டோக்ளியாட்டி

மிழில் பாசிசம் என்ற சொல் குறித்து பொதுவில் “சர்வாதிகாரம்” என்று மட்டும் புரிந்து கொள்கிறோம். ஆனால் பாசிசம் என்பது ஒரு நாட்டின் குறிப்பிட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து தவிர்க்கவியலாமல் எழுகிறது. பாசிசத்தின் அடிப்படையாக முதலாளித்துவத்தின் நெருக்கடி இருந்தாலும், வடிவத்தில் அது ஒவ்வொரு நாட்டிற்கேற்ற அவதாரத்தை எடுத்துக் கொள்ளும். இந்தியாவில் அது தற்போது பார்ப்பனிய பாசிச அல்லது காவி கார்ப்பரேட் பாசிச அபாயமாக எழுந்து வருகிறது.

பிரக்யா சிங் தாக்கூர், ஆனந்த்குமார் ஹெக்டே, கிரிராஜ் கிஷோர், சாக்ஷி மகாராஜ் போன்ற பாஜகவின் நாடறிந்த மதவெறியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்பதும், பாஜகவின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியப் பங்கு சந்தை துள்ளிக் குதிப்பதும் வேறு வேறு அல்ல! முதலாளித்துவ ஜனநாயகம் தனது கட்டுமானத்தைக் கலைத்து போலியான ஜனநாயக வேடத்தை அம்மணமாக்கி நேரடியாக போராடும் மக்களை ஒடுக்குவதில் முனைந்து நிற்கிறது. அதே நேரம் இன்னொரு பிரிவு மக்களை தனது காலாட்படையாக திரட்டிக் கொள்கிறது. காவி கார்ப்பரேட் பாசிச அபாயம் என்பதை ஆழமாக புரிந்து கொள்ள இந்த தொடர் நமக்கு உதவும். தொடர்ந்து படியுங்கள்!

பால்மிரோ டோக்ளியாட்டி – அறிமுகக் குறிப்பு :

இத்தாலியில் முசோலினியின் பாசிச ஆட்சிக் காலகட்டத்தில் (1922 – 1943) கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளான அமைப்புகளில் ஒன்று இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி. இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் பால்மிரோ டோக்ளியாட்டி.

இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் உறுப்பினராகப் பணிபுரிந்த 1934 – 1938 காலகட்டத்தைத் தவிர்த்து, இவர் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகப் பதவி வகித்தார். பாசிச ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு அமைக்கப்பட்ட அரசாங்கத்தில், 1944 – 1945 காலகட்டத்தில் இத்தாலியின் துணைப் பிரதமராகவும், 1945 -1946 காலகட்டத்தில் இத்தாலியின் நீதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

1935-ம் ஆண்டு சோவியத் ரசியாவில் உள்ள லெனின் பள்ளியின் இத்தாலியப் பிரிவில் பால்மிரோ டோக்ளியாட்டி ”எதிரிகள்” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் பிரதான பகுதியை “Lectures on Fascism” என்ற பெயரில் அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி 1976-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்டது. நியூ யார்க்கைச் சேர்ந்த சர்வதேச வெளியீட்டகம் இந்நூலை வெளியிட்டது. கடந்த 1998-ம் ஆண்டு செப்டெம்பரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 17-வது அகில இந்திய மாநாட்டுச் சிறப்பிதழாக இந்நூல் தமிழில் வெளியிடப்பட்டது. இதனை NCBH வெளியீட்டகம் வெளியிட்டது. இனி நூலுக்குள் செல்லலாம்.

****

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 1

முன்னுரை:

பால்மிரோ டோக்ளியாட்டியின் இத்தகைய உரைகளை வெளியிடுவதன் மூலம் இண்டர்நேஷனல் பப்ளிஷர்ஸ் பிற்போக்கு சக்திகளுக்கும் பாசிச சக்திகளுக்குமெதிரான போராட்டத்திற்கு ஒரு முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளனர். வரலாற்றுக் கண்ணோட்டத்திலிருந்து காணும்பொழுது சிலருக்கு இது ஆர்வத்தைத் தூண்டும் புத்தகமாக இருக்கக்கூடும். ஆனால், அமெரிக்காவிலுள்ள மக்களுக்கு இத்தகைய சொற்பொழிவுகள் நாம் படித்துப் பயன்படுத்தப்பட வேண்டிய வரலாற்றுப் படிப்பினைகளாக இருக்கும்.

