சென்னையின் சாலை இரைச்சலை மட்டுப்படுத்தியது, மாவு மிசின் இரைச்சல்… உள்ளே நுழைந்தோம். இரைச்சலுக்கு மத்தியில் காது மூக்கு என மொத்தமாக மிளகாய் நெடி. பெண்களும் ஆண்களும் பிளாஸ்டிக் வாளி, அலுமினியம் குண்டான் என்று பல்வேறு வீட்டுப் பாத்திரங்களில அரைக்க வேண்டிய மளிகை சாமான்களோடு நின்றிருந்தனர்.

கடை உரிமையாளர் மோகன்.

அதன் மத்தியில் மாவு மிசின் ஓனர் மோகனிடம் (65) சத்தமாக, “நாங்கள் இந்த தொழில் பற்றியும் அதன் நிலைமை பற்றியும் பேச வந்திருக்கிறோம்” என்றோம். அவர் சத்தமாக “அப்படியா…?” என்று, மீண்டும் வேலையில் மூழ்கினார்.

நாம், அங்கிருந்த வாடிக்கையாளரிடம் “ஆச்சி, சக்தியின்னு பாக்கெட் மசாலா வந்துவிட்டது, வேலை மெனக்கெட்டு இங்கு வந்து ஏன் அரைக்க வர்றீங்க?”

“அதை நம்பி சாப்பிட முடியாது. வயிறு கெட்டுப் போகும். அதில் என்ன பொருட்களைப் போடுகிறார்கள் என்றே தெரியாது. கையில் பொருட்களாக வாங்கினாலே அதில் ஆயிரத்தெட்டு கலப்படம். அரைத்து பாக்கெட்டில் கொடுத்தால் ஒழுங்காகவா இருக்கும்? அரைத்துப் பயன்படுத்தினால்தான் நமக்கு ஏற்ற மாதிரி ருசி.. வயித்துக்கும் பிரச்சினை இல்லை” என்றார், பனிமலர் கல்லூரியில் ஆசிரியாராக இருக்கும் சந்திரன்.

பனிமலர் கல்லூரி ஆசிரியர் சந்திரன் : ”வேலை மிச்சம்னு பாக்கெட் மசலா வாங்கினா டாக்டருக்கு யார் செலவுபண்றது? கால்குடைச்சல், கைகுடச்சல், நெஞ்செறிச்சல், வயித்தெறிச்சல்னு மாறிமாறி ஓடணும். நமக்கு தேவையா?”

“வேலை மிச்சம்னு பாக்கெட் மசலா வாங்கினா டாக்டருக்கு யார் செலவுபண்றது? நமக்கு தேவையா? கால் குடைச்சல், கை குடைச்சல், நெஞ்செரிச்சல்னு மாறிமாறி ஓடணும். ஒபிசிடி, தொப்பன்னு ஜிம்முக்கு போகணும்; இல்ல சைக்கிளிங், ஜாக்கிங் செய்யணும். இது தேவையா…?” என்றார்.

அதற்குள் கடை உரிமையாளர், “என்ன கேட்கப் போறீங்க?” என்று அருகில் வந்தார்.

“மாவு மிசின் இரைச்சல், நெடி 5 நிமிடம்கூட எங்களால தாங்க முடியல. நாள் முழுக்க எப்படி வேலை பார்க்கிறீங்க” என்றோம்.

“அதெல்லாம் பழகிவிட்டது. மொதல்ல வேலையை முடிக்கணும். நெடி, இரைச்சலெல்லாம் நான் எங்கே கவனிப்பது?” என்றார்.

வாடிக்கையாளர் கூட்டம் கொஞ்சம் குறைந்தவுடன் அவரிடம் “ஒரு தொழிலாக உங்களால் இதைத் தொடர்ந்து நடத்த முடிகிறதா? ஏதும் பிரச்சினை இல்லையா?” என்றோம்.

“இந்தத் தொழில் எங்க அப்பா கொடுத்த சொத்து. தாத்தா, எண்ணெய் செக்கு வைத்திருந்தவர். இத்தொழில் எங்கள் குடும்பத்து கவுரவம். 40 வருஷமா இந்தத் தொழில செஞ்சுதான் பையன மெக்கானிக் படிக்க வச்சேன். இப்போ சொந்த வீட்டோடு இருக்கிறான்.

தினமும் கடைய திறக்கும்போது, 1000 ரூபாய்க்காவது அரைக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்வேன். 50 கஸ்டமர்கள் வந்தால் போதும். அரை கிலோ, ஒரு கிலோன்னு சராசரியாக ஆளுக்கு 30 ரூபாய் வீதம் வந்தாலே என் பொழப்பு போகும். சீசனுக்கு தகுந்தாற்போல்தான் வேலை. தீபாவளின்னா கூட்டம் அதிகமா வரும். சீர் வரிசை, பலகாரம், முறுக்கு, அதிரசம் என அவுங்கவுங்க தேவைக்கேற்ப அரைப்பாங்க. விஜயதசமி வந்தால் அய்யர்மார் நிறையபேர் வருவாங்க. சீடை, முறுக்கு, தட்டு மாதிரியான பலகாரங்களுக்கு அரைச்சிப் போவாங்க.

மிளகாய், தனியா (மல்லி), கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், துவரம் பருப்பு, சோம்பு, சீரகம், அரிசி, உளுந்து ஒவ்வொன்றையும் தனித்தனியா இளம் வறுவலா வறுத்து அரைச்சா, அதோட சுவையே தனிதான்.

ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழு ஊற்றுவதற்கு கேழ்வரகு அதிகம் வரும். ஆனால் மழைக்காலமுன்னா வேலையிருக்காது, கடையில காத்துதான் வரும். அப்போ 300 ரூபா சம்பாதிப்பதே பெரும்பாடு. தண்டலுக்குக் கடன் வாங்கித்தான் வாடகை, கரண்ட் பில்லுன்னு சமாளிப்போம். ஆண்டுக்கு 6 மாதம் இப்படியும் அப்படியும் இருக்கும். சில நேரம், சிறு வியாபாரம் செய்றவங்க 10, 20 கிலோன்னு மொத்தமா அரைச்சி போவாங்க. அரிசி சேமியா, சர்க்கரை, கடல பருப்பு மாவு இப்படி ரவா லட்டிலிருந்து புட்டு வரைக்கும் பாக்கெட் போட்டு விக்கிறவுங்க வருவாங்க.

இதிலும் சில சிரமம் இருக்கத்தான் செய்யுது. 2 கிலோவ 1.5 கிலோன்னு சொல்வாங்க. மல்லுகட்டி அவர்களிடம் காசு வாங்குவது பெரும்பாடாகி விடும். பத்து இருபத மிச்சப்படுத்தி வீடா கட்டப் போறாங்க; ஏதோ வீட்டுக்கு கொஞ்சம் காய்கறி, குழந்தைகளுக்கு திண்பண்டமுன்னு வாங்கிப் போவாங்க. பாவம் என்ன செய்யிறது! ஆனால், அதிகமாக ஏமாத்துனா விடமாட்டேன். எடை மிசின்ல வெயிட் போட்டு திருப்பி அனுப்பி விடுவேன்.

இந்த நெடியிலும் சத்தத்திலும் எப்படித்தான் நிற்கிறீர்களோ என வாடிக்கையாளர்களே அலுத்துக்கொள்வார்கள். வயிறுன்னு ஒன்னு இருக்கிறதே என்று சிரிப்பேன். உண்மையில் இந்த நெடியும் இரைச்சலும் என் உடம்புக்கு உரமாகத்தான் இருக்கு. இதுவரை எந்த நோய் நொடியும் வந்ததில்லை. மசாலாத் தூள்களின் மனம் என் உடம்புக்கு போசாக்கு தருகிறதோ என்னவோ. நீங்கள்லாம் செய்து சாப்பிட்டாத்தான் மணம். நான் வாசனை புடிச்சாலே போதுமே” என்று சிரித்தார்!

இங்கு, மிளகாய்க்கு தனி மிசின்; அரிசி மாவு அரைக்க தனி மிசின்; பருப்பு, நவ தானியம், கோதுமை, கேழ்வரகு அரைக்க தனி மிசின். சீயக்காய் அரைக்கன்னு தனி.

இங்கு, மிளகாய்க்கு தனி மிசின்; அரிசி மாவு அரைக்க தனி மிசின்; பருப்பு, நவ தானியம், கோதுமை, கேழ்வரகு அரைக்க தனி மிசின். சீயக்காய் அரைக்கன்னு தனி. ஒரே மிசினுல அரைச்சா, அரிசி மாவு கலராகிடும். ருசியும் போயிடும். இதை ஓட்டுவதற்கு 10 எச்பி மோட்டர்கள் தேவை. 3 பேஸ் பவர் இருந்தால்தான் சுணக்கமில்லாமல் வேலை நடக்கும்.

நாளொன்று 1000 ரூபாய்க்கு அரைத்தால் கரண்டு, வாடகைக்குன்னு மேல் செலவு 400 ரூபாய் எடுத்து வைக்கணும். மிசின் பிளேட் அடிக்கடி தேஞ்சிடும். ஒரு மிசினுக்கு 2 பிளேட் வேணும். அதை சாணை பிடிக்க 400 ரூபா. வேலையைப் பொருத்து ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ, இல்ல ரெண்டு தடவ செலவு வைக்கும். அரைக்கிற வருமானத்துலதான் இதெல்லாம் பாக்கணும்.

 

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

மாவு மிசின்காரங்களுக்கு சாதாரணமா வாடகைக்கு கடை கிடைக்கிறதில்ல. மாடி வீடும் ஆகாது. ஒரே சத்தமுனு சண்டைக்கு வருவாங்க.

இந்தத் தொழில்ல நான்தான் கடைசி. இந்தத் தலைமுறை பசங்க யாரும் விரும்புறதில்ல. இதெல்லாம் ஒரு வேலையான்னு ஓடுறாங்க” என்று சோகங்கலந்த சிரிப்போடு மிளகாயை மிசினில் கொட்டினார்.

ரன்வே பெல்ட் சுற்றியது. நெடியும் இரைச்சலும் மேலோங்கியது. இப்போது மட்டும் அந்த இரைச்சல், வயதான கிழவனின் தொடர் இருமலை ஒத்திருந்தது.

விடுதி பணிப்பெண் : ஒரு மாசத்துக்குத் தேவையான மிளகாத் தூளை அரைச்சு வச்சிப்போம். ஹாஸ்டல்ல தங்கியிருக்கவங்க இதத்தான் விரும்பி கேக்குறாங்க.

பாக்கெட் மசாலா வாங்கி சாப்பிட்டா வயிறு கெட்டுப் போகும். அதில் என்னென்ன போடுறாங்கன்னே தெரியாது. கண்ணால பாக்குறதிலேயே ஆயிரத்தெட்டு கலப்படம். அரைத்து பாக்கெட்டில் கொடுத்தால் ஒழுங்காகவா இருக்கும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க