ரேந்திர தபோல்கர் என்ற பகுத்தறிவாளர் வாழ்நாள் முழுவதும் மூட நம்பிக்கைக்கு எதிராக போராடி வந்தவர். அதனாலேயே ஆர்.எஸ்.எஸ்.-சிவசேனா கொலைகார கும்பலால் படுகொலை செய்யப்பட்டவர். 2013 ஆகஸ்ட் 20ம் தேதி காலை நடைபயிற்சியில் இருந்த 67 வயதான அந்த தோழர் கொல்லப்பட்ட நிகழ்வு ஒரு கொடூரம் என்றால், அந்த கொலைக்கான முக்கிய குற்றவாளிகள் இன்றுவரை கைது செய்யப்படாதது அதை விடக் கொடூரமானது.
தனது தந்தையைக் கொன்ற முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என அவரது மகன் டாக்டர் ஹமீது தபோல்கர் குற்றம் சுமத்துகிறார். இதனால் முற்போக்கு, பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்கள் கொல்லப்படும் ஆபத்து இன்னும் நீடிக்கிறது என்று விளக்கமாகக் கூறுகிறார்.
நரேந்திர தபோல்கர் எழுதிய ஒரு நூலைப் பற்றிய ஒரு அறிமுகம்தான் இந்த கட்டுரை. மூட நம்பிக்கைக்கு எதிராகவும், பகுத்தறிவுப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு தோழர்களும் எதிர் கொள்கின்ற விசயங்களைப் பற்றி கட்டுரை பேசுகிறது. குறிப்பாக பார்ப்பன பாசிசக் கொடூரம் இன்று ஆட்சியில் இருக்கின்ற இந்த தருணத்தில் இது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது !
படிக்க :
♦ கௌரி லங்கேஷ் – தபோல்கர் கொலை வழக்கு : வழக்கறிஞர் உட்பட இருவர் கைது !
♦ பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை !
’காரணம் பற்றிய விவகாரம் : மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தைப் புரிந்து கொள்வோம்’ என்ற இந்த நூல் தோழர் தபோல்கர் அவர்களால் மராட்டிய மொழியில் எழுதப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது மூடநம்பிக்கை ஒழிப்பின் தேவையை வலியுறுத்தும் அதே வேளையில் இவரது அமைப்பான ‘அந்தாஷ்ரத்தா நிர்மூலன் சமிதி’ அமைப்பின் போராட்ட வரலாற்றையும் பதிவு செய்துள்ளது. அது பற்றி இந்த ஆங்கில நூல் வெளிவந்த காலத்தில் 2018ல் ஓர் அறிமுகமாக எழுதப்பட்டதுதான் இந்தக் கட்டுரை. அதன் சுருக்கத்தை கீழே காணலாம்.
000
அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி (ANiS – ‘அனிஸ்’) இந்து மதத்தை மட்டும்தான் எதிர்க்கிறதா?
’அனிஸ்’ – இந்து மதத்தை மட்டுமே எதிர்க்கிறது என்ற ஒரு கருத்தைப் பரப்பி ‘அனிஸ்’ செயல் வீரர்களது நடைமுறை மீது ஒரு அவநம்பிக்கையை உருவாக்குவதே இந்தக் கேள்வியின் நோக்கம். மூட நம்பிக்கையை எதிர்க்கின்ற, இந்தியாவில் உள்ள எல்லா பகுத்தறிவு இயக்கங்களும் இதே கேள்வியை எதிர்கொள்கின்றன. நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்களின் மதச் செயல்பாடுகள் மீது கேள்வி எழுப்பும் விமர்சனக் கண்ணோட்டத்தை இப்படிப்பட்ட இயகங்கள் ஏற்படுத்துகின்றன.