கோட்பாடு, அரசியல் மற்றும் தத்துவார்த்த சிந்தனை என்ற வடிவத்தில் வைத்துக் காணும் பொழுது அனுபவம் என்ற முக்கிய அம்சத்திற்கு மாற்று எதுவும் இருக்க முடியாது.

பால்மிரோ டோக்ளியாட்டி.

அனுபவம் அதிகரிக்கும் பொழுது அதிலிருந்து பெறப்படும் முடிவுகளும் படிப்பினைகளும் ஆழமானதாகும், விளக்கமானதாகவும் இருக்கும். ஒருவருடைய நேரடி பங்கேற்பும் அனுபவங்களும் வெகுஜனங்களின் பொதுவான அனுபவம் என்ற இழையில் ஊடும் பாவுமாக இருக்கும்பொழுது சிந்தனைகள் மேலும் தெளிவாக இருக்கும். ஒவ்வொரு நாட்டின் தொழிலாளி வர்க்கத்தின் மற்றும் மக்களின் அனுபவக் குவியல் மிகுந்த முக்கியத்துவமுடையதாகும். ஆனால், அதிலிருந்தே பொதுமைப்படுத்தப்பட்ட கோட்பாடு, நீண்ட கால மற்றும் உடனடி நடைமுறைக் கொள்கை, முடிவுகளுக்கு வருவதற்குப் போதுமானதாக இருக்காது. முடிவுகள் என்பவை பல நாடுகளின் அனுபவங்களை பரிசோதித்து, மதிப்பீடு செய்யப்படும் பொழுது மட்டுமே அவை ஏற்றுக் கொள்ளப்பட்ட பாடங்களாக விளங்கும்.

பொதுமைப்படுத்தப்பட்ட முடிவுகளைப் பெறுவது. கோட்பாட்டை மேலும் வளர்ப்பது போன்றவை இன்றியமையாத ஒரு கூட்டு நிகழ்வுப் போக்காகும்.

இந்த அம்சமானது டோக்ளியாட்டியின் பாடங்கள் ஒவ்வொன்றிலும் தெளிவாகவும் கூர்மையாகவும் தனிச்சிறப்புடனும் விளங்குகிறது. இத்தாலியில் 12 வருடங்களாகப் பாசிசத்திற்கெதிராக நடைபெற்ற போராட்ட அனுபவங்களிலிருந்து இவற்றைக் கூறுகிறார். இந்தப் “பாடங்கள்” மேலும் விரிவாக இருப்பதற்குக் காரணம் இந்தப் போராட்டத்தில் அவருக்கு இருந்த நேரடி அனுபவத்தையும் அவர் இவற்றில் சேர்த்திருப்பதுதான்.

