“ஆனால், ஏன் அவர்கள் என்னை கட்டாயப்படுத்தி பன்றி இறைச்சி உண்ணச் செய்தனர்  ?”

ந்த வாரத்தின் தொடக்கத்தில் சமூக ஊடகங்களில் வைரலான அந்த வீடியோவில் சகதியில் மண்டியிட்டு, அடுத்து தனக்கு என்ன நேருமோ என மிரட்சி, பயத்துடன் காணப்பட்ட அந்த முதியவரின் முகம் பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்திருக்கும்.

ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் இந்தியா பெற்ற இழி பெருமைகளுல் ஒன்று இந்துத்துவ கும்பல் வன்முறை. பாஜக ஆளும் மாநிலங்களில் இரட்டை பலத்துடன் இந்துத்துவ கும்பல் கொலைவெறியை அரங்கேற்றி வருகிறது. தேர்தல் காலத்தில், இந்துத்துவ கும்பலின் தலைக்கு ஏறும் வெறி, அப்பாவி மக்களை கொன்று கொண்டிருக்கிறது.

சவுகத் அலி

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அசாமில் உள்ள சந்தையில் உணவகம் வைத்திருக்கும் சவுகத் அலியை இந்துத்துவ கும்பல் ஒன்று எருமை இறைச்சி வைத்திருந்ததாகக் கூறி அடித்து, அவமானப்படுத்தி துன்புறுத்தியிருக்கிறது. உச்சக்கட்டமாக, முசுலீம் மதத்தில் தடைசெய்யப்பட்ட ‘பன்றி இறைச்சி’யை கட்டாயப்படுத்து வாயில் திணித்து உண்ண வைத்திருக்கிறது.

அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள பிஸ்வநாத் சரியாலி பகுதியில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை கூடுவதுண்டு. இந்த சந்தையில் உணவகம் வைத்திருக்கிறார் சவுகத் அலி. எருமை இறைச்சி, கோழி இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளை கடந்த 40 ஆண்டுகளாக விற்றுக்கொண்டிருக்கிறார் அலி.

முன்னதாக, இந்தக் கடையில் விற்கப்படும் எருமை இறைச்சி தரமானதாக இல்லை என்று கூறி ஒரு நபர் தகராறு செய்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை நான்கு ஆட்களுடன் வந்த அந்த நபர், இனிமேல் எருமை இறைச்சியை அங்கே விற்கக்கூடாது என கூறியிருக்கிறார். அப்படியே வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்தாலும், கீழேதான் கொட்ட வேண்டும். விற்பனைக்கு வைக்கக்கூடாது என்றும் எச்சரித்திருக்கிறார்.

அப்போது, தான் கொண்டுவந்திருந்த எருமை இறைச்சியை மறைத்து வைத்திருக்கிறார் அலி. “அன்று பிராய்லர் இறைச்சியும் மீனையும் மட்டுமே பரிமாறினேன்” என்கிறார்.

படிக்க:
♦ Reason : இந்துத்துவ கும்பலின் கொலைவெறியை அம்பலப்படுத்தும் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம் !
♦ மாட்டுக்கறிக்கு தடை போடுகிறார்கள் மனிதக் கறி தின்னும் அகோரிகள்

அதே நாள் மாலை 3.30 மணியளவில் திரும்பவும் வந்த அந்த கும்பல், அந்தச் சிறிய கடையில் வைத்திருந்த கறியை கண்டுபிடித்துவிடுகின்றனர்.
அப்போது, “பங்களாதேசி, தே….பயலே, இதை என்ன பாகிஸ்தான் என்று நினைத்தாயா?” என்று கேட்டதாக சொல்கிறார் அலி.

பத்து பேருக்கும் மேல் இருந்த அந்த கும்பல், அதோடு விடவில்லை. கடையில் இருந்த அனைத்தையும் அடித்து நொறுக்கத் தொடங்கினார்கள். உணவு மேசையை உடைத்ததோடு, பாத்திரங்கள், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை அருகில் இருந்த சாக்கடையில் தள்ளியிருக்கிறார்கள்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அலி, அங்கிருந்த சந்தை பொறுப்பாளர்களிடம் உதவி கேட்டு ஓடியிருக்கிறார். அவர்களோ இங்கிருந்து வெளியேறுங்கள் என சொல்லிவிட்டனர். “எனவே, நான் அடிக்கப் போகிறார்கள் என்ற பயத்தில் ஓட ஆரம்பித்தேன்.”என்கிறார் அலி

“ஆனாலும், அவர்கள் விடவில்லை. சந்தை பொறுப்பாளர் ஒருவரே அலியை இந்துத்துவ கும்பலிடம் பிடித்து கொடுத்திருக்கிறார். “அவர்கள் என்னை கட்டையால் தாக்கினார்கள், என்னை சந்தையின் ஒரு பகுதியிலிருந்து இழுத்து வந்து அடித்தார்கள்” என கலங்குகிறார் அலி.

