பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் குண்டுவெடிப்புகளையும் படுகொலைகளையும் செய்துவிட்டு சுதந்திரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு. பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை வழக்கில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். முற்போக்காளர்கள் கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகியோரின் படுகொலைகளுக்கும் இந்த அமைப்பே காரணம் என விசாரணை தெரிவிக்கிறது. மகாராஷ்டிரத்தில் 2008-ஆம் ஆண்டு அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த வழக்கில் சனாதன் சஸ்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்பு குறித்து இந்தியா டுடே டி.வி. சிறப்பு புலனாய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது. அதில், சனாதன் சன்ஸ்தா தீவிரவாதிகள் எப்படி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினார்கள் என்பதை விவரிக்கிறார்கள். இந்தியா டுடே வெளியிட்ட வீடியோ ஆதாரத்தின் வெளியான முக்கியமான தகவல்கள் இங்கே…

***

னாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த ஹரிபாவ் கிருஷ்ண திவேகர் மற்றும் மங்கேஷ் தின்கர் நிவாம் 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் தானே, பன்வெல், வாஷி ஆகிய இடங்களில் உள்ள தியேட்டர்களில் குண்டு வைத்ததை ஒப்புக்கொள்கிறார்கள்.  இந்துத்துவம் தொடர்பான ஆட்சேபணைக்குரிய கருத்துக்களை சில சினிமாக்களும் நாடகங்களும் சொல்வதாக சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள், 2008-ல் குண்டு வெடிப்புகளை நடத்தியதாக  மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவு தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் சொல்லப்பட்டிருந்தது.

சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த ஹரிபாவ் கிருஷ்ண திவேகர் (இடது) மற்றும் மங்கேஷ் தின்கர் நிவாம்.

ஏழு வருட விசாரணைக்குப் பின் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மங்கேஷ் தின்கர் நிவாம், 2008-ஆம் ஆண்டு தானே, பன்வெல், வாஷி ஆகிய இடங்களில் குண்டு வைத்ததாக ஒப்புக்கொண்டார். சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த பிரச்சாரகராக கருதப்படும் மங்கேஷ், வாஷி தியேட்டரில் நடத்தப்பட்ட நாடகம் ஒன்றில் இந்துக் கடவுள்கள் தவறாக சித்தரிக்கப்பட்ட காரணத்தால் அந்த தியேட்டரில் குண்டு வைத்ததாக சொல்கிறார்.

“நான் வாஷியின் அந்த இடத்தில் குண்டு வைத்துவிட்டு வந்துவிட்டேன். இதுதான் எனக்கு தரப்பட்ட வேலை” என்கிறார் இந்தியா டுடே புலனாய்வில்.

“இந்து கடவுள்களுக்கு எதிராக அவர்கள் நாடகம் போடுவதை போராட்டத்தின் மூலம் தடுக்கப் பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை. எனவே பயமுறுத்துவதற்காக நாங்கள் குண்டு வைத்தோம்” என்கிற மங்கேஷ், தான் சனாதன் சன்ஸ்தா அமைப்பில் இருப்பதை ஒப்புக் கொள்கிறார். 2000-ஆண்டிலிருந்து இந்த அமைப்பில் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

படிக்க:
இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!
குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!

மகாராஷ்டிர மாநிலம் பன்வெல்லில் உள்ள சனாதன் சன்ஸ்தா ஆசிரமத்தில்தான் குண்டு வைப்பதற்கான திட்டம் போடப்பட்டதாகவும் அவர் சொல்கிறார்.

சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த மற்றொருவரான ஹரிபாவ் கிருஷ்ண திவேகர், மூன்று வருட விசாரணைக்குப் பின், இந்த குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி விடுவிக்கப்பட்டவர். இந்தியா டுடே புலனாய்வு குழுவிடம் வெடிப்பொருட்களை தான்தான் உருவாக்கியது என ஒப்புக் கொண்டிருக்கிறார். மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவினரிடம் தன்னிடமிருந்த வெடிபொருட்களை தந்ததாகவும் இவர் சொல்கிறார்.

“அப்போது என்னிடம் இரண்டு துப்பாக்கிகளும் டெட்டனேட்டர்களும் இருந்தன. ஜெலட்டின் குச்சிகள், டிஜிட்டல் மீட்டர்களையும் அவர்களிடம் கொடுத்தேன். 20 ஜெலட்டினும் 23 டெட்டனேட்டர்களும் கொடுத்திருப்பேன். அவர்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றார்கள்” என்கிறார்.

தீவிரவாத தடுப்புப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ரமேஷ் ஹனுமந்த கட்காரி, மங்கேஷ் தின்கர் நிகாம், விக்ரம் வினய் பவே, சந்தோஷ் சித்தாராம் அங்ரே, ஹரிபாவ் கிருஷ்ண திவேகர், ஹேமந்த் துகாராம் சால்கே ஆகிய ஆறு பேர் மீது ஜனவரி 2008 முதல் ஜூன் 2008 வரை நடந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டவர்கள் என கூறப்பட்டிருந்தது. பாலிவுட் படமான ஜோதா அக்பர் மற்றும் மராத்திய நாடகமான ‘அம்ஹி பாச்புட்’ (பாச்புட் என்பது ஒரு சாதியைக் குறிக்கிறது) நிகழ்த்தப்பட்ட தியேட்டர்களில் குண்டு வைப்பது இவர்களுடைய நோக்கம்.

படிக்க:
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!
காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் ! புதிய கலாச்சாரம் மின்னூல்

2011-ஆம் ஆண்டு கட்காரி மற்றும் பவே இருவரையும் குற்றவாளிகள் என சொன்னது. மற்ற நால்வரும் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட நால்வரில் இருவர் குண்டுவைத்தது நாங்கள்தான் என ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்தியா டுடே புலனாய்வு ஆதாரங்களுடன் வெளியான பின், மராட்டியத்தை ஆளும் பா.ஜ.க. அமைச்சர் இதுகுறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்கிறார். சனாதன் சன்ஸ்தா அமைப்பை தடை செய்வீர்களா என்கிற கேள்விக்கும் அதே பதில்.

முன்னாள் மராட்டிய முதல்வர் பிருத்வி சிங் சவுகான், சனாதன் சன்ஸ்தா அமைப்பை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என சொல்கிறார். “நான்கு படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளன. தானே மாவட்டத்தில் ஒரு குண்டு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவாவில் சனாதன் சன்ஸ்தா அமைப்பு குண்டு செய்யும்போது பிடிபட்டுள்ளது. படுகொலைகள் செய்யும் ரகசிய அமைப்பாக உள்ள ஒரு அமைப்பு எப்படி இத்தனை பகிரங்கமாக இயங்க முடிகிறது? யார் இந்த அமைப்பை காப்பாற்றுகிறார்கள்? இத்தனை விஷயங்களையும் பின்னணியில் இருந்து இயக்கும் நபரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?” என கேள்வி எழுப்புகிறார்.

படிக்க:
கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?

சனாதன் சன்ஸ்தா குறித்து எழுதியதற்காக மிரட்டலுக்கு ஆளான நிகில் வாக்லே, “இந்தியா டுடே முக்கியமான ஆதாரத்தை கொண்டு வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சனாதன் சன்ஸ்தாவின் தீவிரவாத நடவடிக்கைகளை நான் அறிவேன். இது ஆன்மிக அமைப்பல்ல, இது ஒரு பயங்கரவாத அமைப்பு” என்கிறார்.

வழக்கம்போல, இந்தியா டுடே வெளியிட்ட வீடியோ ஆதாரங்களை ஜோடிக்கப்பட்டவை எனக் கூறுகிறது சனாதன் சன்ஸ்தா. குற்றவாளி எப்போதும் குற்றத்தை ஒப்புக்கொள்வதில்லை.

வினவு செய்திப் பிரிவு காங்கிரஸ் கட்சியும் செயல்பாட்டாளர்களும் குண்டுவெடிப்பு வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இந்துத்துவ சர்காரின் பூரண ஆசி கிடைத்திருக்கிறது என்பதாலேயே இத்தனை ஆதாரங்கள் வெளியான பின்னும் சனாதன் சன்ஸ்தா அமைப்பு தீவிரவாத ஆன்மீக சேவை ஆற்றிக்கொண்டிருக்கிறது. அவர்களிடமே ‘தடை செய்யுங்கள்; கைது செய்யுங்கள்; விசாரியுங்கள்’ என கேட்பது, வெறும் புலம்பலாகத்தான் இருக்க முடியும்!

செய்தி ஆதாரம்:
Exclusive: Video tapes reveal how Sanatan Sanstha workers planted bombs

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க