ன்று (ஆகஸ்டு 13, 2018) தினந்தந்தியில் வந்த தலைப்புச் செய்தி, தலையங்கம் இரண்டுமே மோடி புகழ் பாடுகிறது!

“மோடியின் ராஜதந்திரம்” எனும் தலையங்கத்தில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் வென்றதை வியந்தோதுகிறது! இரண்டாவதாக “என்னை நீக்குவதுதான் ஒரே நோக்கம் – ‘தினத்தந்திக்கு’ பிரதமர் மோடி சிறப்பு பேட்டி” – இது தலைப்புச் செய்தி! சமீபத்தில் தமிழக ஊடக முதலாளிகள் இரகசியமாக மோடியை சந்தித்தார்கள் அல்லவா, அதில் தந்தி குழுமத்தின் முதலாளி ஆதித்யனும் ஒருவர்.

ஆக, அந்த ஆஃப் தி ரிக்கார்டு சந்திப்பின் டீல் தற்போது வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.

மக்களவையில் பெரும்பான்மையை வைத்திருக்கிற பா.ஜ.க., மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை என்பதாலேயே பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் இருப்பதை கூறுகிறது தந்தி தலையங்கம்!

இந்நிலையில் 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் எப்படிப் பார்த்தாலும் காங்கிரசுதான் வெற்றி பெறவேண்டும். ஆனால் மோடி-அமித்ஷா கூட்டணியினர் ராஜதந்திரமாக வேலை செய்து வெற்றியை பெற்றனராம். ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக்கிடம் பேசி 9 உறுப்பினர்களின் வாக்கு கிடைத்தது. அதே போன்று அ.தி.மு.க. சார்பில் உள்ள 13 உறுப்பினர்களையும் பேசி வாக்களிக்க வைத்தார்களாம். பிறகு சிவசேனாவின் 3 பேர் என மொத்தத்தில் 125 உறுப்பினர்களின் ஆதவைப் பெற்று பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதாம்.

ஆக, காங்கிரசு வெற்றி பெற வேண்டிய ஒரு தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதால் இது 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பயிற்சி ஆட்டம் என்று எழுதுகிறது தந்தி!

அ.தி.மு.க. உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றது மோடி – அமித்ஷாவின் ராஜதந்திரம் என்றால் இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி கூட சாணக்கியன் என்று பாராட்டலாம்.

இதே போன்ற ராஜதந்திரத்தால் மாநிலங்களவையில் மசோதாக்களை ஏன் நிறைவேற்ற முடியவில்லை? ஆக ஒரு தேர்தலில் எல்லா சகுனி – சாணக்கிய ஆட்டங்களை ஆடி பந்தயத்தையே மேட்ச் பிக்சிங் செய்து விட்டு இதை ஒரு வெற்றி என்று சொன்னால் தோல்வி என்ற வார்த்தை தலை நிமிர்ந்து கேலி செய்யுமே?

அடுத்து தந்தியின் தலைமை செய்தியாளர் டி.இ.ஆர்.சுகுமார் அவர்கள் மோடியை நேர்காணல் செய்திருக்கிறார்.  இதில் அடுத்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்ன?, ராஜிவ் காந்தி கட்டிப்பிடித்த போது என்ன பேசினீர்கள்?, அடுத்த தேர்தலில் ராகுல் காந்தியை முன்னிறுத்தாமல் காங்கிரசு சந்திப்பது, ரபேல் விவகாரத்தில் பா.ஜ.க. அரசு தயங்குவது குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு, தமிழ்நாட்டில் பா.ஜ.க. வெற்றி வாய்ப்பு,  ரஜினியோடு கூட்டணி, போன்ற ‘வரலாற்று முக்கியத்துவம்’ வாய்ந்த கேள்விகளை கேட்கிறார்.

இந்தியா முழுவதும் இந்துமதவெறியர்கள் பசு பெயரில் நடத்தும் படுகொலைகள், கல்பர்கி – கௌரி சங்கர் படுகொலைகள், கொலை – குண்டு வெடிப்பு வழக்குகளில் இருந்து சங்கிகள் அநியாயமாக விடுதலை, உச்சநீதிமன்றத்தில் மோடி அரசின் பிடி, பணமதிப்பழிப்பு – ஜி.எஸ்.டி. தோல்விகள், நீட் தேர்வு என்று எதையும் தந்தியின் அடிமை கேட்கவே இல்லை.

இதைப் பார்த்தால் சேலம் சிவராஜ் வைத்தியர்கள் அன்றாடம் இரவு 11 மணிக்கு அனைத்து சேனல்களிலும் நடத்தும் ’விழிப்புணர்வு’ நிகழ்ச்சிகள் தேவலாம். எப்படி நமது ஸ்கிரிப்ட்டை திருடி நேர்காணல் செய்கிறார்கள் என்று சிட்டுக்குருவி லேகிய பிரமுகர்களுக்கு கோபமே வரலாம்.