மீதியை வீடியோவில் உலகம் பார்த்தது, சகதியில் மண்டியிட்டு, மிரட்சியுடன் பார்க்கும் அலியிடம் அவர்கள், “நீ ஏன் மாட்டிறைச்சி விற்கிறாய்? மாட்டிறைச்சி விற்க உன்னிடம் அனுமதி உள்ளதா? நீ வங்காள தேசத்தை சேர்ந்தவனா? உன் பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உள்ளதா?” எனக் கேட்டிருகிறார்கள்.

‘உண்மையான’ இந்தியர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு தீவிரமாக உள்ள பாஜக அரசு குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணியை செய்து வருகிறது. அலியின் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரும் உள்ளது. ஆனால், அவருடைய பெயர் இல்லை. “என்னுடைய தாத்தாவுக்கு தாத்தா இங்கேதான், தாரங் மாவட்டத்தில் பிறந்தார்” என்கிறார் அலியின் சகோதரர் அப்துல் ரகுமான்.

இந்துத்துவ கும்பல் அலியின் மீது நிகழ்த்திய வன்முறை அதோடு முடியவில்லை. அந்த கும்பல் கட்டாயப்படுத்தி பன்றி இறைச்சியை அவருடைய வாயில் திணிக்கிறது. அவர் அதை மறுத்தபோது, அதை விழுங்கும்படி கும்பலின் ஒருவன் மிரட்டுகிறான்.

40 ஆண்டுகாலம் எந்த இடத்தில் மரியாதையான தொழிலைச் செய்தாரோ அதே இடத்தில் அவமானப்பட்டதோடு, உடலளவில் காயம்பட்டிருக்கும் அலி கேட்கிறார், “ஆனால், ஏன் அவர்கள் என்னை பன்றி இறைச்சி உண்ணக் கூறி கட்டாயப்படுத்தினார்கள்? நாங்கள் இந்துக்கள் உண்ணமாட்டார்கள் என எருமை இறைச்சியை மட்டும்தான் விற்கிறோம்”

அலியின் சகோதரர், “என் சகோதரர் தவறு செய்திருந்தால் அவர்கள் போலீசை அழைத்திருக்கலாம். ஆனால், ஏன் பன்றி இறைச்சியை உண்ண வைத்தார்கள்? எல்லோருக்கும் அவரவர்களுடைய ஏதோ ஒரு நம்பிக்கை உள்ளது.” என்கிறார்.

மற்ற பாஜக ஆளும் மாநிலங்களைப் போல் அல்லாமல், அசாமில் மாட்டை வெட்டுவது தடை செய்யப்படவில்லை. அதோடு, அசாமில் உள்ள சட்டம் பசு, காளை அல்லது எருமை ஆகியவற்றை வேறுபடுத்தியும் பார்க்கவில்லை. காசாப்புக்கு தகுதியானது என மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கிய கால்நடைகளை வெட்டலாம். பொதுவாக, அந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.

இந்துத்துவ கும்பலின் வெறியாட்டம் சமூக ஊடகங்களில் வைரலான பின்பு, ஒரே ஒருவரை கைது செய்துள்ளது போலீசு. இது மத ரீதியான பிரச்சினை இல்லை எனவும் பூசி மழுப்புகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்த மாநிலத்தில் இந்துத்துவ சக்திகளின் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதன் பின்னணியில் ஆட்சியையும் பிடித்துள்ளது பாஜக. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போதும், 2016-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலின் போதும், இந்துத்துவ கும்பல் மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டத்தை நடத்தியிருக்கிறது.

தான் வளர்ந்த இடத்திலேயே தன்னுடைய மதத்தைக் காரணம் காட்டி தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை நினைத்து கலங்கி நிற்கிறார் அலி. “என்னுடைய அப்பா 40 ஆண்டு காலம் இந்த உணவகத்தை நடத்தினார். எல்லோருக்கும் தெரியும். ஆனால், யாரும் எதிர்க்கவில்லை. அவர் மக்களுக்கு உணவளித்து இறந்துபோனார்” என்கிறார்.

மீண்டும் அந்த உணவகத்தை நடத்த முடியுமா? “சந்தை பொறுப்பாளர்கள் நடத்தலாம் என்றார்கள். ஆனால், எருமை இறைச்சியை விற்க முடியாது. அது பரவாயில்லை. நான் பிராய்லரும் மீனும் விற்கிறேன்”.

ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் சமூகத்தில் ஆழமாக விதைத்திருக்கும் விச விதைக்கு தேர்தல் மட்டும் முடிவுகட்டுமா ? மீண்டும் ஒரு பாசிச ஆட்சிக்கு நாடு தாங்காது.


கலைமதி
நன்றி: ஸ்க்ரால்