குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 5
பாடங்களுக்கு இடையிலான நேரத்தை – எப்படிப் பயன்படுத்துவது? (தொடர்ச்சி…)
பள்ளி இடைவேளைகளின் போது வகுப்பறையிலோ, பள்ளி இடைவழிகளிலோ இக்குறும்புக்காரச் சிறுவர்கள், இந்த செயல் முனைப்பான கற்பனையாளர்கள் என்ன தான் செய்ய வேண்டும்? சுவரில் தொங்கும் சுவர் பத்திரிகைகளைப் படிக்க வேண்டுமா? அல்லது இடைவழிகளில் நடந்து கோஷங்களையும் சுவரொட்டிகளையும் அறிவிப்புப் பலகைகளையும் காட்சிப் பெட்டிகளையும் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? அல்லது பிரபல எழுத்தாளர்கள், விஞ்ஞானிகளின் படங்களை முடிவற்றபடி பார்த்து அவர்களைப் போல் ஆக வேண்டும் என்று கனவு காண வேண்டுமா? இப்படிப்பட்ட வளர்ப்பு முறை குழந்தைக்கு ஒத்து வராது; உணர்வுப்பூர்வமாக கட்டுப்பாடாக இருக்க வேண்டியதன் அவசியத்தை குழந்தை புரிந்து கொள்வதே கடினம்.
குறும்புத்தனம் என்பது குழந்தைகளிடம் உள்ள ஒரு நல்ல குணமாகும். இதை சரிவர அணுகிப் பயன்படுத்த வேண்டும். கீழ்க்காணும் முடிவிற்கு நான் எப்போதோ வந்து விட்டேன்:
குழந்தை ஒழுக்கம் என்பது குறும்புகளை மாற்றியமைப்பதில்தான் உள்ளதே தவிர இவற்றை அடக்கி ஒடுக்குவதில் அடங்கியிருக்கவில்லை. நமது பயிற்சி முறையின் மூலம் அவர்களின் உள்ளே புகுத்த முடியாததைச் செய்யும்படி அவர்களைக் கோர வேண்டாம்.
குழந்தைகளின் குறும்புகள் அடக்கி ஒடுக்கப்படாமல் மாற்றியமைக்கப்பட என்ன செய்ய வேண்டும்? அதுவும் குறிப்பாக இடைவேளைகளின் போது இதை எப்படிச் செய்வது? ஏனெனில் இடைவேளைகளின் போதுதான் உட்சக்திகள் அடக்க இயலாதவாறு பொங்குகின்றன. இவற்றின் சுதந்திரமான உந்து சக்திகளுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். இவ்வாறாக, பள்ளி இடைவேளைகள் மற்றும் பள்ளிக் கட்டுப்பாடு சம்பந்தமான சிக்கலான ஆசிரியரியல் பிரச்சினை எனக்குத் தோன்றுகிறது. இப்பிரச்சினையை நான் தீர்க்கவில்லை, அனேகமாக இதைத் தீர்க்கவும் முடியாது. என்றாலும் ஒரு சில சக ஆசிரியர்களை விட சற்றே அதிகமாக நான் நிம்மதியாக இருக்க முடியும். ஏனெனில் என் சிறுவர் சிறுமியர் எதைக் கண்டிப்பாகச் செய்வார்கள் என்று எனக்குத் தெரியும்.
இலிக்கோ, தேன்கோ, மாயா ஆகிய மூவரையும் வார்த்தை அட்டைவில்லைகளை எண்ணுவதற்காக அறையின் ஒரு மூலைக்கு அனுப்பினேன்.
போன்தோ பையிலிருந்து ஒரு பெரிய ஆப்பிளை எடுத்து அதைக் கடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.
ருசிக்கோ தன் ”சான்ட்விச்சை” சாப்பிடுவதில் ஈடுபட்டிருக்கிறாள்.
ஒரு சில சிறுமியர் மேற்கோட்டுகளை மாட்டும் இடத்தில் ஸ்கிப்பிங் கயிறுகளைக் கண்டுபிடித்தனர். இடைவழியில் அவர்கள் குதித்து விளையாடும் லயமும் கணீரென்ற சிரிப்பும் என் காதுகளை எட்டுகின்றன.
இடைவழியிலுள்ள சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சிரிப்புப் படங்கள் ஒரு சிலரின் மகிழ்ச்சிகரமான மன நிலையை அதிகப்படுத்துகின்றன.
வகுப்பறையில் இரண்டு மீட்டர் நீளமுடைய ஒரு பெரிய, கெட்டியான வெற்றுத் தாள் தொங்குகிறது. இதைச் சுற்றி மரச்சட்டம் உள்ளதால் இது ஒரு படத்தைப் போல் உள்ளது. ”விருப்பப்பட்டதை வரை” என்று ஒரு அறிவிப்பு அதன் மேல் உள்ளது. அருகே வண்ணப் பென்சில்கள் இருக்கின்றன. 4-5 பேர் ஏற்கெனவே அதில் தம் கைவண்ணங்களைக் காட்டிக் கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.
குறுகலான நீண்ட கரும்பலகையும் அருகே வண்ண சாக்பீஸ்களும் துண்டும் உள்ளன. அனேகமாக ஒரு சிலர் இந்நேரம் தம் கரங்களையும் முகங்களையும் அழுக்குப்படுத்தியிருப்பார்கள்.
வெவ்வேறு வார்த்தைகள், பழமொழிகள், பாடல் வாசகங்கள், விடுகதைகள், எண்கள் முதலியன பெரும் எழுத்துக்களில் எழுதப்பட்ட அட்டைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. குழந்தைகளில் ஒரு பகுதியினர் கண்டிப்பாக இவற்றைப் படிக்க முயலுவார்கள்.
குழந்தைகள் பார்த்து, படித்து, வரைவதற்கு ஏற்றவாறு இவையெல்லாம் அவர்களுக்கு எட்டக் கூடிய உயரங்களிலேயே மாட்டப்பட்டுள்ளன.
படிக்க:
♦ Trust WHO ஆவணப்படம் : உலக சுகாதார நிறுவனத்தின் மறுபக்கம் !
♦ பெண்களின் பார்வையில் அழகு – ஆபரணம் – ஆடை – உணவு | பெண்கள் நேர்காணல்
நான்கு சிறு மேசைகளில் (இவற்றைச் சுற்றி சிறு நாற்காலிகள் போடப்பட்டுள்ளன) வண்ணப் படங்களுடன் கூடிய நூல்கள், குழந்தைகளுக்கான சஞ்சிகைகள், கணித விளையாட்டு, சிறு விளையாட்டுக் கட்டுமானப் பொருட்கள், சொக்கட்டான், சதுரங்கம் முதலியன வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன.
சில நாட்களுக்குப் பின் வகுப்பறையில் வில்லும் அம்பும் இருக்கும். அப்போது என் பங்கேற்போடு இதில் போட்டி நடக்கும்.
இடைவழியில் சுவர் ஓரமாக ஒரு செங்குத்தான ஏணி வைத்து, தரையில் மெத்தென்ற விளையாட்டு மெத்தையை விரிக்க எண்ணியுள்ளேன். குழந்தைகளுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் தெரியுமா?
ஒரு நாள் நானே நிச்சயமாகக் குழந்தைகளுக்கு குழாய்களைக் கொண்டு வந்து தருவேன். அப்போது ஒருவரையொருவர் பரஸ்பரம் சுட்டுக்கொள்வோம். ஆனால் கசங்கிய காகிதத் துண்டுகளுக்குப் பதில் சுத்தமான குண்டுகளைப் பயன்படுத்துவோம்.
இவையனைத்தையும் நேரத்திற்குத் தக்கபடி, ஒவ்வொரு வகுப்பிலும் குழந்தைகள் வளருவதைப் பொறுத்து, இவர்களின் குறும்புகள் மாறுவதைப் பொறுத்து நான் மாற்றுவேன். எனது கற்பனைத் திறன் மற்றும் குறும்பு இதில் பெரும் பங்காற்றும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை, ஏனெனில் தன் குழந்தைகளின் குறும்புகளை மாற்றியமைக்கும் முறையை ஆசிரியர் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அவருக்கே குறும்பு செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது.
குழந்தைகள் பெரியவர்களாக உதவ வேண்டும் என்றால் அவர்களில் தன்னைப் பார்க்க வேண்டும்; அவர்களின் மூலம் தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ள தனது குழந்தைப் பருவத்தை மீண்டும் அவர்களின் உருவத்தில் காண வேண்டும்; என்றென்றும் மனிதாபிமானம் மிக்க ஆசிரியராக இருக்க வேண்டுமெனில் குழந்தையோடு குழந்தையாக வாழ வேண்டும்.
குழந்தைகள் மாற்றத்தை நாடும் ஆக்கப்பூர்வமான கற்பனையாளர்கள், சுறுசுறுப்பானவர்கள். எனவே, இவர்களுக்கு ஒரு சரிப்பட்ட சூழலை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இச்சூழல் இவர்களை அச்சுறுத்தக் கூடாது, விளைவுகளை நினைவு படுத்தக்கூடாது, அறிவுரைகளைக் கூறக்கூடாது, மாறாக இது இவர்களின் நடவடிக்கைகளை வழிகாட்டி நடத்த வேண்டும்.
