பரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் ஆண்கள் ‘சுத்த பத்தமாக’ இருக்க வேண்டும் என்பது ஒரு ‘நம்பிக்கை’ தான்! உண்மையில், பக்தி மணம் கமழ அவர்கள் தனி கிளாஸ் வைத்து டாஸ்மாக்கில் குடிக்கிறார்கள்; புகை பிடிக்கிறார்கள்; அசைவம் உண்கிறார்கள். ஆனாலும் அவர்கள் ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல எந்த தடையும் இல்லை. பம்பா நதியில் குளித்தவுடன் மாலை போட்ட பிறகும் அவர்கள் செய்த ‘பாவங்கள்’;  அவர்கள் ஆண்கள் என்ற ஒரே காரணத்துக்காக இன்ஸ்டண்டாக கழுவப்பட்டு விடும். அதேசமயம், பெண்கள் எப்படிப்பட்ட தூய்மையை கடைப்பிடித்தாலும் அவர்களுக்கு கோவிலில் அனுமதியில்லை. இந்துத்துவ மனுஸ்மிருதி வகுத்த விதியை இத்தனை நாளும் கடைப்பிடித்து வந்ததற்கு உச்சநீதிமன்றம் தடை போட்டுள்ளது. பெண்கள் அசுத்தமானவர்கள் என இதுவரை சொல்லிவந்த இந்துத்துவ கும்பலுக்கு இது பேரிடியாக அமைந்துவிட்டது. இதோ இந்து தர்மத்திற்கு பேராபத்து என அவைகள் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றன.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னவுடன், கேரள அரசு சபரிமலை வரும் பெண்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளை செய்து தர வேண்டும் என தேவசம் போர்டுக்கு அறிவுறுத்தியிருந்தது. மழையில் முளைக்கும் காளான்களைப்போல, சபரிமலை பிரச்சினையை வைத்து ஆதாயம் பார்க்கத் துடிக்கும் இந்துத்துவ கும்பல் புதிய புதிய பெயர்களில் அமைப்புகளைத் தொடங்கி போராட்டம் நடத்துகின்றன.

சென்னையில்… காவிக் கொடிகளுடன் ஊர்வலம்.

ஞாயிற்றுக்கிழமை (07-10-18) சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் சபரிமலை கோயிலின் ‘புனித’த்தைக் காப்பாற்றக்கோரி சபரிமலை ஐயப்பன் சேவா சமாஜன் உள்ளிட்ட சில அமைப்புகள் போராட்டம் நடத்தியிருக்கின்றன. அக்டோபர் 12-ஆம் தேதி முதல் ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘நாங்கள் செல்ல மாட்டோம்’ என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் ‘சபதம்’ எடுத்துக்கொண்டனர். அதாவது, ‘நாங்கள் அசுத்தமானவர்கள், தீட்டுக்குரியவர்கள்’ எனத் தாங்களாகவே முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.

ஆங்காங்கே முளைத்திருக்கும் போராட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு சபரிமலை தலைமை பூசாரி (தந்திரி) குடும்பம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்திக்க மறுத்திருக்கிறது. பந்தளம் அரச குடும்பத்தின் கீழ் உள்ள ஐயப்பன் கோவிலை இந்தக் குடும்பம்தான் கட்டுப்படுத்துகிறது. முன்னதாக அரசு குடும்பத்தினரும் தந்திரி குடும்பத்தினரும் முதல்வரை சந்திக்க செல்வதாக இருந்தனர். ஆனால், கேரள அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யும்வரை அரசு தரப்பினரை சந்திக்கப்போவதில்லை என இப்போது அறிவித்திருக்கின்றனர். பா.ஜ.க. – இந்துத்துவ கும்பல், கேரள காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகளின் ஆதரவு இவர்களை இந்த முடிவுக்கு வர வைத்திருக்கிறது.

கேரளாவில் நடைபெற்ற போராட்டம்.

அதுபோல, பா.ஜ.க. கும்பல் கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுந்தரத்தின் அலுவலத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. சபரிமலை நுழைவாயில்களில் ஒன்றான எருமேளியில் உள்ள திருவாங்கூர் தேவசம் போர்டு அலுவலகத்துக்கு பூட்டுபோட்டு ரவுடித்தனம் செய்திருக்கிறது ‘சபரிமலை பாதுகாப்புக்குழு’ என்ற அமைப்பு.

பந்தளம் மாளிகையின் மேலாண் தலைவர் ரவிவர்மா ராஜா, ” சி.பி.எம். அரசுதான் இந்த சூழ்நிலைக்கு காரணம்” என்கிறார். ”உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதைப் போல, மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்வது அரசின் கடமை. குறைந்தபட்சம் தீர்ப்பை அமல்படுத்த கால அவகாசத்தையாவது கேட்கலாம்” என்கிறார் ரவிவர்மா.

கேரள அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இணக்கமான தீர்ப்பை எட்ட முயற்சிப்பதாகவும் அரசு தரப்பு தெரிவிக்கிறது. தற்போது ஏதோ ஒரு பக்தர்கள் சங்கத்தின் பெயரில் உச்சநீதிமன்ற தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். பெண்கள் நுழைவு வேண்டி வழக்காடியவர்க்ள பக்தர்கள் இல்லை என்கிறார்கள் இந்த ’ஒரிஜினல்’ பக்தர்கள்! காங்கிரசுக் கட்சியும், பா.ஜ.க.வும் கேரளாவில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என பேசி வருகின்றன.

படிக்க:
பெண்களை இழிவுபடுத்தும் சபரிமலை ஐயப்பனை கைது செய் !
வரலாற்றைப் படித்து வர்க்கமாய் எழு தோழி!

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்,  ”ஆகம விதிகளை சுத்தபத்தமாக வைத்துக்கொள்ள பெண்கள் எவரும் சபரிமலை கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள்” என்கிறார். பொன்.ராதா போன்ற இந்துத்துவ பரிவாரங்கள் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடத்தி ஒன்றும் ஆகாத நிலையில், இப்போது பெண்கள் போகமாட்டார்கள் என மறைமுகமாக பெண்களுக்கு மிரட்டல் விடுக்கிறார். சொல்லப்போனால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விடுக்கப்பட்ட மிரட்டலும்கூட.

இதே ஆகம விதிகளைச் சொல்லித்தான் தலித்துகளுக்கும் கோவில் நுழைவு தடுக்கப்பட்டிருந்தது. பல காலப் போராட்டங்களுக்குப் பிறகு அது சாத்தியமாகியிருக்கிறது. ஏன், சென்ற ஆண்டு வரை மகாராஷ்டிர மாநில சனீஸ்வரன் கோவிலுக்குள் பெண்கள் நுழைய முடியாது. அதுவும் போராட்டத்தின் விளைவாக சாத்தியமாகியிருக்கிறது.  சபரிமலைக்கு பெண்கள் செல்வது சாத்தியமாகும். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் இந்துத்துவக் கும்பல் கத்திக்கொண்டிருக்கிறது.

தமிழகம் போல பார்ப்பனிய்த்தை எதிர்த்து பெரும் சமூகப் போராட்டங்கள் நடந்த மாநிலமாக கேரளம் இல்லை. ஆகவே அங்கே இந்துத்துவ அடிமைத்தனத்தின் கீழ் கோவில் நுழைவை எதிர்த்து வரும் சப்தம் அதிகமாகவே இருக்கிறது. இறுதியில் ஒரு கோயிலில் சாமி கும்பிடுவதில் பாலின சமத்துவம் வேண்டும் என்பதற்கே நாம் மிகப்பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது.

செய்தி ஆதாரங்கள்:
Ayyappa devotees stage stir against Supreme Court verdict
Stalemate in Kerala on Sabarimala row

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க