நாடாளுமன்றத்தில் பதவியேற்ற தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமது உறுதிமொழியை தமிழில் வாசித்ததோடு இறுதியில் “தமிழ் வாழ்க” என முழக்கமிட்டுள்ளனர். இதற்கு எதிராக பாரத் மாதா கீ ஜே என பாரதிய ஜனதா உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி உள்ளனர். நாடாளுமன்றத்தில் நடந்த இந்தக் காட்சிகள் தமிழ் சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவாக நேற்று (18 ஜூன்) “ #தமிழ்_வாழ்க ” என்கிற ஹேஷ்டேகை தமிழர்கள் வைரலாக்கினர். பா.ஜ.க.வின் தமிழ் வெறுப்பு அப்பட்டமாக வெளிப்படுவது இது முதன்முறையும் அல்ல; கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை.

சமீபத்தில் வெளியான தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் ஆறாம் வகுப்புக்கு மேல் அனைத்து மாணவர்களும் கட்டாயம் இந்தியை ஒரு மொழிப்பாடமாக கற்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிராக தமிழகம் கொந்தளித்து எழுந்ததைத் தொடர்ந்து மெல்லப் பின்வாங்கிய மத்திய பா.ஜ.க. அரசு, எனினும், வரைவு அறிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தம் “மூன்றாவது மொழி ஒன்றை கற்க வேண்டும்” என்கிறது. இவ்வாறு மூன்றாம் மொழியாக சீனம், ரஷியன், ஜப்பான், ஸ்பானிஷ் உள்ளிட்ட சர்வதேச மொழிகளைக் கற்றுக் கொடுப்பதற்கான உள்கட்டமைப்பு அரசிடம் இல்லை என்பதால் முக்காடு போட்டுக் கொண்டு ஹிந்தியை திணிப்பதற்கான முயற்சி என்பதாகத்தான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தி பேசாத மாநிலங்களின் மேல் – குறிப்பாக தமிழகத்தின் மேல் – இந்தியைத் திணிக்கும் இந்த முயற்சிக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வரலாறு உள்ளது. பல்வேறு மதங்கள், கலாச்சார பின்னணி, மொழி, வேறுபட்ட தன்மை கொண்ட புவிப் பரப்பு என பெரிதும் வேற்றுமைகள் கொண்ட இந்த நாட்டை இணைப்பதற்கான பொது அடையாளம் ஒன்றைத் தேடும் முயற்சி சுதந்திரத்திற்கு முன்பே மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறான ஒரு பொது அடையாளமாக மொழியைத் திணிப்பதற்கான முயற்சியும் அப்போதே துவங்கப்பட்டு விட்டது.

நூற்றாண்டுகளைக் கண்ட வெள்ளையர் ஆட்சியின் விளைவாக ஆங்கிலம் மக்களை இணைப்பதற்கான ஒரு ஊடகமாக வளர்ந்திருந்தது. உயர்கல்விக்கான சாதனமாக மட்டுமின்றி வெள்ளை அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரத்தின் ஒருங்கிணைவுக்கும் ஆங்கிலமே கருவியாக இருந்தது. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே வடக்கத்திய அரசியல்வாதிகள் ஆங்கிலத்தை அந்நிய மொழியாக கருதி எதிர்த்து வந்தனர். எனினும், தென்னகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளோ ஆங்கிலத்தையே விரும்பினர். இந்த முரண்பாடு குறித்து 1937-ல் கட்டுரை ஒன்றை எழுதிய ஜவகர்லால் நேரு, இந்தியாவை இணைப்பதற்கான ஒரு மொழியின் அவசியத்தை அதில் வலியுறுத்தி இருந்தார்.

அந்த சமயத்தில் நேருவும், காந்தியும் இந்தி மற்றும் உருது கலப்பு கொண்டு ஹிந்துஸ்தானி மொழியை மக்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு சாதனமாக பயன்படுத்தலாம் என கருத்து கொண்டிருந்தனர். அதே மொழியின் அடிப்படையில் இந்து மற்றும் முசுலீம் மக்களையும் இணைத்து விட முடியும் என அவர்கள் நம்பினர். பின்னர் அரசியல் சாசன அமர்வின்போது உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் ஆர்.வி. துலேகர் இந்தியை தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென வாதாடினார். அதே போல் அரசியல் சாசனம் அதிகாரப்பூர்வ முறையில் இந்தியிலும், அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என மேலும் சில உறுப்பினர்கள் வாதாடினர்.

ஆனால், அதே அமர்வில் இருந்த பிற மொழி பேசும் உறுப்பினர்களோ இந்தியை விட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட தமிழ், வங்கம் ஒரியா உள்ளிட்ட மொழிகள் உள்ளன என்றும், இந்தியைத் திணிப்பது நியாயமில்லை எனவும் வாதாடினர். இந்நிலையில் அரசியல் சாசன அமர்வின் உறுப்பினர்களான கே.எம் முன்ஷி மற்றும் கோபால்சுவாமி அய்யங்கார் ஆகியோர் இந்தி மொழியில் அரசியல் சட்டம் இருப்பதில் உள்ள முக்கியமான சிக்கல் ஒன்றை சுட்டிக்காட்டினர். இந்தி ஒரு நவீன மொழியாகவோ, முன்னேறிய மொழியாகவோ இல்லாதிருப்பதால் சட்ட மொழியாக அது இருப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அவர்கள் தரவுகளோடு முன்வைத்தனர். அதன் பின் எந்த மொழியும் தேசிய மொழியாக இருக்க வேண்டியதில்லை எனவும், ஆங்கிலத்தோடு இந்தியும் அலுவல் மொழியாக இருக்கலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

படிக்க:
பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் விளவை இராமசாமியின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

என்றாலும் அன்றைக்குத் துவங்கி இன்று வரை ஒவ்வொரு முறை இந்தியைத் திணிக்க “தேசிய” கட்சிகள் முயற்சிப்பதும், அதை தமிழகம் எதிர்ப்பதும் வாடிக்கையாக நடந்து வருகின்றது. ஒவ்வொரு முயற்சியின் போதும், ஒரு பொது மொழி இல்லாமல் எப்படி ஒரு தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்பது? என்கிற கேள்வியை வடக்கு முன்வைக்கிறது.

மக்களை ஒன்றிணைக்க மொழியால் மட்டுமே இயலுமா?

அவ்வாறு இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இந்தியத் துணைக்கண்டம் தனது விரிந்து பரந்த நிலப்பரப்பில் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் தனக்கென தனித்த அடையாளத்தைக் கொண்டிருக்கிறது. மொழி உள்ளிட்ட இந்த தனித்த அடையாளங்கள் ஒவ்வொன்றும் பல நூற்றாண்டுகளாக – இந்தியா என்கிற ஒரு கருத்து உருவாவதற்கும் பல நூற்றாண்டுகளுக்கும் முன்பிருந்தே – வரலாற்று ரீதியில் உருவாகி நிலைபெற்றவை. என்றாலும், எங்கோ தேசத்தின் எங்கோ ஒரு மூலையில் அநீதி இழைக்கப்பட்ட நிர்பயாவுக்காக, ஆசீஃபாவுக்காக, தங்ஜம் மனோரமாவுக்காக, போட்மாங்கேவுக்காக மற்றொரு கடைக்கோடியான கன்னியாகுமரியின் முனையில் நிற்கும் ஒரு தமிழன் போராட முன்வருகிறான்.

கருகிய பயிரைக் கண்டு நெஞ்சு வெடித்து சாகும் தஞ்சை விவசாயிகளுக்கு விதர்பா விவசாயியின் கழுத்தில் இறுகும் கயிற்றின் நுணி யார் கையில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாதா? கல்விக் கடனை அடைக்க முடியாமல் வேலையும் கிடைக்காமல் பரிதவித்து அலையும் வங்கத்து இளைஞனின் நிலையை அத்துக்கூலிகளாய் நாடெங்கும் விசிறியடிக்கப்படும் பீகார் உ.பி. தொழிலாளிகள் புரிந்து கொள்ள மொழிதான் தேவையா? மக்களை இணைக்காமல் நாட்டை மட்டும் இணைத்து விட முடியாது – மக்களை அவர்களது வாழ்க்கை தான் இணைக்குமேயன்றி மொழி மாத்திரமல்ல. மொழி ஒரு கருவி மட்டுமே.

இதைப் புரிந்து கொள்ளாத மாட்டு வளைய சனாதன அரசியல்வாதிகள் இந்தியைத் திணிப்பது தேவையற்ற பகைமை உணர்ச்சியையே தூண்டி விடும். கை விரல்கள் கூட ஒரே நீளத்தில் ஒன்றே போல் இருப்பது ஆபாசமாகத்தானே இருக்கும்?

சாக்கியன்

1 மறுமொழி

  1. திரிபு வேலைகளை செய்வதற்கு உங்களை போன்ற கிறிஸ்துவர்களை மிஞ்ச ஆள் கிடையாது… தமிழக MPகள் தமிழ் வாழ்க என்று சொல்லியிருந்தால் யாரும் ஒன்றும் சொல்ல போவதில்லை, கூடவே பெரியார் வாழ்க என்று சொல்லும் போது அனைத்து ஹிந்துக்களை சீண்டுவது போல் இருந்தது.

    திருக்குறளை மலம் என்று சொன்ன பெரியாரை வாழ்க என்று சொன்ன தமிழக MPகள் கூடவே தமிழ் வாழ்க என்று சொன்னது தான் வேடிக்கை, தமிழை காட்டுமிராண்டி மொழி சொன்ன வெள்ளைக்கார அடிமை பெரியார், தமிழை வைத்து வியாபாரம் செய்யும், திமுகவினருக்கு வேண்டுமானால் முக்கியமாக இருக்கலாம் ஆனால் தமிழ் மீது உண்மையான பற்று உள்ளவர்கள் சூடு சுரணை உள்ளவர்கள் பெரியாரை தூக்கி எரிந்து இருப்பார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க