“மறைமுக பாட திட்டம்” என்கிற சொற்றொடர் 1960-களில் கல்வியாளர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த அறிவுஜீவியும், கலாச்சார விமர்சகருமான ஹென்றி கிரோக்ஸ் அதைப் பற்றிச் சொல்லும்போது “வெளிப்படையான பாடத் திட்டத்தில் இல்லாவிட்டாலும் நாம் பள்ளிகளில் கற்றுக் கொள்ளும் விசயங்களும்தான் அவை” என்கிறார்.

அதாவது, ஒரு கல்விக்கூடத்தின் நோக்கங்களாக வெளிப்படையாக சொல்லப்படாத விசயங்களை வெறுமனே பள்ளிக்குச் செல்லும் அனுபவத்தின் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்வதையே மறைமுக பாடத்திட்டம் என்கிறார்கள். மதிப்பீடுகள், அறம் சார்ந்த விசயங்கள், கண்ணோட்டங்கள் உள்ளிட்ட வெளிப்படையாக வகுப்பறையில் மாணவர்களுக்கு சொல்லித் தரப்படாத விசயங்களை அவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.

கல்விக் கூடங்களுக்கே மறைமுக பாடதிட்டம் இருக்கும்போது அரசாங்கங்களுக்கும் நிச்சயமாக அது இருக்கத்தான் செய்கிறது.

ஒரு அரசாங்கத்தின் மறைமுக பாடதிட்டம் என்பது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் இருந்து வேறுபட்டது. அது தன்னை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. அரசின் தலைவர்களுடைய நடவடிக்கைகளின் ஊடாகவும் மக்களுக்கு அவர்கள் தெரிவிக்கும் செய்திகளின் ஊடாகவும் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. தலைவர்கள் எதைக் கண்டிக்கிறார்கள் – எதைக் கண்டிப்பதில்லை, எவற்றிற்காக மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுகிறார்கள் என்பதன் மூலமும், முக்கியமாக சமூகத்தின் வலுகுன்றிய பிரிவினரை எப்படி நடத்துகிறார்கள் என்பதன் ஊடாகவும் மறைமுகப் பாடத்திட்டம் தன்னை பிரகடனப்படுத்திக் கொள்கிறது.

ஒரு அரசாங்கத்தின் மறைமுக பாடத்திட்டம் நீண்ட நாட்களுக்கு மறைமுகமாகவே இருக்காது. ஆனால் அதை நீங்கள் புரிந்து கொள்ளும்போது அதுவே நாட்டின் நடைமுறை எதார்த்தமாக மாறியிருப்பதோடு, பெரும்பான்மை மக்களின் கண்ணோட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

மறைமுகப் பாடத்திட்டம் என்பது பெரும்பாலும் உணர்வுத் தளத்தில், ஆழத்தில் (subconscious) செயல்படக் கூடியதாகும். எனவே நாம் எந்தளவுக்கு அதன் செல்வாக்குக்கு ஆட்பட்டிருக்கிறோம் என்பதை உணர்வதில்லை. எனவே பல சந்தர்பங்களில் “விசயங்களுக்கு பின்னால் இருக்கும் விசயங்களில்” நாம் எந்தளவுக்கு ஆழ்ந்து போயிருக்கிறோம் என்பதை உணர்வதற்கே நீண்ட காலம் பிடிக்கிறது. பழைய கதை ஒன்றில் சொல்வதைப் போல், காய்ச்சப்படும் தண்ணீர் பாத்திரத்தில் விடப்பட்ட தவளை தனக்கு என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் சமைக்கப்பட்டு விடுவதைப் போல் நாமும் மெல்ல மெல்ல மாற்றப்படுகிறோம்.

கடந்த ஐந்தாண்டுகளில் இந்த மறைமுக பாடத் திட்டம் நம்மை எவ்வாறு மாற்றியுள்ளது? நாம் நமக்குள் ஈர்த்துக் கொண்ட மிகப் பெரிய “பாடங்களும்” செய்திகளும் எவையெவை? ஒரு நீர்வீழ்ச்சியைப் போல் நம்மீது கொட்டப்படும் சமூக வலைத்தள கருத்துக்கள் மற்றும் முடிவற்ற பிரேக்கிங் நியூஸ்களையும் ஊடுருவிப் பார்க்கும் போது அவை நமக்கு சில செய்திகளைத் தெரிவித்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

என்ன மாதிரியான செய்திகள்?

