ஜினி பட ரிலீஸ், மோடியின் செல்ஃபி விளம்பரங்களெல்லாம் ஒன்றுமில்லை என்பதாக காஞ்சிபுரம் அத்திவரதர் மாறி விட்டார். புதுப்படத்தில் ரஜினியின் கேரக்டர் என்ன, மோடி இன்று போட்டிருக்கும் கோட்டு சூட்டின் விலை என்ன என்ற சேதிகளுக்கு போட்டியாக அத்தி வரதர் இன்று என்ன கலரில் பட்டு உடுத்தினார் என்பது காஞ்சிபுரத்தை தாண்டி பேசப்படும் விசயமாகி விட்டது.

இன்று கத்திரிப்பூ பட்டாடையில், செண்பக பூ அலங்காரத்தில் அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாக தினமலர் எழுதுகிறது. அந்தப் பட்டுப்புடவையின் விலை குறைந்தது ரூ. 50,000-த்திற்கு மேல் என்று எழுதுகின்றன ஊடகங்கள். அந்தக் காலத்து மாதுரி தீஷ்ஷித் போன்ற ஹீரோயின்கள் ஒரு பாடலுக்கு ஒரு டசன் ஆடைகளை மாற்றுவது போல அத்தி வரதர் தினமும் தனது கெட்டப்பை மாற்றி வருகிறார்.

தெப்பக் குளத்தில் மூழ்கியிருந்து விட்டு நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை அவர் வெளியே வந்து தரிசனம் கொடுப்பதாக ஒரு புரட்டை பார்ப்பன பீடங்கள் அவிழ்த்து விட்டன. வரலாற்றின்படி இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன்பு நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. தமிழகத்தில் அரசியல் ரீதியாக வெற்றி பெற முடியாத இந்துத்துவக் கூடாரமும், பார்ப்பன கிச்சன் கேபினட்டும் இணைந்து இந்த அத்தி வரதர் கூத்தை உருவாக்கியிருக்கின்றனர்.

விவிஐபி டோக்கனில் அத்தி வரதரை தரிசித்த வரிச்சூர் செல்வம்.

இந்தப் புரட்டுக்கு அடிமை எடப்பாடி அரசு ஓகே சொல்லி, பிறகு ஊடகங்கள் அதுவும் பார்ப்பன ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அத்தி வரதரைப் பற்றி இத்துப் போன கதைகளை பலவற்றை வெளியிட்டு வருகின்றன. பிறகு தினமும் இலட்சக்கணக்கானோர் காஞ்சிபுரம் வருகின்றனர் என்று ஊடகங்கள் கொளுத்திப் போட்டன. மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம் விடுமுறை போடும் ‘தியாகத்தை’  கூட செய்யாமல் சனி, ஞாயிறு விடுமுறை அன்று காஞ்சிபுரத்தை மொய்க்கின்றன. வார நாட்களில் கூட்டமில்லை. இது போக வரிச்சூர் செல்வம் போன்ற ரவுடி பக்தர்கள் விவிஐபி டோக்கனில் அத்தி வரதரை தரிசித்து செல்கின்றனர்.

அத்தி வரதரை ஒரு முறை தரிசித்தால் சொர்க்கம், இரு முறை தரிசித்தால் மறு பிறப்பில்லை, மூன்றாம் முறை சந்தித்தால் விண்ணுலகில் தேவராகலாம் என்று மக்களிடையே கதைகளை எழுப்பி கூட்டம் சேர்க்க முயல்கின்றனர்.

பொதுவில் வியாபாரத்தில் காய்ந்து போயிருந்த காஞ்சிபுரம் இந்த அத்தி வரதர் வைபவத்தில் திடீரென விசுவரூபமெடுத்திருக்கிறது. சாதா, ஸ்பெஷல் வியாபாரிகள் அனைவரும் பத்து மடங்கு வணிகத்தை நடத்தி வருகின்றனர். அவர்களும் தங்களது பங்கிற்கு அத்தி வரதர் நினைத்தால் அள்ளிக் கொடுப்பார் என மக்களிடையே மூடநம்பிக்கைகளை விதைத்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர், ஆளுநர் போன்றோர் வந்து சென்ற நிலையில் மோடி வரப்போகிறாராம். அத்தி வரதரின் தர்பார் மொத்தம் 48 நாட்கள் என்றால் அதில் 24 நாட்கள் சயன கோலம், 24 நாட்கள் நிற்கும் கோலமாம். மோடி இந்த இரண்டு கோலத்தையும் பார்க்க போகிறாராம். நள்ளிரவில் அத்தி வரதரை தூக்கி நிறுத்தும் போது பார்க்கப் போகிறாரா தெரியவில்லை.

இன்றைய கேள்வி:

அத்தி வரதரைப் பற்ற வைத்தது யார்?

♣ பார்ப்பன பீடங்கள்
♣ ஊடகங்கள்
♣ அரசு
♣ பக்தர்கள்

(பதில்களில் இரண்டு தெரிவுகளை தெரிவு செய்யலாம்)

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூப்-ல் வாக்களிக்க :

அத்தி வரதரைப் பற்ற வைத்தது யார் ?