பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 27
ஜூன் 30-யும் 6 மாட்டியோட்டி, நெருக்கடியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இவை இரண்டிலும் ஒத்த அம்சங்கள் இருப்பதைக் காணலாம். இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலும் குறிப்பிட்ட எதிர்ப்பாளர்கள் மாட்டியோட்டியும் சில பாசிஸ்டுத் தலைவர்களும் கொல்லப்பட்டனர். பாசிசத்தின் கீழ் அணி திரட்டப்பட்ட குட்டி பூர்ஷுவா அணிகளிடையே ஊசலாட்டங்கள் நிலவின; மாட்டியோட்டி காலத்தில் படை அணி திரட்டல் உத்தரவுகளுக்கு மக்கள் கீழ்ப்படியவில்லை: ஜூன் 30-ல் பழுப்புச் சட்டையினர் பெரும் அதிருப்தியை வெளியிட்டனர். ஆனால் இப்படை கலைக்கப்பட்டு, மறுசீரமைவு செய்யப்பட்டது.
இத்தாலியில் இதர பல கட்சிகள் இருந்தன, இவை அவென்டைன் கட்சிகள் 7 என அழைக்கப்பட்டன. ஊசலாட்டமான இந்தக் கட்சிகள் வாயிலாக வெகுஜனங்களின் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டது. இத்தகைய சில அம்சங்கள் ஜெர்மனியிலும் காணப்பட்டன. ஆனால் அவை பிரதான அம்சங்களாக இருக்கவில்லை. பாசிஸ்டுக் கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடியே ஜெர்மனியைப் பொறுத்தவரையில் பிரதான அம்சமாகும். பழுப்புச் சட்டை இயக்கம், ஆலைத் தொழிலாளர் அமைப்புகள், பாதுகாப்புப் படைகள் போன்றவை சிதைந்து போயிருந்தன.
இங்கும் நெருக்கடி இத்தாலியில் நடைபெற்றது போன்ற அதே பாதையில் சென்றது. சமூக ஜனநாயகத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கும், கத்தோலிக்க உணர்ச்சியைத் தட்டியெழுப்புவதற்கும் முயற்சி நடைபெற்றது. இத்தாலியில் மாட்டியோட்டி காலத்தில் இருந்தது போன்ற ஒரு சூழ்நிலை ஜெர்மனியில் நிலவிற்று. ஆனால் ஜெர்மனியில் இது இன்னமும் தொடக்க கட்டத்திலேயே இருந்தது; இத்தாலியிலோ இது பிரதானமான கட்டத்தை அடைந்திருந்தது. ஜெர்மனியில் வெகுஜனங்கள் ஏற்கெனவே பாசிஸ்டு அமைப்புகளுக்குள் வந்துவிட்டனர்; இத்தாலியிலோ பெரும் பகுதியினர் பழைய அமைப்புகளுக்கு வெளியே இருந்தனர். ஆனால் அவர்கள் இன்னமும் புதிய அமைப்புகளுக்குள் கொண்டுவரப்படவில்லை.
இத்தாலியில் பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றிய கட்டத்திலிருந்து நகர்ந்து இன்றைய கட்டத்துக்கு வருவோமானால் வெகுஜனங்களின் அதிருப்தி தீவிரமடைந்து, பாசிஸ்டு அமைப்புகளில் உட்பகைப் போராட்டங்களாக அது பிரதிபலிப்பதைக் காணலாம். அங்கு எதிர்ப்பு மேன்மேலும் வலுத்து வருகிறது; அது முன்போன்ற வடிவத்தில் இல்லை. மாறாக, பாசிஸ்டு அமைப்புகளுக்கு எதிரான சில கோஷங்களுடனும், உடனடிக் கோரிக்கைகளுடனும் வெகுஜனங்களின் போராட்ட வடிவத்தை அது எய்தியுள்ளது.
இது சம்பந்தமாக, அண்மைய அர்ப்பினதி விவகாரத்தை 8 எடுத்துக் கொள்வோம். இந்த எதிர்ப்பு இயக்கம் முந்தைய எதிர்ப்பு இயக்கங்களை விடவும் தீவிரமானது. பாசிஸ்டுக் கட்சியின் வேலைத் திட்டங்களிலிருந்து மாறுபட்ட அரசாங்க வேலைத் திட்டங்களை எவரும் – சாலாவோ அல்லது கியாம்பாலியோ – இதுவரை முன்வைக்கவில்லை. எதிர்ப்பு இயக்கம் மாகாணக் கட்சி அமைப்புகளுக்குள்ளேயேதான் நடைபெற்று வருகிறது. ஆனால் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு அர்ப்பினதி ஒரு வேறுபட்ட திட்டத்தை முன்வைக்கிறார். பாசிஸ்டு அமைப்புகளுக்குள் நடைபெற்றுவரும் மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு முன்வைக்கப்பட்டிருக்கும் திட்டம் இது. இன்று இந்தத் தலைவர்கள் வெகுஜனங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஆனால் 1924-ம் ஆண்டிலோ அல்லது 1925-ம் ஆண்டிலோ பழைய தலைவர்கள் இவ்வாறு தொடர்பு வைத்துக் கொண்டிருக்கவில்லை. இந்த நெருக்கடிகள் இன்று ஆழமான அர்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன.
இத்தாலியில் பாசிசத்துக்கு அடித்தளமாக, கொத்தளமாக விளங்கிய எமிலியாவைச் சேர்ந்த குட்டி பூர்ஷுவா, மத்தியதர பூர்ஷுவாக்களின் அதிருப்தியை அர்ப்பினதி பிரதிபலிக்கிறார். குத்தகை தொகை அதிகரிப்பு, சிறு நிலவுடைமை சிதைவு, பண்ணைப் பொருள்களின் விலைகள் வீழ்ச்சி, பெரிய நிலச்சுவான்தார்களின் போட்டி முதலியவை குட்டி பூர்ஷுவா மற்றும் நடுத்தர பூர்ஷுவாக்களின் அதிருப்திக்கு காரணம்.
(தொடரும்)
அடிக்குறிப்புகள் :
6. 1934 ஜூன் 30–ல் நாஜிக்கட்சியில் இருந்த தனது எதிரிகளை ஹிட்லர் அழித்தார். இந்த ரத்தக் களறியின் பிரதான பலிகடாக்கள் எஸ்.ஏ.யின் தலைவர்கள் எர்னஸ்ட் ரோஹிமும் மற்றவர்களும்.
7. அவென்டைன் கட்சிகள் : கியாசோமோ மாட்டியோட்டி (1885-1924) சீர்திருத்தவாத யூனிடரி சோஷலிஸ்டு கட்சியின் செயலாளர். அந்த ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பலாத்காரத்தையும் தில்லுமுல்லுகளையும் கண்டித்து 1924 மே 30-ல் பிரிதிநிதிகள் சபையில் பேசியதற்காக ஜூன் 10-ம் தேதி ஒரு பாசிசக் கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
மாட்டியோட்டியின் மறைவு – ஆகஸ்ட் மத்தியில் வரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை – நாடெங்கும் பலமான ஆத்திர அலையையும் கலகத்தையும் ஏற்படுத்திற்று. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தன; எதிர்க்கட்சிகளின் குழு அவென்டைனில் கூடியது. போர்க்குணம் படைத்த இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சி அப்போது ஆட்டம் கண்டு கொண்டிருந்த முசோலினியின் ஆட்சியைக் கவிழ்க்க பொதுஜனப் போராட்டத்திற்கும் பொது வேலை நிறுத்தத்திற்கும் அறைகூவல் விடுத்தது.
எனினும், சீர்திருத்தவாதிகளால் தலைமை தாங்கப்பட்ட பொது தொழிலாளர் சம்மேளனத்தாலும், குழுவில் இருந்த சோஷலிஸ்டுகள் முதல் லிபரல் ஜனநாயகவாதிகள் வரை எல்லோராலும் இந்த அறைகூவல் எதிர்க்கப்பட்டது. இதன் விளைவு, குழுவிலிருந்து கம்யூனிஸ்டுக் கட்சி விலகியது. முசோலினி தகுந்த சமயத்திற்காகக் காத்திருந்தார். மாட்டியோட்டியின் கொலையில் நேரடியாகச் சம்பந்தப்படுத்தப்பட்ட பாசிஸ்டுகளை சர்க்காரில் நேரடியாகப் பங்கெடுப்பதை குறைத்தார். அதே சமயம் அவென்டின் கட்சிகளின் அடிப்படை பலவீனங்கள் தெளிவாகத் தெரிந்தன; வெகுஜனங்களைத் திரட்டுவதிலுள்ள அவர்கள் பயம், வறட்டுத்தனமான தார்மீகம் பற்றிப் பேசுதல், சட்டப் பூர்வமாக குற்றம் பாசிசம் குறித்த விரிவுரைகள் நிரூபிக்கப்படும் என்ற நம்பிக்கை அல்லது முசோலினி பதவியிலிருந்து தள்ளப்படுவார் என்ற நம்பிக்கை, ஆக்கபூர்வமான நேரடி நடவடிக்கை எடுப்பதில் உள்ள தயக்கம்: இவையெல்லாமும் – ஸ்குவாட்ரிஸ்மோவின் ஒரு புதிய தாக்குதலால் உந்தப்பட்டும் – நெருக்கடி தீவிரமாதலையும் முசோலினி தன் நிலையை பலப்படுத்திக் கொள்ள பயன்படுத்தினார்.
படிக்க:
♦ #SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் !
♦ கழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் !
வாட்டிகனும், செல்வாக்குள்ள முதலாளித்துவ சக்திகளும் மன்னர் 3-வது விக்டர் எமானுவலும் அளித்த மறைமுகமான ஆதரவும் முசோலினிக்கு மிகவும் சாதகமானது. பிரதிநிதிகள் சபை 1925 ஜனவரி 3-ல் மீண்டும் கூடியபோது அவர் தாக்குதலைத் தொடுத்தார். பாசிசத்தின் எல்லா செயல்களுக்கும் முழுப் பொறுப்பேற்றார். லிபரல் அரசின் அமைப்புகளுக்கு பாசிஸ்டுகள் போலித்தனமான ஆதரவு தந்த இடைத்தட்டுக் காலத்தை அவரது உரை முடிவுக்குக் கொண்டுவந்தது; ஆட்சியை யதேச்சாதிகார அடிப்படையில் திருத்தி அமைப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் துவங்கின.
8. லியான்ரோ அர்ப்பினதி (1892-1945) 1929 செப்டம்பர் முதல் 1933 மே வரை உள்துறை உதவிச் செயலாளராக இருந்தார். பி.என்.பி.லிருந்து இவரும் இவரைப் பின்பற்றும் சிலரும் வெளியேற்றப்பட்டனர். முசோலினிக்கு எதிராகச் சதி செய்ததாக குற்றம் சாட்டி அவர் ஐந்து ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பொலோக்னா அருகில் 1945 ஏப்ரல் 22-ம் தேதி கொரில்லாக்களால் கொல்லப்பட்டார்.
பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !