மைய அரசுக்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சென்ற மார்ச் மாதம் 16-ம் தேதி வரை சம்பளம் தரப்படவில்லை என்று நாளிதழ்களில் வந்த செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும்.

இது மட்டுமின்றி 54,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வில் அனுப்பப்படுவார்கள் என்றும் செய்தி வெளியாகியிருக்கிறது. “விருப்ப ஓய்வில் போய்விடுவதே நல்லது” என்ற கருத்தை ஊழியர்களிடம் உருவாக்குவதற்காகத்தான் சம்பளம் திட்டமிட்டே தாமதப்படுத்தப்பட்டிருக்கும் என்ற ஐயம் இப்போது எழுகிறது.

மேலும், பி.எஸ்.என்.எல்-ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மூன்று மாதங்களாகக் கூலி வழங்கப்படவில்லை. மின்கட்டணம் செலுத்தப்படாததால், மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுப் பல கிராமப்புற தொலைபேசி நிலையங்களின் கோபுரங்கள் (டவர்கள்) இயங்கவில்லை. இவையனைத்தும் பி.எஸ்.என்.எல்.  மூடப்படுவதற்கான அறிகுறிகள்.

வர்தா புயலில் சென்னை மாநகரின் அத்தனை செல்பேசி சேவைகளும் செயலிழந்தபோது பி.எஸ்.என்.எல். மட்டுமே வேலை செய்தது. பழுதான செல்பேசி கோபுரங்களைச் செப்பனிட்டு, முறையான சேவையை விரைந்து மீட்டதும் பி.எஸ்.என்.எல்.தான். காரணம், அந்த ஊழியர்களது உழைப்பு என்பது ஒரு பகுதி உண்மை. முதன்மையான காரணம் என்ன? இலாப நோக்கில் செயல்படும் கார்ப்பரேசனாக மாற்றப்பட்ட போதிலும்கூட, இலாப நோக்கம் கருதாமல் ஒரு அத்தியாவசிய சேவை என்ற அடிப்படையில் மக்களுக்கு விரைந்து சேவையை சீர்செய்து அளிக்க வேண்டும் என்று பி.எஸ்.என்.எல். கருதியது. ஏனெனில், பி.எஸ்.என்.எல். பொதுத்துறை நிறுவனம்.

தனியார் செல்பேசி நிறுவனங்கள் எதுவும் அவ்வாறு கருதவில்லை. புயலில் பழுதான உபகரணங்களைக் காட்டிக் காப்பீட்டு நிறுவனங்களிடம் காசு வாங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனரேயன்றி, பழுதை நீக்க அவர்கள் முயற்சிக்கவில்லை. வாடிக்கையாளர் நலன், அத்தியாவசிய சேவை என எதுவாக இருந்தாலும், அவை அனைத்தைக் காட்டிலும் முதன்மையானது கம்பெனியின் இலாபம் என்பதே அவர்களது அணுகுமுறை.

54,000 ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பும் மோடி அரசின் முடிவை எதிர்த்து பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் – தொழிலாளர்கள் தலைநகர் டெல்லியில் கூடி நடத்திய ஆர்ப்பாட்டம்.

தனியார் சேவைக்கும் பொதுத்துறை சேவைக்கும் இடையிலான இந்த வேறுபாட்டை ஒவ்வொரு புயல் வெள்ளத்தின் போதும் பார்க்கலாம். தொலைபேசித்துறை மட்டுமல்ல, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட எல்லா அத்தியாவசிய துறைகள் விசயத்திலும் இந்த வேறுபாட்டை நாம் காணலாம்.

ஆகவே, பி.எஸ்.என்.எல். மூடப்படுவது என்பதை அதில் பணிபுரியும் 1,76,000 ஊழியர்களின் பிரச்சனை என்று யாராவது இன்னமும் கருதிக் கொண்டிருந்தால், விழித்துக் கொள்ளுங்கள், இது மக்களின் தகவல் தொடர்பு குறித்த பிரச்சினை.

*****

பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஏன் நட்டத்தில் நடக்கிறது? “மற்ற தனியார் செல்பேசி நிறுவனங்களைக் காட்டிலும் இங்கே ஊழியர் எண்ணிக்கை அதிகம். அதுதான் நட்டத்துக்கு முதல் காரணம்” என்று அரசு கூறுகின்றது. “பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை ஒரேயடியாக இழுத்து மூடிவிட்டால் என்ன?” என்பது குறித்து கருத்துக் கூறுமாறு அகமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மைக் கல்விக் கழகத்திடம் ஒரு வருடத்திற்கு முன்பே – ஏப்ரல் 2018 – இல் கேட்டிருக்கிறது மோடி அரசு.

