கோப்ராபோஸ்ட் அம்பலப்படுத்தும் தினமலர் – சன் குழுமம்

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என பீற்றிக் கொள்ளும் ஊடகங்களின் யோக்கியதை என்ன? அம்பலப்படுத்துகிறது கோப்ராபோஸ்ட்.

3

“நாமிருவரும் ஒரே அலைவரிசையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்று உத்திரவாதமளிக்கிறார் ஆதிமூலம். மறைவான கோணத்திலிருந்து அந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிரில் அமர்ந்திருப்பவரிடம் ஆதிமூலம் தொடர்ந்து பேசுகிறார்.

தங்கள் குடும்பத்திற்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையேயான பாரம்பரிய உறவு குறித்துச் சொல்கிறார். பிரதமர் மோடி தமிழகம் வந்தால் தங்கள் குடும்பத்தை சந்திக்காமல் செல்லமாட்டார் என பெருமைப்பட்டுக் கொள்கிறார். தனது தந்தை மாதம் ஒருமுறையாவது தில்லி செல்வாரென்றும் பிரதமரைச் சந்திப்பார் என்றும் குறிப்பிடுகிறார்.

அந்தக் காணொலியில் பங்கேற்ற நபர்கள் சாதாரணமானவர்களாக இருந்திருந்தால் இரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்ட அந்த உரையாடலுக்கும் பெரிய மதிப்பு இருந்திருக்காது; நாலாந்தர அரசியல் புரோக்கர்களின் வழமையான அலட்டலாக கடந்து போயிருபோம்.

ஆனால், ஆதிமூலம் சாதாரணமானவரல்ல; அவர் ஜனநாயகத்தின் ‘நான்காம் தூணில்’ உள்ள செங்கற்களில் ஒருவர், ‘உண்மையின் உரைகல்லுக்குச்’ சொந்தக்காரர்களில் ஒருவர் – தினமலர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

தினமலரை நிறுவிய ராமசுப்பையரின் பேரன், தற்போது அந்தப் பத்திரிகையின் வர்த்தகப் பிரிவின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். எனவே மேற்படிக் காணொளியும் அதில் வரும் உரையாடலும் நமது கவனத்திற்கு உரியதாகிறது.

*****

மேற்படி உரையாடல் கோப்ராபோஸ்ட் இணையதளம் நடத்திய மறைபுலனாய்வு நடவடிக்கையில் (Sting operation) ஒரு பகுதியாக வருகிறது. புஷ்ப ஷர்மா என்கிற பத்திரிகையாளர் ‘ஆச்சார்யா அடல்’ எனும் புனைப் பெயரோடு பல்வேறு பத்திரிகை முதலாளிகளையும் நிர்வாகிகளையும் சந்திக்கிறார்.

தன்னை நாக்பூரில் இருந்து வருபவராகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் நம்ப வைக்கிறார். இந்துத்துவ அமைப்புகளின் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பிரச்சார திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.

தங்களுடைய பிரச்சார திட்டம் மூன்று கட்டங்களாக வகுக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை சம்பந்தப்பட்ட பத்திரிகைகளில் அரசியல் கலப்பற்ற பொதுவான செய்திகளாகவோ ஆன்மீக துணுக்குகளாகவோ விளம்பரமாகவோ வெளியிட வேண்டும் என்கிறார்.

ஆறு மாத காலத்திற்கு திட்டமிடப்பட்ட இப்பிரச்சாரத்திற்கு பெரும் தொகை ஒன்றையும் கொடுப்பதற்கு முன்வரும் புஷ்ப ஷர்மா (ஆச்சார்ய அடல்), இது ஒரு நல்ல ‘வியாபார வாய்ப்பு’ எனச் சொல்லி சம்மதிக்க வைக்கிறார்.

பிரச்சாரத்தின் முதல் கட்டமாக, சம்பந்தப்பட்ட பத்திரிகை கிருஷ்ணர் மற்றும் பகவத் கீதை குறித்த விளம்பரங்களை வெளியிட வேண்டும். தங்களது கட்சி கடந்த முப்பது வருடங்களாக ராமர் மற்றும் அயோத்தியை வைத்து போதுமான வரைக்கும் அரசியல் ஆதாயம் அடைந்து விட்டதால் புதிய குறியீடுகள் தேவைப்படுகிறது என்கிறார்.

பகவத் கீதை மற்றும் கிருஷ்ணரைக் குறித்த துணுக்குகள், செய்திகள் மற்றும் கட்டுரைகளின் மூலம் சமூகத்தில் ஒரு பொதுவான ஆன்மீகச் சூழலை உண்டாக்குவது திட்டம் என்றும், தாங்கள் ‘இந்துத்துவ’ சக்தியாக அறியப்படுவதால் இந்தச் சூழலே தேர்தலின் போது தங்களுக்கான ஓட்டுகளாக மாறி விடும் என்றும் சொல்கிறார்.

இரண்டாவது கட்டமாக, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் மாயாவதி போன்ற எதிர்கட்சித் தலைவர்களைக் குறித்து பகடியாக எழுத வேண்டும்; ராகுல் காந்தியை பப்பு என்றும், அகிலேசுக்கு புவா (Bua) என்றும், மாயாவதியை பபுவா (Babua) என்றும் அடைமொழியிட்டு கிண்டல் செய்ய வேண்டும். இதன் மூலம் மக்களின் பொது புத்தியில் இந்தத் தலைவர்கள் ஆளுமையற்றவர்கள், கேலி கிண்டலுக்கே தகுதி படைத்தவர்கள் என்பதை மறைமுகமாக பதிவு செய்வது திட்டம் என்கிறார்.

முதலிரண்டு கட்டங்களால் உருவான ஒரு பொதுக்கருத்தை தங்களுக்கான ஆதரவாக மாற்றுவது இறுதிக் கட்டம் என்கிறார். இந்தப் பிரச்சாரத்திற்காக வழங்கப்படும் கட்டுரைகள் அல்லது விளம்பரங்கள் எந்த வகையிலும் சட்டத்திற்கு விரோதமாகவோ, சமூகத்தைப் பிளவு படுத்தும் விதமாகவோ இருக்காது என்று உத்திரவாதமளிக்கிறார் ‘ஆச்சார்ய அடல்’.

ஆனால், சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் இந்தப் பிரச்சாரத்தின் அங்கமாக (கூலி பெற்றுக் கொண்டு) வெளியிடும் கட்டுரைகள் அல்லது விளம்பரங்களின் உண்மையான சூத்திரதாரிகள் யார் (ஆர்.எஸ்.எஸ். தான்) என்பது இரகசியமாக பராமரிக்கபப்ட வேண்டும். முடிந்த வரை ‘பொதுவானதாகவும்’ ‘நடுநிலையானதாகவும்’ தோற்றமளிப்பதே இருவருக்கும் நல்லது எனக் குறிப்பிடுகிறார் ஆச்சார்ய அடல்.

ஆபரேஷன் 136 எனும் பெயரில் நடத்தப்பட்ட இந்த மறைபுலனாய்வின் காணொளி விவரங்களை கோப்ரா போஸ்ட் இணையதளம் இரண்டு கட்டங்களாக வெளியிட்டது. முதல் கட்டம் மார்ச் மாதமும், இரண்டாம் கட்ட விவரங்களை மே மாதமும் வெளியிட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியா டுடே, ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள் மற்றும், ஜீ நியூஸ், நெட்வொர்க் 18, போன்ற செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும், பாரத் சமாச்சார், சுவர்னா, டைனிக் பாஸ்கர் போன்ற வட இந்திய பத்திரிகைகள் இந்த மறைபுலனாய்வில் கையும் களவுமாக பிடிபட்டனர். மொத்தம் சுமார் 24 பத்திரிகை நிறுவனங்கள்.

