ண வாழ்க்கையில் இருப்போர் அதற்கு வெளியே பாலுறவு வைத்திருந்தால் அதில் தொடர்புடைய ஆணை தண்டிக்க சட்டப்பிரிவு 497 வழி செய்கிறது. ஆணை மட்டும் தண்டிப்பதோடு, பெண்ணை ஆணின் உடமையாகக் கருதி விலக்கு கொடுத்து அவளை ஒரு பண்டமாக கருதும் இச்சட்டம் தவறு; பாலின பாகுபாட்டைக் காட்டுகிறது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து இன்று (27.09.2018) தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தனது மனைவியின் மணவாழ்க்கைக்கு வெளியேயான உறவால் பாதிக்கப்பட்ட கணவர் அவரது மனைவியுடன் உறவில் இருந்த ஆணுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார் என்று வையுங்கள். இந்திய தண்டனைச் சட்டம் 497-இன் படி அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்க முடியும். பெண்ணுக்கு தண்டனை இல்லை.

இத்தாலி வாழ் ஜோசப் ஷைன் எனும் வெளிநாடு வாழ் இந்தியர் 2017-ஆம் ஆண்டில் மேற்கண்ட சட்டத்திற்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்தார். இச்சட்டத்தை இருபாலானாருக்கும் பொதுவாக மாற்றவேண்டும் என்பது அவரது கோரிக்கை.

உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் மத்திய அரசும் தனது வாதங்களை பதிவு செய்திருக்கிறது. அதன்படி இச்சட்டத்தில் மாற்றங்கள் செய்தால் சமூகத்தில் மோசமான விளைவுகள் ஏற்படும், சட்டமே நீர்த்து போகும், கலாச்சாரம் பாழ்படும் என்று வாதிட்டது. சலவைத் தொழிலாளி சொன்னார் என சீதையை தீக்குளிக்கச் செய்து கொன்ற இராமனின் பெயரால் கட்சி நடத்துபவர்கள்தான் உண்மையில் இன்றைய  இந்தியாவில் மக்களின் சமத்துவ கலாச்சாரத்தை கொன்று வருகிறார்கள். லவ் ஜிகாத் பெயரிலும், ஆணவக் கொலை பெயரிலும் இவர்கள் அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்களை கொன்று வருகிறார்கள்.

கி.பி 1860-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இச்சட்டம் 157 ஆண்டுகள் பழமையானது. இதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆணுக்கு 5 ஆண்டு சிறையும், சில நேரம் அபராதமும் கூட விதிக்கப்படலாம். எனினும் திருமணமான ஆண் திருமணமாகாத வயது வந்த பெண்ணுடனோ, கணவன் இறந்து போன கைம்பெண்ணுடனோ உறவு கொண்டால் இச்சட்டம் அதை குற்றமாக கருதாது.

ஆங்கிலேயர் கால சட்டங்களில் இருந்தே இத்தகைய மணவாழ்க்கை குறித்து மட்டுமல்ல, என்.எஸ்.ஏ. போன்ற அடக்குமுறைச் சட்டங்களும் இருக்கின்றன. கருத்துரிமையை பறிக்கும் இச்சட்டங்களெல்லாம் நீதிமன்றத்தின் பார்வைக்கு வராது.

இதிலும் கூட பாலின சமத்துவம் என்ற விவாதம் எத்தகையது? பாலியல் உறவிலோ, இல்லை திருமண ஒப்பந்தங்களிலோ ஆணாதிக்க சமூகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதற்காகவே கூடுதல் உரிமைகள் பெண்களுக்கு தரப்பட்டுள்ளன. ஆனால் நமது அரசு அமைப்பில் அத்தகைய உரிமைகளை ஒரு பெண்ணால் முற்றிலும் சுதந்திரமாக பயன்படுத்த முடியாத நிலையில் பல்வேறு சட்டங்கள் வெறும் ஏட்டளவிலேயே உள்ளன.

குடும்ப வன்முறை சட்டத்தின்படி ஒரு பெண் அளிக்கும் புகாரால் ஆண்கள் முகாந்திரம் இல்லாமலேயே பாதிக்கப்படுவதாக பொதுவில் பலரும் கருதுகிறார்கள். ஆனால் முகாந்திரம் இருந்தாலும் ஒரு பெண், கணவன் – வீட்டினரை எதிர்த்து புகார் கொடுக்க முடியாமல் இருப்பதே அதிகம். அதனால்தான் இன்றும் கூட இங்கே வரதட்சணை அமலில் இருப்பதோடு அதன் பெயரில் பெண்கள் கொலை செய்யப்படுவதும் அதிகம் நடக்கிறது.