பழமையான மதச் சடங்குகளை கவனமாக கடைப்பிடிப்பவர்கள், தாங்கள் கடைப்பிடிப்பதுதான் உண்மையான மதம் என நம்புகின்றனர். இது பற்றிய விமர்சனப் பார்வையை உருவாக்கும் ‘அனிஸ்’-சின் செயல்பாட்டால் தமக்கு ஆபத்து என உணர்கின்றனர். இந்த சிந்தனையை முறையை உள்வாங்கும் மக்கள் மதச் சடங்குகளை கேள்வி கேட்பதில் தொடங்கி மதத்தையே கேள்விக்குள்ளாக்கத் தொடங்குகிறார்கள். பழமை மத நம்பிக்கையாளர்கள் இதைத் தவிர்ப்பதற்காக மக்களை அனிஸ்-சிடமிருந்து தள்ளிவைக்க விரும்புகின்றனர். இதனாலேயே நாம் இந்து மதத்தை மட்டுமே எதிர்ப்பதாக வலிந்து அவதூறு பரப்புரையை செய்யத் தொடங்குகிறார்கள். இதில் ஏதும் உண்மை உள்ளதா? கீழுள்ளதைப் பாருங்கள்:
மத நம்பிக்கை ஒரு வியாபாரம் என்றால் அந்த வியாபாரத்தில், மூட நம்பிக்கை என்பது ஒரு கள்ளச் சந்தை. இந்த கள்ளச் சந்தை வியாபாரிகள் (மூட நம்பிக்கையைப் பரப்புபவர்கள்) எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து யாருக்கும் கவலை இல்லை. குறிப்பாக ‘அனிஸ்’ அமைப்பினர் கவலைப்படவில்லை.
மதத்தை வைத்து சுரண்டுவதை, ‘அனிஸ்’ அமைப்பு எப்போதும் எதிர்க்கிறது. மத பிரச்சாரகரை கடவுள் நிலைக்கு உயர்த்தி, தம்மை அவருக்கு அடிமையாக்குவதையும் மதச் சடங்குகள் என்ற பெயரில் மூட நம்பிக்கையை பரப்புவதையும் கடுமையாக எதிர்க்கிறது. இந்த சுரண்டல் வியாபாரத்தை எதிர்க்க அனிஸ் அமைப்பு தமக்கே உரிய பல வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறது.
அது பல இசுலாமிய பாபாக்கள் மற்றும் புவாக்களை எதிர்த்துப் போராடியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, ‘அனிஸ்’ அமைப்பு தமது இதழ்களில் இவை பற்றி விரிவான செய்திகள் வந்துள்ளதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
தமது பிரச்சாரத்தால் குருடர்கள் பார்க்கிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், வாய் பேசாதவர்கள் பேசுகிறார்கள் என பிரச்சாரம் செய்யும் கிறித்தவ பாதிரியார்களை எதிர்த்து போராடியுள்ளது.
இந்த அமைப்பு ஜைன மதத்தவர்களின் பொருளற்ற பெரும் செலவினம் பிடிக்கும் ஆடம்பர சடங்குகளை எதிர்த்துப் போராடி வருகிறது. பல்டன் வட்டாரத்தில் உள்ள ஒரு கிராம கோயிலில் தமது தலைகளை சுவற்றில் மோதுகின்ற சடங்கைச் செய்யும் – தம்மை புத்த மதத்தினர் என கூறிக் கொள்ளும் – நபர்களுக்கு எதிராகவும் போராடியுள்ளது. மீண்டும் சொல்கிறேன், எமது அனிஸ் அமைப்பின் பல்வேறு மத மூட நம்பிக்கைக்கு எதிரான போராட்டங்களை அனிஸ் வெளியிட்டுள்ள பல இதழ்களில் படித்துத் தெரிந்து கொள்ள முடியும் என தபோல்கர் கூறுகிறார்.
பெரும்பாலான மூடநம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டம் இந்து மதம் சார்ந்ததுதான். ஆனால் இந்திய மக்கள் தொகையில் 80% பேர் இந்து மதத்தில் இருப்பதால் இதை தவிர்க்க இயலாது. இதன் விளைவாக அனிஸ் அமைப்பு நடத்திய 80% போராட்டம் இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கையை எதிர்த்தே நடந்துள்ளது. இது பெரும்பான்மையானதுதான்!
