பாகிஸ்தான், சர்கோதா (Sargodha) நகரில் பிளேக் நோயினால் பத்தாயிரக்கணக்கான மக்கள் தங்களது இன்னுயிரை இழந்தது பற்றி கதைகதையாக மக்கள் இன்று கூறுகிறார்கள். அது மனிதகுலத்தின் ஒரு சாபக்கேடு.
நூறு ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊரான சர்கோதாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் மரண தண்டனையை எதிர்நோக்கி சிறைக்குள் அடைப்பட்டு கிடக்கிறார் முகம்மது பரூக். அது அவர் விரும்பாதது. அவரது கனவுகளுக்கு பதிலாக கிடைத்தது மரணம். தன்னுடைய குட்டி மகள் வயது வந்ததும் திருமணம் செய்வதற்கான கனவுகள் அவை. ஆனால், கொடுங்கனவுகளே ஏழைகளுக்கு எதார்த்தமாகின்றன.
படிப்பறிவற்ற பாரூக் தன்னுடைய குடும்பத்திற்கு உதவிட ரிக்க்ஷா வண்டி ஒட்டி வந்தார். ரிக்க்ஷாவின் மூன்று சக்கரங்கள் ஓடினால் தான் அவரது நிறைமாத மனைவி மற்றும் மகளின் வாழ்க்கையும் சற்று ஓட்ட முடியும்.
அதிக நேரம் உழைத்தாலும் குறைவான பணம் தான் பரூக்கிற்கு கிடைத்தது. எனவே கனவு காண்பதற்கு அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால், அவரது அப்பா அப்துல் சமதிற்கு ஒரு கனவு இருந்தது. தன்னுடைய மூன்று மகன்களுக்கும் ஒரு மகளுக்கும் தன்னை விட சிறப்பான ஒரு வாழ்க்கை கிடைக்க அவர் கனவு கண்டார்.
2010-ம் ஆண்டில் சமதின் கனவை கொடுங்கனவாக்க வெளிநாட்டில் வேலைக்கு ஏற்பாடு செய்பவர்கள் என்று கூறிக்கொண்டு இரண்டு தரகர்கள் அவரை சந்தித்தனர். சமத், தன்னுடைய கனவை நினைவாக்கவும், பரூக் புதிய கனவுகள் காணவும் அதை நல்வாய்ப்பாக கண்டனர்.
அந்த தரகர்களில் ஒருவர் அல்லாஹ் டிட்டா மற்றொருவர் மஸார் அப்பாஸ். இருவரும் சமதிடம் 1,50,000 ரூபாய் கொடுத்தால் அவரது மகனை சவூதி அரேபியாவிற்கு அழைத்து செல்வதாக உறுதியளித்தனர். அது மட்டும் நடந்தால் 26 வயதியான பரூக் ஒரு புதிய வாழ்க்கையை சவுதியில் தொடங்கலாம். விளைவாக சர்கோதாவில் அவரது குடும்பத்தினர் வாழ்க்கையும் மலரும் என்று நம்பினார்கள்.
ஆனால், தரகர்கள் கேட்டத்தொகையோ அவர்களது குடும்பத்திற்கு சாதாரணமானது கிடையாது. அவர்களது மூன்று சக்கர வண்டியுடன் அவர்களிடமிருந்த மதிப்பு வாய்ந்த பொருட்கள் அனைத்தையும் அவர்களது கனவிற்காகவும், அவர்களது எதிர்காலத்திற்காகவும் பரூக்கின் குழந்தைகளுடைய எதிர்காலத்திற்காகவும் விற்க வேண்டியிருந்தது.
அந்த பணம் கடவு சீட்டையும் இதர பயண ஆவணங்களையும் பரூக்கிற்கு வாங்கி கொடுத்தது. அதே ஆண்டின் மே மாதத்தில் பாகிஸ்தான் முழுவதும் வெள்ளப்பெருக்கு பேரவலம் ஏற்படுவதற்கு சற்று முன்னதாக தரகர்கள் இருவரும் பரூக்கை கராச்சிக்கு அழைத்து சென்றனர். ஆனால், விளக்குகளின் நகரம் பரூக்கின் வாழ்க்கையை கூடிய சீக்கிரம் இருளில் தள்ள இருக்கிறது.
அடுத்த சில நாட்கள் அவர் அங்கு தங்கி இருந்தார். மே மாத வெய்யிலும் கடுமையான ஈரப்பதமும் அவரை வாட்டின. ஆனால், அதை விட பயங்கரமான நெருப்பொன்று அவரை கவ்வ காத்திருந்தது.
இரண்டு வாய்ப்புகள் அவர் முன்னால் இருந்தன. ஒன்று முன்பு போல அவரது வாழ்க்கையும் அவரது குடும்ப வாழ்க்கையையும் பணயம் வைத்து போராடுவது மற்றொன்று தரகர்கள் சொல்வதை செய்வது. அவர் தரகர்கள் சொல்வதை செய்வது என்று முடிவெடுத்தார்.
ஹெராயின் போதை பொருள் அடங்கிய மாத்திரைகளை அவர் விழுங்கினார். அது வயிற்றிலிருந்து எடுக்கும் வரை பத்திரமாக இருக்கும். பின்னர் அவர் விமானத்தில் ஏற்றப்பட்டார். அவருக்கு பிரியாவிடை கொடுக்க அங்கே யாருமில்லை. அவர் மீண்டும் வரும் போது தான் அங்கு இருக்க வேண்டும் என்று அவரது மகள் அவரிடம் கேட்கவில்லை. மனைவியையும் வயிற்றிலிருக்கும் குழந்தையையும் நன்றாக பார்த்துக்கொள்ளுமாறு அவர் கூறவும் இல்லை.
வெளிநாடுகளில் சிறையில் வாடும் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை:
சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை:
அங்கு அறிமுகமில்லா அந்த தரகர்கள் மட்டுமே அவருக்கு தெரிந்த முகங்கள். அவர்கள் இருவரும் பரூக்கை விமானத்தில் ஏற வலியுறுத்தினார். இறங்கியவுடன் அவரை அழைத்து செல்ல சிலர் வருவார்கள் என்று கூறினார்கள். ஆனால், அந்த சிலர் சவூதி அதிகாரிகள் என்பது பரூக்கின் விதிப்பயனா இல்லை ஏழைகளின் கொடுங்கனவா?
ரியாத்தில் இறங்கிய மறுகணமே பரூக் கைது செய்யப்பட்டார். சர்வதேச சட்டதிட்டங்களுக்கு புறம்பாக அரபி மொழியில் அவருக்கு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சிலப்பகுதிகள் மட்டுமே அவருக்கு மொழி பெயர்க்கப்பட்டன.
புரியாத மொழியில் விசாரணை நடத்தப்பட்டதால் அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அவருடைய எதிர்ப்பை தெரிவிக்க ஒரு மாத காலம் காலக்கெடு கொடுக்கப்பட்டது. நல்ல உள்ளம் கொண்ட சில சிறைக்கைதிகள் மூலம் அரபி மொழியில் தன்னுடைய எதிர்ப்பை உரிய காலத்தில் பதிவு செய்து கொடுத்தார். ஆனால், தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்து சொல்வதற்கோ அல்லது சட்ட வல்லுனரை அமர்த்தவோ அடிப்படை உரிமை அவருக்கு மறுக்கப்பட்டது.
அவருக்கு இரண்டு மாதங்களில் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று அல்லாவின் பெயரால் தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது. அதே நேரத்தில் அவரது இரண்டாவது மகளும் பிறந்தாள்.
இன்று அவரது மகள்களுக்கு 11 மற்றும் 9 வயதாகிறது. மேலும் பரூக் சிறையிலடைக்கப்பட்டு பத்தாண்டுகளாகிறது. அவர் முதலில் மாலஸ் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அல் ஹாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பரூக் தன்னுடைய குடும்பத்தினருடன் அடிக்கடி பேசுகிறார். பரூக்கின் மகள்கள் அவரிடம் என்ன பேசுவார்கள் நீங்கள் அவரிடம் என்ன பேசுவீர்கள் என்று நான் சமத்திடம் கேட்டேன். ஆழ்ந்த மவுனமே பதிலாக கிடைக்கிறது. சூழ்நிலையின் மவுனம் அவரையும் ஆட்கொண்டுவிட்டது.
பரூக் கைது செய்யப்பட பிறகு இரு தரகர்கள் மீது வழக்கு தொடுத்து முதல் தகவல் அறிக்கையை சமத் பதிவு செய்தார். ஆனால், அவர்கள் இருவரும் ஒன்றரை ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். பின்னர் தொடர்ச்சியாக அதிபர், முதன்மை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் என்று மன்றாடிக் களைத்து விட்டார். எந்த பதிலும் அவருக்கு கிடைக்கவில்லை.
படிக்க:
♦ எத்தகைய ஒரு குரூர பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளோம் நாம் !
♦ கொலைகார சவுதி அரசால் குதறப்படும் ஏமன் மக்கள் – படக் கட்டுரை
பரூக் கைது செய்யப்பட்டதை அவரது குடும்பத்தினருக்கு அரசாங்கம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அல்லது தூதரக உறவுகள் பற்றிய வியன்னா ஒப்பந்தம், உலகளாவிய மனித உரிமை பிரகடனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை, எந்தவொரு வடிவிலான சிறைச்சாலை அல்லது சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான ஐநா கோட்பாடுகள் அல்லது கெய்ரோ இஸ்லாமிய மனித உரிமைகள் பிரகடனம் உள்ளிட்ட எந்த மனித உரிமை சட்டதிட்டங்கள் மூலமாகவும் பரூக்கை விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இச்சட்ட திட்டங்கள் பற்றி சமத்திற்கு எதுவும் தெரியாது. அல்லது அது பற்றி அவர் கவலை கொள்வதுமில்லை. அவரிடம் சமீபத்தில் போனில் பேசிய போது தன்னுடைய மகன் விடுதலையாவதற்கு ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டார். மவுனம் மட்டுமே என்னுடைய பதிலாக இருந்தது.
சர்கோதா நகரை மீண்டும் 2010-ல் ப்ளேக் நோய் கவ்வியது. ஆனால், இம்முறை என்ன சொல்வதென்று யாருக்கும் தெரியவில்லை.
கட்டுரையாளர்:
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : Dawn