பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 25

டோக்ளியாட்டி

னி பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்பைப் பற்றிப் பார்ப்போம். இந்த அமைப்பு ஆரம்பத்தில் ஒரு கட்சி அமைப்பாக அல்லாமல், நேரடியாக இராணுவத்துடன் இணைந்த ஓர் அரசு அமைப்பாகவே இருந்து வந்தது. இது கிட்டத்தட்ட முற்றிலும் சுய விருப்ப அடிப்படையில் அமைந்ததாகவே இருந்தது. சேவை காலக் குறைப்பு, சில விசேடப் படைப் பிரிவுகளுடன் பணியாற்றுதல், அல்லது குறிப்பிட்ட சில பகுதிகளில் சேவை செய்தல் போன்ற சில கட்டுப்பாடுகள் இருந்தன. இவை அதன் சுயவிருப்பத் தன்மையை ஓரளவுக்கு மட்டுப்படுத்திற்று எனலாம்.

இதன் பின்னர் இந்தப் பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்பு ஒரு அரசாங்க சட்டத்தின் மூலம் ஒரு கட்டாய அமைப்பாக மாற்றப்பட்டு, பாசிஸ்டுக் கட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது; கட்சி இந்த அமைப்பின் மூலம் இளைஞர்கள் மீது நேரடிச் செல்வாக்கு செலுத்தி வருகிறது. இளம் பாசிஸ்டுகள் நிறுவனத்தை அமைப்பதன் மூலம் பாசிசம் பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்புகளைக் குலைக்கவில்லை; அவற்றை ஓரளவு கட்டுப்படுத்த மட்டுமே செய்தது. ஏனென்றால் இளைஞர் பிரச்சினை கடினமான பிரச்சினை என்பதும், ஒரே ஒரு நிறுவனத்தைவிட இரண்டு நிறுவனங்களைக் கொண்டு அப்பிரச்சினைக்கு எளிதாகத் தீர்வுகாண முடியும் என்பதும் பாசிசத்துக்குத் தெரியும். பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்புகளைக் கொண்டு பெரும் பணிகளைச் சாதிக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் சாதித்து விட முடியாது. உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அடிக்கடி ஊசலாட்டங்களைக் கண்டுவரும் இளம் பாசிஸ்டுகள் அமைப்புக்கும் இது பொருந்தும். பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்புகள் இளம் பாசிஸ்டுகள் அமைப்புக்கு உதவ வேண்டும்; அதேபோன்று இளம் பாசிஸ்டுகள் அமைப்பு பூர்வாங்க இராணுவப் பயிற்சி அமைப்புகளுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும்.

இந்த அமைப்புகள் குறித்த ஒரு முக்கியமான அம்சத்தை இங்கு குறிப்பிடுவது அவசியம். பாசிஸ்டுக் கட்சியில் மிகவும் பொறுப்பு வாய்ந்தவர்கள் இந்த அமைப்புகளுக்குத் தலைமை ஏற்கிறார்கள். இது சம்பந்தமாக சில சுவையான விவரங்களைக் கூறுவது இங்கு பொருத்தமாக இருக்கும். இந்த இளைஞர் நிறுவனங்களுக்கு இராணுவரீதியிலும் அரசியல்ரீதியிலும் வழிகாட்ட பாசிசம் சுமார் 50 ஆயிரம் பாசிஸ்டுகளைப் பயன்படுத்துகிறது. ஏறத்தாழ 5 இலட்சம் இளம் பாசிஸ்டுகள் இருக்கிறார்கள் என்ற கணக்குப்படிப் பார்த்தால் பத்து இளைஞர்களுக்கு ஒரு வயது வந்த தலைவர் வீதம் இருக்கிறார்கள் என்பது புலனாகிறது. பல சந்தர்ப்பங்களில் இந்தத் தலைவர்கள் இராணுவத்தினராக இருப்பதைக் காணலாம். இந்தப் பணிக்காக பாசிஸ்டுகளுக்கு அடிக்கடி பணம் தரப்படுகிறது. பாசிஸ்டுக் கட்சியின் செயலூக்கமிக்க இந்தக் கேந்திரப் பகுதியினர் ஆட்சி முறை முழுவதையும் இணைக்கும் இழைமமாக அமைந்துள்ளார்கள்.

பாசிஸ்டுக் கட்சிக்கும் இந்த நிறுவனங்களுக்கும் இடையேயான மற்றொரு வகையான பிணைப்பு ஸ்தாபன ரீதியான பிணைப்பாகும்; இளைஞர் அமைப்புகளுக்கு அதிகாரவர்க்கத்தின் வழிகாட்டுதலிலிருந்து இது தோன்றுகிறது. அண்மைக் காலம் வரை இளம் பாசிஸ்டுகள் மாகாண செயலாளர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வந்தனர். இளம் பாசிஸ்டுகளுக்கு மாகாண செயலாளர்கள் வழிகாட்ட வேண்டும் என்று இப்போது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மேலிருந்து கீழே வரை இந்த வழிமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் கட்சி செயலாளர்தான் இளம் பாசிஸ்டுகளின் படைத்தலைவர். கட்சியின் உடனடி வழிகாட்டுதல் இந்த விதமாக செயல்படுத்தப்படுகிறது.

இளம் பாசிஸ்டுகள் பாசிசத்தின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றை, மிகவும் தீர்மானமான அம்சம் ஒன்றைப் பிரதிபலிக்கின்றனர் என்பதை பாசிஸ்டுகள் இதன் மூலம் ஒப்புக் கொள்கின்றனர்.

