பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான தொடர்புகளின் சாராம்சம் என்ன ?

“நேராக நில்! வீட்டிற்கு வா ஒரு கை பார்க்கிறேன்!” என்று கூறுவது போல் அவன் கையைப் பிடித்து வலிக்கும் படி திருகுகிறாள் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 37 ...

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 16

குடும்பத்திற்கும் பள்ளிக்கும் இடையிலான தொடர்புகள்

டுத்த திங்கட்கிழமையிலிருந்து கூடுதல் பள்ளி நேரத்திற்கு மாறுவோம். குழந்தைகளை இரண்டு குழுக்களாகப் பிரித்தோம். ஒவ்வொரு குழுவிற்கும் பெயர் (“ரோஜா”, “மல்லிகை“) கூடக் கண்டுபிடித்தாகி விட்டது. இன்று வகுப்பறையில் பெற்றோர்களும் உதவியாசிரியர்களும் கூடுவார்கள், இக்குழுக்களில் என்ன செய்வது என்று கூட்டாக விவாதிப்போம்.

வகுப்பறையையும் தாழ்வாரத்தையும் ஒழுங்குபடுத்தி பலவற்றை மாற்றியமைத்ததில் பெற்றோர்கள் காட்டிய அக்கறை, ஆர்வம் குறித்து எனக்குப் பெரிதும் மகிழ்ச்சி.

தாழ்வாரத்தில் ஜன்னல்களில் ரோஜாப் பூ வண்ணத்தில் திரைச் சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன, நன்கு வசதியான சூழல் உடனேயே ஏற்பட்டது.

வளர்ப்புப் பணி ஒரு சமுதாயப் பணியாகும், இதை ஒளிவு மறைவின்றிச் செய்ய வேண்டும். நான் மருத்துவரோ, பொறியியலரோ, பிட்டரோ, திராட்சை பயிரிடும் விவசாயியோ அல்ல. நான் ஆசிரியன், குழந்தைகளை வளர்ப்பவன். எனது துறை மிகச் சிக்கலானது, மிகவும் பொறுப்புள்ளது.

தரையில் வைக்கோலால் செய்யப்பட்ட விரிப்பும் கம்பளமும் விரிக்கப்பட்டிருந்தன, கம்பளத்தில் குழந்தைகள் குட்டிக்கரணம் போட்டு விளையாடுகின்றனர்.

சுவரில் மின்சாரக் கணக்கு அட்டவணை தொங்கியது. இதில் கூட்டலாம், கழிக்கலாம், சிறிது நாட்களுக்குப் பின் பெருக்கலாம், வகுக்கலாம்.

ஜன்னலருகே மீன்தொட்டி உள்ளது. இதில் மீன்களும் நத்தைகளும் நீந்துகின்றன, நீர்ப்பாசி வளருகிறது.

வீடு, கட்டிடங்களைக் கட்டி விளையாடத் தேவையான விளையாட்டுப் பொருட்களும் உட்கார்ந்த இடத்திலேயே விளையாடும் பல சாமான்களுமாக ஏராளமான விளையாட்டுப் பொருட்கள் சேர்ந்துள்ளன. இவற்றை வைப்பதற்காக ஜன்னலருகே காலியான இடத்தில் அலமாரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வகுப்பறையிலும் தாழ்வாரத்திலும் ஒவ்வொரு முறையும் ஏதாவது புதிதாகத் தோன்றும் போதெல்லாம் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர். ”பெற்றோர்களுக்கு நன்றி சொல்வோம்” என்று ஒவ்வொரு முறையும் சொல்வேன்; பின் சாக்பீசால் தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையில் கீழ்வருமாறு எழுதுவேன்:

எங்கள் தாழ்வாரத்தை திரைச் சீலைகளால் அழகுபடுத்தியதற்காக அவ்தன்தீல் மாமாவிற்கு நன்றி!

அல்லது:

மீன்தொட்டி கொண்டு வந்ததற்காக கேத்தினோ அத்தைக்கு நன்றி!

அல்லது:

வாஹ்தாங் மாமா, நீங்கள் மிக அன்பானவர் ! உங்களுக்கு நன்றி!

பெற்றோர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கையில் நான் இப்போது பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றிச் சிந்திக்கிறேன்.

சில சமயங்களில் இத்தொடர்பு எவ்வளவு மெல்லியதாக, உறுதியற்று இருக்கிறது! சில சமயங்களில் இரு தரப்புகளிலுமாக இது எப்படி இழுக்கப்படுகிறது! குழந்தைகள் பள்ளியில் எப்படிப் படிக்கின்றனர், எப்படி நடந்து கொள்கின்றனர் என்பது தொடர்பான விவரங்களைப் பெற்றோர்கள் பெறுவதற்காக சில ஆசிரியர்கள் குறிப்பிட்ட நாட்களையும் நேரத்தையும் முடிவு செய்து அறிவிப்பார்கள். வேறு சிலரோ குழந்தைக்கு புத்தி சொல்லவும், படிப்பில் துணை புரியவும் உதவுமாறு பெற்றோர்களைக் கோருவார், குழந்தைகளின் செயல்களைப் பற்றிப் பெற்றோர்களுக்குக் கடிதம் எழுதுவார், குழந்தையின் நாட்குறிப்பில் அதிருப்தியான, அச்சுறுத்தும் குறிப்புகளை எழுதுவார். வேறு சில ஆசிரியர்கள், குடும்பத்தில் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று பெற்றோர் கூட்டங்களிலும் விரிவுரைகளிலும் பெற்றோர்களுக்குப் போதனை செய்வார்.

எனவே, பள்ளியைப் பொறுத்தமட்டில் இது குழந்தைகளின் நடத்தை, கல்வி பற்றிப் பெற்றோர்களுக்கு அறிவிக்க மட்டுமே செய்கிறது, எப்படி வளர்க்க வேண்டுமென ஆலோசனை கூற மட்டுமே செய்கிறது என்றாகிறது. அதுவும் குழந்தை ஏதாவது தப்பு செய்தால் மட்டுமே இதற்கான அவசியம் ஏற்படுகிறது. தம் குழந்தைகளைப் பற்றிய வசவுகளைக் கேட்கும் பொருட்டு ஆசிரியர்களிடம் செல்ல அம்மாக்கள் எவ்வளவு தூரம் தயங்குகின்றனர், தந்தைமார்களோ இச்சந்திப்புகளை எப்படி உறுதியோடு தவிர்க்கின்றனர் பாருங்கள், தாம் ஒரு தடவை கூட பள்ளி வாசல்படியை மிதித்ததில்லை, பள்ளி எங்கேயுள்ளது என்று கூடத் தெரியாது – தம் மகன் எவ்வளவு நல்லவன் – என்றெல்லாம் சில அம்மாக்களுக்கு எவ்வளவு பெருமிதம்!

பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான தொடர்புகளின் சாராம்சம் என்ன? பள்ளிக்குத் தேவையான துரிதமான வளர்ப்பு உதவியை அளிப்பதும், குழந்தையின் விஷயத்தில் பலவீனமான பள்ளியின் நிலையை வலுப்படுத்துவதுமா இதன் உட்பொருள்?

இந்நிலவரத்தைக் கண்டு யாரும் வியப்படைய வேண்டாம். ஆறு வயதுச் சிறுவனின் தாய் வெட்கத்தால் முகம் சிவக்க ஆசிரியையின் முன் நின்று அவனது குறைகளைக் கேட்கிறாள்: “உங்கள் சிறுவன் கவனக் குறைவானவன், மேசைக்குப் பின் நாற்காலியில் உட்காரத் தெரியவில்லை. மோசமாக எழுதுகிறான். சொன்ன பேச்சைக் கேட்பதில்லை. அவனுக்கு ஓடிக் குதித்துக் கொண்டிருப்பதே போதும். அவனை சரியாக வளர்ப்பதன் மீது பெரும் கவனம் செலுத்த வேண்டும்”. சிறுவன் அருகேயே நிற்கிறான், ஏதோ விஷயம் சரியில்லை என அவனுக்குப் புரிகிறது, தாயோ “நேராக நில்! வீட்டிற்கு வா ஒரு கை பார்க்கிறேன்!” என்று கூறுவது போல் அவன் கையைப் பிடித்து வலிக்கும் படி திருகுகிறாள். சிறுவனின் மனதில் ஆசிரியை முதல் எதிரியாகிறாள்.

