எறும்புகளின் வாழ்க்கை சுவாரசியமானது ! தெரியுமா குழந்தைகளே !

பூமியின் அடியில் இவற்றிற்கு பெரும் நகரங்கள் உள்ளன. எறும்புகள் இறக்கைகளுடன் பிறக்கின்றன தெரியுமா? ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 36 ...

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 15

நீண்ட இடைவேளை. நாங்கள் உலாவத் தயாராகின்றோம்.

பள்ளிக்கு அருகே ஒரு பூங்கா உள்ளது. சாலையைக் கடக்கக் கூடத் தேவையில்லை. அங்கே ஓடியாடி விளையாடலாம், தூய காற்றை சுவாசிக்கலாம். நீண்ட இடைவேளை வரும் போதெல்லாம் நாங்கள் இங்கு செல்வோம், அற்புதமாக உலாவுவோம்.

நான் குழந்தைகளை விளையாடும்படி கட்டாயப்படுத்துவதில்லை, “ஓடாதீர்கள், குறும்பு செய்யாதீர்கள், பெஞ்சில் உட்காருங்கள்” என்றெல்லாம் வற்புறுத்துவதில்லை. குழந்தைகள் ஓடுவார்கள், குறும்பு செய்வார்கள். சிலர் எறும்பும் புற்றை கவனித்துக் கொண்டிருப்பார்கள்; சிலர் மரக் கிளைகள், இலைகளைச் சேகரிப்பார்கள், சிறுமிகள் ஸ்கிப்பிங் கயிற்றை எடுத்து வந்து, களைப்பின்றி குதித்துக் கொண்டிருப்பார்கள்; இது என்ன?”, “ஏன்”, “நீங்கள் என்ன புத்தகத்தைப் படிக்கின்றீர்கள்?” என்று சிலர் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார்கள். நான் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருப்பேன், என் குழந்தைகளை நன்கு புரிந்துகொள்ள முயலுவேன். – இன்றும் பூங்காவில் சுவாரசியமாக இருக்குமென நம்புகிறேன். இன்று என்ன நடக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. சிலர் கண்டிப்பாக எறும்புப் புற்றைக் கவனிப்பார்கள். ஆச்சரியக் குரல்கள் என் காதுகளை எட்டும்.

“பாருங்கள், இவை எப்படி வேகமாக ஓடுகின்றன?”

“இதோ… இந்த எறும்பு… எவ்வளவு பெரிய இரையை எடுத்துச் செல்கிறது!”

இவையெல்லாம் ஒரே கோட்டில் முன்னும் பின்னுமாகச் செல்வதைப் பார்த்தீர்களா!”

“இவை எங்கே போகின்றன என்று தேடுவோமா!”

“அவை மரத்தின் மீது ஏறுகின்றன!”

“இவை ஒன்றையொன்று சந்திக்கும் போது, நின்று, தம் தலைப்பகுதியை அசைப்பதைக் கவனித்தீர்களா!”

“இவை இப்படித் தான் முகமன் கூறிக்கொள்கின்றன!”

“இரை எங்குள்ளது என்று இவை ஒன்றிற்கொன்று சொல்லிக் கொள்கின்றன.”

“இவற்றால் பேச முடியாது!”

“இல்லை, முடியும்!”

“உனக்கு அவை பேசுவது கேட்கிறதா?”

“கேட்கவில்லை அதனால் என்ன… அவை தலையால் பேசுவது தெரிகிறதே!”

”தலையால் எப்படிப் பேச முடியும்!”

“ஏன், நன்றாக முடியுமே!”

“இதோ ஷல்வா அலெக்சாந்தரவிச்சைக் கேட்போம், அவர் சொல்வார்.”

இந்த விவாதம் ஒரே இரைச்சலாக இருக்கும். எறும்புகளுக்கு மொழி உண்டா எனும் பிரச்சினைக்குத் தீர்வு காண குழந்தைகள் என்னிடம் வருவார்கள். இவர்களுக்கு என்ன பதில் சொல்வது? எறும்புகளின் வாழ்க்கையைப் பற்றிச் சிறிதாவது தெரிந்திருந்தால் நல்லது… இப்படிப்பட்ட கேள்விகள் வரும் என்று நான் யோசித்திருக்க வேண்டும்!” என்று நான் எண்ணுவேன்.

இம்முறை தீர்வு கண்டாகி விட்டது. “யார், என்ன” எனும் கலைக்களஞ்சியத்தை நாளை கண்டிப்பாக எடுத்து வந்து எறும்புகளின் வாழ்க்கையைப் பற்றிய கட்டுரையை வாசிப்பதாக உறுதியளிப்பது சிறந்ததாயிருக்கும். “எறும்புகளின் வாழ்க்கை ஒரு சுவாரசியமான விஷயம் தெரியுமா, குழந்தைகளே! பூமியின் அடியில் இவற்றிற்கு பெரும் நகரங்கள் உள்ளன. எறும்புகள் இறக்கைகளுடன் பிறக்கின்றன தெரியுமா? சரி, உங்களுக்கு இவ்வளவு ஆர்வமிருப்பதால் நாளை நான் அந்தக் கட்டுரையைப் படிப்பேன், நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வீர்கள்!”

