அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 2

வார்த்தைகளின் படிகத்தன்மை !

இசை நயத்தோடு, இனிமையாக பள்ளி மணி ஒலிக்கிறது …

நான் கதவை மூடுகிறேன். கதவிற்கு வெளியே ஒரு சில அம்மாக்களும் பாட்டிகளும் உள்ளனர். வகுப்பறையில் ஐந்து அம்மாக்கள் உட்கார்ந்திருக்கின்றனர்.

”எழுந்து நில்லுங்கள், குழந்தைகளே!”

குழந்தைகள் துள்ளியெழுந்து நின்றபடியே ”அடுத்து என்ன நடக்கப் போகிறது?” என்று என்னைப் பார்க்கின்றனர்.

”குழந்தைகளே, வணக்கம்!”

அவர்கள் பலவாறாக முகமன் கூறுகின்றனர். பரவாயில்லை, சீக்கிரம் பழகிவிடுவீர்கள். ”குழந்தைகளே, வணக்கம்!” என்று நான் எனக்கே உரித்தான தொனியில் கூறுவது உங்களைச் சந்திப்பதில் எனக்குள்ள மகிழ்ச்சியை எப்படி குறிக்குமோ அதே போல் நீங்கள் கூறும் முகமன் என்னைச் சந்திப்பதில் உள்ள மகிழ்ச்சியைக் குறிக்கும். இன்று என் தொனியில் எனக்கு திருப்தியில்லை. வகுப்பு துவங்கும் முன் வந்த அந்த அதிகார தோரணையுள்ள பெண்மணி என் மனநிலையை மோசமாக்கி என்னைப் பதட்டமடைய செய்ததற்காக அவள் மீது குற்றஞ்சாட்டுகிறேன்.

”உட்காருங்கள்… நான் உங்கள் ஆசிரியர். உங்களுடைய பள்ளி வாழ்க்கை இன்று துவங்குவது குறித்து வாழ்த்துக்கள். பாடங்களை படிக்கத் துவங்க வேண்டுமென நீங்கள் துடித்துக் கொண்டிருப்பீர்கள். சரி, ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காது ஆரம்பிப்போம் வாருங்கள் … நமது முதல் பாடம் நம் தாய்மொழிப் பாடம். உங்கள் தாய் மொழி என்ன என்று தெரியுமா?”

”ஜார்ஜிய மொழி!”

”உங்கள் ஒவ்வொருவருக்கும் ஏராளமான ஜார்ஜியச் சொற்கள் தெரியும். எங்கே, இச்சொற்களை இந்த அட்டைப்பெட்டியில் சேகரிக்கலாம் வாருங்கள்!”

என் கரங்களில் அழகிய சிறு அட்டைப்பெட்டி இருக்கிறது. இதே போன்ற சிறு பெட்டிகள் குழந்தைகளின் முன் உள்ளன: நேற்றே நான் ஒவ்வொரு குழந்தையின் மேசையிலும் சிறு அட்டைப்பெட்டியை வைத்தேன். இந்த அட்டைப்பெட்டியில் பத்து நீல நிற அட்டைக் குறிவில்லைகளை வைத்தேன். இந்த நீல நிற செவ்வக அட்டைக் குறிவில்லை ஒவ்வொன்றும் ஒரு சொல்லைக் குறிக்கும். “ஒவ்வொரு சொல்லையும் தெட்டத்தெளிவாக, எல்லோருக்கும் கேட்கும்படி உச்சரிக்க வேண்டும்; ஒவ்வொரு சொல்லையும் உச்சரிக்கையில் இந்த அழகிய அட்டைப்பெட்டியில் ஒவ்வொரு குறிவில்லையையும் போட வேண்டும். இலிக்கோ இந்த அட்டைப்பெட்டியை எடுத்துச் சென்று உங்கள் சொற்களை சேகரிப்பான்”.

இலிக்கோ தயார். குழந்தைகள் தம் கரங்களில் குறிவில்லைகளை எடுத்துக் கொண்டனர்.

”முதல் சொற்களை நான் அட்டைப்பெட்டியில் போடட்டுமா?”