தமிழகத்தைப் பொருத்தவரை தினமலர் மற்றும் சன் டிவி நிர்வாகம் ‘தாங்கள் காசுக்கு சோரம் போகத் தயார்’ என ஆச்சார்ய அடலின் முன் வாலாட்டி நின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. பத்திரிகைகள் தவிர இணையவழி பணப்பரிமாற்ற சேவை வழங்கும் பேடிஎம் (paytm) நிறுவனமும் இப்புலனாய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது.

*****

ணத்திற்காக மட்டும் சோரம் போய்விட்டதாக தினமலரைச் சொல்வது சரியாக இருக்காது. ஏனெனில், அதன் நாடி நரம்புகளிலும், இரத்த நாளங்களிலும், எலும்பு மஜ்ஜை வரை வேசைத்தனத்தில் ஊறித் திளைக்கிறது.

தினமலரை பத்திரிகை என்று வகைப்படுத்துவது கூட அதன் தகுதிக்கு அதிகமானது; தினமலரைப் பத்திரிகை என்றால் பேருந்து நிலைய கழிவறைச் சுவர்களை புனித வேதங்கள் என்று அழைக்க வேண்டியிருக்கும்.

தமிழர்களை ‘டமிலர்கள்’ என விளித்துக் கிண்டல் செய்வதில் துவங்கி, மக்களின் உயிராதார போராட்டங்களைத் தீவிரவாதச் செயல்களாக சித்தரிப்பது வரை தினமலரில் வெளியாகும் ஒவ்வொரு வார்த்தைகளிலும், வார்த்தைகளுக்கு இடையிலான இடைவெளியிலும் பொங்கி வழிவதன் பெயர் பார்ப்பனத் திமிர்.

பெரியார் இயக்கங்கள், இடதுசாரிகள் உள்ளிட்ட ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளின் மீது மட்டுமில்லாமல் மொத்தமாக தமிழர்களின் மீதே ஆழ்ந்த வன்மம் தினமலருக்கு உண்டு. அந்த வன்மம் பார்ப்பனியம் தமிழகத்தின் பொது அரங்கில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டதில் இருந்து முளைவிடுகிறது. இது தான் ஆர்.எஸ்.எஸ். – இந்துத்துவ கும்பலோடு தினமலர் கைகோர்க்கும் புள்ளி.

சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் மோடி ஆதரவு அலை அடிப்பதாக துணிந்து புளுகி வந்தது தினமலர். அந்தப் பச்சைப் பொய்களுக்குப் பின்னணி என்னவென்பதை ஆதிமூலம் தனது சொந்த வாயால் இரகசிய கேமரா முன் விவரிக்கிறார்.

‘ஆச்சார்ய அடல்’ முன்வைத்ததைப் போன்ற பிரச்சாரப் பணிகளை தமது பத்திரிகை முந்தைய காலங்களில் செய்திருப்பதாக குறிப்பிடுகிறார் ஆதிமூலம். சென்ற தேர்தலுக்கு முன் மோடியைச் சந்திக்க தெரிவு செய்யப்பட்ட வெகுசில பத்திரிகையாளர்களில் தாங்களும் இருந்ததாக பெருமையோடு குறிப்பிடுகிறார்.

தமிழகத்தின் இரண்டு கட்சிகளையும் பகைத்துக் கொண்டதால் பல ஆண்டுகளாக விளம்பர வருவாய் கிடைக்காமல் இருந்ததாகவும், இவ்வாறு தமிழகத்தின் இருபெரும் கட்சிகளைப் பகைத்துக் கொண்டதாலேயே தேசிய கட்சியின் அன்பு தமக்கு கிடைத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

தினமலருக்கும் இந்துத்துவ கும்பலுக்குமான ‘ஒரே அலைவரிசை’ கொள்கை ரீதியிலானது மட்டுமல்ல என்பதை ராமசுப்பையரின் வாரிசான அந்துமணி ரமேசின் மைனர்தனங்களே பறைசாற்றுகின்றன. எனவே தினமலர் அம்பலமானதில் நமக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை ; ஆனால், தனது சொந்த விருப்பத்தில் செய்யும் காரியங்களுக்கும் கூலி வாங்கத் தயாராக இருந்தது தான் ஆச்சர்யம். விலைமாதிடம் ‘சேவை’ பெற்றுக் கொண்டு அவளிடம் இருந்து மாமூலையும் வசூலிக்கும் ஏட்டையா தான் தினமலர்.