ஆனால், டோக்ளியாட்டி மற்றொரு பரந்துபட்ட அனுபவக் குவியலையும் பயன்படுத்தியிருக்கிறார். தொடர்ச்சியான விவாதங்களிலும், பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் உலக முழுமையிலிருந்து கிடைக்கும் அனுபவங்களை ஆராய்வதிலும் மிகுந்த செயலூக்கத்துடன் பங்கேற்றவர் அவர். இத்தகைய விவாதங்கள் கம்யூனிஸ்டு அகிலத்தின் குழுக்களில் தொடர்ந்து நடந்தன. கம்யூனிஸ்டு அகிலம் என்பது உலகின் ஒவ்வொரு மூலையிலுமிருந்து கிட்டும் அனுபவங்களும் ஒவ்வொரு நாட்டின் அனுபவங்களும் பொதுமைப்படுத்தப்படும் ஒரு மையமாகும். டோக்ளியாட்டி, அவருடைய சொற்பொழிவுகளை நிகழ்த்தும் நேரத்தில் இட்லரின் பாசிசம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்களாகி விட்டன. எனவே இட்லருடைய பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் ஜெர்மன் மக்களும், ஜெர்மன் கம்யூனிஸ்டுகளும் பெற்ற அனுபவங்களை அவர் விசேஷமாகப் பயன்படுத்திக் கொண்டது முற்றிலும் இயல்பானதே. கம்யூனிஸ்டு அகிலத்தின் குழுக்களில் உள்ளவர்கள் தொழிலாளி வர்க்க அரசியல் கட்சிகளிலிருந்து வந்தவர்கள். தம்முடைய செயல்பாட்டையும், நிர்ணயிப்புகளையும் மார்க்சியம் – லெனினியம் என்ற புரட்சிகர விஞ்ஞானத்தின் அடிப்படையில் அமைத்துக் கொண்டுள்ள கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். ஆகையால் கம்யூனிஸ்டு அகிலத்தின் குழுக்கள், அனைத்துப் பிரச்சினைகளையும் தொழிலாளி வர்க்க மற்றும் மார்க்சிய – லெனினிய கண்ணோட்டத்தில் அணுகின. இந்த அணுகுமுறையானது டோக்ளியாட்டியின் சொற்பொழிவுகள் முழுவதிலும் உருக்குக் கம்பியாக ஊடுருவிச் செல்லுகிறது.

ஏகபோக மூலதனத்தின் சவால் தன்மை காரணமாக அமெரிக்காவிலுள்ள நாம் இத்தகைய சொற்பொழிவுகள் சுவையான வரலாறே தவிர குறிப்பாக நமக்குச் சம்பந்தப்பட்டதல்ல என்று மெத்தனமாகப் படிக்கும் போக்கிற்கு இடமளிக்கக் கூடாது. உண்மை என்னவென்றால், பாசிசத்திற்கு எதிரான போராட்டப் படிப்பினைகள் வேறெந்த மக்களையும்விட நமக்குத்தான் அதிகம் தேவைப்படுகின்றன. ஏனென்றால், வேறெந்த மக்களையும்விட அமெரிக்காவிலுள்ள நாம் பாசிச அபாயத்தை ஒரு தொடர்ச்சியான சவாலாக சந்திக்க வேண்டியுள்ளது. இந்த அபாயத்தை தற்பொழுது நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்; அது மட்டுமல்ல, ஏகபோக முதலாளித்துவம் நம்மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் காலம் வரை பாசிசத்திற்கெதிராக போராடும்படி நாம் நிர்ப்பந்திக்கப்பட்டே தீருவோம். மிக அதிகபட்ச இலாபங்களை அடையும் தனது பாதையில் இதர வடிவங்களில் அமைந்த ஆட்சி தடைக்கற்களாக மாறும்பொழுது ஏகபோக முதலாளித்துவம் பாசிசத்தை ஆதரிக்க சற்றும் தயங்காது.

ஆனால், டோக்ளியாட்டி விவரித்து திட்டவட்டமாகக் கூறுவதுபோல வரலாற்றின் படிப்பினைகளை நாம் கற்றோமானால், “அது இங்கே நடக்காது” என்று தீர்மானிப்பதற்கான போராட்டத்தில் மக்களோடு நாமும் ஒரு முக்கியமான அம்சமாக இருப்போம்.

நாம் முதன் முதலாகக் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினையானது முதலாளித்துவத்தின் உள் கட்டமைப்புதான் ஜனநாயக  –  விரோதப் போக்கிற்கு வழி பிறக்கச் செய்கிறது என்பதும், அந்தப் போக்குதான் பாசிசத்தை நோக்கிச் செல்லும் இயக்கங்களுக்குத் தீனி போடுகிறது என்பதுமாகும். முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் சரிவு காலகட்டத்தில் “பிற்போக்கான கொள்கைகளை நோக்கிச் செல்லும் போக்கு முதலாளித்துவத்தில்” தலைதூக்கும் என்று டோக்ளியாட்டி கூறுகிறார். ஏகபோக முதலாளித்துவம், அதனுடைய பொதுவான நெருக்கடி காலகட்டத்தில் மிக உச்சபட்ச தொழில் இலாபமடையும் கொள்கைகளை பின்பற்ற முடியாது. இத்தகைய கொள்கைகளுக்கெதிராக மக்கள் தலையிடும்படியான மிகக் குறைந்தபட்ச சாத்தியப்பாட்டை ஜனநாயக அமைப்புகள் ஏற்படுத்தினால்கூட ஏகபோக முதலாளித்துவம் அத்தகைய அமைப்புகளை ஒழித்துக்கட்டுவதில் இறங்கும். அது, ஜனநாயக ஆட்சிக்குப் பதிலாகப் பிற்போக்கான இராணுவ ஆட்சிகளைக் கொண்டு வருவதற்கு முற்படும். பாசிசம் என்பது இத்தகைய பெரும் தொழில் வர்த்தக சர்வாதிகாரங்களின் மிகவும் கொடூரமான, நாசகரமான, வளர்ச்சியடைந்த வடிவமேயாகும்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ரிச்சர்டு எம். நிக்சன்.

தோழர் டோக்ளியாட்டியின் சொற்பொழிவுகள் வாட்டர்கேட் சம்பவம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிப் போக்குகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கின்றன. ஏனென்றால் நிக்சனுடைய நிர்வாகமும் வாட்டர்கேட் சம்பவமும் ஒரு பாசிச கட்டமைப்பு உருவாவதற்கு இட்டுச்செல்லக்கூடிய ஓர் அமைப்பைத் தோற்றுவிக்கத் திட்டமிட்ட சதி நடந்திருப்பதை அம்பலப்படுத்துகின்றன.

இந்த நிகழ்ச்சிப் போக்கானது நிக்சனிலிருந்து தொடங்கவில்லை. இதற்கு முன்பாகவே இந்த வடிவமைப்பானது மிகவும் நன்கு திட்டமிடப்பட்டிருந்தது. அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார சக்தியானது நிர்வாகப் பிரிவின் கரங்களில் படிப்படியாகக் குவிக்கப்பட்டு வந்தது. இந்த நிர்வாகப் பிரிவானது பெரு முதலாளித்துவ முதலைகள் தவிர வேறு எவராலும் அணுக முடியாதது. அமெரிக்க காங்கிரசும் ஜனாதிபதியினுடைய அமைச்சரவையும்கூட மெல்ல மெல்லப் புறக்கணிக்கப்படலாயின. எஃப்பிஐயும் சிஐஏயும் சர்வாதிகார ஆட்சியின் கருவிகளாயின; இவை ஜெர்மனி மற்றும் இத்தாலிய பாசிசத்தின் கையேடுகளில் கூறப்பட்டிருப்பவற்றை ஆதாரமாகக் கொண்டு செயல்படலாயின. பெருமுதலாளித்துவ பிற்போக்குக் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் அனைவரையும் பெரும் எண்ணிக்கையில் கைது செய்வதற்காக நிக்சன் நிர்வாகம் நிர்வாக உத்தரவுகளைத் தயாரித்திருந்தது. எந்தவொரு பிரச்சினையிலும் எதிர்த்து ஒரு வார்த்தை கூறினாலும் கூட இப்படி எதிர்ப்பவர்களின் பெயர்களும் அவர்களின் வாழ்க்கை விபரங்களும் மிகப் பெருமளவில் கணிப்பொறியில் பதிவு செய்யப்பட்டு நிக்சன் நிர்வாகத்திற்குக் கிடைத்திருப்பது போன்று இட்லருக்கும் முசோலினிக்கும் கூட கிடைத்திருக்கவில்லை எனலாம். இத்தகைய பெயர் பட்டியல்கள் இன்றும் போர்டு நிர்வாகத்திடம் இருப்பதைக் காணலாம். இத்தகைய “பிற்போக்கான பாதை” பாசிசத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