தொழிற்சங்கங்கள் விஷயத்துக்கு வருவதற்கு முன்னர் பாசிஸ்டுப் பல்கலைக் கழகக் குழுக்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுவது அவசியம். இந்தக் குழுக்களில் 60 ஆயிரம் இளம் மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் குட்டி பூர்ஷுவா வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள். தொழிற்சங்கங்கள் வைத்துக் கொள்ள உரிமை இல்லா 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் கொண்ட அரசு ஊழியர்களின் பாசிஸ்டு அமைப்பு, 1 இலட்சத்து 30 ஆயிரம் பேர் கொண்ட ரயில்வே ஊழியர்களின் பாசிஸ்டு அமைப்பு போன்ற பல்வேறு பாசிஸ்டு நிறுவனங்களைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். ஆனால் பாசிச சர்வாதிகாரப் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் இந்த நிறுவனங்கள் அனைத்திலும் மிக முக்கியமானவை பாசிஸ்டுப் பல்கலைக் கழகக் குழுக்களே ஆகும்.

இதர நிறுவனங்களைப் போலன்றி, பாசிஸ்டுப் பல்கலைக் கழகக் குழுக்களில் ஆராய்ச்சித்திறன் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பாசிஸ்டு சர்வாதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்; அவற்றைப் பற்றி விவாதிக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகள் இதர இடங்களில் விவாதிக்கப்படுவதில்லை. பாசிஸ்டு அமைப்புகளிலும் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடைபெறுவதில்லை. ஆனால் பல்கலைக் கழக மாணவர்கள் மட்டும் இவ்விவாதத்தை நடத்துகிறார்கள். பாசிசம் இவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதேற்பட்டது; லிட்டோரியலி தெல்லா கல்சுரா 3 என்ற பெயரில் ஆண்டுதோறும் பல்கலைக் கழக கலை, கலாச்சாரப் போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்பட்டது. இது இந்த ஆட்சியின் மிகவும் சுவையான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இது குறித்த விவரங்களைப் பத்திரிகைகளில் படித்துப் பாருங்கள். அவை அறிவொளி வீசுபவையாக இருக்கக் காணலாம். இந்த விவரங்கள் எல்லாம் தேர்ந்த, சிறந்த, அனுபவ மிக்க ஆசிரியர்களால் எழுதப்படுபவையாகும்.

படிக்க:
மோடி இந்தியப் பிரதமரானார் ! அதானி உலகக் கோடீசுவரரானார் !
நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் !

எனினும் அப்படியும் எவ்வாறு ஏராளமான பிரச்சினைகள் எழுகின்றன என்பதைப் பார்க்கலாம். வர்க்க ஒத்துழைப்பின் இயல்பையும், முதலாளிகளுக்கு இருக்கும் அதே உரிமைகள் தொழிலாளிகளுக்கும் இருக்குமாயின் அப்போது ஏற்படக்கூடிய வர்க்க ஒத்துழைப்பின் இயல்பையும் பற்றி மாணவர்கள் விவாதிக்கிறார்கள். சர்வாதிகாரத்தின் அடித்தளங்களுக்கு வேட்டு வைக்கக்கூடிய, அபாயத்தை உண்டு பண்ணக் கூடிய பிரச்சினைகள் மேலெழும்புகின்றன. முதலாளித்துவத்தைக் கடந்து செல்ல முடியுமா, முடியாதா என்ற பிரச்சினை அடிக்கடி எழுகிறது. இத்தாலியப் பொருளாதாரத்தின் இயல்பும் விவாதிக்கப்படுகிறது. இந்த விவாதங்கள் பாசிசத்தின் வரையறைக்குட்பட்டு நடைபெறுகின்றன என்பது உண்மையே. இருப்பினும் இந்தக் குழுக்கள் பாசிசம் நிர்ணயித்துள்ள வரம்பையும் கடந்து செல்ல ஆரம்பித்திருக்கின்றன என்பதையும், பாசிசத்தின் சித்தாந்த கட்டுமானத்தைத் தகர்க்கக் கூடிய திசைவழியில் அவர்களது விமரிசனம் செல்கிறது என்பதையும் நீங்கள் காணலாம்,

நமது பணியின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது இது நமது கவனத்தைப் பெரிதும் கவரக் கூடிய பிரச்சினையாகும். இளம் பாசிஸ்டுகள் மத்தியில் போன்றே, இவர்கள் மத்தியிலும் நாம் சித்தாந்த விவாதத்தைத் தொடங்குவதற்கும் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் சித்தாந்தத்தைச் சிதைப்பதற்கும் பணியாற்றுவதற்கு நமக்கு நல்ல வாய்ப்பிருக்கிறது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

3. லிட்டோரியலி தெல்லா கல்சுரா : பல்கலைக் கழகத்தின் கலாச்சார, கலைப் போட்டிகள் ஆண்டுதோறும் 1934 -லிருந்து 1940 வரை தேசிய அளவில் நடைபெற்றன. கவிதைகளிலிருந்து வெளி நாட்டு கொள்கைகள் வரை பல்வேறு பொருள்களில் நடைபெற்ற பேச்சுப் போட்டி-விவாதங்கள் பல வாலிப பாசிச – எதிர்ப்பு இளைஞர்களை தோற்றுவிக்கும் களமாக ஆயிற்று.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க