சாஷா, மாயா அல்லது தேயா, நான் என்ன புத்தகத்தைப் படிக்கிறேன் என்று கண்டிப்பாகக் கேட்பார்கள், குலிவேர் பயணம் பற்றிய இந்நூலின் மீது குழந்தைகளுக்கு ஆர்வமேற்படுவதற்காக இதை பூங்காவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். லிலிபுட் என்ற குள்ளர்களின் நாட்டிலும், அசுரர்கள் நாட்டிலும் மற்ற கற்பனை நாடுகளிலும் குலிவேரின் வீர சாகசங்களைப் பற்றியும் இந்நாடுகளில் உள்ள மக்களின் பழக்கவழக்கங்களைப் பற்றியும் இதில் எழுதப்பட்டுள்ளதாக நான் குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்வேன்.

திடீரென யாராவது ஒரு சிறுவன் ஓடி வந்து “நாங்கள் ஒரு ஆமையைக் கண்டுபிடித்து விட்டோம்” என்று முழுக் குரலில் அறிவித்தால் இப்பேச்சு தடைப்படும்.

குழந்தைகள் தம்மிடங்களிலிருந்து துள்ளி எழுந்து இதை நோக்கி ஓடுவார்கள். விரைவிலேயே இரைச்சலிட்டுக் கொண்டு திரும்பி வருவார்கள்:

“பத்திரமாகப் பிடி!”

“பயப்படாதே, கடிக்காது!”

“சிறிய ஆமையா?”

“நம்மோடு ஆமையை எடுத்துச் செல்லலாம்” என்று நான் குழந்தைகளிடம் சொல்வேன். நாங்கள் ஆமையோடு பள்ளிக்குத் திரும்பி வருவோம்.

பூங்காவில் நாங்கள் உலாவும் இந்த 30 நிமிடங்களில் இவ்வளவு சுவாரசியமான விஷயங்கள் நடக்கும். எனவே தான் நானும் குழந்தைகளும் நீண்ட இடைவேளைகளை விரும்புகின்றோம்….

“தயாரா?” நாங்கள் மாடியிலிருந்து இறங்கி பள்ளி முற்றத்திற்கு வந்து பூங்காவை நோக்கி புறப்படுகிறோம். ஆனால் திடீரென…

“நில்லுங்கள்!” கோத்தே தனியாக வருகிறான், அவனருகே அவனுடைய நண்பனைக் காணோம்.

அவர்கள் சேர்ந்தல்லவா வந்து கொண்டிருந்தார்கள்.

அவன் நம்முடன் அல்லவா இருந்தான்? சிறுவன் எங்கே?

“கோத்தே, எங்கே அவன்?”

“அவனை ஒரு மாமா கூட்டிச் சென்று விட்டார்.”

“எந்த மாமா?”

“தெரியாது… உயரமாயிருந்தார்…”

“எப்போது?”

“நாம் படியில் இறங்கி வந்த போது!”

நான் குழந்தைகளை விளையாடும்படி கட்டாயப்படுத்துவதில்லை, “ஓடாதீர்கள், குறும்பு செய்யாதீர்கள், பெஞ்சில் உட்காருங்கள்” என்றெல்லாம் வற்புறுத்துவதில்லை. குழந்தைகள் ஓடுவார்கள், குறும்பு செய்வார்கள்.

மற்ற குழந்தைகளும் பார்த்திருக்கின்றனர்: உயரமான ஒருவர் சிறுவனை நெருங்கி “என்னோடு போகலாம் வா” என்றார். அவர் சிறுவனின் கையைப் பிடித்து வெளியே கூட்டிச் சென்றார்.

யார் சிறுவனைக் கூட்டிச் சென்றிருக்க முடியும்? ஏன் அவர் என்னிடம் செல்லவில்லை? நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரு வேளை அவர்கள் அங்கு தாழ்வாரத்திலேயே தங்கி விட்டார்களோ, சிறுவன் இப்போது இறங்கி வந்து விடுவானோ?

“கோத்தே, மேலே ஏறிச் சென்று வகுப்பறையில் அவனைத் தேடு. நாங்கள் அவனுக்காகக் காத்திருப்பதைச் சொல்.”

கோத்தே விரைவாகத் திரும்பி வந்து அங்கு யாருமில்லை என்று சொன்னான்.”

ஆம், ஏதோ நடந்து விட்டது. அந்த “உயரமான மாமா” வேறொரு வாசல் வழியே வெளியேறியிருக்க வேண்டுமென்பது தெளிவு. அப்படியெனில், அவர் உண்மையிலேயே எனக்குச் சொல்லாமல் சிறுவனைக் கூட்டிச் செல்ல விரும்பியிருக்கின்றார்.

“குழந்தைகளே, இங்கேயே நில்லுங்கள்… நான் இதோ வருகிறேன்!…”

அவர்களைப் பிடிக்கும் பொருட்டு வேறு வாசலை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் செல்கிறேன். அவர்கள் ஏற்கெனவே வீதியில் இருக்கின்றனர். சிறுவன் முரண்டு பிடிக்கிறான், பெரியவரோ கார் கதவைத் திறந்து “சீக்கிரமாக உட்கார், நமக்குத் தாமதமாகிறது” என்று குழந்தையைப் பார்த்து அதிகாரத் தொனியில் கூறுகிறார்.

“பொறுங்கள்!” என்று காரை நோக்கி விரைந்தபடியே நான் கத்துகிறேன்.

அந்த நபரோ ஏதோ என் குரலையே கேட்காதது! போல் அவசர அவசரமாகக் காரில் உட்காருகிறார். இப்படிப்பட்டவர்களின் கார் இயந்திரங்கள் உடனடியாக வேலை செய்ய ஆரம்பிக்காதது எவ்வளவு நல்லது!

“ர்ர்ர்…” என்று என்ஜின் சத்தமிடுகிறது. இந்த நொடிப்பொழுதில் நான் காரை நெருங்குகிறேன்.

“உடனே குழந்தையை வெளியே விடுங்கள், நீங்களும் காரை விட்டு வெளியே வாருங்கள்.”

“வணக்கம்!” என்கிறார் அந்நபர். “ஏன் கோபப்படுகின்றீர்கள்? எனக்கு விருப்பமான போது என் மகனைப் பள்ளியிலிருந்து கூட்டிச் செல்ல முடியாதா என்ன!”

“இல்லை, முடியாது, காரை விட்டு வெளியே வாருங்கள்.”

“எங்களுக்கு அவசர வேலையுள்ளது, எங்களுக்குத் தாமதமாகிறது!” – பிள்ளைப் பாசமுள்ள தந்தைக்கு கோபம் வருகிறது.

“எனக்கு இப்போதுள்ள வேலையை விட அவசரமான வேலை இருக்க முடியாது. காரை விட்டு வெளியே வாருங்கள்!”

சிறுவன் கதவைத் திறந்து, காரிலிருந்து குதித்து என்னை நோக்கி ஓடி வந்து ஒட்டிக் கொள்கிறான்.

“சரி பையா, நான் வகுப்புகள் முடிந்ததும் வந்து உன்னைக் கூட்டிச் செல்வேன்” என்று பாசமுள்ள தந்தை சொல்கிறார். அச்சிறுவனின் கைகள் நடுங்குவதை நான் நன்கு உணருகிறேன்.

“இல்லை, நீங்களும் வெளியே வாருங்கள், என்ன நடந்தது என்று பேசுவோம்.”

“பேச என்ன இருக்கிறது! நான் தந்தை, அவன் என் மகன்! அவசரமான ஒரு தனிப்பட்ட காரியத்திற்கு அவனைக் கூட்டிச் செல்ல விரும்பினேன். தனிப்பட்ட விஷயங்களே இருக்க முடியாதா என்ன! நீங்கள் எனக்கு இடையூறு செய்கின்றீர்கள், இன்னும் பேச வேறு வேண்டுமா!”

“காரை விட்டு வெளியே வாருங்கள், பள்ளி இயக்குநரிடம் செல்வோம்.”

வேறு வழியில்லை என்பது ஒருவழியாக பாசமுள்ள தந்தைக்கு புரிந்தது. அவர் காரை விட்டு வெளியே வந்து ரகசியக் குரலில் விளக்க முற்படுகிறார்:

“இன்று சிறுவனின் விதி முடிவு செய்யப்படுகிறது, புரிந்து கொள்ளுங்கள்.”

“பள்ளி இயக்குநரிடம் போகலாம் வாருங்கள்…”

“எதற்கு பள்ளி இயக்குநரிடம்?…”

“வேண்டும்! நீ நண்பர்களிடம் ஓடு, அவர்கள் பள்ளி முற்றத்தில் காத்திருக்கின்றனர்.”

சிறுவன் ஓடுகிறான். தந்தையைத் திரும்பிப் பாராமல் ஓடுவதிலிருந்து அவனுக்கு மகிழ்ச்சி எனத் தெரிகிறது.

பள்ளி இயக்குநரின் அறையில், என்ன நடந்தது என்று பேச நாங்கள் முற்படுகிறோம்.