டோக்ளியாட்டி சுட்டிக்காட்டியுள்ள படிப்பினைகள் நமக்கு மிகுந்த முக்கியத்துவமுடையவையாகும். ஏனென்றால் வாட்டர்கேட் சம்பவம் நிக்சனை அம்பலப்படுத்தி அவரை ராஜினாமா செய்யும்படி நிர்ப்பந்தித்ததானது இத்தகைய பிற்போக்கு சக்திகளுக்கு ஒரு பெரும் அடியாகும். ஆனாலும் அது ஏகபோக முதலாளித்துவத்தின் “உள்ளார்ந்த பிற்போக்குத்தனத்துக்கு” ஒரு முடிவு கட்டவில்லை. “இந்தப் பிற்போக்குத்தனம்” இன்னும் உயிரோடுதான் உள்ளது.

பாசிசமானது எப்பொழுதும் பொய்யான மற்றும் வாய்ச்சவடால் வடிவங்களிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான பகுதியின் அப்பட்டமான சர்வாதிகாரம் என்பதை அது மூடிமறைக்கவே முயற்சிக்கிறது.

பின்னோக்கிக் காணும் பொழுது, பாசிசம் என்பதற்கான விளக்கம் குறித்து இதற்கு முன்னர் நடைபெற்ற எத்தனை எத்தனையோ விவாதங்களும், வாதப் பிரதிவாதங்களும் தற்பொழுது அருவமானதாகவே தோன்றுகின்றன.

அதற்குக் காரணம் பாசிசத்தின் அடிப்படை இயல்பு தற்பொழுது எல்லோருக்கும் நன்கு தெரிந்துவிட்டதேயாகும். கம்யூனிஸ்டு வட்டாரங்களில் நடத்தப்பட்ட விவாதமானது இதர இடதுசாரி – மிதவாதி வட்டாரங்கள் கொண்டிருந்த தவறான கருத்துக்களைக் குறித்த விவாதமாகவே இருந்தது. இந்தக் கருத்துக்களில் பெரும்பாலானவை வார்த்தை ஜாலங்களின் தாக்கத்தைப் பிரதிபலித்தன என்பதுடன் பாசிசம் பரப்பிய பொய்ம்மையை மூடிமறைப்பதாகவும் இருந்தன.

பாசிசம் என்பது “ஒரு நடுத்தரவர்க்க குட்டி பூர்ஷ்வா இயக்கம்” என்ற தவறான கூற்றை அம்பலப்படுத்துவது அவசியமாகும். குட்டி பூர்ஷ்வா பகுதியானது பாசிசத்தின் வெகுஜன அடித்தளமாக இருந்தது, இருந்து வருகிறது என்ற அம்சத்தைக் கூறவேண்டியது அவசியம். ஆனால் பாசிசத்தின் அரசியல் சாராம்சம் என்பது அதுவல்ல.

படிக்க:
காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !
பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !

டிராட்ஸ்கியவாதிகள் இந்தப் பிரச்சினைகளை குழப்புவதற்கு முயற்சிக்கிறார்கள்; “போனபார்ட்டிச இயக்கம்” என்று பாசிசத்தை அழைப்பதன் மூலம், பாசிசத்தின் வர்க்க வேர்களை மறைக்க எத்தனிக்கிறார்கள். வலதுசாரி சோசலிஸ்டுகளோ, பாசிசத்தில் சில சாதகமான அம்சங்களைக் கண்டுபிடித்து அவற்றைப் பரப்ப முயற்சிக்கிறார்கள்.

பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மேல்தட்டு வட்டாரங்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினருடைய அப்பட்டமான, மிகக் கொடூரமான சர்வாதிகாரம் என்று விளக்க வேண்டியது அவசியமாகும்: அவ்வாறு செய்தால்தான் உண்மையான பகைவனைத் திட்டவட்டமாக சுட்டிக்காட்டி அவனுக்கெதிரான போராட்டத்தை நடத்துவது சாத்தியமாகும். அதன்பிறகே பாசிசத்திற்கெதிராகப் பரந்துபட்ட இயக்கத்தை அணிதிரட்டுவது சாத்தியமாகும்.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

6 மறுமொழிகள்

 1. இவரைப் பற்றி முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன். சரியான காலத்தில் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த வினவிற்கு நன்றி.