படிக்க:
ஜியோவுக்காக மூடுவிழா காணவிருக்கிறது பி.எஸ்.என்.எல். ! மோடி அரசின் சாதனை தொடர்கிறது !
♦ “குழந்தைகளின் உணவுக்குகூட பணம் இல்லை” : பி.எஸ்.என்.எல் ஊழியர்களை கதறச் செய்த மோடி அரசு !

பி.எஸ்.என்.எல். நட்டத்திற்குக் காரணம் ஊழியர்களின் எண்ணிக்கைதான் என்று சித்தரிப்பது உண்மைக்குப் புறம்பானது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கம்பம் நட்டு, கம்பி இழுத்து, பூமிக்கு அடியில் கம்பிவடம் பதித்து, நாடு முழுவதும் மைக்ரோ வேவ் கோபுரங்கள் அமைத்துத் தொலைபேசி வலைப்பின்னலை தமது உழைப்பின் மூலம் உருவாக்கியவர்கள் தொழிலாளர்கள். கிரகாம் பெல்லின் தொலைபேசி முதல் இன்றைய செல்பேசி வரைத் தகவல் தொழில்நுட்பம் கடந்து வந்திருக்கும் பாதை நெடியது. பி.எஸ்.என்.எல். – இன் நவீன காப்பர் மற்றும் கண்ணாடி இழை கேபிள் வலைப் பின்னல் போன்றவையெல்லாம் மூன்றரை இலட்சம் ஊழியர்களின் கால் நூற்றாண்டு உழைப்பில் உருவானவையாகும்.

இவை அனைத்தையும் உருவாக்கிய ஊழியர்களை இப்போது தேவையற்றவர்கள் என்று கூறும் கண்ணோட்டம், வயது முதிர்ந்த பெற்றோரைச் சுமை என்று வீட்டைவிட்டுத் துரத்தும் சுயநல, அயோக்கியத்தனத்துக்கு நிகரானது.

*****

கவல் தொழில்நுட்பத் துறையில் அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சியின் சமீபத்திய கட்டத்தில் வந்தவைதான் செல்பேசிகள். இந்த செல்பேசி தொழில்நுட்பம் உலகில் அறிமுகமானவுடன், அந்தச் சேவையை அரசுத்துறையே அளித்திருக்க முடியும் என்ற போதிலும், பி.எஸ்.என்.எல். அதில் நுழைவதற்கு வாஜ்பாயி அரசு தடை விதித்தது. செல்பேசி கோபுரங்களைக்கூடத் தனியார் நிறுவனங்கள் தம் சொந்த செலவில் அமைத்துக் கொள்ளவில்லை. பி.எஸ்.என்.எல்.-இன் வலைப்பின்னலையும் மைக்ரோவேவ் டவர்களையும் தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு வாடகைக்குக் கொடுக்குமாறு அரசு கட்டாயப்படுத்திக் கொடுக்க வைத்தது.

பிரதமர் நரேந்திர மோடி ஜியோவின் விளம்பர மாடலா? மோடியின் படம் அச்சிடப்பட்ட ஜியோ நிறுவனத்தின் விளம்பரம்.

அலைக்கற்றையை அரசாங்கம் வழங்கியது; கோபுரங்கள், அரசு தொலைபேசி நிறுவனத்துக்குச் சொந்தமானவை; மூலதனம், அரசுத்துறை வங்கிகளிடம் கடனாகக் கிடைத்தது. இதுதான் தனியார் தொழில்முனைவோர் இந்தத் “துறையை உருவாக்கிய” கதை. “இதற்குப் பதிலாக அரசே இந்தச் சேவையை நடத்தியிருக்கலாமே” என்ற கேள்விக்கு ஒரே பதில் – தனியார்மயம் – தாராளமயம் என்ற கொள்கை. இல்லை, கொள்ளை!

தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின்படி அரசுத்துறைகள் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்பதால், அரசு தொலைபேசித்துறையின் சந்தையைத் திட்டமிட்டுப் பிடுங்கித் தனியாருக்கு தரப்பட்டது. தனியார் நிறுவனங்கள் இந்த தொழிலுக்குப் புதியவர்கள் என்ற காரணத்தினால், ஏகபோகமாக இருந்த அரசு தொலைபேசித்துறையின் கை-கால்கள் அரசாலேயே கட்டிப்போடப்பட்டன. அதன் பின்னர் தனியார் முதலாளிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.

