இலங்கை மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டியுள்ள இந்த தருணத்தில், வதந்திகளை கிளப்பி பிரிவினையை தூண்டும் தீய சக்திகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரச கைக்கூலிகளான இந்த தீயசக்திகள் இலங்கையில் ஒரு பாஸிச சர்வாதிகார ஆட்சியைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த நிமிடம் வரையில் எந்த இயக்கமும் தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை. அதே நேரம் அரசும் யாரையும் குற்றம் சாட்டவில்லை. ஆனால், அங்கு நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, இது ஒரு சக்தி வாய்ந்த குழுவினரின் நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதலாகத் தெரிகிறது.
தாக்குதல் நடத்தியவர்கள், இதனால் ஏற்படக் கூடிய பின் விளைவுகளை ஆராய்ந்து, தமது இலக்குகளைத் தெரிவு செய்துள்ளனர்.
1) குண்டுவெடிப்பில் பலியானவர்கள் பெரும்பாலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்களும் இதில் அடங்குவார்கள். ஈஸ்டர் நாள் விசேட பூஜை என்பதால் பெருந்தொகையினர் பலியாகியுள்ளனர்.
2) கொழும்பு, மட்டக்களப்பு என்று ஒரே நேரத்தில் பல இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. சரியான திட்டமிடல், ஆட்பலம், ஆயுத பலம், நிதி போன்ற வளங்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை.
3) மேற்கத்திய பணக்கார சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கும் ஐந்து நட்சத்திர ஹொட்டேல்களில் குண்டுகள் வெடித்து பல வெளிநாட்டவரும் கொல்லப் பட்டுள்ளனர். அதனால் சர்வதேச சமூகத்தின், குறிப்பாக மேற்கத்திய நாட்டவரின் கவனத்தை இலங்கையின் பக்கம் ஈர்த்துள்ளது.
படிக்க:
♦ பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் கண்டனம் !
♦ இலங்கை : பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அனைவரும் இணைந்து எதிர்ப்போம் !
இந்த குண்டுவெடிப்புகளின் நேரடி விளைவுகளைப் பார்த்தால், இதனால் ஆதாயமடைவோர் யார் என அறியலாம்.
♦ சிறிலங்கா குண்டுவெடிப்பின் எதிரொலியாக நாளை ஆம்ஸ்டர்டாம் நகரில் தீவிர வலதுசாரிகளின் ஆர்ப்பாட்டம் ஒன்று அறிவிக்கப் பட்டுள்ளது. நெதர்லாந்தில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன. பிற ஐரோப்பிய நாடுகளிலும் இதே பாணியிலான போக்குகள் தென்படுகின்றன.
♦ இலங்கையில் போர் முடிந்து, கடந்த பத்தாண்டுகளாக ஒரு துப்பாக்கிச் சூடு கூட நடக்காமல் அமைதியாக இருந்த காலத்தில் மீண்டும் இந்தப் படுகொலைகள் நடந்துள்ளன. அண்மைக் காலத்தில் அரசு கொண்டு வந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இனிமேல் அதை நடைமுறைப்படுத்த எந்தத் தடையும் இல்லை.
♦ இலங்கையில் மீண்டும் ஒரு போர்ச் சூழல் தோன்றினால், அது இந்தியாவையும் பாதிக்கும். டொமினோ கட்டைகள் விழுவது மாதிரி தெற்காசிய நாடுகள் நீண்ட நெடும் போர்களுக்குள் தள்ளப் படலாம். மத்திய கிழக்கிலும் அமைதியாக இருந்த நாடுகளில் திடீர் போர்கள் உருவான வரலாற்றை நாம் ஏற்கெனவே கண்டுள்ளோம்.
கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.