ஒவ்வொரு சொல்லையும் நான் தேர்ந்தெடுத்து உச்சரித்து இலிக்கோவின் அட்டைப்பெட்டியில் குறிவில்லைகளைப் போடுகிறேன்: தாய்நாடு… மகிழ்ச்சி…. அன்பு….

இலிக்கோ மெதுவாக குழந்தைகளின் வரிசைகள் ஊடாக நடக்கிறான். முதற்சொற்களையடுத்து குறிவில்லைகள் அட்டைப் பெட்டியில் குவிகின்றன: பந்து, பெஞ்சு, மேசை, பென்சில், புத்தகம், மிதிவண்டி, பொம்மை…

இல்லையில்லை, இவை சொற்கள் அல்ல, இவை பொருட்கள்! பொருட்களினால் குறிவில்லைகள் குவிகின்றனவே தவிர சொற்களால் அல்ல. வகுப்பில் தாம் பார்ப்பதை அல்லது வீட்டிலோ, வேறெங்கோ பார்த்ததை குழந்தைகள் கூறுகின்றனர். ”காற்று” எனும் சொல்லைப் பார்க்க முடியாது, ஆகையால் எனது 38 மாணவர்களில் ஒருவர் கூட இச்சொல்லை உச்சரிக்கவில்லை. இதோ சான்ட்ரிக்கோ எழுந்து நின்று, வாயைத் திறந்தபடி, கரும்பலகை, சாக்பீஸ் என்று உச்சரித்து இரண்டு குறிவில்லைகளைப் போடுகிறான். பின் இன்னும் எந்தப் பொருளை இப் பெட்டியில் போடலாம் என்று யோசித்தபடி அறையை சுற்றும் முற்றும் பார்க்கிறான். ருசிக்கோ ”வீடு” என்று சொல்லி குறிவில்லையைப் போட்டு விட்டு நிறுத்தினாள். விக்டர் இவ்வீட்டை சுவர், கூரை, தரை, பால்கனி…. மலர்கள்… என்று தனித்தனியே பிரித்துக் கூறினான்.

அவர்கள் வார்த்தைகளின் கடலில் குளிக்கின்றனர். ஆனால், வார்த்தைகளைப் பார்க்கவில்லை; காட்டில் விளையாடுகின்றனர். ஆனால் மரங்களைப் பார்க்கவில்லை. அவர்களைப் பொறுத்த மட்டில் யதார்த்தம் என்ற வகையில், விசேஷ உலகம் என்ற வகையில் வார்த்தைகள் இல்லை. குழந்தைகளுக்கு வார்த்தைகள் கண்ணாடியைப் போல் ஒளிபுகும் தன்மையுள்ளவை. இவற்றின் ஊடாகப் பொருட்கள் தெரியும் என்று விஞ்ஞானம் கூறுகிறது. ஆனால், அக்கண்ணாடி தனியே தெரிவதில்லை!

நான் இக்கண்ணாடியின் மீது அடர்த்தியான ”வண்ணம் பூசி” இதன் வழியாகப் பார்க்கையில் ஒன்றும் தெரியாத படி செய்கிறேன். அப்போது குழந்தை தன் பேச்சுப் பிரவாகத்தை நிறுத்தி, தனக்காக பல்வண்ண யதார்த்தத்தை திறப்பான், தன் பேச்சை செழுமைப்படுத்தி, மேம்படுத்தி, மெருகிடத் துவங்குவான். கண்ணுக்குத் தெரியும் பொருட்களிலிருந்து குழந்தைகளின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும். இந்த மந்திர வட்டத்திலிருந்து அவர்கள் விடுபட உதவ வேண்டும். இலிக்கோவுடன் சேர்ந்து நான் வகுப்பறையின் நடுவில் நின்று விடுகிறேன்.

”நான் இன்னும் சில சொற்களை சொல்லட்டுமா?”

நீல நிறக் குறிவில்லைகளைப் போட்டபடியே சொற்களைத் தேர்ந்தெடுத்து சொல்கிறேன்:

”அழகிய… நாளைய…”

இப்போது நானும் இலிக்கோவும் அட்டைப்பெட்டியைக் கையில் ஏந்தியபடி விரைந்து நடை போடுகின்றோம். அட்டைப்பெட்டியில் ”போடப்படும்” சொற்களைத் திரும்ப உச்சரிக்குமாறு நான் இலிக்கோவின் காதில் முணு முணுக்கிறேன்.

அவர்கள் வார்த்தைகளின் கடலில் குளிக்கின்றனர். ஆனால், வார்த்தைகளைப் பார்க்கவில்லை; காட்டில் விளையாடுகின்றனர். ஆனால் மரங்களைப் பார்க்கவில்லை. அவர்களைப் பொறுத்த மட்டில் யதார்த்தம் என்ற வகையில், விசேஷ உலகம் என்ற வகையில் வார்த்தைகள் இல்லை.

”அன்பு….. மென்மை … கனவு…..”

”நன்றி, மாயா!”

”நேற்று… வேண்டும். குதிக்கிறான். நிமிடம்…”

”நன்றி, சாஷா!”

”விருப்பம்… பறக்கின்றன…”

மாரிக்கா நீண்ட நேரம் யோசித்து, குறிவில்லையை எறிந்து விட்டு மகிழ்ச்சியாகக் கத்துகிறாள்:

”மூக்கு…”

கியோர்கியும் ருசுதானும் மனித உடலை மீண்டும் பகுதி – பகுதிகளாகப் ”பிரித்தனர்”:

”தலை….. முடி… காதுகள்… வாய்….. பற்கள்…” மீண்டும் இப்படியாகத் தொடர்ந்தது…

சரி. ”கண்ணாடிக்கு வண்ணம் பூசும் கடமையை” இன்று நிறைவேற்ற இயலாது. ஒரே ”வண்ணத்தைக்” கொண்டும் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது. வேறொரு ”வண்ணத்தை” பயன்படுத்த முயற்சிக்கிறேன். யாருக்கெல்லாம் நூறு வரை எண்ணத் தெரியுமெனக் கேட்கிறேன்: ”அட்டைப்பெட்டியில் நாம் எவ்வளவு சொற்களைச் சேர்த்துள்ளோம் என்று எண்ண வேண்டும்!” இலிக்கோ, தேன்கோ , மாயா மூவரும் இதைச் செய்யத் தயார். ”சரி, இடைவேளையின் போது இச்சொற்களை எண்ணி எனக்குச் சொல்லுங்கள்!” அடுத்த பயிற்சிக்கு வருகிறேன்.

”நான் மெதுவாக, சற்றே இழுத்தபடி, கிசுகிசுவென, ஒரு சொல்லை உச்சரிக்கப் போகிறேன். இது என்ன சொல் என்று கண்டுபிடியுங்கள்.”

மெதுவாகவும் இழுத்தபடியும் சொல்லக் காரணம், குழந்தைகள், வார்த்தையின் ஒலியமைப்பை ”நிறுத்தி”, அதை உற்றுக் கவனிக்க வேண்டும் என்பதாகும். மேலும் இவர்கள் சொல்லின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், அரிச்சுவடிக் கட்டத்தில் இச்சொற்களை இவர்கள் இதே மாதிரி இழுத்தபடி உச்சரிப்பார்கள். கிசுகிசுவென சொல்லக் காரணம், கேட்கும் திறனை, ஒலி இயல் ரீதியான செவியுணர்வை வளர்ப்பது ஆகும். அதோடு கூட கவன உணர்வையும் அதே சமயம் சிறிது விளையாட்டு தன்மையையும் வளர்க்க வேண்டும். நான் கரும்பலகையருகே நின்று கொண்டு சற்றே முன்னுக்குச் சாய்ந்து ரகசியத்தை சொல்வது போல் முணு முணுக்கிறேன்:

”அஅஅஅம்ம்ம்ம்ம்மாமாமா…”

முதல் ஒலியாகிய ‘அ’விற்குப் பின் எழுத்தால் குறிக்கப்பட முடியாத ஏதோ ஒரு ஒலியை எழுப்புகிறேன்; இந்த குறிப்பிடப்பட முடியா ஒலியை 2-3 நொடிகளுக்கு இழுக்கிறேன். இதற்குப் பிந்தைய ஒலிகளையும் இதே போல் உச்சரிக்கிறேன். நான் ஒவ்வொரு ஒலியையும் தனித்தனியே பிரிப்பதில்லை. இவற்றைத் தனியான, சுயமான அலகுகளாகப் பிரித்துக் காட்டுவதில்லை.

”‘அம்மா’…. நீங்கள் ‘அம்மா’ என்று சொன்னீர்கள்!” குழந்தைகள் உரக்கக் கத்துகின்றனர். ஆனால், எல்லாக் குழந்தைகளும் இப்படிக் கத்தவில்லை. பலருக்கு யோசித்துப் பார்க்கவே நேரம் போதவில்லை, மற்றவர்கள் முந்தி விட்டனர். ஒவ்வொருவரும் தம் பதிலை என் காதில் மெதுவாகச் சொல்லும் முறையை அமல்படுத்த வேண்டும். முதலில், இம்முறை குழந்தைகளுக்குப் பிடிக்கும், இரண்டாவதாக, பலரின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யலாம்.

”இப்போது நான் வேறொரு வார்த்தையை உச்சரிப்பேன். யாருக்குப் பதில் தெரியுமோ அவர்கள் பதிலை என் காதில் மெதுவாகச் சொல்ல வேண்டும்! புரிந்ததா?” அதே போல் ரகசியமாக, இன்னமும் மெதுவாக, சரிவரக் கேட்காதபடி உச்சரிக்கிறேன்: ”தா…யயயயககககம்ம்ம்ம்.”

முதல் கரங்கள் உயர்ந்தன. ஒவ்வொருவரையும் அணுகி, குனிந்து காதை நீட்டுகிறேன். குழந்தைகள் இரு கரங்களாலும் என் கழுத்தைக் கட்டிப் பிடித்தபடி என் காதருகே வாயை வைத்துத் தம் பதில்களைச் சொல்கிறார்கள். ”நல்லது, நன்றி!” சரியான பதில் சொல்பவர்களைப் பார்த்து உரக்கச் சொல்கிறேன்.

மற்றவர்களிடம் ”நன்கு யோசி… தா…யயககம்ம்…. திரும்ப உன்னிடம் வருவேன்” என்று மெதுவாகக் கூறுகிறேன். கிட்டத்தட்ட அனைவரும் என் காதுகளில் தம் பதில்களைச் சொல்லிவிட்டனர். நான் மீண்டும் என் வலது கையை முன்னுக்கு நீட்டியபடி கரும்பலகையருகே நிற்கிறேன்.

”நான் கையை அசைத்ததும் நீங்களனைவரும் சேர்ந்து நமது ரகசியச் சொல்லைக் கூற வேண்டும்!… தயாரா… எங்கே, வார்த்தையை நாக்கிற்குக் கொண்டு வாருங்கள்…”

படிக்க:
பொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் !
மாட்டுக்கறி மக்கள் உணவு ! மோடி பருப்பு இங்கே வேகாது ! வீடியோ

காற்றில் எதையோ பிடிக்கப் போவது போல் நான் வேகமாகக் கையை வீசியதும் வகுப்பறையில் குழந்தைகளின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கிறது:

”தாயகம்!” நான் மீண்டும் ஏதோ ரகசியத்தைச் சொல்லும் பாணியில் நின்றபடி முணுமுணுக்கிறேன்:

”ரொட்ட்ட்ட்டிடிடிடி.”

உடனடியாக சாதாரண நிலைக்கு வந்து சொல்கிறேன்:

”யோசியுங்கள்!… வார்த்தையை நாக்கிற்குக் கொண்டு வாருங்கள்!.. எங்கே !..”

குழந்தைகள் மகிழ்ச்சியோடு உச்சரிக்கும் ”ரொட்டி” என்ற சொல்லை காற்றில் ”பிடிக்கிறேன்”. ஏதோ மந்திரத்தால் கட்டிப் போடப்பட்டதைப் போன்ற ஒரு நிலையில் அவர்கள் அடுத்த வார்த்தைக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். ஒவ்வொரு பத்து வினாடிகள் கழிந்ததும் ”கனவு”, ”சூரியன்”, ”கோளம்” என்ற சொற்கள் உரக்க ஒலிக்கின்றன. பின்னர் விரைவாக எல்லோரையும் சுற்றி வருகிறேன், குழந்தைகளின் சுரங்கள் என்னைத் தம்மை நோக்கி இழுக்கின்றன, உதடுகள் பதில்களை முணு முணுக்கின்றன.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க