*****

கோப்ராபோஸ்டின் மறைபுலனாய்வில் ’திராவிட’ நிழலில் வளர்ந்த சன் டி.வி.யும் பிடிபட்டிருப்பதைக் குறிப்பிட்டு பெரியாரிய வாடை கொண்ட சில உடன் பிறப்புக்கள் அதிர்ச்சி அடைகின்றனர்; கண்டிக்கின்றனர்.

வெளியாகியுள்ள காணொளியில் ஆச்சார்யா அடல் வெளியிட விரும்பும் விளம்பரங்களின் நோக்கம் என்னவென்று சன் டிவி-யின் வணிகப் பிரிவுத் தலைவர் அலெக்ஸ் ஜார்ஜ் கேட்கிறார். அதற்கு மற்ற பத்திரிகை முதலாளிகளிடம் கூறிய அதே காரணங்களை விளக்குகிறார் ஆச்சார்யா. அனைத்துக்கும் தலையாட்டும் ஜார்ஜ், தங்களது தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ய ஆகும் கட்டணத்தைக் குறித்துப் பேசுகிறார்.

மற்றொரு காணொளியில் சன் குழுமத்துக்குச் சொந்தமான அச்சு ஊடகங்களின் விற்பனைப் பிரிவுத் தலைவர் ராஜேஷ் கண்ணாவைச் சந்திக்கிறார் ஆச்சார்யா. தனக்கு மோடியைப் பிடிக்கும் என்றும், பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகள் நல்ல திட்டங்களென்றும் குறிப்பிடுகிறார் ராஜேஷ்.

சன் டிவி பணத்தையும், லாபவெறியையும் மட்டுமே குறிக்கோளாக கொண்ட அப்பட்டமான கார்ப்பரேட் நிறுவனம். அதாவது தி.மு.க.வின் தொழில் முகம். கொள்கை கோட்பாடுகள் உள்ளிட்ட ‘வெங்காயங்களை’ விட டி.ஆர்.பி. ரேட்டிங் எனும் சந்தை மதிப்பு தான் சன் டிவி-க்கு முக்கியம்.

சன் குழும ஊடகங்களில் வெளியாகும் நிகழ்ச்சிகளும், செய்திகளும் இந்த அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுகின்றன. ஆனால், பச்சையான கார்ப்பரேட் நலன் தனது வளர்ச்சிப் போக்கில் பாசிச அரசியலோடு கைகோர்க்க வேண்டும் என்பதே தர்க்க ரீதியான முடிவாகும்.

தினமலர் வகையறாக்கள் தமது சொந்த சுயவிருப்பத்தின் அடிப்படையில் இந்துத்துவத்திற்கு காவடி தூக்குகிறார்கள் என்றால், சன் டி.வி போன்ற ‘திராவிட’ கார்ப்பரேட்டுகள் கூலிக்கு காவடி தூக்குகின்றனர். இரண்டின் விளைவும் ஒன்று தான்.

“பாசிசம் என்பதை கார்ப்பரேடிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், பாசிசம் என்பது தனியார் குழும முதலாளித்துவத்தின் அதிகாரம், அரசு அதிகாரம் ஆகியவற்றின் ஒன்றிணைவைக் குறிக்கிறது” என்பது பாசிசத்துக்கு பெனிட்டோ முசோலினி அளித்த விளக்கம்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட பெரியார் பற்றாளர்களுக்கு முதலாளித்துவம் இந்துத்துவத்தின் பங்காளி என்பதை பொட்டிலடித்தாற் போல் உணர்த்தியுள்ளார் கலாநிதி மாறன்.

– தொடரும்.

  • சாக்கியன்

3 மறுமொழிகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க