உதாரணமாகக் கொள்கிறீர்கள். கிருஷ்ணா போன்றவர்கள் செய்வதை நீங்கள் வரவேற்பீர்கள் என்று எதிர்பார்த்து அவர் செயல்படுவதில்லை. அது போல்தான் கட்ஜூவும். தனி நபர் கருத்துக்கள், செயல்களை ஒரு குழு/சாதியுடன் பொருத்தி/பிணைத்துப் பார்ப்பது தவறு.
  3) மோகன் லாசரசின் கருத்தை அனைத்து கிருத்துவர்களின் கருத்தாக கொள்ள முடியாது. அது போல்தான் கட்ஜீவின் கருத்துக்களும். இந்த அடிப்படை உண்மையை உணராமல் செய்யப்படும் வெறுப்பரசியலால் எந்த பயனும் இல்லை. இதில் நீங்களும், இந்த்துவவாதிகளும் ஒரே மாதிரிதான் சிந்தித்து எழுதுகிறீர்கள்.
  4) ஒருவரின் கருத்தை அவரது கருத்தாகக் கொண்டு விமர்சியுங்கள். அதில் சாதி, மதம் போன்றவற்றை முன்வைத்து சரியான அணுகுமுறை அல்ல. இதே கட்ஜீ நீதிபதியாக பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அவற்றை ஆராயும் போது அவர் நீதிபதியாக சரியாக அணுகி எழுதியுள்ளாரா என்றுதானே பார்க்க வேண்டும். அங்கு அவரது சாதியோ,மதமோ கருத்தில் கொள்ளப்படக் கூடாது.
  5) ஒருவர் லிபரலா அல்லது இல்லையா என்பதுதான் கேள்வியாக இருக்க முடியும். அந்த அடிப்படையில் யுவகிருஷ்ணா யார் என்று எழுதுவீர்களா. இல்லை அங்கும் அவர் பிறந்த சாதியை முன்வைத்துத்தான் எழுதுவீர்களா.

  • கட்டுரையில் கூறியுள்ள மூன்று உதாரணங்களுக்கு உங்கள் பதிலை சொல்லவில்லை என்பதை முதலில் தெரிவித்து கொள்கிறேன்.

   அடுத்து இங்கு விவாதம் கட்ஜூவை பற்றி யுவகிருஷணாவை பற்றி அல்ல. திசை திருப்பு முயற்சியை கைவிட்டு கட்ஜூ பேசிய கருத்துக்கு வரவும்

   டி.எம் கிருஷ்ணா பார்ப்பனீயம் என்று அழைப்பதை எதிர்ப்பவர் அல்ல. அவரும் பார்ப்பனீயம் என்று பெயரிட்டே விமர்சிக்கிறார். அந்த சொல் அவருக்கு கோபத்தை வரவழைக்கவில்லை.
   டி.எம் கிருஷ்ணா கருணாநிதி இறந்த சமயத்தில் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு ஸ்கிராலில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். முடிந்தால் வாசித்து பாருங்கள். என்னை கேட்டால் கட்ஜூவின் எதிர் துருவம் என்று டி.எம் கிருஷ்ணாவை சொல்வேண். டி.எம் கிருஷ்ணா சாதி விலக்கம் செய்து கொண்ட லிபரல் . லிபரல் பார்ப்பனர் அல்ல.

   கட்ஜூ எழுதிய தீர்ப்பை குறித்தல்ல அவரது சாதிய கண்ணோட்டம் குறித்தும், லிபரலாக கட்டிகொண்டு பார்ப்பனீயத்தை முன்வைப்பவர்கள் குறித்தும் தான் விவாதம்.

 5. லிபரல் பார்ப்பனராவது எப்படி?
  Like in “ARANGETRAM Cinema K Balachander says”
  PARPPANARKALUKKU- Prostitution NOT BAD
  -for Brothers education
  -and for family support

 6. பெரும்பான்மையான பள்ளிவாசல்களில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அனுமதிக்கப்படும் சில பள்ளிவாசல்களில் கூட தனியாக தொழுவதற்குத்தான் அனுமதிக்கப்படுகிறார்கள். நீதிமன்றம் முஸ்லீம்களிடம் தனது வீரத்தை காண்பித்து ஆண்களும் பெண்களும் சேர்ந்து தொழ உத்தரவு அளிப்பார்களா? இல்லை சுப்ரீம் கோர்ட்டின் வீரம் இந்துக்களுக்கு மட்டும்தானா?”

  —————

  இஸ்லாத்தின் அடிப்படையை அறியாத மூடனாகத்தான் நான் கட்ஜுவை காண்கிறேன், இஸ்லாத்தை பொறுத்தவரை ஆண் பெண் கலப்படத்திற்கு அனுமதி இல்லை, ஆணும் பெண்ணும் தனித்தனியாக பள்ளிவாயில்களில் தொழ தடை இல்லை, ஆனால் பெண் தலைமை ஏற்கக்கூடாது, இது பெண்ணை அடிமைப்படுத்தும் செயல் அல்ல, மாறாக தொழுகை நடத்தும் இமாம் என்பவர் தொழுகை மட்டுமே நடத்துபவர் அல்ல, அதையும் தாண்டி பல பணிகள் உண்டு, உதாரணமாக பஞ்சாயத்து செய்வது, சொற்பொழிவு ஆற்றுவது, சமூக பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பது போன்றவை, இதெல்லாம் பெண்களுக்கு சாத்தியமில்லை, மாற்று ஆண்களோடு பழக்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை, (இதெல்லாம் தவறு என்பவர்கள் இன்று மீ டூ வால் பாதிக்கப்பட்டவர்கள்), ஆக ஒரு மதத்தின் அடிப்படை தெரியாத அறிவிலி எப்படி நீதிபதி ஆனார் என்று தெரியவில்லை

 7. அசாக் , ஒன்றுமில்லை. இறைவனால் படைக்கப்பட்ட பாத்திரங்களை தவிர அனைத்தையும் சமன் செய்வது என்ற போர்வையில் மனிதனை சீரழிக்கும் குள்ளநரி கூட்டத்தின் இந்திய ஏஜென்டுகளே பிரதமர் முதல் நீதிபதி வரை. ஆனால் என்ன சொன்னாலும் இவர்கள் தெரிந்தே ஆணாதிக்கம் முதலாளித்துவம் என்று திசை திருப்புவார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க