டந்த சனிக்கிழமை முன்னிரவுப் பொழுதில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவிலுள்ள ஆர்.டி.நகர் என்ற பகுதியிலுள்ள மசூதி அருகே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த 38 வயதான சஜ்ஜித் கான் என்ற முசுலீம் நபரைப் பயங்கரவாதி எனக் கூறிக் கைது செய்த பெங்களூரு போலீசார், பெங்களூரு நகரில் ஒரு தற்கொலைத் தாக்குதலை நடத்தும் நோக்கில் சஜ்ஜித் பெங்களூருவிற்கு வந்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தினர். சஜ்ஜித்துக்கு உதவியாக வந்த 50 வயதான மற்றொருவரை பெங்களூரு போலீசார் வலைவீசித் தேடிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் வரக்கூடும் அல்லவா! சஜ்ஜித் பிச்சைக்காரன் வேடத்தில் பெங்களூரு நகருக்குள் ஊடுருவிவிட்டதாகப் பீதி பரவியது.

தீவிரவாதி சஜ்ஜித் பிச்சைக்காரன் வேடத்தில் பெங்களூரு நகருக்குள் ஊடுருவிவிட்டதாக “நுணுக்கமாக”த் துப்பறிந்து கண்டுபிடித்து பீதி பரப்பிய தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள்.

சஜ்ஜித் பெங்களூரு நகருக்குள் ஊடுருவியிருப்பதை முதலில் கண்டுபிடித்தவர்கள் போலீசார் அல்ல. அதனை “நுணுக்கமாக”த் துப்பறிந்து கண்டுபிடித்தவைக் கன்னடத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள்.

சஜ்ஜித், தான் பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாக, மே 6 அன்று பெங்களூரு-கெம்பேகௌடா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும்போது, அந்த ரயில் நிலையத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் நிலை பீப் என்ற ஒலியை ஏற்படுத்தியது. எனினும், அவர் அந்நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

இந்தக் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்தப் பதிவை ஒளிபரப்பிய கன்னட டி.வி.சேனல்கள், முசுலீம் தீவிரவாதியொருவர் பெங்களூரு நகருக்குள் ஊடுருவிவிட்டதாக பிரேக்கிங் நியூஸ் போட்டன. அதே காட்சியை ஒளிபரப்பிய மற்றொரு தொலைக்காட்சி ஊடகம், சஜ்ஜித்தைத் தொடர்ந்து அந்த ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த மற்றொரு முசுலீமை, “முதலில் வெளியேறிய தீவிரவாதியின் உதவியாளர்” என அடையாளப்படுத்தியது.

மேலும், அத்தீவிரவாதி அந்த ரயில் நிலையத்தில் வேலை பார்க்கும் ஒரு துப்பரவு பணியாளரிடம், தான் ஒரு கோடி ரூபாய் பணம் தருவதாகவும், அதை வாங்கிக்கொண்டு தன்னை வெடிகுண்டோடு உள்ளே விட்டுவிட வேண்டுமென்று பேரம் பேசியதாகவும் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

தாடி, குல்லா, குர்தா, கைலி, பீப் ஒலி இவற்றை மட்டுமே காரணமாக வைத்து, சஜ்ஜித்தைத் தீவிரவாதியெனக் கன்னடத் தொலைக்காட்சி ஊடகங்கள் கதை கட்டியுள்ளன.

வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்த கதையாக, தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்ட இந்தச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பெங்களூரு போலீசு தீவிரவாதியையும் அவரது உதவியாளரையும் தேடியலைந்து, ஆறு நாட்கள் கழித்து சஜ்ஜித் கானை மட்டும் ஆர்.டி. நகர் மசூதிக்கு அருகே வைத்துக் கைது செய்தது.

சஜ்ஜித்தை இரண்டு நாட்கள் போலீசு காவலில் வைத்து விசாரணை நடத்தியதில், சஜ்ஜித் தாடி வைத்திருந்த, குல்லாவும், குர்தாவும், கைலியும் அணிந்திருந்த முசுலீம் என்பதைத் தாண்டி, அவர் எந்தவொரு முசுலீம் தீவிரவாத அமைப்போடும் தொடர்பில் இருந்ததற்கோ, அவர் தற்கொலைத் தாக்குதலை நடத்தும் நோக்கில் பெங்களூருவிற்கு வந்ததற்கோ மயிரளவு ஆதாரம்கூட போலீசுக்குக் கிடைக்கவில்லை. மாறாக, சஜ்ஜித் பற்றிக் கிடைத்த உண்மைத் தகவல்கள் இவைதான்:

சஜ்ஜித், இராசஸ்தானிலுள்ள ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி. அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ரமலான் நோன்பு காலத்தில் பிச்சை எடுப்பதற்காக பெங்களூரு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இப்பொழுதும் அவர், தனது மனைவியோடு மசூதி வாசல்களில் நின்றுகொண்டு தொழுகை முடித்துவரும் முசுலீம்களிடம் பிச்சை எடுப்பதற்காகவே பெங்களூரு வந்திருக்கிறார். அப்படியான பரம ஏழையான சஜ்ஜித்தைத்தான் ஊடகங்கள் தீவிரவாதியாகச் சித்தரித்துள்ளன. அதை நம்பிக்கொண்டு பெங்களூரு போலீசும் அவரைக் கைது செய்து, விசாரணை நடத்தியிருக்கிறது.

சஜ்ஜித், கெம்பேகவுடா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த சமயத்தில், தான் பிச்சை எடுத்துச் சேர்த்த 150 ரூபாயை, நாணயங்களாகத் தனது இடுப்பில் முடிந்து வைத்திருந்தார். அந்தப் “பிச்சைக் காசுகள்”தான் பீப் ஒலி எழும்பவுதற்குக் காரணம். இந்த உண்மைகள் புறந்தள்ளப்பட்டு, தாடி, குல்லா, குர்தா, கைலி, பீப் ஒலி இவற்றை மட்டுமே காரணமாக வைத்து, சஜ்ஜித்தைத் தீவிரவாதியெனக் கன்னடத் தொலைக்காட்சி ஊடகங்கள் கதை கட்டியுள்ளன.

சஜ்ஜித்தின் உதவியாளர் என ஊடகங்களால் அடையாளப்படுத்தப்பட்டவர் ரியாஸ் அகமது. அவர் கடந்த முப்பது ஆண்டுகளாக பெங்களூரு நகரிலுள்ள மெஜஸ்டிக் பகுதியின் சாலையோரங்களில் கடை போட்டு கடிகாரங்களை விற்றுவரும் சிறிய வியாபாரி. தான் தீவிரவாதியின் உதவியாளராகச் சித்தகரிப்பட்டது தெரிந்தவுடன், தானே போலீசு நிலையத்திற்கு வந்து, தன்னைப் பற்றிய தகவல்களை போலீசிடம் தெரிவித்துச் சென்றார், அவர்.

“அன்றாடம் பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டிவரும் தன்னால் யாருக்கேனும் ஒரு பைசாவாவது இலஞ்சம் தர முடியுமா?” எனக் கேள்வி எழுப்பும் சஜ்ஜித், “நடந்தவற்றை நினைத்து நான் அழத்தான் முடியும், இறைவனிடம் முறையிட முடியும், இதைத்தாண்டி, ஒரு சாதாரண ஏழையான என்னால் யார் மீதாவது கோபங்கொள்ள முடியுமா?” எனத் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மனைவியோ, தனது கணவர் விடுவிக்கப்பட்ட பின்னர்கூட, போலீசு விசாரணை ஏற்படுத்திய அச்சத்திலிருந்து விடுபடவில்லை.

“தொலைக்காட்சிகளில் தீவிரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டுவிட்ட என்னை, அந்தக் காட்சிகளைப் பார்த்த யாராவது ஒருவர் அடித்தே கொன்றுவிடக் கூடுமோ?” என்ற அச்சத்தில் இருப்பதாகக் கூறுகிறார், ரியாஸ் அகமது.

“சந்தேகப்படுபவர்களை விசாரிக்காமல் இருக்க முடியுமா?” என சங்கிகளும் அவர்களது ஆதரவாளர்களும் இந்த விடயத்தை நியாயப்படுத்தக் கூடும். ஆனால், சஜ்ஜித் மீது ஊடகங்களும், போலீசும் சந்தேகப்படுவதற்கு அவரது மத அடையாளங்களைத் தாண்டி வேறெந்த அடிப்படையும் இல்லை என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.

கோட்சே ஓர் இந்து தீவிரவாதி என்ற வரலாற்று உண்மையை மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் சொன்னதற்காக, அவரது நாக்கை அறுத்துப் போடுமாறும், அவரை வீதியில் நடமாடவிடக் கூடாதென்றும் சங்கப் பரிவாரங்களும், அவர்களது ஆதரவாளர்களும் கூச்சல் போடுகிறார்கள். இந்துவாக இருப்பவர் பயங்கரவாதியாக இருக்க முடியாது என ஆவேசப்படுகிறார், பிரதமர் மோடி. மதத்தோடு தீவிரவாதத்தைத் தொடர்புபடுத்தக் கூடாது என நடுநிலையாளர்கள் போல வாதிடுகிறார்கள், ஆர்.எஸ்.எஸ்.-இன் அல்லக்கைகள்.

இந்து பயங்கரவாதி சாத்வி பிரக்யா சிங்

ஆனால், முசுலீம்கள் விடயத்திலோ தீவிரவாதம், பயங்கரவாதங்கள் குறித்த இந்த நியாயங்களையெல்லாம் தலைகீழாகத் திருப்பிப் போடுகிறது சங்கப் பரிவாரம். “முசுலீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல; ஆனால், தீவிரவாதிகள் அனைவரும் முசுலீம்களாக இருக்கிறார்கள்” எனக் குதர்க்க நியாயம் பேசி, முசுலீம் சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறது, ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதம், பயங்கரவாதத்தோடு முசுலீம் மதத்தைத் தொடர்புபடுத்துவதற்குத் தயங்காத சங்கப் பரிவாரமும் அவர்களது ஆதரவாளர்களும் இந்து பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்கவே முடியாது என வாதிடுகிறார்கள்.

தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்ட சஜ்ஜித், தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு, பீதியில் உறைந்து போன தனது மனைவியைத் தேற்ற முயன்று வருகிறார். சஜ்ஜித் மட்டுமல்ல, பயங்கரவாத வழக்குகளில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவி முசுலீம்கள், செய்யாத குற்றத்திற்குப் பல பத்தாண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு, அதற்குப் பிறகு நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்ட பிறகு, நடைப் பிணங்களாக காலந்தள்ள வேண்டியிருக்கிறது. நேர்மையற்ற முறையிலும் சட்டவிரோதமாகவும் தண்டிக்கப்பட்ட அவர்களுக்கு நிவாரண உதவி அளிக்கக்கூட நீதிமன்றங்களும் அரசும் மறுத்து வருகின்றன.

ஆனால், மாலேகான் குண்டு வெடிப்பு பயங்கரவாத வழக்கை எதிர்கொண்டுவரும் இந்து பயங்கரவாதியான சாத்வி பிரக்யா சிங்கோ போபால் தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக பா.ஜ.க.வால் நிறுத்தப்பட்டிருக்கிறார். இத்தகைய அநியாயத்தைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்ற தார்மீக எண்ணம்கூட இன்றிப் பெரும்பான்மையான இந்துக்கள் இந்த விடயத்தைக் கடந்து போகிறார்கள். சட்டப்படி இல்லையென்றாலும், தார்மீக அடிப்படையிலாவது பிரக்யா சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதைத் திரும்பப் பெறுங்கள் எனக் கூறும் மனதிடமின்றி, இந்திய அதிகார அமைப்புகள் அறவுணர்ச்சியை இழந்து நிற்கின்றன.

ஆர்.எஸ்.எஸ்.-இன் இந்து பயங்கரவாதத்தை சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனநிலைக்குப் பெரும்பான்மையான இந்துக்கள் ஆட்பட்டிருப்பதை பிரக்யா சிங்கின் போட்டி உள்ளிட்ட பல விடயங்கள் அடுத்தடுத்து எடுத்துக்காட்டுகின்றன. இந்த சகஜ மனநிலைதான் நமது காலத்தின் மிகப் பெரும் அபாயமாகும்.

– கீரன்