இப்படி ஏகபோகமாக இருந்த அரசுத்துறைக்கும் புதிதாக வந்த தனியார் துறைக்கும் இடையிலான “நடுவர்” என்ற பெயரில்தான் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைக்கப்பட்டது. அரசுத்துறையை ஒழித்துக் கட்டுவதுதான் இந்த ஒழுங்குமுறை ஆணையங்கள் அனைத்துக்கும் இடப்பட்ட பணி. அந்த வேலையை டிராய் செவ்வனே செய்தது.

நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் உலகச்சந்தையில் கிடைத்த போதிலும், தனியார் நிறுவனங்கள் வாங்கும் தொழில்நுட்பங்களை வாங்க பி.எஸ்.என்.எல்.-க்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது. மொத்த செல்பேசி சந்தையையும் தனியார் முதலாளிகள் கைப்பற்றும் வரை, 2ஜி, 3ஜி தொழில்நுட்பங்களை பி.எஸ்.என்.எல். பயன்படுத்துவதை டிராய் தடுத்தது.

“4ஜி வாடிக்கையாளர்கள் 35 கோடிப் பேர் இந்தியாவில் உள்ளனர். இவர்களில் குறைந்தபட்சம் 3.5 கோடி சந்தாதாரர்களை எங்களால் ஈர்க்க முடியும்.  4ஜி பயன்படுத்த அனுமதி தாருங்கள்” என்று பி.எஸ்.என்.எல்., அரசிடம் வேண்டுகோள் வைத்தும் பயனில்லை. இதற்காகத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்தன. ஆனால் “தனியார் மூலம் மக்களுக்கு 4ஜி சேவை போதுமான அளவு கிடைத்துவிட்டதால், இனி பி.எஸ்.என்.எல்.-க்கு 4ஜி தொழில்நுட்பத்தை அனுமதிக்கத் தேவையில்லை” என நிதி ஆயோக் தடுத்துவிட்டது. நாளை தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 5ஜி தொழில்நுட்பத்துக்கு மாறும்போது, 4ஜி தொழில்நுட்பம் பி.எஸ்.என்.எல்.-இன் தலையில் கட்டப்படும் என்று நம்பலாம்.

உலகில் இருக்கின்ற காலாவதியான தொழில்நுட்பங்களையெல்லாம் வாங்குமாறு அரசால் கட்டாயப்படுத்தப்பட்டதன் விளைவாக, பி.எஸ்.என்.எல்.-க்குப் பொருட்செலவு ஏற்பட்டது மட்டுமல்ல, சேவைத்தரம் குறைந்து வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவனங்களை நோக்கிச் செல்லுமாறு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

புறக்கணிக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களுக்கு தனியார் நிறுவனங்கள் சேவை அளிப்பதில்லை.  பி.எஸ்.என்.எல். தான் இப்போதும் சேவைஅளிக்கிறது. வெள்ளம் , புயல்,  நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களிலும் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NDMA) தகவல் தொடர்பை மீட்கும் பொறுப்பை பி.எஸ்.என்.எல். -இடம்தான் ஒப்படைத்து வருகிறது.

42.11 கோடி சந்தாதாரர்களைக் கொண்ட வோடோபோனிடமோ, 34.18 கோடி சந்தாதாரர்களைக் கொண்ட ஏர் டெல்லிடமோ, இன்று அனைவரையும் மிக வேகமாகப் புறம்தள்ளி மொத்தச் சந்தையையும் கைப்பற்றிக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோவிடமோ இந்தப் பணிகளை அரசு கொடுப்பதில்லை. 11.38 கோடி சந்தாதாரர்களுடன் தள்ளாடிக் கொண்டி ருக்கும் பி.எஸ்.என்.எல்.- இன் தலையில்தான் இலாபமற்ற சேவைகள் அனைத்தும் கட்டப்படுகின்றன.

இப்படியாக 100% தொலைபேசி சேவையை அளித்து வந்த பி.எஸ்.என்.எல்., சுமார் இருபதே ஆண்டுகளுக்குள் அடிமாட்டின் நிலைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. “அடிமாட்டுக்கு அனுப்பி விட்டால் என்ன?” என்று கேட்கிறது “கோ ரட்சக்” மோடியின் அரசு. அடிமாட்டை வாங்குவதற்குத் தனியார் முதலாளிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஏனென்றால், தொலைபேசித்துறை மற்றும் பி.எஸ்.என்.எல்.-இன் வசம் பல இலட்சம் கோடி மதிப்புள்ள நகர்ப்புற நிலங்கள், கட்டிடங்கள் உள்ளன. நாடு முழுவதும் பரவியிருக்கும் கோபுரங்கள் உள்ளன. இந்தக் கோபுரங்களை பி.எஸ்.என்.எல். இடமிருந்து பிரித்து “டவர் கார்ப்பரேசன்” என்று தனியொரு நிறுவனத்தை உருவாக்கி அதனிடம் ஒப்படைத்து விட்டால், பிறகு அந்த நிறுவனத்தின் பங்குகளில் 51 விழுக்காட்டை மட்டும் கைப்பற்றி விட்டால், மொத்த நிறுவனத்தையும் அப்படியே விழுங்கி விடலாம் என்பது தனியார் நிறுவனங்களின் ஆசை.