கரும்பலகையில் நான் கணிதப் பாடத்திற்கான கணக்குகளை எழுதுகிறேன். ஒரு சில குழந்தைகள் என்னைச் சுற்றிக் கொண்டு நான் என்ன செய்கிறேன் என்று ஆவலோடு கவனிக்கின்றனர்.
“மாமா, நீங்கள் என்ன எழுதுகின்றீர்கள்?”
“அவர் மாமா இல்லை, ஆசிரியர்…”
“ஏன் வண்ண சாக்பீஸ்களால் எழுதுகின்றீர்கள்?”
“நான் ஏன் சிரித்தேன் என்று சொல்லட்டுமா?”
கோத்தே: “நான் சிறுவனாக இருந்த போது…”
ஏக்கா: “நீ இப்போதும் சிறுவன் தான்…”
கோத்தே: “பொறு… நான் மிகவும் சிறுவனாக இருந்த போது மேசை விரிப்பைப் பிடித்திழுத்து அறை வழியே இழுத்துச் சென்றேன், மேசை மீது பல பொருட்கள் இருந்ததால் எல்லாம் தரையில் விழுந்தன…”
நாத்தோ : “இதில் சிரிக்க என்ன உள்ளது …”
தாம்ரிக்கோ : “’இது முட்டாள் தனமானது…”
கோத்தே: “ஏன், நான் என்ன செய்கிறேன் என்று தான் எனக்குத் தெரியாதே!”
நாத்தோ: “அடி வாங்கியிருந்தால் அப்போது தெரிந்திருக்கும்…”
குழந்தை ஒழுக்கம் என்பது குறும்புகளை மாற்றியமைப்பதில் தான் உள்ளதே தவிர இவற்றை அடக்கி ஒடுக்குவதில் அடங்கியிருக்கவில்லை. நமது பயிற்சி முறையின் மூலம் அவர்களின் உள்ளே புகுத்த முடியாததைச் செய்யும்படி அவர்களைக் கோர வேண்டாம்.
நிக்கோ: “நான் சிறுவனாக இருந்த போது என்ன நடந்தது தெரியுமா? என்னை ஒரு முறை வீட்டில் தனியே விட்டுச் சென்றார்கள். அப்போது, யார் வந்து தட்டினாலும் கதவைத் திறக்க வேண்டாம் என்றார்கள். சிறிது நேரம் கழித்து யாரோ கதவைத் தட்டினார்கள், நான் மிகவும் பயந்து, ‘உதவி, உதவி !’ என்று கத்தத் துவங்கினேன். கதவைத் தட்டும் சத்தம் அதிகமாகியது, நானோ ‘உதவி !’ என்று இன்னமும் பலமாகக் கத்தினேன். பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து, ‘பயப்படாதே, கதவைத் திற, உனது சகோதரி பள்ளியிலிருந்து வந்திருக்கிறாள் !..’ என்றனர். பின்னர் நான் விழுந்து விழுந்து சிரித்தேன்.”
நான் சிரிக்கிறேன், சுற்றியிருந்த குழந்தைகளும் சிரிக்கின்றனர்: “இது உண்மையிலேயே சிரிப்பானது !”
தாத்தோ: “எனக்கு இரண்டு வயதாயிருந்த போது என் அம்மா என்னை நர்சரிப் பள்ளியில் சேர்க்க விரும்பினாள். எனக்கு அங்கு செல்ல விருப்பமில்லை, எனவே, ஒளிந்து கொள்ள ஓடிய நான் படிக்கட்டில் தலைகீழாக விழுந்தேன்…”
கியோர்கி: “நான் சிறுவனாக இருந்த போது, என்னை என் அப்பா நர்சரிப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் விளையாடினோம், சண்டை போட்டுக் கொண்டோம், நான் அலமாரியில் ஒளிந்து கொண்டேன்.”
கோச்சா: “நீ கோழை, எனவேதான் ஒளிந்து கொண்டாய்.”
எலேனா: “’நான் சிறுமியாக இருந்த போது…’
இராக்ளி: “நான் சிறுவனாக இருந்த போது…”
குழந்தைகள் ஒருவர் பேசுவதில் ஒருவர் குறுக்கிடுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் “நான் சிறுவனாக (சிறுமியாக) இருந்த போது” என்று துவங்குவதை அப்போதுதான் நான் கவனித்தேன். அப்படியென்றால் அவர்கள் இப்போது தம்மைச் சிறுவர் சிறுமியராக கருதவில்லை தான் ஏனெனில் அவர்கள் பள்ளிக்கு வந்துவிட்டார்களே! ஒருவேளை பெரியவர்களாகிவிட்ட இந்த உணர்வை அவர்களிடம் நான் உறுதிபடுத்த வேண்டுமோ!
(தொடரும்)
முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!