“தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சியாக திமுக உள்ளது. அக்கட்சியினர் டீ கடை, பிரியாணி கடை என்று தாக்குதல் நடத்தினர்கள். இதற்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலினே மன்னிப்பு கோரினார். தற்போது, நாகர்கோயிலில் திமுக கட்சியைச் சேர்ந்த கடைக்காரரிடம் மாவு குறித்து கேட்டபோது, எழுத்தாளர் ஜெயமோகன் மீது கடைக்காரர் தாக்கியுள்ளார். ஆகவே, திமுக தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.” இது ஒரு நேர்காணலில் எச்.ராஜா கூறியது.

நாகர்கோவில் பார்வதிபுரம் கடை ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் இட்லி தோசை மாவு வாங்கிய கதை பலருக்கும் தெரிந்திருக்கும். வீட்டிற்குச் சென்ற ஜெயமோகன் மாவு புளித்திருந்ததை கண்டுபிடித்து விட்டார். உலக உத்தம எழுத்தாளரான தன்னிடமே இவ்வளவு அலட்சியமா என்று அந்தக் கடைக்குச் சென்று குழாயடிச் சண்டையில் ஈடுபட்டுள்ளார்.

மருத்துவமனையில் ‘படுகாயத்துடன்’ ஜெயமோகன்.

கடையில் இருந்த பெண்மணியும், “ஐயா நீங்கள் வாங்கும்போதே இது முந்தைய தினத்து மாவு” என்று கூறியதை நினைவுபடுத்தியுள்ளார். இருப்பினும் எழுத்தாளர் கோபம் குறையாமல் மாவு பாக்கெட்டுகளை அந்த பெண் முன்னே வீசியுள்ளார். எரிச்சலைடைந்த அந்த பெண்ணின் கணவர் தட்டிக் கேட்க சிறு அளவு கைகலப்பு நடந்துள்ளது.

உடனே ஜெயமோகனது செல்வாக்கால் இது ஊடகங்களில் பரபரப்பான செய்தியானது. சொல்லிக் கொள்ளும்படி அடியே இல்லாமல் அரசு மருத்துவமனைக்குச் சென்று தங்கியவாறு போலீசில் புகார் கொடுக்கிறார் ஜெயமோகன். போலீசும் அந்தப் பெண்ணின் கணவரை கைது செய்து சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்டவர் தி.மு.க என்பதால் ஸ்டேசனில் தி.மு.க உள்ளூர் தலைவர்கள் வந்து பிறகு இது ஜெயமோகன் என்பதால் விட்டுக் கொடுத்து சென்றுவிட்டனர்.

தற்போது எச்.ராஜா வரைக்கும் ஜெயமோகனுக்கு ஆதரவு அள்ளிக் கொட்டப்படுகிறது.

இன்றைய கேள்வி:

ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார்?

♣ ஜெயமோகன்
♣ கடைக்காரர்கள்
♣ தி.மு.க.
♣ செய்தியை பரபரபாக்கிய ஊடகங்கள்

*****

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூபில் வாக்களிக்க :

ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தது யார் ?

4 மறுமொழிகள்

    • மாவு புளிச்சது குற்றம் இல்லை, expiry ஆன பொருளை ஏமாற்றி விற்பது தவறு… ஜெயமோகன் என்பதால் வினவு கூட்டங்கள் அவரை தூற்றி கொண்டு இருக்கின்றன. இந்த மாதிரியான செயல்களை பல வியாபாரிகள் தெரிந்தே செய்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

  1. #இந்த மனுஷ்ய புத்திரனின் கவிதையை பிரசுரம் செய்தால் மகிழ்வேன்# மகா கலைஞனும் புளித்த மாவும்
    …………
    மனுஷ்ய புத்திரன்
    ………..

    துரதிஷ்டம் பிடித்த இரவொன்றில்
    மகா கலைஞன் ஒருவனை
    விதி மாவுக்கடை ஒன்றை நோக்கி
    அழைத்துச் சென்றது

    மகா கவிஞன் ஒருவனுக்கு
    மதமேறிய கோயில் யானை ஒன்றால்
    துயரம் காத்திருந்ததுபோல
    மகா கலைஞனுக்கு
    ஒரு குடிவெறியேறிய
    மாவுக்கடைக்காரன் வடிவில்
    துயரம் காத்திருந்தது

    இப்படித்தான் தோழர்களே
    வரலாற்றில் மகத்தான சம்பவங்கள்
    முதல் முறை அவலத்திலும்
    இரண்டாம் முறை கேலிக்கூத்திலும் முடிகின்றன

    ஒரு புளித்த மாவு பாக்கெட்டிற்குள்
    காப்பியங்களை கறைப்படுத்தும்
    சாத்தானின் கைகள் ஒளிந்திருப்பதை அறியாமல்
    மகா கலைஞன்
    மாவுப்பாக்கெட்டுடன் வீடு திரும்பினான்

    புளித்த மாவிலிருந்த
    உயிர்க்கொல்லி பாக்டீரியாக்கள்
    கண் விழித்து எழுந்ததை
    தன் கூர்மையான படைப்புக் கண்களால் கண்டுகொண்ட மகாகலைஞன்
    திடுக்கிட்டு மாவுபாக்கெட்டோடு
    கடை நோக்கி விரைந்தான்
    நீதி கேட்டு ஒரு நகரை எரித்த நிலம் இது
    அறத்திற்காக பெற்ற மகனை
    தேர்க்காலிட்ட நாடு இது
    ஒரு புளித்த மாவுக்கான நீதி
    பொங்கும் நேரம் வந்துவிட்டதை
    யாருமே கவனிக்கவில்லை

