அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 10

ஆசிரியரின் நொடிகளைப் பிரித்தல்

னது சக ஆசிரியர்கள் முதலில் 15 நிமிடப் பாட வேளைகளை சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர்.

“உங்கள் பாடங்கள் எப்படி நடக்கின்றன?” என்று அவர்கள் அடிக்கடி ஆர்வத்தோடு கேட்டனர்.

“ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை… என்னால் முடியவில்லை” என நான் சொல்வேன் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

என்றாலும் இப்படிப்பட்ட பதிலுக்காகக் காத்திராமல் மினி – பாடவேளைகளுக்கு வர விருப்பம் தெரிவித்தனர்.

ஆம், அவர்களுக்கு உயிரோட்டமுள்ள, கச்சிதமான, உணர்ச்சிகளும் சிந்தனைகளும் நிரம்பிய இந்தப் பாடவேளைகள் பிடித்துப் போயின. குழந்தைகள் களைப்படைவதில்லை, ஒரே விதமான சலிப்பு இல்லை. அன்றாடம் பாடவேளைகளும் இடைவேளைகளும் கிட்டத்தட்ட இன்றிருந்த மாதிரி இருக்கும்.

செவ்வாய்க்கிழமை

  1. தாய் மொழிப் பாடம் (ஜார்ஜிய மொழி).

ஐந்து நிமிட வகுப்பு இடைவேளை: இசைக்கேற்ப நடனமாடுமாறு குழந்தைகளிடம் கூறுகிறேன்.

கணிதப் பாடம்.

பள்ளி இடைவேளை (10 நிமிடங்கள்).

  1. ருஷ்ய மொழிப் பாடம்.

ஐந்து நிமிட வகுப்பு இடைவேளை: இசைப் பின்னணியில் ருஷ்ய கிராமியக் கதையைக் குழந்தைகள் கேட்கும்படிச் செய்கிறேன்.

கணிதப் பாடம்.

பெரும் பள்ளி இடைவேளை (30 நிமிடங்கள்): தூய காற்றில் உலாவச் செல்கிறோம்.

  1. ருஷ்ய மொழிப் பாடம்.

ஐந்து நிமிட வகுப்பு இடைவேளை: தலையைக் குனிந்து , கண்களை மூடியபடி ஏதாவது நல்ல, அன்பான, மகிழ்ச்சியான விஷயங்களைப் பற்றி யோசிக்குமாறு கூறுகிறேன்.

தாய் மொழிப் பாடம் (ஜார்ஜிய மொழி).

பள்ளி இடைவேளை (10 நிமிடங்கள்).

  1. ஓவிய வகுப்பு (ஓவிய, பாட்டு, இசை, வேலை வகுப்புகளும் உடற்பயிற்சி வகுப்புகளும் முழுமையானவை, – தலா 35 நிமிடங்கள்).

இப்படிப்பட்ட பாட அட்டவணை எனக்குப் பல வேலைகளைக் கூட உண்டாக்குகிறது. பாடவேளைகளின் உள்கட்டமைப்பை நான் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். இந்த 600 நொடிகளை நன்கு பிரித்து, நல்ல பயனுள்ள கிரியை ஏற்படும்படியும் தேவையான சக்தி வெளிப்படும்படியும் செய்து,

வாழ்க்கையின் மகிழ்ச்சியும்
புதியவற்றை அறியும் மகிழ்ச்சியும்
கலந்து பழகும் மகிழ்ச்சியும்
வளர்ந்து பெரியவர்களாகும் மகிழ்ச்சியும் –
அவர்களுக்கு கிட்டுவதற்கு இதைப் பயன்படுத்த வேண்டும்.

குழந்தையால் மகிழ்ச்சிக்காக காத்திருக்க இயலாது அவனுக்குப் பொறுமையில்லை. அவன் இன்றே, இப்போதே மகிழ்ச்சிகரமானவனாய் இருக்க விரும்புகிறான், இருக்க வேண்டும். நான் அக்குழந்தையுடன் கலந்து பழகும் ஒவ்வொரு நொடியும் அவனை மகிழ்ச்சியானவனாக, சந்தோஷமானவனாக, புத்திசாலியாக, அனுபவம் உள்ளவனாக மாற்றாவிடில் நான் என்ன ஆசிரியர்!

இப்படிப்பட்ட மகிழ்ச்சியை எல்லா குழந்தைகளுக்கும் சேர்த்தும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் அளிக்க, நான் ஒவ்வொரு பாடவேளை, இடைவேளை குறித்தும் பல மணி நேரங்கள் சிந்தித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது.

ஆசிரியரின் நொடிப்பொழுதுகள் எனக்கு மிகவும் மதிப்புள்ளவை.

நான் குழந்தைகளை நோக்கி அவசரமாகச் செல்லும் போது பாடவேளைகளுக்கு முன் என்னை யாரும் தடுத்து நிறுத்தி தாமதப்படுத்த வேண்டாம்!

மிக அவசியம் இருந்தால் தவிர யாரும் பாடநேரத்தின் போது கதவைத் தட்ட வேண்டாம்!