வெளியாட்கள் தமது மத மூட நம்பிக்கையை கேள்வி கேட்டால் மக்கள் ஆத்திரமடைகின்றனர். ஒரு சாதியினரின் மூட நம்பிக்கையை வேறு சாதியினர் விமர்சித்தால் கூட ஆத்திரமடைவதும், பகை உணர்வு கொள்வதும் நடக்கிறது. பார்ப்பனர்களின் பூணூல் சடங்கு, மராத்தாக்களிடம் உள்ள விதவைத் திருமண எதிர்ப்பு, தாங்கர் சாதியினரிடம் விழாக்களின் போது விலங்குகளைப் பலியிடுவது போன்ற மூட நம்பிக்கைகளை பிற சாதியினர் விமர்சித்தால் கூட சகித்துக் கொள்ளாதது மட்டுமின்றி அது அமைதியின்மையை உருவாக்குகிறது. மக்கள் தொகையில் 80% இருப்பதால் அனிஸ் அமைப்பின் செயல்பாட்டாளர்களிலும் பெரும்பான்மையினர் இந்துக்களே. இயல்பாகவே இந்து செயல்பாட்டாளர் இசுலாமிய மூட நம்பிக்கையை கேள்வி கேட்டால் இசுலாமியர் மனதளவில் பாதிப்படைவார்.
படிக்க :
NEP -2020 : ஒளிந்திருக்கும் சாதியமும் ஆணாதிக்கமும் | பேரா. அனில் சத்கோபால்
நூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு
இந்து சமூகத்திலும் மதத்திலும் மட்டுமே சாதி அடுக்குமுறை உள்ளது. இந்துக்களிடையே சுமார் 6000 முதல் 6500 சாதிகள் உள்ளன. சொல்லப் போனால் மதத்தைவிட சாதிக்குதான் அதிக முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு சாதியும் தமக்கே உரிய தனிச் ‘சிறப்பான’ சடங்கு – சம்பிரதாயங்களையும், பழக்க – வழக்கங்களையும், பாரம்பரியங்களையும், இது போல பலவற்றையும் கொண்டுள்ளன. இவை கடந்த காலங்களில் சில நேரம் பயனுள்ளதாகவும் தேவையானதாகவும் கூட இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு இவையெல்லாம் பயனற்ற வெற்று சடங்கு, பழக்கம், பாரம்பரியமாக மட்டுமின்றி வெறும் மூட நம்பிக்கைகளாக மட்டுமே உள்ளன.
மற்ற மதங்களைப் போல் இல்லாமல் இந்து மதத்தில் வகை தொகையில்லாமல் கடவுளர்களும் புராண-இதிகாச-வேத நூல்களும் மலிந்துள்ளன. 2000 ஆண்டு பழமையான கிறித்துவ மதத்தில் ஒரு கடவுள், ஒரு புனித நூல் மட்டுமே உண்டு. பிதா, சுதன், பரிசுத்த ஆவி என மூன்றாகச் சொல்லிக் கொண்டாலும் இந்த மூன்றும் குறிப்பிடுவது ஒன்றை மட்டுமே. சுமார் 1400 ஆண்டுகால இசுலாமிய மதம் ஒரே ஒரு கடவுளையும், ஒரு இறை தூதரையும், ஒரு புனித நூலையும் மட்டுமே கொண்டு உள்ளன.
மிக பழைமையானது, அனாதியானது என சொல்லிக் கொள்ளப்படும் இந்து மதத்தில் வகைதொகையில்லாத ஆண், பெண் கடவுள்களும், எண்ணற்ற மத நூல்களும், கணக்கிலடங்கா பழக்கங்களும், பாரம்பரியங்களும் இருப்பதால் இந்து மதமானது மூட நம்பிக்கைகளை உருவாக்குவதற்கான வளமான இடமாக உள்ளது.
இங்கே ஒரு முக்கியமான உண்மையை கருத்தில் கொள்ள வேண்டும். இந்து மதம் உருவெடுத்து வரும் போக்கில் மூட நம்பிக்கைகளை இரக்கமற்று விமர்சித்த பல முக்கிய சமூக சீர்திருத்தவாதிகளும் இருந்துள்ளனர். 3500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த சார்வாக மற்றும் லோகாயதவாத தத்துவங்கள் ஆகியவை தெளிவாகத் தெரிகின்ற உதாரணங்களாகும்.
மஹாராட்டிர மாநிலத்தில் மட்டுமே மகாத்மா பூலே, சாஹு மகராஜ், லோகிதவாடி அகர்கர், டாக்டர் அம்பேத்கர், வி.டி.சாவர்கர், பிரபோதங்கர் தாக்ரே மற்றும் காட்கே பாபா என சமீபகால இந்து சீர்திருத்தவாதிகளைப் பட்டியலிடலாம். இந்த சீர்திருத்தவாதிகளின் கற்பித்தவை ஒரு மதத்திற்கு மட்டும் என்றில்லாமல் மனித குலம் முழுமைக்குமே மனித தன்மையுடன் விழிப்போடிருக்க கூறினாலும் ஆகப் பெரும்பான்மையாக, இந்துக்களைப் பார்த்துக் கூறியவைதான்.
வி.டி.சாவர்க்கர் மேற்கொண்ட மத நூல்களை இரக்கமற்ற முறையில் ஆராய்ச்சி செய்ததைப் பற்றி இங்கு தபோல்கர் குறிப்பிடுகிறார். மிக முக்கியமாக, அவரது ஆதரவாளர்களால் ‘இந்து இதயங்களை ஆள்பவர்’ என்று புகழப்படுவதால் இங்கு சிறப்பாக குறிப்பிட வேண்டும் என்று தபோல்கர் குறிப்பிடுகிறார். மத நூல்களை அவர் இரக்கமின்றி ஆராய்ந்தது, மூடநம்பிக்கைகளை ஒழிக்க முயற்சித்த இந்து சமூக சீர்திருத்தவாதிகளின் நீண்ட பாரம்பரியத்தை விளக்குகிறது. பிரார்த்தன சமாஜம் போன்ற முற்போக்கு இந்து சமயப் பிரிவுகள், ஒரே ஒரு கடவுள் தான் என்றும், அவரிடம் பிரார்த்தனை செய்ய ஒரு சடங்கு அல்லது அனுமதி தேவையில்லை என்றும் கூறின.
எல்லா மதங்களைச் சேர்ந்த மத நூல்களைப் பற்றி சாவர்க்கர் கூறியிருப்பது பற்றி :
“வேதங்கள், அவெஸ்தாக்கள், பைபிள், குரான் என ’புனித’ நூல்களில் இருக்கும் வார்த்தைகளை அப்படியே நம்புவதற்கு பதில் தனது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நூல்கள் மனிதர்கள் உருவாக்கியவை. அவற்றை அதற்குறிய தன்மையுடன் படிக்காமல் அப்படியே நம்புவது மதம் கூறியவற்றை அப்படியே குருட்டு மனப்பாடமாக ஒப்புவிப்பதுஆகும்.
நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் கேள்விக்கு இடமற்ற மதத்தின் பிடியில் ஐரோப்பா அடிமைப்பட்டுக் கிடந்தது. அதற்குப் பின் பைபிளில் இருந்து தன்னை தூரமாக விலக்கிக் கொண்டு அறிவியலைப் பற்றிக் கொண்டு நடக்கத் தொடங்கியது. ஸ்ருதி – ஸ்மிருதி – புராணங்களின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற ஐரோப்பா இன்றைய தேதி வரை நவீனமாக உள்ளது. நம்மை விட நாலாயிரம் ஆண்டுகள் முன்னேறி உள்ளது. அது மூன்று கண்டங்களை கைப்பற்றியுள்ளது! இந்திய தேசம் ஐரோப்பாவைப் போல் இருக்க வேண்டும் என்று நோக்கமாகக் கொண்டிருந்தால், அது பண்டைய சகாப்தத்தின் ‘புத்தகத்தை’ மூட வேண்டும், ஸ்ருதி, ஸ்மிருதி மற்றும் புராணங்களின் மேலாதிக்கத்தை மறந்து, அவற்றை நூலகங்களில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் மற்றும் அறிவியல் யுகத்தில் நுழைய வேண்டும்.
அந்த பழைய, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைச் சொல்வதற்கு மட்டுமே இவை பொருத்தமானவை. புறநிலை உண்மையையும் அதை சோதித்து அறிகின்ற ஆற்றலையும் கொண்ட அறிவியல் மட்டுமே இன்றைக்கு எது தேவையானது, பொருத்தமானது என்பதை தீர்மானிக்கும் அடிப்படையாக உள்ளது. இந்த அறிவியல் நவீனம் கடந்த கால அனுபவங்களில் பயனுள்ளதாக இருந்த அனைத்தின் சாராம்சத்தையும் கொண்டுள்ளது; ஆனால் ஸ்ருதி – ஸ்மிருதி – புராணத்தில் நவீன அறிவு ஒரு துளி கூட இருக்க முடியாது. எனவே, நாம் இன்றைய தேதிக்கு நவீனமாக இருக்க வேண்டும். ஒரு விஷயம் நல்லதா கெட்டதா, சீர்திருத்தம் நன்மை பயக்குமா இல்லையா என்பதற்கு, இனிமேல், ஒரு சோதனையின் அடிப்படையில் மட்டுமே, அதாவது இன்று அது பயனுள்ளதாக இருக்கிறதா அல்லது பயனற்றதாக இருக்கிறதா என்பதிலிருந்து பதிலளிக்கப்பட வேண்டும். வேத வாக்கியங்களால் இது அனுமதிக்கப்படுகிறதா என்ற கேள்வியை ஒருபோதும் கேட்கக்கூடாது.” இவ்வாறு கூறுகிறார் சாவர்க்கர்.
மதத்தை தமது சொந்த அரசியல் சுயநலத்திற்கு பயன்படுத்துகின்ற சக்திகள் இன்று மஹாராஷ்ட்ராவிலும் இந்தியாவிலும் உள்ளன. இந்து மதத்திற்கு மொத்த குத்தகைதாரர்கள் தாங்கள்தான் என கருதிக் கொள்கின்றனர். இந்து மதத்தில் எந்த சீர்திருத்தங்கள் அவசியம், எவை தேவையில்லை என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தங்களுக்கு மட்டுமே உண்டு என்று அவர்கள் கூறுகின்றனர். ‘அனிஸ்’ ஒரு முற்போக்கான அமைப்பு, மற்றும் அதன் ஆர்வலர்கள், அவர்கள் எந்த மதம் மற்றும் சாதியில் பிறந்தார்களோ அந்த சாதி, மதங்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அவர்கள் மதத்தைப் பற்றி பேசுவதில்லை, ஒரு அர்த்தத்தில் அதைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.
இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் சில இந்து அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள் மதத்தின் மீது காட்டும் அலட்சியத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவை எந்த மதப் பிரச்சினைகளை பற்றிப் பேச வேண்டும், எதைப் பற்றி பேசுவது தடை செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய கட்டளைகளை அவை வெளியிடுகின்றன. அவர்கள் தங்கள் ஆணைகளைப் பின்பற்ற மக்களை அச்சுறுத்துகிறார்கள். இந்து மதத்தின் பாதுகாவலர்கள் தாங்கள்தான் என அவர்கள் தங்களின் ஏகபோகத்தை அறிவித்துக் கொள்கின்ற வழியாகும். ஏ.என்.ஐ.எஸ் (அனிஸ்) இந்த ஏகபோகத்தை அங்கீகரிக்கவில்லை, அங்கீகரிக்கத் தேவையுமில்லை.
ஏனென்றால் அத்தகைய குறுகிய சுய – பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாவலர்கள் மற்றும் எதேச்சதிகாரவாதிகள் தாராளவாத, சகிப்புத் தன்மை மற்றும் நெறிமுறைகொண்ட இந்து மதத்தின் பேச்சாளர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்று அது உணர்கிறது. அவர்கள் அனைத்து இந்துக்களினதும் செய்தித் தொடர்பாளர்களாக இருக்க மாட்டார்கள், ஒருபோதும் இருக்க மாட்டார்கள்.
இரண்டாவதாக, அனிஸ்-இன் பெரும்பாலான செயல் வீரர்கள் இந்து பெற்றோருக்குப் பிறந்தவர்கள், அவர்கள் வேறு எந்த மதத்திற்கும் மாறவில்லை என்ற அர்த்தத்தில் இந்துக்கள். எனவே இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளைப் பற்றி பேச அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் இந்த உரிமையை இந்துத்துவவாதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு எந்த காரணமும் இல்லை.
படிக்க :
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி
ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை !
‘அனிஸ்’ (ஏ.என்.ஐ.எஸ்) அமைப்பு, அதன் வேலை பொருத்தமானது, விரும்பத்தக்கது மற்றும் அத்தியாவசியமானது என்று நம்புகிறது. சில இந்துக்கள் கூட இந்த வேலை செய்யப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆயினும் கூட, இந்து மூடநம்பிக்கைகளை மட்டும் நாம் ஏன் ஒழிக்க முயல்கிறோம் என்று அவர்கள் கேட்கிறார்கள். அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது அவர்களின் மனதில் உள்ள குழப்பம் தெளிவாக உள்ளது.
மூடநம்பிக்கை என்பது ஒரு வீட்டில் உள்ள குப்பைகளைப் போன்றது. நமது தேசம் பத்து அறைகள் கொண்ட வீடு என்று ஒரு கணம் வைத்துக் கொள்வோம். எனவே, 80% மக்கள் தொகை கொண்ட மதம் எட்டு அறைகளைக் கொண்டிருக்கும். மக்கள் தொகையில் 12 முதல் 13% கொண்ட இஸ்லாமிய மதம் ஒரு அறையைப் பெறும். மீதமுள்ள ஒரு அறை இந்து அல்லாத, முஸ்லீம் அல்லாத மக்களுக்கு செல்லும். இப்போது, அனிஸ், அதன் சொந்த செலவில், வீட்டின் இந்த பத்து அறைகளில் எட்டை சுத்தம் செய்தால், வீட்டின் முக்கிய பகுதி, வெளிப்படையாக, குப்பை இல்லாமல் இருக்கும். ‘ஒன்பதாவது’ அறையை முதலில் சுத்தம் செய்யாவிட்டால், மற்ற எட்டு அறைகளைத் தொட யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை எடுப்பது நியாயமற்றதல்லவா?
மூடநம்பிக்கைகளை ஒழிப்பது சந்தேகத்திற்கு இடமின்றி இந்துக்களின் நலனுக்கு உகந்தது. அதை எதிர்ப்பது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும். அனிஸ்-ஐ எதிர்ப்பவர்கள், இந்து மதத்தை மூட நம்பிக்கைகளில் இருந்து அகற்றுவது இந்து பெருமிதத்தை பலவீனப்படுத்தும் எனவும் அதே நேரம் இசுலாமியர்கள் மூடநம்பிக்கையில் மூழ்கி கடுங்கோட்பாட்டு மத வெறியர்களாக இருப்பார்கள் என்ற அபத்தமான கருத்தையும் வளர்த்துக் கொண்டுள்ளனர்.
கடுங்கோட்பாளர்களாகவும் மதவெறியர்களுமாகவும் உள்ள இசுலாமியர்கள் பின்னர் மத மோதல்களின் போதெல்லாம் மெலிந்த இந்துக்களை எளிதாக தோற்கடித்து விடுவார்கள் என்ற கருத்தையும் கொண்டுள்ளனர். இத்தகைய அற்பமான மற்றும் ஏமாற்றும் வாதங்களை முன்வைப்பவர்களைப் பற்றி ஒருவர் பரிதாபப்பட மட்டுமே முடியும்.
’அனிஸ்’ வெறுமனே இந்து மூடநம்பிக்கைகளை மட்டுமே அம்பலப்படுத்தவில்லை. இசுலாமிய மூடநம்பிக்கைகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. புனே அருகில் கமர் அலி தர்வேஷ் தர்கா-வில் நீண்டகாலமாக நீடித்து வந்த ஒரு மூட நம்பிக்கையை ஒழிக்க ‘அனிஸ்’ களமிறங்கிய அனுபவத்தை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.
(தொடரும்)
நகராசு
நன்றி :
தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க