பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 20
பாசிஸ்டுக் கட்சியின் உட்கட்சி வாழ்க்கை செத்துவிட்டது என்றே கூறலாம். பெயரளவுக்கு ஆண்டுதோறும் உறுப்பினர்களின் பொதுச்சபைக் கூட்டம் நடைபெறுகிறது. அங்கு படாடோபமாக நிகழ்த்தப்படும் பல உரைகளை உறுப்பினர்கள் செவிமடுத்துக் கேட்கின்றனர். அவர்கள் பழைய இயக்கத்தின் பணியை அங்கீகரிக்கின்றனர். புதிய இயக்கத்தின் பொறுப்புகளை உறுதி செய்கின்றனர். ஆனால் இது வெறும் சம்பிரதாயம்தான். ஜனநாயக ரீதியான தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
எனினும் பாசிஸ்டுக் கட்சியில் அறவே உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று கருதுவது தவறு. ஏன்? ஏனென்றால் பாசிஸ்டுக் கட்சி அணிகளிடையே அதிலும் குறிப்பாக மத்திய மட்டத்திலுள்ள அணிகளிடையே கீழ்மட்டத்திலுள்ள ஊழியர்களுடன் இடையறாது தொடர்பு கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். மேலும் தாங்கள் அன்றாடம் தொடர்பு கொண்டிருக்கும் வெகுஜனங்களுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டவர்கள் அவர்கள்.
இத்தகைய அணிகளிடமிருந்துதான் கருத்து எதிரலைகள் வருகின்றன. எந்த மார்க்கமாக, எந்த வழியில் அவை வருகின்றன? முரண்பாடான முறையில் அவை வருகின்றன. நிலைமை மிகவும் முற்றிய பிறகுதான் இந்தப் பிரதிபலிப்புகளை ஒருவர் காணமுடியும். பொலோக்னாவில் அர்பினிதி ¹¹ விவகாரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கோஷ்டியினர் அதிகாரப்பூர்வமான வேலைத் திட்டத்துக்கு மாற்றாக வேறொரு திட்டத்தை முன்வைக்கத் துணிந்தபோது, அதனை பாசிசத்தால் மேற்கொண்டும் சகித்துக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டபோதுதான் இந்த விவகாரம் அம்பலத்துக்கு வந்தது.
இந்த நிகழ்வுப் போக்கு கவனிக்கப்படாமலேயே நடைபெற்று வருகிறது. கிராமப் பகுதிகளிலுள்ள பாசிஸ்டுக் கட்சி அமைப்புகளில்தான் இது அநேகமாக விகசிதமாகத் தெரிகிறது. ஏனென்றால் இங்குதான் மக்களின் அதிருப்தி அதிகம்; இங்குதான் பாசிஸ்டு அமைப்புகள் வெகுஜனங்களுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன; இங்குதான் நகரங்களில் இருக்கும் அளவுக்கு காவல்துறையின் உதவி அதிகமில்லை. மக்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ள எமிலியாவில் வெகு அண்மையில் மிகப் பெருமளவுக்கு கலக உணர்ச்சியும் கொந்தளிப்பும் அதிகரித்தற்கு இதுவே காரணம்.
கடைசியாகக் குறிப்பிடப்பட்ட இந்த நிகழ்வு 1933-34-ம் ஆண்டில் நடைபெற்றது. இதனால் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் திட்டத்துக்கு பாசிசம் ஓராண்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டியதாயிற்று. வருடாந்தர அழைப்பின்போதுதான் உறுப்பினர் சேர்க்கும் இயக்கம் நடைபெறும். இதுதான் வழக்கமாக நடைபெறும் வழிமுறை. இதற்கு மத்தியில் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில்தான் கட்சியின் கதவுகள் திறந்துவிடப்படும். இன்று அவை மூடப்பட்டுவிட்டன. 1933-34-ல் உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெற்றது. அப்போது தொழிலாளர்களைக் கட்சிக்குள் ஈர்க்க பெருமுயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது.
படிக்க:
♦ மேற்கு வங்கம் : சிவப்பு காவியாக மாறியது எப்படி ?
♦ தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !
உறுப்பினர் சேர்க்கும் இந்த இயக்கத்துக்குப் பலன் கிட்டிற்று என்பதை மறுக்க முடியாது. உறுப்பினர்கள் எண்ணிக்கை 7 இலட்சம் முதல் 8 இலட்சம் அதிகரித்தது. தொழிலாளர்கள் பாசிஸ்டுக் கட்சியில் சேரும் சம்பவங்கள் ஏற்கெனவே அங்குமிங்குமாக நடைபெற்று வந்தன. 1932 ஆரம்பத்தில் ஃபியட்டிலும் வேறு சில தொழிற்சாலைகளிலுமுள்ள பாசிஸ்டுக் கட்சியில் தொழிலாளர்கள் சேர்ந்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எனினும் 1934-ம் ஆண்டில்தான் உறுப்பினர் சேர்க்கும் இயக்கம் மிகப் பெரும் பாய்ச்சலைக் கண்டது. ஆண்டுத் தொடக்கத்தில் உறுப்பினர் எண்ணிக்கை 10,99,000 ஆக இருந்தது. அதே ஆண்டு இறுதி வாக்கில் 18,50,000-ஐ எட்டிற்று: அதாவது கிட்டத்தட்ட 8 இலட்சம் அதிகரித்தது. ஏராளமான ஆலைத் தொழிலாளர்களும் இதில் அடங்குவர் என்பதில் ஐயமில்லை.
பாசிஸ்டுக் கட்சி இவ்விதம் புது வலுவும் உத்வேகமும் பெற்றதன் விளைவாக அதிகார வர்க்க ஜபர்தஸ்துகள் முடுக்கிவிடப்பட்டன. வெகுஜனங்களின் வாய்களுக்குப் பூட்டுப் போடப்பட்டது. ஆனால் அதே சமயம் வேறொரு விளைவும் ஏற்பட்டது. கட்சியில் ஓரளவு உட்கட்சி ஜனநாயகம் தலைதூக்கிற்று. நகர்ப்புறங்களை விடக் கிராமப்புறங்களில்தான் இது துலாம்பரமாகத் தெரிந்தது.
இந்த வளர்ச்சிப் போக்கின் முடிவுக்கு இன்னும் நாம் வந்துவிடவில்லை. நம் முன்னால் 18 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட பாசிஸ்டுக் கட்சி இருக்கிறது. இத்தாலிய மக்களின், இத்தாலிய பூர்ஷுவாக்களின் முக்கியமான பகுதியினர் அதில் அங்கம் வகிக்கின்றனர். வேறு எந்த இத்தாலிய பூர்ஷுவா அமைப்பும் இப்போது இல்லை. பாசிஸ்டுக் கட்சியில் உறுப்பினரல்லாத ஒரு பூர்ஷுவாவைக் கூடக் காண்பது மிகவும் அபூர்வம். பூர்ஷுவாக்களின் பழைய அரசியல் வடிவங்கள் ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டன.
இது பூர்ஷுவாக்களுக்குப் புது வலுவை அளித்துள்ளது. கட்சியானது ஒரு கட்சிக்குரிய இயல்பை இழந்துவிட்டாலும் இத்தாலிய பூர்ஷுவாக்களின் சித்தாந்தத்தை அது பெரிய அளவுக்கு ஒன்றுபடுத்தியுள்ளது. இது கட்சிக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இதை மறந்துவிடக் கூடாது; இது மிக முக்கியமானது.
தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகப் பகிரங்கமாகச் சர்வாதிகாரத்தைப் பிரயோகிக்கக் கூடிய ஒரு புது வகையான அரசியல் கட்சியைப் பாசிஸ்டுக் கட்சியில் இத்தாலிய பூர்ஷுவாக்கள் காண்கின்றனர். மேலும், இதர பல அமைப்புகள் மூலமும் பிணைப்புகள் மூலமும் எக்காலத்திலும் தொழிலாளர் வர்க்கத்தினர் மீது ஆயுதந்தாங்கிய நிர்ப்பந்தத்தைப் பிரயோகிக்கக் கூடிய ஆற்றலை இத்தாலியப் பூர்ஷுவா வர்க்கத்தினருக்கு அளிக்கும் ஓர் அமைப்பாக பாசிஸ்டுக் கட்சி பரிணமித்திருக்கிறது. பாசிஸ்டுக் கட்சி தோற்றுவித்துள்ள படையும் பல மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் பாசிஸ்டுக் கட்சி ஓர் ஆயுதந்தாங்கிய கட்சி என்ற இயல்பையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. பாசிஸ்டுக் கட்சியின் படை கரபினியரி படைப்பிரிவு போன்றதோ அல்லது இராணுவத்தைப் போன்றதோ அல்ல. எனினும் அது இராணுவத்தின் அம்சத்தை ஓரளவுக்குப் பெற்றிருக்கிறது. கட்சி தனது படையின் மூலம் வெகுஜனங்களின் மிகப் பரந்த பகுதியினரைக் கட்டுப்படுத்தி வருகிறது. இது சர்வாதிகாரத்தின் வலிமைக்கு பிரதான அடித்தளங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.