இந்தியா முழுவதும் இந்துமதவெறியர்கள் பசு பெயரில் நடத்தும் படுகொலைகள், கல்பர்கி – கௌரி சங்கர் படுகொலைகள், கொலை – குண்டு வெடிப்பு வழக்குகளில் இருந்து சங்கிகள் அநியாயமாக விடுதலை, உச்சநீதிமன்றத்தில் மோடி அரசின் பிடி, பணமதிப்பழிப்பு – ஜி.எஸ்.டி. தோல்விகள், நீட் தேர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என்று எதையும் தந்தியின் அடிமை கேட்கவே இல்லை.

மேற்கண்ட கேள்விகளில் ரபேல் விவகாரத்தில் கூட பா.ஜ.க. அரசு வெளிப்படையாக பேசவில்லையே என்றுதான் கேட்கிறாரே ஒழிய அதில் இத்தனையாயிரம் கோடி ரூபாய் ஊழல் என்ற குற்றச்சாட்டைக் கூட கேட்கவில்லை.

முக்கியமாக “தமிழ்நாட்டை சேர்ந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திரும்ப திரும்ப தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருக்கிறது என்றும், அவர்களின் நடவடிக்கைகளும் கவலையளிக்கத்தக்க வகையில் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?” என்று எஜமானிடம் கேட்கிறார் அடிமை.

எஜமானும் “தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களை பயங்கரவாதிகள் எதிர்க்கிறார்கள், கூடங்குளம் போராட்டத்தை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தூண்டிவிட்டன” என்கிறார்.

தூத்துக்குடியில் 13 பேர்களைக் கொன்று விட்டு, ஸ்டெர்லைட்டை எப்படி ஆரம்பிக்கலாம் என்று திட்டம் போட்டு விட்டு, வேதாந்தாவை எதிர்த்தால் அவர்கள் பயங்கரவாதிகள் என்று கூறுவதை தந்தியின் அடிமை பதிவதன் நோக்கம் போராடும் மக்களை மிரட்டுவதற்கே!

தலையங்கத்தோடு கார்ட்டூன் மூலமும் தந்தியின் ஜால்ரா சேவை செய்கிறது!

ஓபனிங்கே இப்படி பகிரங்கமான ஜால்ரா என்றால் இனி வரும் நாட்களில் விவாதங்களில் மட்டுமல்ல, குருவியார் பதில்கள் – சிந்துபாத் தொடர் புகழ் தினதந்தி வரை காவி பயங்கரவாதிகளின் கறைகள் அழுக்கை போக்குவதாக நம்மை நோக்கி தாக்குதல் தொடுக்கப் போகிறார்கள். மோடியை இரகசியமாக சந்தித்த மற்ற ஊடகங்களும் இனி அடிக்கடி மோடியையோ, அமித்ஷாவையோ சந்தித்து சிறப்பு பேட்டி என்ற பெயரில் விசுவாச ஜால்ராக்களை வரும் நாட்களில் இறைத்து விடும்!

தலையங்கத்தில் ஓபனிங்காக இப்படி ஒரு மேற்கோளை போட்டிருக்கிறார்கள் ஆண்டியார் புகழ் தினந்தந்தி!
“அமெரிக்க ஜனாதிபதியாக 4 முறை பதவி வகித்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் கூறிய ஒரு பழமொழிதான், ‘அரசியலில் எதுவும் தற்செயலாக நடந்து விடுவதில்லை, அப்படி நடந்தால் நிச்சயமாக அந்த நாளில் தீவிரமாக திட்டமிடப்பட்டது என்று நீங்கள் உறுதியாக சொல்லலாம்’ என்பதாகும். அதாவது பா.ஜ.க.-வின் வெற்றி எல்லாம் தானே கனிந்துவிடவில்லை அனைத்தும் மேற்படி இரட்டையர்களின் ராஜதந்திரமாம்!

அடேங்கப்பா தந்தி தலையங்கத்தில் இப்படி அல்ட்ரா மாடர்னாக அமெரிக்க மேற்கோளா என்று சிலர் அதிரலாம். ஆனாலும் என்ன செய்வது? எல்லா குற்றங்களிலும் குற்றவாளிகள் எதாவது ஒரு சிறு தடயத்தை விட்டுவிட்டே செல்கிறார்கள்!

ஆம். பா.ஜ.க – மோடி அரசாங்கத்தின் வெற்றிகள் அனைத்தும் தற்செயலாகவோ, மக்கள் ஆதரவினாலோ கிடைத்து விடவில்லை. அனைத்தும் சதித்தனமாக, சாதிமதவெறியை தூண்டிவிட்டும்தான் அதாவது பயங்கரத் திட்டம் மூலம்தான்  கிடைக்கிறது! இல்லையென்றால் தந்தி குழுமம் இப்படி ஒரு முட்டாள் கூட கண்டுபிடிக்கும் அளவிற்கு இப்படி ஒரு வெளிப்படையான ஜால்ராவை இசைத்து விடுமா என்ன?

ஆகவே தந்தி தலையங்கமும், நேர்காணலும் தற்செயலானதல்ல! ‘நன்கு’ திட்டமிடப்பட்டவையே!

  • வினவு செய்திப் பிரிவு

தந்தியின் தலையங்கம் மற்றும் நேர்காணல்: