பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 23

பால்மிரோ டோக்ளியாட்டி
டோக்ளியாட்டி

க்கள் படையின் சமூகக் கட்டமைப்பு ராணுவத்தின் சமூகக் கட்டமைப்புடன் மிக நெருங்கி வருகிறது என்பதை நாம் மனதிற் கொள்ள வேண்டும். இந்த மக்கள்படை கிராமப்புற முதலாளிகள் உருவாக்கி வந்த பழைய பாணி படைகளைப் போன்றவை அல்ல என்பது இங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிரான்சில் நடைபெறுவது போன்றே வேலையில்லாதவர்கள் ஒரு தொண்டர் படைப்பிரிவாக அணி திரட்டப்படுகின்றனர். இதனை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்; ஏனென்றால் மக்கள் படையில் பணியாற்றுவது இராணுவத்தில் பணியாற்றுவதற்கு ஒப்பானதாகக் கருதப்படும் சாத்தியக் கூறுகளை இது தோற்றுவிக்கிறது.

இனி அடுத்து, இராணுவ ரீதியாக மட்டுமன்றி பிரசார ரீதியாகவும் அமைந்துள்ள பாலில்லா, இளைஞர் முன்னணிப் படை, இளம் பாசிஸ்டுகள் போன்ற அமைப்புகளைப் பற்றிப் பார்ப்போம். பாலில்லா அமைப்புகளில் பதினான்கு வயது வரையுள்ள குழந்தைகள் இடம் பெறுகிறார்கள். பாசிஸ்டுக் கட்சியில் சேரும் கட்டம் வரையிலான இளைஞர்களைக் கொண்டு இளைஞர் முன்னணிப் படை ஆரம்பத்தில் அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் பிறகு இளைஞர் முன்னணிப் படைக்கும் இளம் பாசிஸ்டுகளுக்கும் இடையே ஒரு பாகுபாடு புகுத்தப்பட்டது. முன்னணிப்படையில் சேருவதற்கான வயது 17 வரை என்று நிர்ணயிக்கப்பட்டது. 17 வயது முதல் பாசிஸ்டுக் கட்சியில் சேரும் கட்டம் வரையுள்ள இளைஞர்கள் இளம் பாசிஸ்டுகள் அமைப்பில் சேரலாம்.

இத்தகைய ஏற்பாடு கூட உடனடியாக செய்யப்படவில்லை; தொடர்ந்து பல முயற்சிகளும், பரிசோதனைகளும் செய்யப்பட்ட பிறகே இந்த ஒழுங்கமைப்பு சாதிக்கப்பட்டது.

1926-1927 வரை பாலில்லா அமைப்பு சுய விருப்ப அடிப்படையில் அமைந்ததாகவே இருந்தது. பிறகு அது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் நூறு சதவீதக் கட்டாயமல்ல, தொண்ணூறு சதவீதக் கட்டாயம்தான். பாலில்லாவில் தமது குழந்தைகளைப் பதிவு செய்து கொள்ளும்படி பெற்றோர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இதை மீறினால் அபராதம் முதலிய தண்டனைகள் உண்டு.

கட்டாயப் பதிவுதான் பொதுவாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த விதிமுறையாகும்.

இந்த அமைப்புக்கும் பாசிஸ்டுக் கட்சி நிறுவனத்துக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு இருந்தது; கட்டாயப்படுத்தும் அம்சம் பிந்தையதைவிட முந்தையதுக்குத்தான் மிகத் தீவிரமானது. பட்டவர்த்தனமாகக் கூறுவதானால் ஓர் ஆலைத் தொழிலாளி பாசிஸ்டுக் கட்சியில் சேர வேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை. ஆனால் பள்ளிக்குச் செல்லும் அவனுடைய மகன் பாலில்லாவில் அவசியம் சேர்ந்துதான் ஆக வேண்டும். இந்த நிறுவனத்தின் நிர்ப்பந்த அம்சம் இதில்தான் பொதிந்திருக்கிறது. இளைஞர் முன்னணிக்கும் இது பொருந்தும். எனினும் சற்றுக் குறைவான அளவில் இது பொருந்தும். இங்கும் கட்டாய அம்சம் உண்டு. இளம் பாசிஸ்டுகள் அமைப்பை எடுத்துக் கொண்டால் கட்டாய அம்சம் இதில் எவ்விதம் புகுத்தப்படுகிறது என்பதையும், எத்தகைய வடிவங்களை அது மேற்கொள்கிறது என்பதையும் காணலாம். இவை போன்ற வெகுஜன நிறுவனங்களுக்கும் பாசிஸ்டுக் கட்சிக்குமுள்ள வேறுபாட்டை துலாம்பரமாக சுட்டிக்காட்டும் பொருட்டு இளம் பாசிஸ்டுகள் அமைப்பைப் பற்றி இங்கு சற்று விரிவாகவே கூற விரும்புகிறேன்.

ஒரு பாசிஸ்டுக் கட்சி உறுப்பினரின் கடமைகள் என்ன? அவன் எதைச் செய்யக் கட்டுப்பட்டிருக்கிறான்? தேசத்தை நேசிப்பது, தந்தையர் நாட்டுக்குச் சேவை செய்வது போன்ற பொதுக் கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதைத் தவிர அவன் செய்ய வேண்டியவை மிகவும் குறைவு. வருடாந்தர உறுப்பினர் மகாசபைக் கூட்டத்தில் கலந்து கொள்வது, சில அணிவகுப்புகளில் பங்கு கொள்வது, அருகிலுள்ள மன்றத்துக்கு அடிக்கடி செல்வது போன்ற பணிகளை இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிடலாம். உண்மையில், மன்றத்துக்கு இவ்விதம் அடிக்கடிச் செல்ல வேண்டும் என்பது கூடக் கட்டாயமில்லை.

மாறாக, இளம் பாசிஸ்டுகள் முக்கியமாக சீருடையை விலை கொடுத்து வாங்கி தவறாது அணிய வேண்டும். அடிக்கடி அணி வகுப்புகள் நடைபெற்று கிட்டத்தட்ட ஒவ்வொரு ஞாயிறன்றும் – இராணுவ போதனைகள் அளிக்கப்படுகின்றன. தவிரவும் இளம் பாசிஸ்டுகள் தாங்கள் உறுப்பினர்களாக இருக்கும் காலம் வரையிலும் இராணுவ ரீதியான கட்டுப்பாட்டை கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும். பயிற்சிப் பிரிவின் தலைவர் எல்லா இளைஞர்களுடனும் நிரந்தரமாக இடையறாது தொடர்பு கொண்டிருக்கிறார். உச்சி மட்டத்திலிருந்து கடைசி உறுப்பினர் வரை ஒரு வரையறுக்கப்பட்ட படிநிலை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை பாசிஸ்டுக் கட்சியில் காண முடியாது. ஓர் இளம் பாசிஸ்டு தனது பயிற்சிப் பிரிவின் தலைவன் யார் என்பதை அனுதினமும் அறிவான். எந்தக் காலத்திலும் பயிற்சிப் பிரிவின் தலைவன் தன் இல்லத்துக்கு வந்து தன்னைச் சந்திப்பான் என்பதையும் அவன் அறிவான். அவன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும் (சென்ற வருடம் ஐம்பது பாசிஸ்டு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன). இது பாசிஸ்டுகளுக்கு இல்லாத மற்றொரு கடமைப் பொறுப்பாகும்.

இந்தக் கடமைப் பொறுப்புகளை நீங்கள் நோக்கினால், பாசிஸ்டுக் கட்சியைவிட அதன் இந்த இணை அமைப்பில் இந்தக் கடமைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதைக் காணலாம். இந்த அமைப்பின் முதல் அம்சம் இது.

அடுத்து, இரண்டாவது அம்சத்தைப் பார்ப்போம். இத்தனை கடமைப் பொறுப்புகள் இருந்த போதிலும் இந்த அமைப்பு பாசிஸ்டுக் கட்சியைவிட அதிக வெகுஜனத்தன்மை கொண்டதாகும். பாலில்லாவின் தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். கட்சியிலுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு இது கிட்டத்தட்ட சமம். 1930-ல் பாலில்லாவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 13 இலட்சம். அதே சமயம் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையோ பத்து லட்சத்தைக் கூட எட்டவில்லை. பாலில்லாவில் ஆறு முதல் பதினான்கு வயதுள்ளவர்கள்தான் இடம் பெற முடியும். கட்சியில் சேருவதற்கோ எத்தகைய வயது வரம்பும் இல்லை. இதனைக் கருத்திற் கொண்டு பார்த்தால் பாலில்லாவின் மிகப் பரந்த இயல்பை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

படிக்க:
ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட பிராமணமதம் !
இந்தியாவில் #MeToo இயக்கம் ! அச்சுநூல்

இளம் பாசிஸ்டு அமைப்புக்கும் இது பொருந்தும். பதினெட்டு முதல் இருபத்தியொரு வயதுள்ளவர்கள்தான் இதில் சேர முடியும் என்றிருந்தாலும் இந்த நிறுவனத்தின் உறுப்பினர் எண்ணிக்கை ஏறத்தாழ ஐந்து லட்சத்தை எட்டியிருக்கிறது. இதனை பாசிஸ்டுக் கட்சியின் வயது வந்தோர் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த அமைப்பின் வெகுஜனத் தன்மை மிகத் தெளிவாகப் புலப்படுவதைப் பார்க்கலாம். இவ்வாறிருந்தும் இளம் பாசிஸ்டு அமைப்பின் கடமைகள் ஏராளம். இதில் வெளிப்படையான ஒரு முரண்பாடு இருப்பதைக் காணலாம். இது எவ்வாறு தீர்க்கப்பட்டது? மிகுந்த கட்டுப்பாட்டைப் புகுத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க