பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 15

பால்மிரோ டோக்ளியாட்டி
டோக்ளியாட்டி

த்தாலிய பூர்ஷுவாக்கள் ஓர் ஒருங்கிணைந்த அரசியல் அமைப்பைப் பெற்றிருந்தனர். ஆனால், அது ஒரு அரசியல் கட்சி அல்ல. அது ஃப்ரீமசோன்றி அல்லது கூட்டுரிமைக் கழகம் என்று பெயர் பெற்றிருந்தது. யுத்தத்திற்கு முன்னர் ஃப்ரீமசோன்றிதான் பூர்ஷுவாக்களின் ஒரே முழுமையான அரசியல் அமைப்பாக இருந்து வந்தது. இத்தாலியை ஒன்றுபடுத்தும் போராட்டத்தில் அது தலையாய பங்கு கொண்டது. இத்தாலியின் தேச விடுதலை இயக்கத்துக்கான போராட்டத்திலும் முக்கிய பங்கு வகித்தது. அது மட்டுமன்றி, இத்தாலிய பூர்ஷுவாக்களின் பல்வேறு பிரிவுகளை அரசியல் ரீதியில் ஒற்றுமைப்படுத்துவதிலும், குட்டிபூர்ஷுவாக்கள், மத்தியதர பூர்ஷுவாக்கள் மீது பெரும் பூர்ஷுவாக்களின் செல்வாக்கை நிலைநாட்டுவதிலும் அது குறிப்பிடத்தக்க பங்காற்றிற்று.

அக்காலத்தில் ஃப்ரிமசோன்றியின் இயைபு குறித்த புள்ளி விவரங்கள் ஏதும் எனக்குத் தெரிந்தவரை கிடைக்கவில்லை. ஆனால் அவ்வாறு ஒருக்கால் சர்வே புள்ளி விவரங்கள் கிடைக்குமானால் குட்டிபூர்ஷுவாக்களும் ஊதியம் பெறும் ஊழியர்களும் பெரும் எண்ணிக்கையில் அதில் இருந்திருப்பது தெரியவரும். இந்த விஷயத்தை அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் துல்லியமாக இதே கூறுகள் பின்னால் தேசியப் பாசிஸ்டுக் கட்சியிலும் இடம் பெற்றதை நீங்கள் காணுவீர்கள்.

குட்டிப் பூர்ஷுவாக்கள் ஃப்ரீமசோன்றியில் ஏன் சேர்ந்தார்கள்? சட்டம் என்பது சரிவர மதிக்கப்படாத ஒரு சமுதாயத்தில், ஆளுபவர்களாலும் ஆளப்படுபவர்களாலும் அந்தச் சட்டம் அடிக்கடி மீறப்படும் ஒரு சமுதாயத்தில் ஃப்ரீமசோன்றி தங்களுடைய குழுக்களைப் பாதுகாக்கக்கூடிய ஓர் அமைப்பு என்று கருதியதாலேயே குட்டி பூர்ஷுவாக்கள் அதில் தம்மை இணைத்துக் கொண்டனர். அது ஒரு பரஸ்பர உதவிக்கழகமாக இருந்து வந்தது. ஊதியம் பெறும் ஊழியர்கள் தங்கள் வேலைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அதில் சேர்ந்தனர். இதன் மூலம் சிலர் உயர்பதவிகளையும் பெற முடிந்தது. விவசாயத்துறை பூர்ஷுவாக்களும் தொழிலதிபர்களும் கூட ஃப்ரீமசோன்றியில் சேர்ந்திருந்தனர். யுத்த முற்கால இத்தாலிய சமுதாயத்தில் மிகவும் விரிவான ஒன்றிணைந்த அமைப்பாக இதனைப் பூர்ஷுவாக்கள் கருதினர்.

முதலாளிகளின் கூட்டுரிமைக் கழகம். (freemasonry)

யுத்தப் பிற்காலத்தில் இரண்டு பெரிய கட்சிகள் அரசியல் அரங்கில் தோன்றின. யுத்தத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்த சோஷலிஸ்டுக் கட்சி போர் தொடங்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே பூர்ஷுவாக்களுடன் தனக்கிருந்த தொடர்பைத் துண்டித்துக் கொண்டது (உண்மையில் ஃப்ரீமசோன்றியுடனான அதன் தொடர்பு போர் தொடங்குவதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் முடிவுக்கு வந்தது). அது வர்க்க உணர்வு கொண்ட ஒரு சுதந்திரமான கட்சியாக இத்தாலி முழுவதும் வியாபித்திருந்தது. அதே சமயம் பாப்புலர் கட்சியும் இத்தாலியில் செயல்பட்டு வந்தது.

பாப்புலர் கட்சி இத்தாலிய சமுதாயத்தில் ஒரு புதிய நிகழ்வுப் போக்காகும். நகரப்புற, கிராமப்புற குட்டி பூர்ஷுவாப் பகுதியினரையும் விவசாயிகளையும் அதுவரை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அடித்தளமாக இருந்த ஏனைய பகுதியினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக, அரசியல் கட்சியாக அது உருவெடுத்தது. அதுவரை இந்த நகர்ப்புற, கிராமப்புற குட்டி பூர்ஷுவாப் பகுதியினரின் ஆதரவில்தான் எல்லாக் கட்சிகளும் இயங்கி வந்தன.

பாப்புலர் கட்சி தனக்கே உரிய ஒரு வேலைத் திட்டத்துடன் மத சார்புடைய அமைப்பாக உருவெடுத்தது. சோஷலிஸ்டுக் கட்சியின் முன்னேற்றத்தை, வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் ஓர் அமைப்பாக பாப்புலர் கட்சி இருக்க வேண்டும் என்பதே கத்தோலிக்க திருச்சபையின் விருப்பம். இந்தக் குறிக்கோள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதே சமயம் பிளவுபடும் போக்கை இது வெளிப்படுத்திற்று. இத்தாலிய பூர்ஷுவாக் கட்சிகளின் பாரம்பரியப்படி அது பிளவுபடவும் செய்தது. யுத்தப் பிற்கால நெருக்கடி முற்றுவதற்கு இதுவும் காரணமாகும்.

ஆக, யுத்தத்திற்குப் பிறகு தங்களது சொந்த அரசியல் நிறுவனத்தை உருவாக்கிக் கொள்ளும் பிரச்சினை பூர்ஷுவாக்களுக்கு ஏற்பட்டது.

ஆரம்பத்தில் பாசிஸ்டுக் கட்சி இந்தப் பணியை வரித்துக் கொள்ளவில்லை. பூர்ஷுவா வர்க்கத்தின் மிகவும் பிற்போக்குப் பகுதியினரது சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் பொருட்டும், அந்தச் சர்வாதிகாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டும் தொழிலாளர்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது அது இந்தப் பணியை ஏற்றுக் கொண்டது.

தொடக்க காலத்தில் பாசிஸ்டுக் கட்சி எப்படி இருந்தது என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.

பாசிஸ்டுக் கட்சிக் கருவாகி உருவாகி வளர்ந்து வலுப்பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னரும் பின்னரும் அதன் நிலைமை எவ்வாறிருந்தது என்பதை இப்போது பார்ப்போம். அகஸ்டியோவில் நடைபெற்ற பாசிஸ்டுக் கட்சியின் மூன்றாவது காங்கிரசின்போது, அதாவது ரோம் காங்கிரசின்போது அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் நம்மிடம் இருக்கின்றன.

சட்டம் என்பது சரிவர மதிக்கப்படாத ஒரு சமுதாயத்தில், ஆளுபவர்களாலும் ஆளப்படுபவர்களாலும் அந்தச் சட்டம் அடிக்கடி மீறப்படும் ஒரு சமுதாயத்தில் ஃப்ரீமசோன்றி தங்களுடைய குழுக்களைப் பாதுகாக்கக்கூடிய ஓர் அமைப்பு என்று கருதியதாலேயே குட்டி பூர்ஷுவாக்கள் அதில் தம்மை இணைத்துக் கொண்டனர்.

இதன்படி கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 1 இலட்சத்து 51 ஆயிரம். இவர்களில் 14 ஆயிரம் பேர் வணிகர்கள் (வணிகர் என்ற சுட்டுப் பெயர் பல்வேறு பகுதியினரையும் குறிக்கும் என்பதையும் இவர்கள் செல்வந்தர்கள் என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டும்), 4 ஆயிரம் பேர் தொழிலதிபர்கள், 18 ஆயிரம் பேர் நிலக்கிழார்கள், 21 ஆயிரம் பேர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், 10 ஆயிரம் பேர் வாழ்க்கைத் தொழிலாளர்கள், 7 ஆயிரம் பேர் அதிகாரிகள், 15 ஆயிரம் பேர் ஊதியம் பெறும் ஊழியர்கள், 25 ஆயிரம் பேர் ஆலைத் தொழிலாளர்கள், 27 ஆயிரம் பேர் விவசாயத் தொழிலாளர்கள்.

இந்தப் புள்ளி விவரங்களைச் சற்று மிகையானதாக எடுத்துக் கொண்டு பார்த்தாலும் கூட, உறுப்பினர்களில் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் விவசாயத் தொழிலாளர்கள் என்பதைக் காணலாம். இந்த விவசாயத் தொழிலாளர்கள் பெரும்பாலும் எமிலியாவைச் சேர்ந்தவர்கள். கிராமப்புறக் குட்டி பூர்ஷுவா மற்றும் மத்தியதர பூர்ஷுவா பிரிவின் கீழ் வருபவர்கள். பாசிச வளர்ச்சியின் முதல் கட்டத்தில் அதன் பிரதான வெகுஜன அடித்தளமாக இருந்தவர்கள்.

தொழிலதிபர்கள், வணிகர்கள், நிலக்கிழார்கள், மாணவர்கள் (முதலில் குறிப்பிடப்பட்டவர்களின் புதல்வர்கள்), வாழ்க்கைத் தொழிலாளர்கள் இவர்கள் எல்லோரையும் சேர்த்துக் கணக்கிட்டால் 67 ஆயிரம் பேராகிறது. அதாவது மொத்த எண்ணிக்கையில் பாதி ஆகிறது. அடுத்து 22 ஆயிரம் ஊழியர்களையும், அதிகாரிகளையும் எடுத்துக் கொண்டால் இதுவும் பெரும் எண்ணிக்கையை எட்டுகிறது. 25 ஆயிரம் தொழில்துறைத் தொழிலாளர்களும் மாலுமிகளும் உறுப்பினர்களாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதான் மிகவும் ஐயத்துக்குரியதாக இருக்கிறது.

படிக்க:
இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?
ஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை !

எனினும் இதனை உண்மை என்று எடுத்துக்கொண்டால்கூட ஒட்டுமொத்த சதவீதத்தில் இந்த 25 ஆயிரம் பேர் கட்சியின் இயல்பை நிர்ணயிப்பவர்கள் அல்ல என்பது தெளிவு. உண்மையில் 67 ஆயிரம் பூர்ஷுவாக்களும் 22 ஆயிரம் ஊழியர்களும்தான் கட்சிக்கு அதன் இயல்பை அளிக்கிறார்கள். ஆக, பாசிஸ்டுக் கட்சி மிகப்பெரும்பாலும் பூர்ஷுவாக் கட்சி என்பதும், ஊதியம் பெறும் ஊழியர்கள் மீது வலுவான செல்வாக்கு செலுத்துகிறது என்பதும், அதன் கிளைகள் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் விவசாயத் தொழிலாளர்கள் மீதும் வியாபித்துள்ளன என்பதும் இதிலிருந்து புலனாகும்.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க