பாசமுள்ள தந்தை ஏன் ஆசிரியருக்குத் தெரியாமல் தன் மகனைக் கூட்டிச் சென்றார்?

ஏன் அவர் தன் மகனை வலுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்றார்? ஏன் சிறுவன் தன் அன்புத் தந்தையுடன் செல்ல விரும்பவில்லை?

தன் மனைவியிடமிருந்து பிரிந்து விவாகரத்து பெறும் தந்தைக்கு யாருடைய விதியில் – தன் விதியிலா, தன் மகனின் விதியிலா – பெரும் அக்கறையிருக்கிறது?

ஏன் அவர் மகனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பினார்?

வழக்கு எப்போது ஆரம்பமாகப் போகிறது? மூன்று மணி நேரம் கழித்தா? அது வரை அவர் குழந்தையுடன் என்ன செய்யத் திட்டமிட்டிருந்தார்?

இப்பாசமுள்ள தந்தை தன் ஆறு வயது மகனை அச்சுறுத்தி, நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்லும்படி கட்டாயப்படுத்த விரும்பினாரோ?

தன் வகுப்பு குழந்தை காணவில்லை என்று ஆசிரியருக்குத் தெரிய வந்தால் அவருக்கு எப்படியிருக்கும் என்பது இந்தப் பாசமுள்ள தந்தைக்கு, அதுவும் உயர்கல்விக்கூட ஆசிரியருக்கு விளங்கவில்லையா? மகனைக் கூப்பிடத் தாய் வந்தால் அவரிடம் ஆசிரியர் என்ன சொல்வார்?

ஆம், இதைப் பற்றியெல்லாம் உயர்கல்விக்கூட மேலாளருக்கும் நீதிமன்றத்திற்கும் தெரியப்படுத்த வேண்டும்.

சரி, இப்போது போய் வாருங்கள். எங்களுக்கு எல்லாம் புரிந்து விட்டது. தந்தையர்கள் பல்வேறு விதமானவர்கள், இவர்களில் சிலரிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பது நன்கு புரிகிறது.

இப்படிப்பட்ட தந்தைக்கு நம் பாடங்கள், நாம் உலாவுவதன் மீது என்ன அக்கறை? நம் மகிழ்ச்சிகள், இன்ப துன்பங்கள் மீது என்ன அக்கறை? கோச்சா இன்று பூங்காவில் ஆமையைக் கண்டெடுக்காவிடில் இவருக்கு என்ன? எறும்புகளின் வாழ்க்கையைப் பற்றி அங்கு பேசாவிடில் இவருக்கென்ன கவலை? புதிய நாடுகளைப் பற்றிய குலிவேரின் கதையைக் குழந்தைகள் கேட்காவிடில் இவருக்கென்ன கவலை? அடுத்த பாடங்களைச் சரிவர நடத்துவதே சந்தேகமாயிருக்கும் அளவிற்கு ஆசிரியர் உணர்ச்சி வசப்பட்டிருப்பது குறித்து இப்படிப்பட்ட தந்தைக்குக் கவலையா என்ன?

நான் குழந்தைகளிடம் திரும்பி வருகிறேன். நான் வருவேன், சுவாரசியமாக உலாவலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் 30 நிமிடங்கள் அங்கேயே நின்று கொண்டிருக்கின்றனர்.

படிக்க:
பள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா ? | வில்லவன்
உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் !

“சிறுவனே, கெட்ட விஷயத்திலிருந்து நான் உன்னைக் காப்பாற்றினேனா? உனது துக்கம் பெரியது! இதனால் தான் உன் கண்கள் அவ்வளவு சோகமாக உள்ளனவா, நமது மினி-பாடவேளைகளில் எதைப் பற்றியோ அடிக்கடி சிந்தனையில் மூழ்குகின்றாயோ? “கவனக் குறைவானவன், மறதி மிக்கவன்” என்று உன்னைப் பற்றி என் நாட்குறிப்பில் எழுதினேன். இன்றுதான் எனது கவனக் குறைவு புரிந்தது. என்னை தயவு செய்து மன்னித்து விடு.”

“ஓ!” என்று என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சியால் கத்தினார்கள் குழந்தைகள். கலைந்து நின்றவர்கள் மீண்டும் ஒழுங்காக நிற்க, “பூங்காவை நோக்கிச் செல்கிறோம்!” என்கின்றனர்.

ஆம், இப்போது மினி-பாடவேளைகளை நடத்த முடியாது. விரைவிலேயே இவற்றை ஈடு கட்ட நேரம் கண்டுபிடிக்க வேண்டும். இப்போது இவர்களைப் பூங்காவிற்கு அழைத்து செல்வேன். ஒரு வேளை அவர்கள் உண்மையிலேயே ஆமையைக் கண்டு பிடிப்பார்களோ?

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க