கந்தனுக்கு அரோகரா.. எலெக்சனுக்கு அரோகரா..

தெய்வநம்பிக்கை போலத்தான்
தேர்தல் நம்பிக்கையும்.
அதற்கு சக்தி உண்டா?
என்பதல்ல விசயம்,
சந்தேகப்படாமல்
அதை நம்ப வேண்டும்
என்பதே நிர்பந்தம்!

உன் தாத்தா நம்பினார்..
பாட்டி நம்பினார்
உன் அப்பா நம்பினார்
உன் அம்மா நம்பினார்..
ஆகவே நீயும் நம்பு

வாயில் அலகு குத்தி
வயிற்றில் ஊசி குத்தி
விரதமிருந்து
தீ மிதித்து..
எவ்வளவுக்கு எவ்வளவு
வருத்திக் கொள்கிறாயோ
அவ்வளவுக்கு அவ்வளவு
நல்லது நடக்கும்..
இந்த நம்பிக்கை
தெய்வத்திடமும் வேண்டும்
தேர்தலிடமும் வேண்டும்
அதுதான் முக்கியம்.

தெய்வத்தையும்
நீ கண்டுபிடிக்கவில்லை
தேர்தலையும்
நீ கண்டுபிடிக்கவில்லை
வந்தால் பார்த்துக்கொள்!
தந்தால் வாங்கிக்கொள்!
ஆஹா..  என்ன ஒரு தெய்வம்…
என்ன ஒரு தேர்தல்…
என்று உருகுவதைத் தவிர
உனக்கு வேறு உரிமையும் இல்லை.

ஏன்? எதற்கு?
எதிர்த்துக் கேள்வி கேட்டால்
சாமி கண்ணைக் குத்தும்
ஜனநாயகம்
உன்னைக் குத்தும்

தெய்வ குத்தமாகிவிடும்!
யாரும் வாக்கை விற்றுவிடாதிர்கள்!
தேசத்தையே விற்பதற்காகத்தான்
தேர்தலே நடக்கிறது!

தனித்தனியாக தேவையில்லை,
மொத்தமாக
சாமி பெயருக்கே அர்ச்சனை
ஓட்டுப் பெட்டியில் தட்சணை!

தலைக்குள் இருந்து
எதையும் தீர்மானிக்கும்
சிந்தனை அவசியத்திற்கு
இங்கு இடமில்லை,
தலையெழுத்தையே
தீர்மானிக்கும்
தேர்தல் தெய்வங்களைப் பாருங்கள்
அதோ.. வீதி உலா வருகின்றன,

மோடி குதிக்கிறார்..
ராகுல் நடக்கிறார்..
பன்னீர் சிரிக்கிறார்..
எடப்பாடி முறைக்கிறார்..
ஸ்டாலின் தெறிக்கிறார்..
அடடா.. எத்தனை பாவங்கள்
எத்தனை பரவசங்கள்..
இதைவிட வேறென்ன வேண்டும்?

தீபாராதனையைப் பார்த்து
கன்னத்தில் போட்டுக் கொள்ளுங்கள் !
தேர்தலைப் பார்த்து
சின்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள் !

துரை.சண்முகம்
இனி எந்தக் கவலையும்
இல்லை
ஏனெனில்
தேர்தலுக்கு பிறகு கவலைப்பட
ஆளே இருக்கப் போவதில்லை
தெய்வங்கள் விட்டுவைத்தால்தானே!

துரை. சண்முகம்


இதையும் பாருங்க:

நவம்பர் புரட்சி … உழைக்கும் வர்க்கத்தின் விடிவெள்ளி | காணொளிகள் மீள்பதிவு

2 மறுமொழிகள்

 1. தெய்வ குத்தமாகிவிடும்!
  யாரும் வாக்கை விற்றுவிடாதிர்கள்!
  தேசத்தையே விற்பதற்காகத்தான்
  தேர்தலே நடக்கிறது// 👌

  மக்களையும் மண்ணையும்……
  அனைத்தையும் ‘கூட்டிக்கொடுக்கும்’
  தேர்தல்….வாழ்க ஜனநாயகம்

  “தேர்தல் பாதை திருடர்கள் பாதை”….
  உழைக்கும் மக்களின் ‘புதிய ஜனநாயக’ அரசமைப்பைக் கட்டமைப்போம்!!

Leave a Reply to முரளி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க