இப்படித்தான் நல்ல இலாபத்தில் இயங்கிவந்த வெளிநாடுகளுக்கான தொலைபேசி சேவையைப் பிரித்து, “விதேஷ் சஞ்சார் நிகாம்” என்ற அமைப்பை உருவாக்கி, அதனை டாடாவிடம் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்தது வாஜ்பாயி அரசு. இப்படித் தொலைபேசித்துறையைக் கசாப்பு போட்டு விற்பதைத் தொடங்கி வைத்தவர் வாஜ்பாயி என்றால், அதனை முடித்து வைக்கும் பொறுப்பை மோடி ஏற்றிருக்கிறார்.

*****

னியார்மய நடவடிக்கைகள் பிற துறைகளை ஒப்பிடும்போது, மிக வேகமாக அமல்படுத்தப்பட்டது, தொலைத்தொடர்பு துறையில்தான். இந்த நிலையிலும் பி.எஸ்.என்.எல்.,  11.38 கோடி சந்தாதாரர்களைத் தக்கவைத்து, தொலைத்தொடர்பு சந்தையின் மொத்த வருவாயில் 6 சதவீதத்தை ஈட்டிவருகிறது. சேவையிலும் வருவாயிலும் இந்தியாவிலேயே கேரள பி.எஸ்.என்.எல். முதல் இடத்தில் உள்ளது.

4ஜி தொழில்நுட்பம் பி.எஸ்.என்.எல்.-க்குத் தரப்படவில்லை என்றாலும், அதற்கு இணையான தரத்தில் செல்போன் சேவையும்,  வை மாக்ஸ் டேட்டா சேவையும் கேரள பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது. அங்கே தனியார் நிறுவனங்களால் கேரள பி.எஸ்.என்.எல்-க்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மற்ற மாநிலங்களிலெல்லாம் சம்பள பாக்கி வைக்கப்பட்ட போதும், கேரளத்தில் மட்டும் உரிய தேதியில் ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்கப்பட்டு விட்டது. கேரள மக்களின் பொதுத்துறை மீதான நம்பிக்கையும்,  பி.எஸ்.என்.எல்.- ஐப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வும் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியார்மயப்படுத்தும் சதிகளை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் – லுதியானா நகரில் நடந்த ஊழியர்களின் ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

“2017-18-இல் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில்  மார்ஷல் ஆன்டனி லியோ என்ற பொது மேலாளரின் பதவிக் காலத்தில், 90 ஆயிரம் தரை வழித்தட இணைப்புகள் அதிகரித்திருக்கின்றன. அது மட்டுமல்ல, 27 இலட்சம் புதிய செல்போன் இணைப்புகளுடன் தமிழகம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. பஞ்சாப் இரண்டாம் இடத்தில் உள்ளது” என்கின்றன சங்கங்கள்.

பி.எஸ்.என்.எல். அழியும் நிலையில் கடைசி இடத்தில் இருக்கும் மாநிலம் மோடியின் குஜராத். தொலைபேசித்துறை மட்டுமல்ல, அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகிய அனைத்திலும் கடைசி இடத்தில் இருப்பது இந்துத்துவத்தின் சோதனைச்சாலையான குஜராத்தான்.

மற்ற எல்லாத் துறைகளிலும் நடப்பதைப் போலவே, பொதுத்துறை அதிகாரிகள்தான் பொதுத்துறையை அழிப்பதற்கு கோடரிக் காம்புகளாகத் தனியார் முதலாளிகளுக்குப் பயன்பட்டிருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு தரம் கெட்ட கருவிகளைக் கொள்முதல் செய்து அரசு சேவையைச் சீர்குலைப்பது, பணி ஓய்வு பெற்ற பின் தனியார் நிறுவனத்தின் உயர் பதவியில் அமர்ந்து கொண்டு அரசுத்துறையை அழிக்க அவர்களுக்கு ஆலோசனை கூறுவது என இவர்களுடைய குற்றப்பட்டியல் மிக நீளமானது.

