Saturday, May 30, 2020
முகப்பு செய்தி இந்தியா கல்புர்கி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் !

கல்புர்கி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் !

இந்து பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் ‘சா(ஸ்)த்திர தர்மா சாதனா’ என்கிற நூலால் தூண்டுதல் பெற்ற குழு இப்படுகொலையை நிகழ்த்தியதாக புலனாய்வு தகவல் தெரிவிக்கிறது.

-

ழுத்தாளரும் ஆய்வாளருமான எம்.எம். கல்புர்கி கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலையைச் செய்த கணேஷ் மிஷ்மினுக்கு, கவுரி லங்கேஷ் படுகொலையிலும் தொடர்பிருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகளாக நடந்துவரும் கல்புர்கி கொலை வழக்கில், ஹூப்ளி தார்வாட் மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு சனிக்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

எம்.எம். கல்புர்கி
எம்.எம். கல்புர்கி

இந்தக் குற்றப்பத்திரிகையில் அமோல் காலே, பிரவீன் பிரகாஷ் சதுர், வாசுதேவ் பகவான், சூர்யவம்சி, சரத் கலாஸ்கர், அமித் ராமச்சந்திர பாதி ஆகியோர் மீதும் குற்றம்சாட்டியிருக்கிறது சிறப்பு புலனாய்வுக் குழு.

இந்து பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் ‘சா(ஸ்)த்திர தர்மா சாதனா’ என்கிற நூலால் தூண்டுதல் பெற்று இந்தக் குழு படுகொலைகளை நிகழ்த்தியதாகவும் புலனாய்வு தகவல் தெரிவிக்கிறது.

கல்புர்கி 2014-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி பெங்களூரு விக்யான் பவனில், ‘மூடநம்பிக்கையில்லாத சமூகத்தை நோக்கி : கர்நாடக மூடநம்பிக்கை தடுப்பு மசோதா – 2013 நடைமுறைப்படுத்துவது குறித்த ஒரு விவாதம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதுதான் இந்த இந்துத்துவ பயங்கரவாத குழு கல்புர்கியை கொலை செய்யக் காரணமாக அமைந்தது எனவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது.

அவருடைய பேச்சின் அடிப்படையில், இந்த பயங்கரவாதிகள் அவரை ‘சாஸ்திர தர்மா சாதனா’வில் குறிப்பிட்டுள்ள ‘துர்ஜனம்’ (பிசாசின் அவதாரம்) என சித்தரித்திருக்கின்றனர்.

“இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கல்புர்கியை கொல்ல சதித்திட்டம் தீட்டினர். திட்டமிட்டப்படி அவரை கொலை செய்து தங்களுடைய இலக்கையும் நிறைவேற்றினர்” என சிறப்பு புலனாய்வுக் குழு கூறியுள்ளது.

படுகொலைக்கு திட்டமிட்ட குழு, ஒரு பைக்கை திருடி, கல்புர்கியை உளவு பார்க்க பயன்படுத்தியிருக்கின்றனர். தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள பிலதபெட்டு என்ற கிராமத்தில் இருந்த ரப்பர் தோட்டத்தில் துப்பாக்கி சுட பயிற்சியும் எடுத்துக்கொண்டனர்.

படிக்க:
கவுரி லங்கேஷ் , கல்புர்கி படுகொலை : ரப்பர் தோட்டத்தில் பயிற்சி எடுத்த சனாதன் சன்ஸ்தா !
♦ தியேட்டரில் குண்டுவைத்தது எப்படி ? சனாதன் சன்ஸ்தா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் !

“பைக்கை திருடிக்கொண்டு பிரவீன் சதுர் மற்றும் கணேஷ் மிஷ்கின் ஆகிய இருவரும், கல்புர்கியின் வீட்டுக்கு 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ம் நாள் காலை 8.30 மணியளவில் சென்றனர். வீட்டுக்குள் சென்ற கல்புர்கியை கணேஷ் மிஷ்கின் நெற்றியில் இரண்டு முறை சுட்டு, அவரைக் கொன்றார்” என சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை கூறுகிறது.

இதே குழு, இரண்டாண்டுகள் கழித்து, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை 2017, செப்டம்பர் 5-ம் தேதி மாலையில், அவருடைய வீட்டுக்கு வெளியே அவரை சுட்டுக் கொன்றது.

பகுத்தறிவாளர்கள் கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட அதே பாணியில், கர்நாடகத்தில் நிகழ்ந்த இந்த இரு படுகொலைகளையும் கண்டித்து தேசிய அளவில் போராட்டங்கள் வெடித்தன.

கவுரி கொலை வழக்கில் மிஷ்கின் பைக்கை ஓட்டிவர, பரசுராம் வாக்மோர் அவரை சுட்டுக்கொன்றார்.

MM kalburgi - Gauri - Webகவுரியை கொன்ற அதே தோட்டாக்கள், கல்புர்கி கொலையிலும் பயன்படுத்தப்பட்டது, நாட்டு ரக துப்பாக்கியை சுட பயன்படுத்தியதும் இந்தக் கொலைகளுக்கு பின்னணியில் ஒரே பயங்கரவாத அமைப்பே காரணமாக இருந்தது என்பதையும் சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்தது.

கவுரி லங்கேஷ் கொலையை விசாரித்த அதே குழு, கல்புர்கி கொலையையும் விசாரிக்கும் என உச்சநீதிமன்றத்தில் 2019-ல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விசாரித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது புலனாய்வுக் குழு.

கொலைக்கு பின்னணியாக இருந்த சித்தாந்தம், கொலைக்கான நோக்கம், கொலையை திட்டமிட்டது, பயிற்சி எடுத்தது, அதை செயல்படுத்தியது என பயங்கரவாத அமைப்புக்கான அத்தனை கூறுகளோடு சனாதன் சன்ஸ்தா பயங்கரவாதிகளை வளர்த்துள்ளது. இன்னமும் சுதந்திரமாக வளர்த்துக் கொண்டுள்ளது.

தனிநபர்களை தீவிரவாதிகளாக கைது செய்து தண்டிக்க சட்ட இயற்றும் அரசு, சமூகத்தின் மதிப்பிற்குரியவர்களை திட்டமிட்டு கொல்லும் ஒரு பயங்கரவாத அமைப்பை தடை செய்யவில்லை.

ஆளும் அரசுக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் உள்ள உறவு அத்தகையது. இதில், குற்றப்பத்திரிகை தாக்கலான போதும் மேலதிக நீதியை நாம் எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

வினவு செய்திப் பிரிவு
அனிதா
நன்றி
: தி வயர்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க