 2. காலப் பொருத்தமான, மிகமிகத் தேவையான தொடர்.
  பாசிசம் பற்றிய மார்க்சிய மதிப்புரை மற்றும் பாசிசத்திற்கான பொருளாதார மற்றும் சமூக அடிப்படையை விளக்கும் இந்த புத்தகத்தை – இத்தொடரை வெளியிட்டதற்கு நன்றி.

  தொடர்ச்சி விட்டுப் போகாமல் தினமும் அல்லது இரு நாட்களுக்கு ஒருமுறை இதை வெளியிடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

  • வாரத்திற்கு மூன்று நாட்கள் வெளியிடப்படும்.

   திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் இத்தொடர் வெளியிடப்படும். ஆதரவிற்கு நன்றி !

 3. ///பாசிசத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்தின் நெருக்கடி இருந்தாலும் வடிவத்தில் அது ஒவ்வொரு நாட்டிற்கேற்ற அவதாரத்தை எடுத்துக் கொள்ளும்.///

  பாசிசத்தின் அடிப்படையாக முதலாளித்துவத்தின் நெருக்கடி இருந்தாலும், வடிவத்தில் அது ஒவ்வொரு நாட்டிற்கேற்ற அவதாரத்தை எடுத்துக் கொள்ளும்.

 4. தற்போதைய சூழலானது இப்புத்தக்கத்தை படிப்பதை அவசியமாக்குகிறது. வினவிற்கு நன்றி.

 5. பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை ! என்று,மே 23, 2019
  வினவில் வந்த கட்டுரையும்,
  முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – என்ற புதிய தொடரில்
  முசோலினியின் பாசிச ஆட்சியில் கடுமையாக ஒடுக்கப்பட்ட இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பாலிமிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள்புத்தகத்தின் முன்னுரைக் கருத்துகளும்,

  இந்தியாவில் மோடியின் கார்ப்பரேட் காவி பசிசத்தின் நடப்பு பயங்கரத்தை வெளிச்சம் போட்டு காட்டும் ஒளிவிளக்காக திகழ்கிறது,

  இதை, கைவிளக்காகக் கொண்டு “பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை” என்ற வினவுக்கட்டுரையை மீண்டும் வாசிப்போம். அதில் காணும் ஒரு சில பொருத்தப்பாடுகளை பாருங்கள்.

  1) மிக அதிகபட்ச இலாபங்களை அடையும் தனது பாதையில் இதர வடிவங்களில் அமைந்த ஆட்சி தடைக்கற்களாக மாறும்பொழுது ஏகபோக முதலாளித்துவம் பாசிசத்தை ஆதரிக்க சற்றும் தயங்காது.
  (முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம்)

  “பார்ப்பன பாசிச அரசியல், வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து, மெல்ல மெல்ல அவை அங்கீகரிக்கப்படும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது” இந்தியாவின் போலி ஜனநாயகம்,போலி மதசார்ப்பின்மை ஆளும் வர்க்க அரசியல் மேடையிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

  2) வரலாற்றின் படிப்பினைகளை நாம் கற்றோமானால், “அது இங்கே நடக்காது” என்று தீர்மானிப்பதற்கான போராட்டத்தில் மக்களோடு நாமும் ஒரு முக்கியமான அம்சமாக இருப்போம்
  (முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம்)
  “இந்துத்துவ சக்திகள் சித்தாந்த ரீதியில் முறியடிக்கப்படாத காரணத்தினால், வங்கத்தில் அவர்களது கருத்தியல் செல்வாக்கு அதிகரித்து விட்டதைக் காணமுடிகிறது.

  எஞ்சியிருப்பவை தமிழகமும் கேரளமும்தான்”. பார்ப்பண பாசிஸ்டுகளுக்கு தொண்டையில் சிக்கிய முள்ளாக இருக்கிறது.

