காராட்டிராவில் கடந்த 2015 முதல் 2018 வரை 12,021 விவசாயிகள் தற்கொலை மூலம் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் உங்களது  வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் கடக்கும் போது மகாராட்டிராவில் மட்டும் எட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

மகாராட்டிராவில் பா.ஜ.க தலைமையிலான தேவேந்திர பட்னாவிஸ் அரசு 2014 நவம்பர் முதல் ஆட்சி செய்து வருகிறது. சென்ற வாரத்தில் சட்டமன்றத்தில் மாநில  நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் தற்கொலை செய்து கொண்ட 12,021 விவசாயிகளில் 6,888 தற்கொலை சாவுகள் மட்டுமே மாவட்ட கமிட்டிகளின் ஆய்வின் படி அரசு உதவி பெறுவதற்கு தகுதியானவை என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார்.

அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், தற்கொலை செய்து கொண்ட 12,021 விவசாயிகளில்  6845 விவசாயிகளின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிதி உதவி செய்து இருப்பதாக கூறியிருக்கிறார். இன்னும் மூன்று மாதங்களில் மகாராட்டிரா சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிற நிலையில்  முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விவசாயக் கடன் தள்ளுபடித் தொகையை ரூ. 8000 கோடி அதிகப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

படிக்க :
♦ இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?
♦ இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !

மகாராட்டிராவில் பா.ஜ.க ஆட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஜுன் மாதம், 50 இலட்சம் விவசாயிகளுக்காக ரூபாய் இருபத்தி நான்காயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடித் தொகையாக அறிவிக்கப்பட்டது.   இதுவரை 43.32 லட்சம் விவசாயிகள் இவ்விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தின் படி பயனுடைந்துள்ளதாகவும், மற்ற விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மீதித் தொகை செலுத்தப்பட இருப்பதாகவும் கூறுகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.

ஆனால் 2017 ஜூன் மாத விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்திற்குப் பின்னரும் 4500 விவசாயிகள் தற்கொலைகள் நடந்துள்ளன. இது கடந்த 2015 முதல் 2018 வரை நடந்த 12,021 விவசாயிகளின் தற்கொலையில் 32 விழுக்காடாகும்.

விவசாய நலிவையும்  விவசாயிகளின் தற்கொலைகளையும் பிரிக்கும் ஆளும் வர்க்க கும்பலின் நரித்தனம்:

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 610 விவசாயிகளின் தற்கொலை சாவுகளில் 192 விவசாயிகள் மட்டுமே அரசு அளிக்கும் நிதி உதவி பெறத் தகுதியானவர்கள். அதில் 96 பேர் இதற்கு தகுதியற்றவர்கள், மீதி 323 பேரின் தற்கொலை சாவுகளை விசாரித்து வருவதாக கூறியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான  மாநில அரசு. கடந்த 2014 நவம்பரில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க தலைமையிலான அரசு விவசாயிகளின் தற்கொலைகளை கொச்சைப்படுத்தி, அத்தற்கொலைகள் விவசாயம் சார்ந்தது இல்லை என்று  பொய்யுரைப்பதில் நரித்தனமாக செயல்படுகிறது.

கடந்த 2014 முதல் 2018 வரையிலும்,  தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின்  எண்ணிக்கையும், அவர்களில் மகாராட்டிரா அரசின் நிதி உதவி பெறுவதற்கு  தகுதியானவர்களாக தேர்வு செய்தவர்களின் எண்ணிக்கையையும் கீழே உள்ள படத்தில் ஆண்டுவாரியாக பார்க்கலாம்.

மகாராஷ்டிர விவசாயிகள் தற்கொலை
படம் -நன்றி: இந்து ஆங்கிலம்

தற்கொலை செய்து கொண்ட ஒவ்வொரு விவசாயியும்  தங்கள் நிலத்தை, பயிரை தனது பிள்ளைகள் போல ஒவ்வொரு பருவத்திலும்  நேசித்தவர்கள். அளப்பரிய விவசாய அனுபவம் பெற்றவர்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உழைப்பின் மூலம் மக்களுக்கு உணவு வழங்கிய சமூக மனிதர்கள். சாகும்போது தன் நிலத்தில்தான் உயிர் விட வேண்டும் என்று மாய்ந்தவர்கள் ஏராளம்.