பாலியல் உறவு மீறல் குறித்த பழைய சட்டம் 497-ன் படி ஒரு பெண்ணை அவளது கணவன் ஒரு சொத்தாக பார்ப்பதால்தான் வழக்கு தொடுக்க முடிகிறது என்று சொல்கிறார்கள். இது வழக்கிற்கு மட்டுமல்ல, திருமணம் செய்யாத பெண், கைம்பெண்களுக்கும் கூட பொருந்தும். அவர்கள் யாருக்கும் ‘சொத்தல்ல’ என்பதால்தான் மேற்கண்ட சட்டம் அவர்களோடு உறவு கொள்வதை குற்றமாக பார்க்கவில்லை.

பார்ப்பனிய ஆதிக்க சாதியினர் பலரும் கிராமங்களில் இன்றளவிலும் கைம்பெண்களோடு உறவு வைத்திருப்பதை மறைமுகமாக செய்கின்றனர். மாறாக அதே பெண்களை மறுமணம் செய்வதை அதே ஆதிக்க சாதியினர் விரும்புவதில்லை என்பதோடு தடையும் செய்கிறார்கள். தமிழகத்தில் இன்றும் கூட பல ஆதிக்க சாதியினர் கிராமங்களில் கைம்பெண்கள் திருமணத்திற்கு சமூக ரீதியான தடை அமலில் இருக்கிறது. மீறினால் அந்த பெண்ணை விபச்சாரி என்று தூற்றுவது முதல், கொலை செய்வது வரை பல்வேறு கொடுமைகள் செய்யப்படுகின்றன.

அறுத்துக் கட்டும் வழக்கமும் கூட சில ஆதிக்க சாதியினரிடம் இருந்த, இருக்கின்ற ஒரு ஜனநாயக நடைமுறைதான். ஆனாலும் அங்கும் கூட ஒரு பெண்ணுக்கு சொத்துரிமை, பொருளாதார உரிமை இல்லை என்பதால் அவையும் அவளது சுதந்திர வாழ்க்கைத் தெரிவிற்கு உதவுவதில்லை.

தற்போதைய சமூக நடைமுறையில் மண வாழ்க்கைக்கு வெளியே ஆன உறவு என்பது பல நெருடல்களையும், கொலைகளையும், தற்கொலைகளையும், வன்முறைகளையும், குழந்தைகளை தவிக்க விடும் அவலநிலையுமாக தொடர்கிறது. இப்போது வந்த தீர்ப்பின் படி மேற்கண்ட வெளி உறவினால் தற்கொலை நடக்காத பட்சத்தில் அதில் ஈடுபடும் ஆணை தண்டிக்கத் தேவையில்லை என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

ஆனால், அதில் ஈடுபடும் பெண்ணுக்கோ அவளது கணவன் – குழந்தைகளுக்கோ ஏற்படும் பிரச்சினைகளுக்கு என்ன பதில்? இந்த பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன?

இன்றைக்கு ஒரு பெண் தனது வாழ்க்கைத் துணைவரை சுதந்திரமாக தெரிவு செய்வதற்காக உரிமை சமூகத்தில் இல்லை. அவள் காதலித்தாலும் கூட அது அவளது பாதுகாப்பு, பொருளாதார நிச்சயமின்மை காரணமாக சில சமரசங்களோடுதான் இருக்கும். வேலைக்கு போனாலும் கூட சம்பளமோ, வங்கி அட்டைகளோ கணவனது பிடிக்கு சென்றுவிடும் போது மண வாழ்க்கைக்கு வெளியே விடுங்கள், மண வாழ்க்கையின் உள்ளே ஏற்படும் சிக்கல்களுக்குக் கூட அவளுக்கு விடுதலையோ தீர்வோ இருப்பதில்லை.

அடுத்து இந்திய சமூகத்தில் பார்ப்பனியம் பயிற்றுவித்திருக்கும் நடைமுறையால் இங்கே விவாகங்கள் மட்டுமல்ல விவாகரத்தும் கூட சுதந்திரமாக நடப்பதில்லை. குறிப்பாக ஒரு பெண்ணுக்கு அதில் முடிவெடுப்பது என்பது மறு ஜென்மம் எடுப்பது போல. பல விசயங்களையும் கணக்கில் கொண்டே அவள் முடிவு எடுக்க முடியாமல் தனது ஆயுள் தண்டனை வாழ்க்கையை தொடர்கிறார்கள். சில நேரம் ஆண்களுக்கும் கூட இது பிரச்சினைதான்.

ஆணவக் கொலை அதிகம் நடக்கும் நாட்டில் சாதி வெறியர்களைக் கூட இன்னும் தண்டிக்க முடியாத நிலையில் நமது பெண்கள் வாழ்க்கை குறித்து எப்படி முடிவெடுக்க முடியும்? சாதிவெறி, மதவெறியர்களைத் தனிமைப்படுத்தி அவர்களை முடக்கினால்தான் பெண்களின் முதல் படி விடுதலையை நோக்கி வைக்க முடியும்.

அடுத்து சமூகத்தில் பாலியல் சமத்துவமும், ஜனநாயகமும் வரவேண்டுமென்றால் அது பொருளாதார சமத்துவத்தோடும் தொடர்புடையதாக இருக்கிறது. திருமணம், கற்பு, ஒரு தாரமணம் போன்றவை கூட ஒழுக்கத்தின் பெயரில் உலா வந்தாலும் அவற்றின் அடிப்படையே சொத்துரிமையை இரத்தவழியில் மாற்றிக் கொடுப்பது மட்டுமே.

மணவாழ்க்கைக்கு வெளியே இருக்கும் உறவினால் ‘கலாச்சாரம்’ சீரழிவதாக பலரும் கருதுகிறார்கள். உண்மையில் மண வாழ்க்கையில் அதே கலாச்சாரம் – ஜனநாயகம் இல்லை என்பதே அவர்கள் கருதும் சீரழிவிற்கான அடிப்படை! காதலிலும், திருமண வாழ்விலும் எப்போது ஜனநாயகமும், பாலின சமத்துவமும் வருகிறதோ அன்றுதான் வெளி உறவுகள் நடக்காது அல்லது நடப்பதற்கான அடிப்படை இருக்காது என்பதோடு, காதலும் உண்மையாக பரஸ்பரம் இருக்க முடியும்.

ஆகவே, இன்று உச்சநீதிமன்றம் மேற்கண்ட 497 பிரிவை ரத்து செய்திருப்பது சமூக முன்னேற்றத்தில் ஒரு சிறு முன் நகர்வு என்பதைத் தாண்டி இங்கே சட்டப்படியும், சமூகப்படியும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. குன்றத்தூர் அபிராமி முதல், ‘கள்ளக்காதல்’ என்று கிசுகிசு ரசனையோடு ஊடகங்கள் வெளியிடும் அன்றாட செய்திகளும் அந்தக் கடமையை நினைவுபடுத்துகின்றன.

6 மறுமொழிகள்

  1. தீர்ப்பு படி கள்ள உறவில் பிறக்கிற குழந்தை யாரை அப்பா என்றும் அங்கிள் என்றும்அழைக்கனும் …என்று கூற பாேவது யார் …?

    • இது வரை அப்படி பிறந்த குழந்தைகள் எவரை அப்பா என்றும் அங்கிள் என்றும் அழைத்து போலி புனிதம் காத்தார்களோ, அப்படியே தொடர்ந்தும் செய்யலாம்.

  2. “இன்று உச்சநீதிமன்றம் மேற்கண்ட 497 பிரிவை ரத்து செய்திருப்பது சமூக முன்னேற்றத்தில் ஒரு சிறு முன் நகர்வு….”
    Now any culprit can openly propose to any married woman for AFFAIRS in front of her husband,
    no action can be taken,because not a criminal offence.
    Even she can give consent in front of her husband for the affairs.
    She can ask her husband himself to facilitate.

  3. கூட்டுமனசாட்ச்சிப்படி தூக்குதணடனை தீர்ப்பை வழங்கியபோதே காரி துப்பி அதை மாற்றியிருந்தால் இதுபோன்ற தீர்ப்புகள் வராது, ஆணும் பெண்ணும் சமமல்ல என்பதே என் வாதம், ஆனால் தவறு செய்த ஆணுக்கு தண்டனையை ரத்து செய்யாமல் அதேபோன்ற தண்டனையை தவறு செய்த பெண்களுக்கு வழங்குவதுதான் அறிவுடைமை, ஆனால் உச்சநீதிமன்றமோ ஆணும் பெண்ணும் சமம் என்று இருந்த தண்டனையை நீக்கி உள்ளது, இது கலாச்சார சீர்க்கேடுகளை மேலும் மேலும் அதிகமாக்கும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க