ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி: தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது!

காவி பாசிசக் கும்பலை நீதிமன்றம் அனுமதித்திருக்கலாம். ஆனால் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிசக் கும்பலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! இது தமிழ்நாடு என்பதை மீண்டும் ஒருமுறை சங்கிக் கும்பலுக்கு உணர்த்துவோம்!

ண்மையில், காவிக் கும்பலுக்கு சாதமான இரண்டு தீர்ப்புகள் வெளியானது. ஒன்று தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்ச நீதிமன்றத்தின் அனுமதி; இரண்டாவது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அர்ஜூன் சம்பத்துக்கு அனுமதி. தீர்ப்புகள் இரண்டாயினும் தன்மை ஒன்றுதான். ‘நீதிமன்றத் தீர்ப்புகளின் வழியே’ தமிழ்நாட்டில் நுழைவதற்கான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பலின் எத்தனிப்புகள் இவை.

சென்ற ஆண்டு காந்தி பிறந்தநாளையொட்டி தமிழ்நாட்டில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாட்டு மக்கள், புரட்சிகர ஜனநாயக அமைப்ப்புகளின் எதிர்ப்பின் காரணமாக ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தது போலீசு.

ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கக் கோரி ஆர்.எஸ்.எஸ், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. பாசிசக் கும்பலுக்கு சாதகமான தீர்ப்பினை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், “ஊர்வலம் நடத்த அனுமதிக்கவில்லை என்றால், தமிழ்நாடு போலீசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” என மிரட்டியது. ஒரே நாளில் 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்றது தமிழ்நாடு அரசு. கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டும் பேரணி நடத்த அனுமதி வழங்கியதோடு, சுற்றுச்சுவருடன் கூடிய காலி மைதானம் அல்லது விளையாட்டு அரங்குகளில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல், பேரணி, பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என நிபந்தனைகளை விதித்தது.

படிக்க : ஆர்.எஸ்.எஸ் உளவாளி ஆர்.என்.ரவியின் உளறல்கள் – பின்னணி என்ன? | தோழர் ஆ.கா.சிவா வீடியோ

எந்த மாநிலத்திலும் பா.ஜ.க. சந்தித்திராத படுதோல்வி இது. இதனை சகித்துக்கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ் கும்பல், அனைத்து இடங்களிலும் பேரணிக்கும் அனுமதிக்க வேண்டும் என்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திடம் முறையிட்டது.

அவ்விசாரணையில், கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய ஆறு இடங்களைத் தவிர்த்து மற்ற 44 இடங்களில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ்.க்கு தமிழ்நாடு போலீசு அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இவ்வழக்கின் மீதான விசாரணையில், தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதனையடுத்து வருகிற ஏப்ரல் 16 ஆம் தேதி, தமிழ்நாட்டில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்த தமிழ்நாடு போலீசும் அனுமதி அளித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-க்கு சாதகமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான அடுத்த தினமே, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அர்ஜூன் சம்பத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்த அனுமதியளிக்க போலீசுக்கு உத்தரவிடக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த காலங்களில் இந்து மக்கள் கட்சியினர் அம்பேத்கருக்கு மாலை அணிவிக்க சென்றபோது அளிக்கப்பட்ட உத்தரவாதத்தைப் போல உத்தரவாதம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க செல்லும்போது பிறரைப்பற்றி கோஷங்கள் எழுப்ப மாட்டோம். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம், அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவிக்க மாட்டோம்; விபூதி, சந்தனம், குங்குமம் பூச மாட்டோம், போலீசு வாகனத்தில்தான் சென்று வருவோம் என உறுதியளித்தது இந்து மக்கள் கட்சி. இதனையடுத்து அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதியளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

அம்பேத்கருக்கு காவி உடை அணிவிக்கப் படுகிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அர்ஜூன் சம்பத் கையால் அம்பேத்கருக்கு மாலை அணிவிப்பதே அம்பேத்கரை காவிமயமாக்கும் நடவடிக்கைதான்.

அரியலூர் மாணவி லாவண்யாவின் மரணத்தில் மதச் சாயம் பூசியது தொடங்கி, ஆ.ராசா இந்துக்களை வேசிமகன் என்று கூறிவிட்டார், மனுநூலை சுட்டிக்காட்டிய திருமாவளவன் இந்துப் பெண்களை தவறாக பேசுகிறார் என மதவெறியை கிளரப்பார்த்தது காவிக் கும்பல். ஆனால், மதம் கடந்து அனைத்து மக்களும் நல்லிணக்கத்தோடு ஒற்றுமையுடன் வாழும் தமிழ்நாட்டில் காவிக் கும்பலின் எண்ணம் எடுப்படவில்லை; மண்ணைக் கவ்வியது. பெரியார் விதைத்த பார்ப்பனிய எதிர்ப்பும், மோடி – ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க எதிர்ப்பு அலையும் இயல்பிலேயே இருப்பதால் மற்ற மாநிலங்களைப் போல மத கலவரங்களின்மூலம் தமிழ்நாட்டில் ஊடுறுவது குதிரை கொம்புதான் என்பதை புரிந்து கொண்ட பாசிசக் கும்பல் ‘நீதிமன்ற தீர்ப்புகளின் வழியே’ தமிழ்நாட்டில் நுழைய எத்தனிக்கிறது.

வட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிராக கையாளும் நடவடிக்கைகளில் ஒன்று ஊர்வலங்கள். ராம நவமி, அனுமான் ஜெயந்தி போன்ற ‘இந்துப் பண்டிகைகளில்’ ஊர்வலங்களை நடத்துவதன் மூலம் அந்நாட்களை முஸ்லீம்கள், தலித்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான கலவர நாட்களாக அறிவித்து வருகிறது. பண்டிக்கைகள் இல்லாத நாட்களிலும், முஸ்லீம்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் பெரிய ஒலிப்பெருக்கியைக் கொண்டு, “பாரத் மாதாகீ ஜெய்” “ஜெய் ஸ்ரீராம்” போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்ளும் ஊர்வலங்கள் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படுவோம் என்று அச்ச மனநிலையை இஸ்லாமிய மக்களிடம் விதைத்து வருகிறது பாசிச கும்பல்.

அண்மையில் நடத்தப்பட்ட ராம நவமி ஊர்வலங்களின்போது பீகார், மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ம.பி, உ.பி, போன்ற மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய மக்கள் வாழும் வீதிகள் கலவரக்காடானது. இஸ்லாமியர் கடைகள், வீடுகள், மசூதிகள் அனைத்தும் காவிக் குண்டர்களால் சூறையாடப்பட்டன. ஊர்வலம் சென்ற வழிகளில் இருந்த மசூதிகள் மீது கற்களும் பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. மதராஸாக்களில் இருந்த புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. “ஜெய் ஸ்ரீராம்” “இந்தியா இந்துக்களுக்கான தேசம்” போன்ற மதவெறி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முஸ்லீம் சிறுபான்மையினரை ஒடுக்கி, தங்களது இந்துராஷ்டிரக் கனவினை நனவாக்க பாசிசக் கும்பல் மேற்கொண்டு வரும் முதன்மையான வழிமுறை இதுபோன்ற ஊர்வலங்கள்தான்.

மதம் கடந்து சகோதரத்துவத்துடன் ஒன்றுமையாக வாழ்ந்துவரும் தமிழ்நாட்டிலும் இத்தகைய கலவரச் சூழலை கொண்டுவரக் காவிப் பாசிசக் கும்பல் முயற்சிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கும் அம்பேத்கருக்கு அர்ஜூன் சம்பத் மாலை அணிவிப்பதற்கும் நீதிமன்றங்கள் அனுமதி வழங்கிவிட்டன. எனினும், தமிழ்நாடு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது!

படிக்க : தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலின் அடியாள்படையாக செயல்படும் தமிழ்நாடு போலீசு!

சென்ற முறை தமிழ்நாட்டில் பேரணி நடத்தப்போவதாக ஆர்.எஸ்.எஸ். அறிவித்தபோது, அதற்கு சென்னை உயர்நீதிமன்றமும் அனுமதியளித்திருந்த நிலையில் தமிழ்நாடு போலீசு பேரணிக்கு அனுமதி மறுத்தது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு மக்கள், பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையாகும். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை எதிர்த்து வி.சி.க அறிவித்த சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் ம.தி.மு.க, தி.க, பல்வேறு இடதுசாரி அமைப்புகள் உள்ளிட்டு 17 கட்சிகள் மற்றும் 44 இயக்கங்கள் பங்கேற்று ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

அதேபோல் சென்ற ஆண்டு, அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்த தனக்கு பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவிடக்கோரி, அர்ஜூன் சம்பத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்காக, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்த அர்ஜூன் சம்பத் வளாகத்துக்குள் இருந்த அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவ முயற்சி செய்தபோது, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டார். அன்றே, நீதிமன்ற அனுமதி பெற்று போலீசு பாதுகாப்போடு வந்த அர்ஜூன் சம்பத்தை அம்பேத்கர் மணிமண்டபத்துக்குள்ளும் நுழையவிடாமல் வி.சி.க உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காவி பாசிசக் கும்பலை நீதிமன்றம் அனுமதித்திருக்கலாம். ஆனால் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிசக் கும்பலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! இது தமிழ்நாடு என்பதை மீண்டும் ஒருமுறை சங்கிக் கும்பலுக்கு உணர்த்துவோம்!

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்
13-04-2023

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க