ஆனால் விவசாயிகளை ஒரு சடப் பொருளாகவும், அவர்களை சந்தைக்கேற்ப உழைத்துத் தரும் ஒரு பிண்டமாகவும் ஆளும் வர்க்கக் கும்பல் பார்க்கிறது. விவசாயிகளைக் கொலையும் செய்துவிட்டு, நிவாரணத்திற்காக வகை பிரிக்கும் கொலைகார அரசாக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது பா.ஜ.க மாநில அரசு.

விவசாயக் கடன் தள்ளுபடி – விவசாயிகளை மீட்க வந்த ரட்சகனா ? இல்லை தேர்தலில் ஓட்டுப் பொறுக்கவா ?

விவசாய நெருக்கடிக்கு நிவாரணம், தற்கொலைக்கு நிதி உதவி என்பது விவசாயப் பிரச்சினைக்குத் தீர்வுபோல ஆளும் வர்க்கம் பரப்பி வருகிறது. இது புண்ணுக்குத் புணுகு தடவுவது போன்றது.

விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தை ஆளும் மாநில அரசு அமல்படுத்தும் போது, அந்தந்த மாநில எதிர்க்கட்சிகள் கடன் தள்ளுபடி திட்டம் அனைத்து விவசாயிகளையும்  சென்றடையவில்லை என்று கூப்பாடு போடுவதும், அனைத்து மாநிலக் கட்சிகளும் வித்தியாசமின்றி, தங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக விவசாய கடன் தள்ளுபடித் திட்டத்தை அறிவிப்பதும் நடைபெறுகிறது.

இதுவரை  இந்தியாவில் அறிவிக்கப்பட்ட 18 விவசாயக் கடன் தள்ளுபடி திட்டங்களுக்கும் தேர்தலுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 18 திட்டங்களில் பெரும்பான்மையானவை தேர்தல் வாக்குறுதியாகவும், தேர்தல் வெற்றித் திட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

விவசாய கடன் தள்ளுபடி
நன்றி: EPW –ஜூன் 8, 2019,

மகாராட்டிராவில் தொடர்ச்சியாக பல வருடங்களாக வறட்சி இருந்தாலும், விவசாயிகளைக் காக்க வந்த இரட்சகன் என்று கூறிக்கொண்டு 2014 நவம்பரில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க மாநில அரசு விவசாயிகளின் பல கட்டப் போராட்டத்திற்குப் பின் 2017-ல்தான் விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தை அறிவித்தது. இப்போது இன்னும் 3 மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிற நிலையில் கடன் தள்ளுபடித் தொகையில் கூடுதலாக ரூ. 8000 கோடி அதிகப்படுத்தியிருக்கிறது. சென்ற காங்கிரஸ் ஆட்சியின் போது தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் தற்கொலைகளை விட  மகாராட்டிரா பா.ஜ.க அரசின் ஆட்சியில்தான் விவசாயிகள்  தற்கொலைகள் இரட்டிப்பாகியிருக்கிறது.

விவசாய கடன் தள்ளுபடித் திட்டங்கள் சென்றடைய வேண்டிய விவசாயிகளைச் சேராமல், மடைமாற்றி விடப்படுகிறது. தங்கள் விவசாயக் கடன் தள்ளுபடியைக் கோரி விவசாயிகள், வங்கிகளின் வாயிலில் அலைந்து அலைந்து மனம் வெம்பி போயுள்ளனர்.

ashok manwar
அசோக் மன்வர்

அதற்கு உதாரணமாக, மகாராட்டிரா மாநிலத்தில் நடைபெற்ற இச்சம்பவமே சாட்சி: அசோக் மன்வர் என்ற மகாராட்டிராவின் வாசிம் மாவட்டத்தை சேர்ந்த  விவசாயி, முதலமைச்சர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் ரூ. 1.4 லட்சத்திற்கு, விவசாயக் கடன் தள்ளுபடி சான்றிதழ் பெற்றிருக்கிறார். இந்த சான்றிதழ் கடந்த 2018 தீபாவளி அன்று மும்பையில் வைத்து அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அசோக்கிற்கு ரூ. 1.4 லட்சத்திற்குப் பதிலாக ரூ. 77,000-க்கு மட்டும்தான் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. மீதித் தொகையை தள்ளுபடி செய்ய அவர் மாவட்ட ஆட்சித் தலைவர் வரை சென்றும் பயனில்லை. இதனால் அவர் தன் கிராமத்திலிருந்து மும்பைக்கு வந்து முதலமைச்சரை சந்திக்கமுடியாமல், எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்செய் முண்டேவை சந்தித்து முறையிட்டு உள்ளார். தனஞ்செய் சந்திப்புக்கு பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, போலீசு அவரை ஒரு வேனில் ஏற்றி, மரைன் டிரைவ் காவல் நிலையத்தில் வைத்து மூன்று மணி நேர விசாரணைக்குப் பின் விடுவித்திருக்கிறது.

