மிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி நடப்பதாக நடிகர் கருணாஸே கூறிவிட்ட பிறகு அதை இல்லை என பவர் ஸ்டாரே மறுக்க முடியாது (பொன்னாரைப் பார்த்து பா.ஜ.க.வில் சேர்ந்தவர் ப.ஸ் சீனிவாசன்). எடப்பாடி, ஓ.பி.எஸ். கட்சியினரைப் பொறுத்த வரை தேர்தல் வரும் வரையிலும் விமான நிலையம் போகும் போது போடப்படும் போலீஸ் பந்தோபஸ்தை பந்தாவாக அனுபவிப்பது, நெடுஞ்சாலை முதல் சத்துணவு வரை ஒப்பந்தப் பணத்தை முடிந்த மட்டும் பாதுகாப்பான வழிகளில் சேர்ப்பது தவிர பா.ஜ.க. இட்ட வேலையை தலையால் செய்வதற்கு கூச்சநாச்சம் பார்ப்பதில்லை. சுதந்திரத்தை என்னவென்றே அறியாத அடிமைகள் அடிமையாட்சி புரிவது இயல்புக்கு மாறான ஒன்றல்ல.

சமூகவலைத்தளங்களில் ஆல் டைம் ஹிட்டாக இருக்கும் இம் மீம் நாயகர்களை அதே போன்று விவாத சந்து பொந்துகளில் கிண்டலோ, சுண்டலோ செய்யும் ஊடகங்களின் நிலை என்ன? மோடியின் தில்லி சந்திப்பிற்கு பிறகு என்றல்ல அதற்கு முன்பேயே தமிழக ஊடகங்களின் பெரும்பான்மை பா.ஜ.க.-விற்கு ஜிஞ்சக்கு ஜிஞ்சா-வை ஆரம்பித்து விட்டன. தற்போது தில்லி விசிட்டுக்கு பிறகு ஜால்ரா சப்தம் காதைக் கிழிக்கிறது. “2019 தேர்தலுக்காக மோடி பிரச்சாரத்தை ஆரம்பித்தது தினத்தந்தி!” என்று ஆகஸ்டு 13 எழுதியிருந்தோம். அதே தலையங்கத்தின் பார்வையை கிட்டத்தட்ட எழுதியிருக்கின்றன தினமணியும், தினமலரும்! இந்த தலையங்க ஒற்றுமையைப் பார்த்தால் சென்னை கமலாலயத்திலிருந்துதான் இப்பத்திரிகைகளுக்கு தலையங்க சப்ளை நடைபெறுகிறது என்பதை அறுதியிட்டு சொல்லலாம்.

ஆகஸ்டு 11 அன்று தினமணி எழுதிய தலையங்கம் “ பலவீனம்தான் பலம்!”. அதன் வரிகளில் சிலவற்றை படியுங்கள்!

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை நடந்து முடிந்திருக்கும் மாநிலங்களவையின் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் வெளிச்சம் போட்டிருக்கிறது

பிகாரில் தனது கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தியது மட்டுமல்லாமல், மாநிலக் கட்சிகளுடன் தொடர்பு கொள்வதிலும் பா.ஜ.க. தலைமை சுறுசுறுப்பாக இயங்கியது. ஒன்பது உறுப்பினர்கள் உள்ள பிஜு ஜனதா தளம், ஆறு உறுப்பினர்கள் உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி, மூன்று உறுப்பினர்கள் உள்ள அகாலிதளம், மூன்று உறுப்பினர்கள் உள்ள சிவசேனா இவையெல்லாம் போதாதென்று தமிழகத்திலிருந்து அ.தி.மு.க.வின் 13 உறுப்பினர்களும் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க முன்வந்தனர் என்பதை விட, பா.ஜ.க. தொடர்பு கொண்டு அவர்களது ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்டது என்பதுதான் நிஜம்.

எதிர்க்கட்சிகளின் பலவீனம் பா.ஜ.க.வின் பலம். இது 2019 மக்களவைத் தேர்தலுக்கும் பொருந்தலாம்!

அடுத்து “ஓங்கட்டும் அர்த்தமுள்ள விவாதங்கள்….” எனும் தினமலரின் ஆகஸ்டு 14 தலையங்கத்தைப் பார்ப்போம்.

ராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தல் முடிவானது, 2019 லோக்சபா தேர்தல் முடிவு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக அமையும் என்ற விவாதங்களை குறைத்துவிடும்.

பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா, அ.தி.மு.க., – பிஜு ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு, இத்தேர்தலில் மோடி உத்திகள் வெற்றியைத் தரும் என்பதை உணர்த்தியிருக்கிறது.

“எப்போது யானை ஓடத் துவங்கும்?” இது தினமலரின் ஆகஸ்டு 19 தலையங்கம். பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கான பொழிப்புரையாம் இது! சில வரிகளைப் படியுங்கள்!

இந்த, ஐந்து ஆண்டுகளில் அரசில் இருந்த, ‘சிவப்புநாடா’ முறை குறைந்திருக்கிறது என்பதின் அடையாளம், உலகின், ஆறாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது. இதற்கு மோடி அரசின் சில துணிச்சல் முடிவுகள் காரணமாகும். ஊழல் செய்பவர்கள், லெட்டர் பேடு கம்பெனிகள் மூலம் கருப்புப் பணம் குவிப்பவர்கள் பலர் பிடிபட்ட செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அதிக பயன்களைத் தரும் சீர்திருத்தங்களை மோடி அறிவித்திருப்பது, அடுத்த தேர்தலிலும், பா.ஜ., ஆட்சி வரும் என்பதை குறிப்பால் உணர்த்துவதாகும்.

ஆகஸ்டு 21 அன்று தினமலர் எழுதிய தலையங்கம் “வேலைவாய்ப்புகளும் சமூக பதற்றமும்”. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி குறித்த விவாதங்களில் மோடிக்கு கேடயமாக ஓடி வருகிறது தினமலர்.

நாட்டின் நலன் என்ற, மக்களின் பொருளாதார மேம்பாடு அளவுகோலை வைத்து மட்டும் அளக்கப்படும் விஷயமா வளர்ச்சி என்பதை, ஆராய வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. அதற்கேற்ப சரியான புள்ளி விபரம் மற்றும் தரவுகள், பல ஆண்டுகளாக திரட்டப்படவில்லை. பொருளாதாரம் என்பது, பல அம்சங்களை கொண்டது. அது அதிகமாக பேசப்படும்போது, ‘போர்’ என்ற சொல்லுக்கு இலக்கணமாகி விடும்.

நடப்பாண்டில், மொத்த வளர்ச்சி போகிற திசையைப் பார்க்கும் போது, அது வீழ்ச்சிக்கு வித்திடவில்லை. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மிகவும் குறைந்திருப்பது, தவிர்க்க முடியாதது. இது, உலகளாவிய பொருளாதாரத்துடன் தொடர்பு கொண்ட விஷயம் என்பதால் பிரச்னையாகிறது: ஆனால், மொத்த பணவீக்கம் என்பது அதிகரிக்காமல் இருப்பதால், விலைவாசி விண்ணை முட்டும் என்பதற்கு பின்னணி இல்லை.

எதிர்க்கட்சிகள் இன்னமும், ஜி.எஸ்.டி., வரியை குறை கூறினாலும், அதற்கான காரணங்களை கூறத் தவறுகின்றன.சிறு மற்றும் குறு தொழில்கள், இந்த வரிவிதிப்பில் பாதிக்கப்படாமல் இருக்க, அமைச்சர்கள் குழு ஆராய்ந்து பரிந்துரை செய்ய, முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

நோபல் பரிசு பெற்ற, அமர்தியாசென் போன்றவர்கள், அதிக குறை சொல்லும் முன், பல தகவல்களை திரட்டினரா… என்பதை, யார் கேட்க முடியும்?

கமலாலயத்தின் கனிவுக்காக தலையங்கம் எனும் துதிபாடலை “மோடியை பாடுவேனன்றி, மற்றவர்களையோ மக்களையோ பாடேன்” என்று உடும்பிப்பிடியாக அடிக்கும் தினமலரின் கை என்னவெல்லாம் எழுதுகிறது பாருங்கள்! பொருளியல் அறிஞர் அமர்தியாசென் போன்றோர் குறை சொல்லும் முன் பல தகவல்களை திரட்டவில்லை என்று சொல்கிறார்கள். நோபல் பரிசு அறிஞருக்கே சவால் விடுக்கும் இந்த அறிஞர் புலிகள் ஜி.எஸ்.டி.-யால் சிறு தொழில்கள் பாதிப்படையவில்லை என்கிறார்கள். ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உலகளாவியதாம். அதனால் பணவீக்கம் இல்லை என்பதால் விலைவாசி விண்ணை முட்டவில்லையாம்.

பொய்யோ புரட்டோ சொல்வதென்று துணிந்து விட்டால் செக்கா, சிவனா பார்க்க மாட்டார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். தினமலரோ சூரியனா, சீரோவாட்ஸ் பல்பா என்று கூட பார்க்கமாட்டோம் என இருட்டறையில் படம் காட்டுகிறது. வேலை வாய்ப்பின்மை தோற்றுவிக்கும் பதற்றம் பொய், அவை எதிர்க்கட்சிகள், அறிஞர்கள் தோற்றுவிக்கும் பிரமை என்று தமிழிசையின் அதிரும் குரலில் எழுதிக் கொண்டு இதுதான் “உண்மையின் உரைகல்” என்று வேறு சொல்கிறார்கள். காசு கொடுத்து வாங்கும் வாசகரை இதற்கு மேல் யாரும் இழிவுபடுத்த முடியாது.

மல்லையா, நீரவ்மோடி என்று வரிசையாக கருப்புப் பண முதலைகள் வெளிநாடு தப்பிச் செல்லும் போது, முதலைகள் வரிசையாக பிடிபடுகிறார்கள் என்று பொய் சொல்வதை திட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. மோடியின் சுதந்திர தின உரையைப் பார்க்கும் போது அடுத்த ஆட்சியும் அவரே அமைப்பார் என்பதை பகிரங்கமாக எழுதுகிறது தினமலர். முற்றும் துறந்த பார்ப்பன வெறி என்பது இதுதான்.மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி குறித்து தினத்தந்தி என்ன எழுதியதோ அதையே தினமணியும், தினமலரும் எழுதியிருக்கின்றன. மோடி-அமித்ஷாவின் ராஜதந்திரம், எதிர்க்கட்சிகளின் பலவீனம், 2019 தேர்தலிலும் மோடி வெற்றிபெறுவார்………..

ஒரு தேர்தலில் சதி, பேரங்கள், திரைமறைவு மிரட்டல்களால் வெல்வதைப் பாராட்டுபவர்கள், இதே சாமர்த்தியங்களோடு தொழில் புரியும் மாஃபியாக்களை மட்டும் குற்றவாளிகள் என்று பாரபட்சம் காட்டுவது ஏன்?

என்ன, தொழில்முறை திருடர்களுக்கு இப்படி புலவர் மரபில் பொழிப்புரை போட்டு நல்லவர்களாக காட்டும் பத்திரிகைகள் இல்லை! அந்த வகையில் பா.ஜ.க. கொடுத்த வைத்த கட்சிதான்!

  • வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க