    ஏற்கனவே புளித்த வாழ்க்கையில்
    புளித்த சாராய போதையில்
    புளித்த மாவுவிற்ற கடைக்காரனால்
    ஒரு மகா கலைஞனின் மொழியை
    புரிந்துகொள்ள முடியவில்லை

    பட்டத்து யானையின் காதில் புகுந்த
    எறும்பைபோல
    மகா கலைஞனின் தலைக்குள் புகுந்துவிட்ட
    புளித்த மாவின் பாக்டீரியா
    காவியச்சுவை குன்றிய
    மானுட நடத்தை நோக்கி
    மகா கலைஞனை நடத்தியது
    அவன் அறம் கூறி வீசி எறிந்த
    புளித்த மாவு பாக்கெட்
    தரையில்பட்டு சிதறியபோது
    பிரளயம் தொடங்கியது

    மாவிலிருந்த
    பல்லாயிரம் பாக்டீரியாக்கள்
    பரவத் தொடங்கின
    முதலில் கடைத்தெருவில்
    பரவிய பாக்டீரியா
    பிறகு அடுத்த தெருவுக்கு பரவியது
    பிறகு பக்கத்து ஊருக்கு பரவி
    சிற்றூர்களெங்கும் பரவியது
    சிற்றூர் தாண்டி
    பெரு நகரத்தையும் ஆக்ரமித்த
    புளித்த மாவின் பாக்டீரியா
    கடல்தாண்டி புலம் தாண்டி
    நாடு கடந்து பரவத் தொடங்கியது

    ஒரு பாக்டீரியா
    மகாகலைஞனுக்காக பேசியது
    இன்னொரு பாக்டீரியா மாவுக்கடைக்காரனுக்காக பேசியது
    இன்னொரு பாக்டீரியா புளித்த மாவின் அரசியல் பேசியது
    வேறொரு பாக்டீரியா சமூக நீதி பேசியது
    சில பாக்டீரியாகள் அறம் பேசின
    சில பாக்டீரியாக்கள் மறம் பேசின
    சில பாக்டீரியாக்கள் புறம் பேசின
    மகா கலைஞனின் தத்துவார்த்த விரோத பாக்டீரியாக்கள்
    மகா கலைஞனின் தத்துவமும் புளித்துபோனவை என்றன
    மகா கலைஞனின் இலக்கிய விரோத பாக்டீரியாக்கள்
    மகா கலைஞனின் சொற்களும்
    புளித்தவையே என்றன
    மகா கலைஞனின் ஆதரவு பாக்டீரியாக்கள்
    மகாகலைஞனின் எதிர்ப்பு பாக்டீரியாக்களை
    கடித்துத் துப்ப முயன்றன
    நடு நிலை பாக்டீரியாக்கள்
    எந்தப்பக்கம் போவது என்றும் தெரியாமல்
    குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன

    புளித்த மாவிலிருந்து கிளம்பிய பாக்டீரியாக்கள்
    டினோனஸர்களாக மாறி
    ஊரைச்சூறையாடக்கண்ட மகா கலைஞன்
    மனமுடைந்துபோனான்
    ராப்பபகலாய் பாக்டீரியாக்களின்
    உறுமல்களில் அவனால் தூங்க முடியவில்லை

    அரசு மருத்துவமனையின்
    பச்சை நிறப்படுக்கையொன்றில்
    பாதுகாப்பாக ஒளிந்துகொண்டபோதுதான்
    புளித்த மாவின் பாக்டீரியாக்களைவிட
    மருத்துவமனையின் நிஜ பாக்டீரியாக்கள்
    எவ்வளவு பயங்கரமானவை
    என்பதை உணரத் தொடங்கினான்

    ஒரு புனிதக் கலைஞனின்மீது
    ஒரு புனித எழுத்தின்மீது
    ஒரு பாக்கெட் புளித்தமாவு கொட்டினால்
    எல்லாமே எவ்வளவு புளிப்பாகிவிடும் என்பதை
    வரலாறு பதிவு செய்துகொண்டது

    மாவீரன் நெப்போலியனை
    வைரஸ் காய்ச்சல் ஒன்று வென்றதைப்போல
    மகா கலைஞனின் உன்னதங்களை
    புளித்த மாவின் பாக்டீரியா ஒன்று
    வேட்டையாடிக்கொண்டிக்கிறது

    பார்வதிபுரம் காவலர்
    புலனாய்கின்றார்
    17.6.2019
    பிற்பகல் 3.30.
    மனுஷ்ய புத்திரன்

  2. சுயமோகனை ரொம்பவும் வறுத்து எடுக்க வேண்டாம். ஏனெனில் அவர் அடிப்படையில் இலக்கியம் சார்ந்த ஒரு அறிவியக்கத்தை வழி நடத்தி வருகிறார். அந்த இயக்கத்தில் தலித் சிந்தனை, கம்யூனிச சிந்தனை, திராவிட சிந்தனை, இந்துத்துவ சிந்தனை கொண்ட பலரும் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் இவர்களில் சிலர் இலக்கியத் துறைக்கும் சமூகத்திற்கும் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கக் கூடும். தமிழ் கூறும் நல்லுலகில் இம்மாதிரியான அறிவு இயக்கங்கள் மிகவும் குறைவு. மேலும் மனுஷ்யபுத்திரன் ஒரு அரசியல் கட்சியின் எடுபிடி. இம்மாதிரியான கவிதைகளின் மூலம் தன்னுடைய மத அடிப்படைவாத உணர்வை கமுக்கமாக மறைக்கவும் திசை திருப்பவும் முயல்கிறார்.

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க