யாரடித்தார்
சொல்லி அழு? – என
தாலாட்டு பாடும் நாட்டில்
எவன் சுட்டான்
எனச் சொல்லி அழவும்
கூடாதாம்!
இது சுதந்திர நாடாம்
இதற்கு தேர்தல் ஒரு கேடாம்..
நமக்குத் தேவை
தேர்தல் முடிவல்ல
வர்க்க போரின் தொடர்ச்சி!
அதற்கு தூத்துக்குடியே சாட்சி
பேசத் துடிக்கும்
மழலை நா போல அசையும்
ஈரம் குழைந்த பயிரின் மேல்
ஏறிய பொக்லைன்தான்
இனி எவன் வந்தாலும்
நாம் காணப் போகும் ஆட்சி!
காவியோ, கதரோ
மூலதனத்தின் பாசிசம்
முகங்கள் பல மாறி
ஹைட்ரோ கார்பன்
ஆவியாக நீட்சி !
தூத்துக்குடி தியாகிகளே
நீங்கள்
இரத்தமாக வெளியேற்றப்பட்டீர்கள்
நாங்கள்
கண்ணீராக சிறை வைக்கப்பட்டிருக்கிறோம்.
இந்தக் கட்டமைப்பிற்கான
ஒரு இறுதி ஊர்வலம் வரை
காத்திருக்கும்
உங்களுக்கான
கண்ணீர் அஞ்சலிகள்!

துரை. சண்முகம்
தவறாமல் பாருங்க !