ஒருவேளை இங்கு ஆசிரியை, பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான தொடர்பு எனும் புனிதமான கோட்பாட்டை நிறைவேற்றினாளோ! சரி, அப்படியெனில் அத்தாய் வீடு திரும்பியதும் எப்படி நடந்து கொள்கிறாள் என்று பார்ப்போம். ஏனெனில் ஆரம்பத்திலேயே குழந்தையை சரியான பாதையில் திருப்ப வேண்டுமே! இன்றே அவன் பள்ளியில் கவனக் குறைவாக இருந்தால், குறும்பு செய்தால், படிக்காவிட்டால், சொன்ன பேச்சைக் கேட்காவிட்டால் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் என்ன நடக்கும்? ஆறு வயதுக் குழந்தையின் அனுபவமேயில்லாத பெற்றோர்கள் தம் முதல் குழந்தையை வளர்க்கும் போது என்ன செய்வார்கள்? “இது மாதிரி இனி செய்யக் கூடாது” என்று தந்தை விரலை ஆட்டி அச்சுறுத்துவார். தாய் கிட்டத்தட்ட தன் மகனை வலுக்கட்டாயமாக மேசை முன் அமர்த்தி எழுதப் படிக்கச் சொல்வாள். பாட்டி கூட கதவின் முன் நின்றுகொண்டு “படித்து முடிக்கும்வரை விளையாட வெளியே விடமாட்டேன்” என்பாள். குழந்தையோ, இவையெல்லாம் பெரியவர்களின் சதியென எண்ணி வருந்துவான்.

“ஏன் அவனை இரண்டாவது பெஞ்சில் உட்கார வைத்தீர்கள்? ஏன் நீங்கள் அவனிடம் அடிக்கடி கேள்வி கேட்பதில்லை? ஏன் அவனிடம் நீங்கள் அன்பாக நடந்து கொள்வதில்லை? ஏன்?…” உண்மையிலேயே நான் அக்குழந்தையிடம் பாரபட்சமாக நடந்து கொள்கிறேனா என்ற சந்தேகம் தோன்றுகிறது.

இச்சிறுவனின் விஷயத்தில் பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான தகவல் ரீதியான, கட்டளை பிறப்பிக்கும் தொடர்பு என்ன செய்தது? குழந்தை வளர்ப்பில் குடும்பம் மற்றும் பள்ளியின் முயற்சிகளை இது ஒன்றிணைத்ததா? இல்லை.

பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையே வெறும் தொடர்பு மட்டும் போதாது. முழுமையான வளர்ப்பு, குழந்தையின்பாலான சர்வாம்ச அணுகுமுறை தேவை. எவ்வொரு குழந்தையையும் சுற்றி மனிதாபிமான பள்ளிச் சூழலை ஏற்படுத்துவதில் பெற்றோர்கள், ஆசிரியர்களின் பொது அக்கறையில் இந்த முழுமை பிரதிபலிக்க வேண்டும், இது இச்சூழலை ஏற்படுத்துவதில் பள்ளியின் முக்கியப் பாத்திரத்தைக் குறிக்க வேண்டும்.

வளர்ப்பின் முழுமைக்கு வழிகோலும் இப்படிப்பட்ட தொடர்பை எப்படி நிறைவேற்றுவது? ஒருவேளை இதே லட்சியத்தைக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான என் சக ஆசிரியர்கள் தம் நடைமுறையில் பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையிலான செயல்பூர்வமான தொடர்புக்கான பல சுவாரசியமான வழிகளைக் கண்டுபிடித்திருக்கலாம். எனது ஞானத்தை செழுமைப்படுத்த இவர்களின் அனுபவம் தேவை. தற்போது நான் கீழ்வரும் “முது மொழியைப்” பின்பற்றுகிறேன்:

பள்ளியில் வளர்ப்புப் பணியைத் திட்டமிட்டு நிறைவேற்றுவதில் எந்த அளவிற்குக் குடும்பம் ஈடுபாடு கொள்கிறதோ அந்த அளவிற்குத்தான் பள்ளி, குடும்ப வளர்ப்பின் முழுமையும், குடும்ப வளர்ப்பின் போக்கையும் நிர்ணயிப்பதில் பள்ளியின் முக்கியப் பாத்திரமும் பொறுத்துள்ளன.