ஒரு குறிப்பிட்ட மதம் பிற மதங்களை விட உயர்வானது; அந்த மதத்தைச் சேர்ந்த இந்தியர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக நடத்தப்பட வேண்டும். அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற தன்மையை கணக்கில் கொள்ளக் கூடாது என அதிகாரத்தில் உள்ளவர்களால் நமக்குச் சொல்லப்படுவதோடு, மதச் சிறுபான்மையினரை இரண்டாந்தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்றும் சொல்லப்படுகிறோம்.

அதே போல் ஏழைகளை விட பணக்காரர்களுடன் தனக்குள்ள சார்பை அதிகாரம் மிகத் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. நாம் நல்லவர்கள் தண்டிக்கப்படுவதையும், அயோக்கியர்கள் தப்பிப்பதையும் பார்க்கிறோம். வல்லான்மையே சரியானது என நமக்குச் சொல்லப்படுகின்றது. நமக்குச் சொல்லப்படும் செய்திகள் அனைத்தின் அடியாழத்திலும் விசத்தன்மை கொண்ட நம்மீது மேலும் அழுத்தம் கொடுக்கும் செய்தி ஒன்றும் உள்ளது.

படிக்க:
கார்ப்பரேட்டுகளுக்காக மோடி செய்த ஊழல்களின் பட்டியல் !
♦ கந்தனுக்கு அரோகரா.. எலெக்சனுக்கு அரோகரா.. | துரை. சண்முகம் கவிதை

இந்தச் செய்திதான் மிகக் குறிப்பாக எதிர்க் கருத்துக்களை அடித்து நொறுக்குவதாய் உள்ளது. அதனை சாராம்சமாய் இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிடலாம் : “எதுவும் தவறில்லை”

யோசித்துப் பாருங்கள். கடந்த ஐந்தாண்டுகளில் எதையெல்லாம் முக்கியமானது என்று கருதினோமோ அதையெல்லாம் முக்கியமற்றது என திரும்பத் திரும்ப சொல்லி வந்ந்துள்ளனர். நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது என்ன?

“உண்மை ஒரு பொருட்டல்ல”
“சட்டம் ஒரு பொருட்டல்ல”
“ஏழைகள் ஒரு பொருட்டல்ல”
“ஒற்றுமை ஒரு பொருட்டல்ல”
“கல்வி ஒரு பொருட்டல்ல”

ஆச்சார்யா அடல்

உண்மை ஒரு பொருட்டல்ல : அப்படி இருந்திருந்தால் இந்தியாவின் மையநீரோட்ட ஊடகங்கள் அரசின் செயல்பாடுகளை தீவிரமாகவும், புறநிலை எதார்த்தங்களோடு பொருத்தியும் விமர்சித்திருக்கும். உண்மையை ஒரு பொருட்டாக கருதியிருந்தால், “கோப்ராபோஸ்ட் அம்பலப்படுத்தும் தினமலர் – சன் குழுமம்” நடத்திய மறைபுலனாய்வில் இந்தியாவின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் சிக்கியிருக்க மாட்டார்கள்.

சட்டம் ஒரு பொருட்டல்ல : இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திலிருந்து சில முக்கியமான ஆவணங்கள் களவு போய் விட்டதாகச் சொல்கிறார். அதற்கு சில நாட்கள் கழித்து தான் அப்படிச் சொல்லவில்லை… ஒரு சில ஆவணங்களின் நகல் பிரதிகளே களவு போயின என்று மாற்றிப் பேசுகிறார். இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதன் ஊடாக இந்த நாட்டின் சட்டங்கள் மலிவானதொரு நகைச்சுவை என்பதாக ஒரு செய்தி சொல்லப்படுகின்றது.

செயல்பாட்டாளரும் அறிவுஜீவியுமான சுதா பரத்வாஜ் போன்றோர் தேசத்தின் எதிரிகளாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்; மறுபுறம் பாபு பஜ்ரங்கி சுதந்திரமாக நடமாடுகிறார் – இதன் மூலம் சட்டம் ஒரு பொருட்டே அல்ல என்று நம்மிடம் சொல்கிறார்கள்.

படிக்க:
Reason : இந்துத்துவ கும்பலின் கொலைவெறியை அம்பலப்படுத்தும் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம் !
♦ ஸ்டெயின்ஸ் பாதிரியார் படுகொலை : சங் பரிவாரை ரட்சிக்கும் திரைப்படம் !

ஏழைகள் ஒரு பொருட்டல்ல : அப்படி ஏழைகளை ஒரு பொருட்டாக கருதியிருந்தால் அவர்கள் இதயமற்ற முறையில் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு ஆட்படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள். ஒரு பேனாவின் கிறுக்கலில் அவர்களின் நிலமும், காடுகளும் அவர்களிடமிருந்து பிடுக்கப்பட்டிருக்காது; மாறாக ஒரு சிலைக்காக செலவிடப்பட்ட 3000 கோடி ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக செலவிடப்பட்டிருக்கும்

ஒற்றுமை ஒரு பொருட்டல்ல : ஏனெனில் தலைநகரை நோக்கி நடத்தப்பட்ட வரலாற்றில் மிகப் பெரிய விவசாயிகள் ஊர்வலம் குறித்த செய்திகள் மையநீரோட்ட ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டன. விவசாயிகளின் அந்த ஒற்றுமை ஒரு பொருட்டே அல்ல என்று இந்த ஊடகங்கள் கருதின. கால் நூற்றாண்டுகள் சந்தித்திராத வேலைவாய்ப்பின்மையால் ஏழைகள் வாடும்போது வங்கிகளுக்கு நாமம் போட்ட பணக்காரர்களோ சர்வ சுதந்திரமாக வெளிநாடுகளில் உலாவுகின்றனர். எனில், இந்த அரசாங்கம் யாருக்கானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

கல்வி ஒரு பொருட்டல்ல : கல்வியை அவர்கள் ஒரு பொருட்டாக கருதினார்கள் என்றால், ஏன் அரசு பல்கலைக்கழங்கள் மற்றும் அரம்பக் கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டைக் குறைக்க வேண்டும்?

எதுவுமே ஒரு பொருட்டல்ல.

இப்போது அவர்களின் அக்கறைக்கு உரியதெல்லாம் அவர்களின் மாபெரும் தலைவர் தனது புனிதக் கடமையாக கருதும் தனது பிம்பத்தின் அடிப்படையிலேயே இந்த தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதுதான். இதை நிறைவேற்றுவதற்காக தேசத்தின் ஒவ்வொரு முடுக்குகளிலும், சுவர்களிலும், செய்தித் தாள்களின் முகப்புகளிலும், பதாகைகளிலும், தொலைக்காட்சி திரைகளிலும், திரை அரங்குகளிலும் அந்த தலைவரின் முகத்தை ஒட்டி வைக்கிறார்கள். ஏனெனில், மக்கள் எந்தத் திசையில் திரும்பினாலும், அவரைப் பார்க்க வேண்டும், அனைத்திலும் பார்க்க வேண்டும், அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் அவரே என்பதை மக்களிடம் பதிவு செய்ய வேண்டும்.

இந்த போக்குகள் நம் இளைஞர்களின் சிந்தனையில் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன?

அவர்கள் வன்முறை பரவாயில்லை என்று கற்றுக் கொள்கின்றனர். ஏனெனில், வன்முறையாளர்கள் தண்டிக்கப்படுவதில்லை. வன்முறையாளர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படும் போது ஒரு மத்திய அமைச்சரே அவர்களுக்கு மலர் மாலையிட்டு வரவேற்கிறார். இளைஞர்கள் கற்பது ஆபத்தானது என்று கருதுகின்றனர்; ஏனெனில், விமர்சனப்பூர்வமாக சிந்திப்பது சிக்கலை ஏற்படுத்தி விடும் என அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஜே.என்.யூ பல்கலைக்கழகத்திற்கு என்ன நேர்ந்ததெனப் பாருங்கள்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் பரிவுடனும், திறமையுடனும் இருக்கத் தேவையில்லை என்று இளைஞர்கள் கற்றுக் கொள்கின்றனர். தலைவர்கள் அறிவார்ந்தவர்களாக இருக்கத் தேவையில்லை. நீதி மறுக்கப்படுவது தவறில்லை; குரல்களையும் உரிமைகளையும் இழந்தவர்களைப் பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை. ஜோர்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலில் வரும் பெரியண்ணனின் அரசாங்கத்தைப் போன்ற குறியீடுகளை நாமும் போட்டுக் கொள்ளலாம்:

“போர் தான் அமைதி”
“அடிமைத்தனம் தான் விடுதலை”
“அறியாமையே வலிமை”

ஏனெனில், ஒரு ஜனநாயகத்தை உண்மையாகவே அழிக்க வேண்டுமென்றால் நிறுவனமயமான அராஜகவாதமும் (institutional anarchy), அறம் சார்ந்த அழிவுவாதமும் (moral nihilism) கட்டவிழ்த்து விடப்படுவது கட்டாயத் தேவைகள் ஆகும். இதுதான் இந்த நாடெங்கும் கடந்த ஐந்து வருடங்களாக நடந்து வருவதைப் பார்க்கிறோம். பழைய மரபுகளை அழித்தொழித்த பின்னர்தான் ஒரு கொடுங்கோலனால் அடக்குமுறைக்கான புத்தம் புதிய முறைகளை உருவாக்கி அதை “புதிய மரபுகளாக” பெயரிட முடியும். இந்த விசயத்தில் அதை “புதிய இந்தியா” என்றும் சொல்லலாம்.

உண்மையில் நாம் இதை விட அறிவார்ந்தவர்கள். ஜனநாயகம் என்பது சட்டத்தின் ஆட்சியின் கீழ்தான் செழிக்க முடியும் என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியும். மக்கள் கற்றுக் கொள்ளும் போதுதான் ஜனநாயகம் மலர முடியும். அதிகாரமற்றோருடன் ஒன்றுவதன் மூலம்தான் ஜனநாயகம் வளரும். எந்த நாட்டில் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றதோ அங்கேதான் ஜனநாயகம் முன்னேறும். ஜனநாயகத்திற்கு வலுவான நான்காம் தூண் தேவை; அங்கே பத்திரிகையாளர்களுக்கு கடினமான கேள்விகளைக் கேட்கும் உரிமை இருக்க வேண்டும்; அங்கே உண்மைகளும், தரவுகளும் மதிக்கப்பட வேண்டும். ஒரு உண்மையான ஜனநாயகம் என்பது அதன் நிறுவனங்கள் எந்தளவுக்கு வலுவாக உள்ளதோ அந்தளவுக்கு வலுவாக இருக்கும். உண்மையான ஜனநாயகம் என்பது ஒரு நாட்டின் குடிமக்களின் வீரம் மற்றும் பரிவின் ஒட்டுமொத்தமாக இருக்கும்.

எனவே தான் அனைத்தும் முக்கியத்துவமுடையதாகிறது.

“உண்மை முக்கியமானது”
“சட்டம் முக்கியமானது”
“ஏழைகள் முக்கியமானவர்கள்”
“ஒற்றுமை முக்கியமானது”
“கல்வி முக்கியமானது”
“சகல பிரிவு மக்களும் முக்கியமானவர்கள்”

எப்படி ஒரு கல்விக்கூடத்தின் மறைமுக பாடதிட்டத்தில் எல்லா மாணவர்களும் மயங்கி விடுவதில்லையோ, அதே போல் குடிமக்களில் அனைவருமே அரசாங்கத்தின் மறைமுக பாடதிட்டத்திற்கு ஆட்படுவதில்லை. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் இந்த மறைமுக பாடதிட்டத்திற்கு ஆட்பட்டவர்கள் எத்தனை பேர் ஆட்படாதவர்கள் எத்தனை பேர் என்பதை நமக்கு உணர்த்தும்.


கட்டுரையாளர் : ரோகித் குமார்
தமிழாக்கம் : சாக்கியன்
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க