  3) நாம் முதன் முதலாகக் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினையானது முதலாளித்துவத்தின் உள் கட்டமைப்புதான் ஜனநாயக – விரோதப் போக்கிற்கு வழி பிறக்கச் செய்கிறது என்பதும், அந்தப் போக்குதான் பாசிசத்தை நோக்கிச் செல்லும் இயக்கங்களுக்குத் தீனி போடுகிறது என்பதுமாகும். முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் சரிவு காலகட்டத்தில் பிற்போக்கான கொள்கைகளை நோக்கிச் செல்லும் போக்கு முதலாளித்துவத்தில் தலைதூக்கும் (முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம்)
  “தேர்தல் கமிஷன், உச்சநீதிமன்றம், சிபிஐ, ஆர்.பி.ஐ, சி.ஏ.ஜி, இராணுவம், கல்வி, கலை, ஊடகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இந்துத்துவா சக்திகளின் சேவகர்களாக மாற்றப்பட்டுள்ளன. அவை இந்துத்துவ பாசிச காலாட்படைகளின் கொலைகளுக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கின்றன”

  4) ஏகபோக முதலாளித்துவம், அதனுடைய பொதுவான நெருக்கடி காலகட்டத்தில் மிக உச்சபட்ச தொழில் இலாபமடையும் கொள்கைகளை பின்பற்ற முடியாது. இத்தகைய கொள்கைகளுக்கெதிராக மக்கள் தலையிடும்படியான மிகக் குறைந்தபட்ச சாத்தியப்பாட்டை ஜனநாயக அமைப்புகள் ஏற்படுத்தினால்கூட ஏகபோக முதலாளித்துவம் அத்தகைய அமைப்புகளை ஒழித்துக்கட்டுவதில் இறங்கும்
  (முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம்)
  “கார்ப்பரேட்டுகளின் வங்கிக் கொள்ளை, அவர்களுக்கு அளிக்கப்பட்ட மானியம், வரிவிலக்கு, அதானி அம்பானிகளின் சமஸ்தானமாக இந்தியாவை மாற்றும் நடவடிக்கைகள், சகாரா, ரஃபேல், எலக்டொரல் பாண்டு முறை உள்ளிட்ட ஊழல்கள் ”

  5) பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மேல்தட்டு வட்டாரங்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினருடைய அப்பட்டமான, மிகக் கொடூரமான சர்வாதிகாரம் என்று விளக்க வேண்டியது அவசியமாகும்: அவ்வாறு செய்தால்தான் உண்மையான பகைவனைத் திட்டவட்டமாக சுட்டிக்காட்டி அவனுக்கெதிரான போராட்டத்தை நடத்துவது சாத்தியமாகும்.
  (முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம்)

  ரத்தத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்…என்ற தலைப்பில்,
  மே, 23, 2019 அன்று எழுத்தாளர்,சாருநிவேதா தனது பிளாக்கில் எழுதியிருக்கும் பார்பண அம்பிகளின் அடுப்பங்கரை சங்கதி இது.
  “பிராமண நண்பர்களின் வீடுகளில் இன்று பாயசம். மற்ற இந்துக்களின் வீடுகளில் பல்வகை இனிப்புகள், கொண்டாட்டங்கள். நான் நேற்றே எழுதியபடி மோடியை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்துவும் விவேகானந்தராகவும் ஆதி சங்கரராகவும் பார்க்கிறான்.” இது, மேல்தட்டு வட்டாரங்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினருடைய அப்பட்டமான, மிகக் கொடூரமான கொண்டாட்ட மனநிலையை காட்டுகிறது.

  முடிவாக,
  இன்று நாம் ஒரு இருண்ட காலத்துக்குள் நுழைகிறோம் என்பது உண்மைதான். அந்த இருளைக் கிழிக்கும் மின்னலை உருவாக்க வல்லவை மக்களின் போராட்டங்கள் மட்டும்தான். அத்தகைய போராட்டங்கள்தான் மக்களையும் இந்துத்துவ மாயையிலிருந்து விடுவிக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க