மாறாக, பி.எஸ்.என்.எல். காவு கொடுக்கப்படுவதை எதிர்த்த அதிகாரிகள் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள். மத்திய தொலைத் தொடர்புத்துறை செயலராக இருந்த ஜே.எஸ்.தீபக் 2017-இல் திடீரென்று அந்தப் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டது இதற்கொரு சான்று.

டேட்டாவுக்காக என்று பெறப்பட்ட அலைக்கற்றை உரிமத்தைக் குரல் அழைப்புகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம், சந்தையில் திடீரென்று ஒரு விலை வீழ்ச்சியை ஏற்படுத்தி மொத்த வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் இழுப்பதற்கு அம்பானி முயற்சி செய்ததும், அம்பானியின் ஜியோ விளம்பரத் தூதராகவே மோடி செயல்பட்டதும் நாம் அறிந்த கதை. இந்த முறைகேட்டை டிராய் ஆதரித்தது.

“அம்பானிக்கு ஆதரவாக டிராய் எடுத்திருக்கும் முடிவின் விளைவாக, மற்ற தனியார் தொலைபேசி நிறுவனங்கள் நட்டத்துக்குத் தள்ளப்பட்டு, அவர்களுக்குப் பல்லாயிரம் கோடி கடன் கொடுத்திருக்கும் பொதுத்துறை வங்கிகள்தான் அந்த நட்டத்தைச் சுமக்க வேண்டியிருக்கும்” என்று டிராயைக் கண்டித்துக் கடிதம் எழுதினார் தீபக்.

படிக்க:
வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக !
♦ கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே !

அதேபோல, ஜியோவுக்கு ஒத்துழைக்கவில்லை என்று காரணம் கூறி மற்ற எல்லா நிறுவனங்களுக்கும் தண்டத்தொகை விதித்தது டிராய். இது ஒருதலைப்பட்சமானது என்றும் இத்தகைய அதிகாரமே டிராய்க்கு கிடையாது என்றும் ஆட்சே பித்தார் தீபக். விளைவு, அவர் பணி நிமித்தம் ஐரோப்பா சென்றிருந்த நிலையில், அந்தப் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார்.

பி.எஸ்.என்.எல். இன்று எதிர்நோக்கும் அழிவு என்பது அதன் அழிவு மட்டுமல்ல. இந்தியாவின் மொத்தத் தகவல் தொழில்நுட்பச் சந்தையும் அம்பானியின் ஏகபோகமாக மாறவிருப்பதற்குக் கூறப்படும் கட்டியம். இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் பற்றிய மொத்தத் தரவுகளையும் அம்பானி என்ற ஒரு முதலாளியின் தனிச்சொத்தாக மாற்றவிருக்கிறது மோடியின் இந்து ராஷ்டிரம்.

இன்று பி.எஸ்.என்.எல்.-ன் சந்தை சுருக்கப்பட்டுவிட்டது. ஊழியர் எண்ணிக்கையும் 3.5 இலட்சத்திலிருந்து 1.7 இலட்சமாக குறைந்து, இப்போது அதிலும் 54,000 பேர் விருப்ப ஓய்வில் அனுப்பப்படவிருக்கின்றனர்.

அரசுத் துறையாக இருந்த தொலைபேசித்துறையை “கார்ப்பரேசன்” ஆக்கியபோது, “தனியார்மயம் தவிர்க்கவியலாதது. ஊழியர்களின் வேலையையும் ஊதிய உயர்வையும் போனசையும் பாதுகாத்துக் கொள்வதை மட்டும்தான் நாம் செய்ய முடியும்” என்ற கருத்தைத் தொழிற்சங்கத் தலைமைகள் பிரச்சாரம் செய்தன. ஊழியர்களும் அதற்குப் பலியானார்கள்.

“அரசுத்துறைகள் ஒழிந்து தனியார் துறை வந்தால், அரசு ஊழியர்களின் ஆணவமும் மெத்தனமும் ஒழிந்து, மக்களுக்குத் தரமான சேவை கிடைக்கும்” என்று பிரச்சாரம் செய்தது ஆளும் வர்க்கம். மக்களும் அதற்குப் பலியானார்கள்.

இன்று பல இலட்சம்  கோடி மதிப்புள்ள பொதுமக்களின் சொத்தான தொலைபேசித்துறையும், ஊழியர்களின் வேலையும், அவர்களுடைய எதிர்கால ஓய்வூதியமும், மக்களுடைய அடிப்படைத் தேவையான தொலைபேசி சேவையும் பலிபீடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

கையில் வெட்டரிவாளோடு நிற்கிறது பூசாரியான மோடி அரசு. பலி கொள்ளவிருக்கும் கடவுள் எதுவென்று சொல்லவும் வேண்டுமா?

வீரையன்

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart