தேர்தலில் வெல்வதற்காக எந்த எல்லைக்கும் செல்ல துணிந்துள்ளது இந்துத்துவக் கும்பல். ஒருபக்கம் தனது ‘கூட்டணிக் கட்சியான’ தேர்தல் கமிஷனின் துணை கொண்டு தேர்தல் தேதியை தன் விருப்பத்திற்கு அறிவிக்கச் செய்த பாஜக, தனக்கு வாக்களிக்காத பிரிவு மக்களின் வாக்குரிமையை திட்டமிட்டே பறித்துள்ளது. வடகிழக்கில் பல்லாயிரக்கணக்கான மக்களின் குடியுரிமையையே பறித்த பாஜக, கன்னியாகுமரி தொகுதியில் தனது கூட்டாளியின் துணையோடு ஏறத்தாழ ஒரு லட்சம் மீனவர்களின் வாக்குரிமையைப் பறித்துள்ளது.

ஒருபுறம் எதிர்க்கட்சி வேட்பாளர்களின் மேல் தனது இணைய மற்றும் ஊடக கூலிப் பட்டாளங்களை ஏவி விட்டு அவர்கள் மீது அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் பாஜக, தனது வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் தாகூரை களமிறக்கி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள பிரக்யா சிங் தாகூரை அறியாதவர்கள் இருக்க முடியாது.

2008-ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் எனக் கைது செய்யப்பட்டு தற்போது உடல்நிலையைக் காரணம் காட்டி வெளி வந்துள்ளவர் பிரக்யா சிங். மாலேகானில் மசூதி ஒன்றின் அருகில் இந்துத்துவக் கும்பல் வைத்த குண்டு, வெடித்ததில் ஆறு பேர் பலியாகி பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பிரக்யா சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆர்.எஸ்.எஸ்-உடன் நெருங்கிய தொடர்புடைய அபினவ் பாரத் என்கிற இந்துத்துவ பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்திய மற்றொரு கொடூரத் தாக்குதல், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பாகும். அதில் 68 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங்கின் மீதான வழக்கு, மோடி அதிகாரத்திற்கு வந்தபின் திட்டமிட்டே நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை, நடந்த குற்றத்தில் பிரக்யா சிங்கிற்கு எந்தத் தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்து அவர் மீதான வழக்கை முடித்து விடக் கோரியது. முக்கியமான சாட்சிகள் திடீரென பிறழ் சாட்சிகளாகினர். எனினும், குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் பிரக்யா சிங்கின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது  உள்ளிட்ட சந்தர்ப்ப சாட்சியங்கள் அவருக்கு எதிராக இருப்பதால் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க மறுத்துவிட்டது விசாரணை நீதிமன்றம்.

தற்போது காங்கிரசின் சார்பில் போபால் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ள திக்விஜய் சிங்குக்கு எதிராக பிரக்யா சிங்கை களமிறக்கியுள்ளது பாஜக. திக்விஜய் சிங் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஓட்டு அரசியலின் அரங்கில் கட்சிகளின் சார்பில் கிரிமினல்கள் வேட்பாளர்களாவதோ, ஓட்டரசியல் கட்சிகளே முழுக்க கிரிமினல்மயமாகி வருவதோ புதிய போக்கு அல்ல. பாரதிய ஜனதா ஓட்டரசியல் கிரிமினல் கலாச்சாரத்தை பயங்கரவாதத்திற்கு வளர்த்துள்ளது.

படிக்க:
பாஜக வேட்பாளராகக் களமிறங்கும் பயங்கரவாதி பிரக்யா சிங் !
♦ மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை”

பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எல்லாம் தன்னை பயங்கரவாதத்திற்கு எதிரானவராக முன்னிறுத்திக் கொண்டு பேசி வரும் நிலையில், அவரது கட்சியே ஒரு பயங்கரவாதிக்கு சீட்டு கொடுத்திருப்பதைக் கண்டு வட இந்திய பத்திரிகைகள் திகைத்துப் போய் எழுதி வருகின்றன. இந்துத்துவக் கும்பலைப் பொறுத்தவரை “இந்து குண்டு” என்பது அக்காரவடிசல் போன்ற ‘நம்மாத்துப் பலகாரம்’. அதே நேரம் நீங்கள் மாட்டிறைச்சி உண்பவராக இருந்து, உங்கள் வீட்டின் குளிர் சாதனப் பெட்டியில் அதை சேமித்து வைத்தீர்கள் என்றால் நீங்கள்தான் பயங்கரவாதி; அந்த  மாட்டுக்கறிதான் பேரழிவை உண்டாக்கும் ஆயுதம். இது நாக்பூரில் எழுதப்பட்ட இருபத்தோராம் நூற்றாண்டின் மனு நீதி.

ஒருவேளை நம் ஆல்பர்பஸ் சேஷூ மாமாக்கள் “குற்றம் இன்னும் ருசுபிக்கப் படலியோன்னோ. ருசுப்பிச்சாத்தானே குற்றவாளி?” என்று நமக்குப் பாடம் எடுக்க வருவார்கள். ஆனால், எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு இதே ஊபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களுக்கு ஏதாவது ஒரு கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் இதே வாய்கள் என்ன பேசும் என்பது நமக்குத் தெரியும். ‘லெட்டர் டூ எடிட்டரில்’ துவங்கி தினமலர் முகப்பு செய்தி வரை களமிறங்கி குடுமி அவிழக் கூத்தாடியிருப்பார்கள்.

எனினும், சம்ஜௌதாவில் வெடித்ததும், ஹைதராபாத்தில் வெடித்ததும், மாலேகானில் வெடித்ததும் “இந்து குண்டு” என்பதால் அதை பாசத்தோடு அள்ளி அணைத்து கோவணத்தில் முடிந்து வைத்துக் கொண்டுள்ளனர். அவாள்களின் தெரிவு செய்யும் சுதந்திரத்தில் நாம் தலையிடுவதற்கில்லை. என்றாலும், தேர்தல் அரசியல் மற்றும் இந்திய ஜனநாயகம் என்கிற புழுத்து நாறும் பிணத்தின் யோக்கியதையை பாரதிய ஜனதாவைத் தவிற இந்தளவுக்கு துல்லியமாக மக்களுக்கு எடுத்துரைக்கும் ஆற்றல் அதன் சகபாடி காங்கிரசுக்கே இல்லை என்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

பிரக்யா சிங்கை களமிறக்கி இருப்பதன் மூலம் பாஜக நமக்கு ஏராளமான செய்திகளைச் சொல்லியுள்ளது. அவற்றில் பிரதானமானது, இந்துத்துவ கும்பல் நிகழ்த்தும் பயங்கரவாதச் செயல்கள்  “காவி ஜிகாத்” எனும் புனித காரியம். அதில் ஈடுபடுபவர்களுக்கு இறந்த பின் சொர்க்கத்தில் எவையெல்லாம் கிடைக்கப் போகிறதோ இல்லையோ; வாழும் காலத்தில் எம்.பி அல்லது எம்.எல்.ஏ சீட்டு கிடைக்கும். இரண்டாவதாக, வாஜ்பாயில் துவங்கி அத்வானி, மோடி, யோகி ஆதித்யநாத், பிரக்யா சிங் என அவர்களிடம் உள்ள தலைவர்களின் வரிசை நாம் கவனத்தில் கொள்ளத் தக்கது. வரிசையில் வரும் ஒவ்வொருவரும் தனக்கு முந்தையவர்களை விட எத்தர்களாக இருப்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, இப்படிப் பச்சையாக ஒரு பயங்கரவாதியை வேட்பாளராக அறிவித்த பின்னும் அது அரசியல் அரங்கில் கண்டனத்திற்குரிய ஒன்றாக கருதப்படாமல் இருப்பதும், ஊடகங்கள் மௌனமாக இருப்பதும், “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்கிற பாணியில் பொதுபுத்தி பக்குவப்படுத்தப்பட்டிருப்பதும் நம் கவனத்திற்குரியது. இந்திய சமூகத்தின் மனசாட்சிக்குள் இந்துத்துவம் ஊடுருவத் துவங்கி இருப்பதன் ஆரம்ப அறிகுறி இதுதான். இந்து பாசிசத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் போதாமையை இது சுட்டிக் காட்டுகிறது.

இனியும் ஒரு தேர்தலின் மூலம் மட்டுமே இந்து பாசிசத்தை முறியடித்து விட முடியும் என்றா கருதுகிறீர்கள்?


– சாக்கியன்
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க