“ஊடகங்களா உனது கடனை தள்ளுபடி செய்கிறது? நீ தற்கொலை செய்து கொள்ள இங்கு வந்தாயா?” என்று போலீசு தொடர்ச்சியான கேள்விகளால் அவரை துளைத்தெடுத்துள்ளது. மறுபடியும் விசாரணைக்கு அழைத்துச் செல்வார்களோ, இல்லை வழக்கு பதிவு செய்வார்களோ என்ற பயத்திலும்,  இந்த விசாரணைக்குப் பின் போலீசால் தனக்கு அச்சுறுத்தல் நேருமோ என்ற அச்சத்திலும் அசோக் இருக்கிறார். தன்னுடைய ரூ. 1.4 லட்சம் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்,  இந்தக் கடனுக்கு வட்டி முழுவதும் தான் வங்கியில் செலுத்த இருப்பதாகவும் கூறுகிறார் அவர்.

எந்த கார்ப்பரேட் முதலாளியாவது, தன்னுடைய கடனை தள்ளுபடி செய்ய வீதிக்கு வந்திருக்கிறானா? இல்லை கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறானா? ஆனால் இந்தியாவில் மட்டும் தனியார்மயம் தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு மூன்று லட்சத்திற்கு அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.

farmers suicide

பிரதான் மந்திரி பாசல் யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள  பயிர்க் காப்பிட்டுத் திட்டத்தின் படி பயிர் சேதங்களுக்கு வழங்கக் கூடிய தொகையில் மகாராட்டிராவில் மட்டும் 2018 டிசம்பர் வரை ரூ. 1416 கோடி நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடனும், அக்கடனுக்குத்  தள்ளுபடியும் அளவில்லாமல் வழங்கப்படுகிறது.

தொடர்ச்சியான வறட்சி, பயிர் சேதம், இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, வங்கிகளில் கடன் கிடைக்காமல் கந்து வட்டிகாரர்களிடம் கடன் சுமை, விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தின் தோல்வி, விவசாயம் பொய்த்துப் போனதால் பிற வேலைகளுக்கும் வழியில்லாமை, விளை பொருட்களின் விலை வீழ்ச்சி, விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை இல்லாமை போன்ற காரணங்கள் விவசாயிகளை வாழ வழிவிடாமல் மேலும் மேலும்  கடன் சுமையை சுமத்துகின்றன.

இடுபொருட்களின் விலைஉயர்வும், விவசாய விளைப் பொருட்களின் விலைகளை  தீர்மானிக்கும் அதிகாரமும் ஆட்சியாளர்கள், வர்த்தக சூதாடிகள், கார்ப்பரேட்  முதலாளிகள் கையில் குவிந்து உள்ளது.

இந்த அதிகாரத்தை அவர்களிடமிருந்து பறித்து, விவசாயிகள் அவற்றை தீர்மானிக்கும்  அதிகார சக்திகளாக மாறுவதுதான் விவசாய நெருக்கடிக்கு தீர்வாக இருக்க முடியும்.!

பரணிதரன்

செய்தி ஆதாரம் :
♦ 12,021 Farmers Committed Suicide Under the BJP Regime in Maharashtra
♦ The Politics of Farm Loan Waivers A Comparative Study
♦ Between 2015 and 2018, More Than 12,000 Farmers Killed Themselves in Maharashtra
♦ Maharashtra: CM Fadnavis’ plan to expand farm loan waiver to cost Rs 8,000 crore
♦ Maharashtra Farmer Comes To Mumbai With Loan Waiver Complaint, Detained
♦ Over 12,000 farmers died of suicide in three years in Maharashtra: Subhash Deshmukh

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க