பெற்றோர்களுக்காக ஒரு சில வெளிப்படையான பாடங்களை நடத்தி, பின் இவற்றைப் பற்றி இவர்களுடன் சேர்ந்து விவாதிக்கலாமா? குழந்தைகளுக்குப் பாடம் நடக்கும் போது இப்பாடங்களுக்கு பெற்றோர்கள் வர அனுமதிக்கலாமா? அனுமதிக்கலாம். அது மட்டுமல்ல, இதைச் செய்ய வேண்டியது அவசியமும் கூட. சக ஆசிரியர்களை மட்டுமல்ல, குறிப்பாக பெற்றோர்களை இப்பாடங்களுக்கு அழைக்க வேண்டும். கல்வி சொல்லிக் கொடுப்பதும் குழந்தை வளர்ப்பும் எவ்வளவு கடினமானது, சிக்கலானது என்று அவர்கள் உணரட்டும். இது அவசியமாகும். ஆறு வயதுக் குழந்தைகளின் பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்கள்? இவர்கள் தாம் பள்ளியில் மிகவும் இளைய பெற்றோர்கள், இவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு அனுபவம் மிகக் குறைவே.

ஆனால் வியப்பு என்னவெனில், குழந்தை வளர்ப்பும் கல்வி போதிப்பதும் இவர்களுக்கு எளிய காரியமாகப்படுகின்றன. ஏன் இப்படித் தெரிகிறது? மாபெரும் ருஷ்ய ஆசிரியர் கான்ஸ் தன்தீன் திமீத்ரியெவிச் உஷின்ஸ்கி இதில் நமக்கு உதவுகிறார். குழந்தை வளர்ப்புக் கலைக்கு ஒரு சிறப்பு அம்சம் உண்டு என்றார் இவர். அதாவது கிட்டத்தட்ட அனைவருக்கும் இது தெரிந்த, புரிந்த விஷயமாக, ஒரு சிலருக்கு எளிய காரியமாகக் கூடத் தோன்றும். அவர்கள் தத்துவரீதியாகவும் நடைமுறையிலும் எவ்வளவுக்கெவ்வளவு இதைப் பற்றிக் குறைவாக அறிந்திருக்கின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு இது புரியக் கூடியதாயும் எளிதானதாயும் தோன்றும்.

இது தவறு என்று என் வகுப்புச் சிறுவர் சிறுமியரின் பெற்றோர்களுக்கு எப்படி உணர்த்துவது? நான் இவர்களை வகுப்புகளுக்கு அழைக்கப் போகிறேன்: “வாருங்கள், பாருங்கள், பின்னர் கலந்து பேசுவோம்”. அவர்களுக்கு எப்போது ஓய்வு கிடைக்குமோ அப்போது வகுப்பில் வந்து அமர நான் அனுமதி தருவேன். குழந்தைகளின் பாலான மனிதாபிமான அணுகுமுறைக் கோட்பாடுகளை நான் எப்படி நிறைவேற்றுகிறேன், எப்படிப்பட்ட முறைகளையும் வழிகளையும் பின்பற்றுகிறேன், ஒவ்வொரு குழந்தையுடனும் நான் எப்படிக் கலந்து பழகுகிறேன் என்று அவர்கள் பார்க்கட்டும். முக்கியமானது என்னவெனில், தங்கள் குழந்தை எப்படிப் படிக்கிறான், சமவயதுக் குழந்தைகளுடன் வகுப்பில் எப்படி இருக்கிறான் என்று அறிந்து கொள்ளட்டும்.

அப்போது தான் தம் குழந்தையின் வளர்ச்சி பற்றிய உண்மையான கருத்து பெற்றோர்களுக்கு உருவாகும், ஆசிரியரின் மீது நம்பிக்கை வரும். சில சமயங்களில் என்ன நடக்கிறது தெரியுமா? அந்த “அதிகாரத் தொனியுள்ள” தாய் என்னை ஒவ்வொரு நாளும் சந்தித்து தன் மகனுக்காக விசேஷ சலுகைகளைக் கோருகிறாள்: “ஏன் அவனை இரண்டாவது பெஞ்சில் உட்கார வைத்தீர்கள்? ஏன் நீங்கள் அவனிடம் அடிக்கடி கேள்வி கேட்பதில்லை? ஏன் அவனிடம் நீங்கள் அன்பாக நடந்து கொள்வதில்லை? ஏன்?…” உண்மையிலேயே நான் அக்குழந்தையிடம் பாரபட்சமாக நடந்து கொள்கிறேனா என்ற சந்தேகம் தோன்றுகிறது. விஷயத்தை வேறு விதமாக எடுத்துச் சொல்லவே பயப்படுகிறேன். ஒவ்வொரு தாய், தந்தை, பாட்டி, தாத்தாவின் நம்பிக்கையும் எனக்கு மிக மிக அவசியம். சின்ன விஷயங்களுக்காக மிக முக்கியமானவற்றிலிருந்து கவனத்தை திசை திருப்பாமலிருக்கவும் ஏதோ ஒவ்வொரு குழந்தைக்கும் என்னாலியன்ற அனைத்தையும் தராமல் இருக்கிறேனோ என்று என்னை நானே வருத்திக்கொள்ளாமல் இருக்கவும் இந்த நம்பிக்கை எனக்கு உதவும்.

வளர்ப்புப் பணி ஒரு சமுதாயப் பணியாகும். இதை ஒளிவு மறைவின்றிச் செய்ய வேண்டும். நான் மருத்துவரோ, பொறியியலரோ, பிட்டரோ, திராட்சை பயிரிடும் விவசாயியோ அல்ல. நான் ஆசிரியன், குழந்தைகளை வளர்ப்பவன். எனது துறை மிகச் சிக்கலானது, மிகவும் பொறுப்புள்ளது. ஆசிரியனும் குழந்தை வளர்ப்பாளனுமாகிய நான் எல்லோருக்கும் அவசியமானவன். குழந்தையின் முதல் ஆசிரியனாகிய என்னோடு கலந்து பேசாமல், எனது வகுப்புகளில் இல்லாமல் வேறு எங்கு இந்த இளம் பெற்றோர்கள், தமது முதல் குழந்தைகளை நவீன முறையில் வளர்ப்பதன் அடிப்படைகளைக் கற்றுக் கொள்ள முடியும்?

படிக்க:
“ காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றுவதை நிறுத்துங்கள் ” : செயல்பாட்டாளர்கள் போராட்டம் !
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !

என் வகுப்புக் குழந்தைகளின் பெற்றோர்களை நோக்கி “என் வகுப்புகளுக்கு தயவு செய்து வந்து பாருங்கள்” என்று அழைப்பு விடுக்கும்போது, இவர்களின் முன், சமுதாயத்தின் முன், எனது அர்ப்பணிப்பையும் ஆசிரியர் திறமையையும் காட்டுவதாக உறுதி ஏற்கிறேன்.

எனது வகுப்புகளுக்கு வரும் பெற்றோர்களுடன் நான் எளிதாக ஒரு பொது மொழியைக் கண்டுபிடிக்க முடியும், குழந்தைகள் வளர்ப்பு பற்றிய கருத்தொருமித்த திட்டத்தைத் தீட்ட முடியும் என்று அனுபவம் காட்டுகிறது.

நான் இன்னமும் ஒரு படி முன் செல்லத் தீர்மானித்தேன் – தம் குழந்தைகளைப் பள்ளியில் வளர்க்க வருமாறு பெற்றோர்களுக்கு அழைப்பு விடுத்தேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க