நான் குழந்தைகளுடன் இருக்க வேண்டிய நேரத்தில், நான் அவர்களுக்கு அவசியமான போது, யாரும் என்னை அவர்களிடமிருந்து பிரிக்க வேண்டாம்!

எது எப்படியிருந்தாலும் நான் யாருக்கும் அடங்கி நடக்க மாட்டேன்! ஏனெனில், நான் தாயகத்தின் முன், மனிதகுலத்தின் முன், எதிர்காலத்தின் முன் மாபெரும் சேவை செய்து கொண்டிருக்கிறேன், இதில் பெரிதும் ஈடுபட்டுள்ளேன்.

மினி-பாடவேளைகளில் விஷயம் அடங்கியிருக்கவில்லை. ஆசிரியரின் நொடிப்பொழுதுகளுக்கு உள்ள மதிப்பை அறிந்திருக்க வேண்டும், இப்பாடவேளைகள் இதற்கு எனக்கு உதவின. இந்த நொடிப்பொழுதுகளை விழுங்கி ஏப்பம் விடும் வெற்று வார்த்தைகளுடன் நான் எப்படி குழந்தைகளை அணுக முடியும்? வெற்று வார்த்தைகள் என்றால் என்ன தெரியுமா?

“இப்போது நான் சொல்லப் போவதைக் கவனியுங்கள்…. கவனமாகக் கேளுங்கள்…. ஒரு சிறுமி கடையில் மூன்று நோட்டுப் புத்தகங்களை வாங்கினாள். புரிந்ததா? மூன்று நோட்டுப் புத்தகங்கள்… ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்தின் விலையும் இரண்டு கோப்பெக்குகள். அச்சிறுமி மூன்று நோட்டுப் புத்தகங்களுக்கு எவ்வளவு காசு தந்தாள்?… அவசரப்படாதீர்கள். முதலில் யோசியுங்கள், நன்கு யோசியுங்கள். கணக்கைத் திருப்பிச் சொல்லட்டுமா? ஒரு நோட்டுப் புத்தகத்தின் விலை இரண்டு கோப்பெக்குகள் என்றால் மூன்று நோட்டுப் புத்தகங்களின் விலை என்ன? .. புரிந்ததா? சத்தம் போடாதீர்கள். எல்லோரும் யோசியுங்கள். அவசரப்படாதீர்கள்!..”

படிக்க:
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு !
நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி

குழந்தைகள் அவசரப்படவில்லை. ஒரு வேளை முன்னர் அவர்கள் அவசரப்பட்டிருக்கலாம், இன்று பருவ நிலை எப்படிப்பட்டது, மூன்று நோட்டுப் புத்தகங்களின் விலை என்ன என்று சொல்ல முன்னர் முந்திக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இன்று மான் வேகம் ஆமை வேகமாகிவிட்டது. முதலில் இவர்கள் தெளிவற்ற வார்த்தைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். நொடிகள் ஓடிக் கொண்டிருந்தன. இவற்றை இனி பிடிக்கவே முடியாது, இவற்றிலிருந்து ஆசிரியருக்குத் தேவையான சக்தியை இனிப் பெறவே இயலாது. விலங்கியல் பூங்காவில் அடைபட்ட ஒரு மானுக்கு துள்ளி குதித்தோடப் போதிய இடம் இல்லாவிடில் தன் மீது பாய்ந்து தாக்கவல்ல புலியும் அருகில் ஒரு கூண்டில் அடைபட்டுக் கிடக்கிறது என்பதற்காக மகிழ்ச்சியடையுமா என்ன?

பழகும் ஒவ்வொரு நொடியும் அவனை மகிழ்ச்சியானவனாக, சந்தோஷமானவனாக, புத்திசாலியாக, அனுபவம் உள்ளவனாக மாற்றாவிடில் நான் என்ன ஆசிரியர்!

பாடவேளைகளின் போது வெற்று வார்த்தைகள் என்றால் என்ன?

இது கல்வி போதிக்கும், வளர்க்கும் அரட்டை, ஆசிரியரின் முட்டாள் தனமாகும். இது பறந்து திரிவதற்கென்றே பிறந்துள்ள குழந்தையின் மூளையையும் உரிமைகளையும் “கட்டிப் போடும்”. இது பறவைகளின் இறக்கைகளைக் கட்டிப் போடும் சிலந்திவலை, மான்களின் கால்களில் இடப்பட்ட விலங்கு. இது புதியவற்றை அறியும் ஆர்வத்தை அணைக்கும், கல்வி மகிழ்ச்சி எனும் தொடர் போக்கைத் தடுத்து நிறுத்தும். “நேரம் போதவில்லை” என்று சொல்லும் ஒரு ஆசிரியர் அதே பாடவேளையில் வெற்றுச் சொற்களால் எவ்வளவு நேரம் வீணாயிற்று என்றே யோசிப்பதில்லை .

எனது மினி- பாடவேளைகள் இதைத்தான் (இவற்றிற்கு வேறு நோக்கங்களும் இருந்த போதிலும்) எனக்குச் சொல்லித் தந்தன.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க