டந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் ஆசியுடன் பாஜக அரங்கேற்றிய தேர்தல் நடத்தை மீறல்களில் குறிப்பிடத் தகுந்தது எந்த விதிகளுக்குள்ளும் அடங்காத ‘நமோ டிவி’ ஒளிபரப்பு.  மார்ச் 26-ம் தேதி தனது ஒளிபரப்பைத் தொடங்கிய இந்த சேனல், தன்னுடைய ‘பணி’யை முடித்துக்கொண்டு, தற்போது மாயமாய் மறைந்துள்ளது!

பாஜக வட்டாரங்கள் மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதியோடு ‘நமோ டிவி’யும் தனது பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டதாக தெரிவிக்கின்றன. இந்த இறுதிக்கட்ட தேர்தலின்போதுதான் ‘நமோ டிவி’ தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி, தேர்தலுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் அமைதியாக இருந்தது.

பெயர் சொல்ல விரும்பாத பாஜக பிரமுகர் ஒருவர், “மக்களவை தேர்தலுக்கு பாஜகவின் பிரச்சாரக் கருவியாக ‘நமோ டிவி’ பயன்படுத்தப்பட்டது. தேர்தல் முடிந்துள்ள நிலையில்,  அது இனி தேவையில்லை. மே 17-ம் தேதி முதல் அனைத்து பிரச்சாரங்களும் முடிந்த நிலையில், அது தன்னுடைய ஒளிபரப்பை நிறுத்திக்கொண்டது” என்கிறார்.

டாடா ஸ்கை, வீடியோ கான், டிஷ் டிவி போன்ற டீடிஎச் தளங்களில் இலவசமாக திணிக்கப்பட்ட ‘நமோ டிவி’யை சமூக ஊடகங்களில் மக்களும் எதிர்க்கட்சிகளும் ‘பரப்புரை இயந்திரம்’ என கடுமையாக எதிர்த்தனர். பலர் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தனர்.  இந்த சேனலின் மீதோ, யார் நடத்துகிறார்கள் என்பதை அறிவிக்காமல் பிறகு தன்னுடைய சேனல்தான் என தெரிவித்த பாஜக மீதோ, நமோ செயலியின் பகுதியாக நமோ டிவி உள்ளதாக பாஜக தெரிவித்துள்ள நிலையில் அதை நிர்வகிக்கும் பிரதமர் மோடி மீதோ தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

‘நமோ டிவி’ ஒளிபரப்பைத் தொடங்கிய நிலையில் ‘இந்தி செய்தி தொலைக்காட்சி’ என டாடா ஸ்கை அறிவித்தது. பின், அதிலிருந்து பின்வாங்கி ‘சிறப்பு சேனல்’ என்றது.

தேர்தல் முடியும் தருவாயில் டெல்லியின் தேர்தல் அதிகாரி, ‘தேர்தல் தொடர்பான விசயங்களை ஒளிபரப்பியதற்காக’ பாஜகவுக்கு நோட்டீசு அனுப்பியிருந்தார். ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையம் ‘நமோ டிவி’யில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒப்புதல் வாங்கியிருக்க வேண்டும் என தெரிவித்தது. டெல்லி தேர்தல் ஆணையம், சான்றிதழ் அளிக்கப்படாமல் எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்பக்கூடாது என பாஜகவுக்கு அறிவுறுத்தியிருந்தது.

NSS-6 என்ற செயற்கைகோளை பயன்படுத்தி ஒளிபரப்பப்பட்ட ‘நமோ டிவி’, இந்திய ஒளிபரப்புச் சட்டம் குறித்த கேள்வியை எழுப்பியது. ஒளிபரப்புக்கான எந்த வித உரிமமும் இல்லாமல் பிரதமரின் பிரச்சார சேனல், இந்த செயற்கைக்கோளை ஒளிபரப்புக்காக பயன்படுத்தியுள்ளது.

‘நமோ டிவி’ தொடங்கப்பட்ட அன்று, அது குறித்த விவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட பிரதமர், தனது ஜோடிக்கப்பட்ட தேர்தல் நேர பேட்டிகளில் ஒன்றான ஏபிபி சேனல் பேட்டியில் ‘இந்த சேனலை நானே பார்ப்பதில்லை’ என்றார்.

படிக்க:
பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் !
மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி !

“தேர்தல் பத்திரங்கள் முதல், வாக்குப் பெட்டிகளில் தகிடுதத்தங்கள் செய்தல், தேர்தல் தேதிகளை மாற்றி அமைத்தல், நமோ டிவி, மோடியின் இராணுவம், இப்போது கேதார்நாத் நாடகம் வரை மோடிக்கும் அவரது குண்டர்களுக்கும் தேர்தல் ஆணையம் சரணடைந்துள்ளதை அனைத்து இந்தியர்களும் அப்பட்டமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனாலும், கையாலாக நிலையிலேயே எதிர்க்கட்சிகளும் இந்தத் தேர்தலை எதிர்கொண்டன.

ஆறு கட்ட தேர்தல் வரை விதிமுறைகளை மீறி ஒளிபரப்பை செய்தது ‘நமோ டிவி’. மக்கள் பிரதிநிதிகள் சட்டம் 126-வது பிரிவின்படி,  வாக்குப் பதிவுக்கு முன்பு பிரச்சாரங்கள் ஓய்ந்த காலக்கட்டத்தில் அதை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும். தேர்தல் ஆணையமே மோடியின் கூட்டாளியாகிவிட்ட பிறகு, யார் நடவடிக்கை எடுப்பார்கள்?

கலைமதி
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க