எனினும் இங்கு கூட சில முரண்பாடுகள் தென்படுகின்றன. அரசியல் வாழ்க்கை இல்லாத காரணத்தால் படைக்குக் குறிப்பிட்டளவு திட்பத்தையும் உறுதியையும் அளிக்க இயலாமல் இருக்கிறது. படைக்குள் நாம் குறிப்பிட்டளவு பணியை மேற்கொள்வதற்கு இது நமக்கு வாய்ப்பளிக்கிறது. எனினும் இந்த முரண்பாடுகளைக் காணாதிருப்பதும், பாசிஸ்டுக் கட்சி ஒரு வலுவான அம்சத்தைக் கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளாதிருப்பதும் தவறாகும்.
பாசிஸ்டு கட்சி தனது படையின் மூலம் வெகுஜனங்களின் மிகப் பரந்த பகுதியினரைக் கட்டுப்படுத்தி வருகிறது. இது சர்வாதிகாரத்தின் வலிமைக்கு பிரதான அடித்தளங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.
அடிமட்டத்தில், பாசிஸ்டுக் கட்சியில் உறுப்பினராக இருப்பது ஒருவித பிணைப்பை, ஏறத்தாழ ஒரு சித்தாந்தப் பிணைப்பை, ஸ்தாபனப் பிணைப்பைப் பெற்றிருக்கிறது. ஒருவகையில், கட்சியில் சேர்ந்துள்ள தொழிலாளர்கள் ஒருவிதமான இராணுவ சீருடையை அணிந்திருக்கின்றனர் எனலாம். இந்தப் படைவீரனும் இன்றைய நிலைமை குறித்து அதிருப்தி அடைந்திருக்கிறான். ஆனால், அவன் ஒரு படைவீரன், அவனுக்கென்று ஒரு சீருடை இருக்கிறது. எனவே, அவன் பணிகிறான், கீழ்ப்படிகிறான். ஒரு புரட்சிகர நெருக்கடி தோன்றினாலொழிய அவன் எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய முடியாது.
நமது கட்சி விடாஉறுதியோடு, அயராது சோராது பணியாற்றினால்தான் இந்தப் பிணைப்புகளைத் துண்டிக்க முடியும். இந்தப் பிணைப்புகள் தாமாகவே நொறுங்கி விழும் என்று நினைப்பது தவறு. இந்தப் பிணைப்பை எப்படித் துண்டிக்க முடியும் என்பதை எப்போதும் நாம் புரிந்து கொள்ளாததே அடித்தளத்தில், தொழிற்சாலைகளில் நாம் செய்யும் பணிக்கு ஓரளவு இடையூறாக இருக்கிறது. நமது கோஷங்களை எவ்வாறு உருவாக்கிக் கொள்வது என்பதை நாம் எப்போதுமே அறியாதிருக்கிறோம். இந்த வகையான சீருடையை அணிவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் விஷயத்தில் நமது குறிக்கோள்கள் சரிவர வரையறுத்துக் கொள்ளத் தெரியாதவர்களாகவும் இருக்கிறோம். இதேபோல், அவர்களது மனநிலையைப் புரிந்து கொள்ளாதவர்களாகவும், அவர்களைப் போராட்டத்தில் ஈடுபடச் செய்யும் பாதையைப் புரிந்து கொள்ளாதவர்களாகவும் நாம் இருக்கிறோம்.
சட்டரீதியான சாத்தியக்கூறுகளை நடைமுறையில் பயன்படுத்திக் கொள்ளும்போது இந்த அம்சத்தை நாம் மனதிற்கொள்ள வேண்டும்.
(தொடரும்)
அடிக்குறிப்புகள் :
11. லியான்ரோ அர்ப்பினதி (1892-1945) 1929 செப்டம்பர் முதல் 1933 மே வரை உள்துறை உதவிச் செயலாளராக இருந்தார். பி.என்.பி.லிருந்து இவரும் இவரைப் பின்பற்றும் சிலரும் வெளியேற்றப்பட்டனர். முசோலினிக்கு எதிராகச் சதி செய்ததாக குற்றம் சாட்டி அவர் ஐந்து ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பொலோக்னா அருகில் 1945 ஏப்ரல் 22-ம் தேதி கொரில்லாக்களால் கொல்லப்பட்டார்.
பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !