ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் காக்கும் போராட்டம் இன்னும் நீண்ட பாதையைக் கொண்டுள்ளது. ஏனெனில், இந்துத்வா சங்பரிவாரங்கள் இன்னமும் வீளவுமில்லை; நாம் மீளவும் இல்லை.
இதை நாம் உணருவதற்கு பாஜக பிறந்த கதையை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் பாசிச சூழ்ச்சிகளை அறிந்து கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். வகுத்துக் கொண்டுள்ள வேலைப் பிரிவினையை அம்பலப்படுத்த வேண்டும்.
இதற்குத் துணைபுரியும் அரிய புத்தகமே – இது. முக்கியத்துவமிக்க ஒரு சில அரசியல், பொருளாதார எழுத்தாளர்களில் ஏ.ஜி. நூரனி ஒருவர். அவர் இப்புத்தகத்தில்,
வெள்ளையனை வெளியேற்றும் யுத்தத்தில் இந்துத்வா சக்திகளின் பங்கு என்ன?
காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேகளும், ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கும் இடையே இருந்த உள் கூட்டு என்ன?
ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கருவியான (கட்சியின்) ஜனசங்கம், அது பின்னர் மறுபிறவி எடுத்த பா.ஜ.க.வும் எவ்வாறு உருவாயின?
இந்திய அரசியல் வரைபடத்தில் பா.ஜ.க.வும், அதன் மூலமாக ஆர்.எஸ்.எஸ்.ஸும் தமக்கான ஒரு பிரபலத்தை அடைந்தது எப்படி?
சங் பரிவாரங்களான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., வி.எச்.பி., பஜ்ரங்தள் என்று சங்பரிவாரங்கள் எந்தவகையான வேலைப்பிரிவினையை செய்து கொண்டு செயல்படுகின்றன?
வாஜ்பாயிக்கும் அத்வானிக்கும் இடையேயான உள்கூட்டு என்ன? என்ற கேள்விகளுக்கும், புதிர்களுக்கும் விடையளிக்கிறார் ஏ.ஜி. நூரனி. (நூலின் பதிப்புரையிலிருந்து)
ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்திய அரசியல் சாசனமும்
இந்திய அரசியல் சாசனம் இந்துக்களுக்கு எதிரானது என்ற குற்றச் சாட்டுடன் வெள்ளை அறிக்கை ஒன்றை சங்பரிவார் கும்பல் 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அன்று வெளியிட்டது. அவர்கள் நிறுவ திட்டமிட்டுள்ள அரசியல் அமைப்பு முறையைப் பற்றி அந்த வெள்ளை அறிக்கை குறிப்பிட்டது. வெள்ளை அறிக்கையின் முன் பக்க அட்டையில் இரண்டு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இந்தியாவின் ஒருமைப்பாடு, சகோதர உணர்வு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை சீர்குலைத்தது யார்? இது முதல் கேள்வி. பட்டினி, வேலையின்மை, லஞ்ச ஊழல் மத நம்பிக்கையின்மை இவற்றையெல்லாம் பரப்பியது யார்? இது எழுப்பப்பட்டிருந்த இரண்டாவது கேள்வி. அதற்கான பதில் வெள்ளை அறிக்கையின் தலைப்பில் அளிக்கப்பட்டது. வெள்ளை அறிக்கையின் தலைப்பு ‘தற்போதைய இந்திய அரசியல் சாசனம்’.
இந்தி மொழியில் எழுதப்பட்ட தலைப்பில் இந்தியன் என்ற சொல் ஒரு காரணத்துடன் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் இந்தியத் தன்மை வாய்ந்தது. அது இந்துக்களின் அரசியல் சாசனமல்ல என்பதை உணர்த்துவதற்கே அவ்வாறு குறிப்பிடப்பட்டது அந்த வெள்ளை அறிக்கையின் முன்னுரையில் ஸ்வாமி ஹீரானந்த எழுதுகிறார்:
“நாட்டின் கலாச்சாரமும், குணநலன்கள், சூழ்நிலைகள், ஆகிய எல்லாவற்றுக்கும் விரோதமான முறையில் தற்போதைய அரசியல் சாசனம் அமைந்துள்ளது. அது அன்னியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது” இந்த ஆவணத்தைப் படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திவிட்டு அவர் கூறுகிறார். “இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை செயலிழக்கச் செய்தபிறகு தான் நம்முடைய பொருளாதாரக் கொள்கை நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகள் மற்ற தேசிய நிறுவனங்கள் ஆகியவை பற்றிய மறு சிந்தனையில் ஈடுபடவேண்டும். அதனை முழுமையாக ஒதுக்கித் தள்ளுவது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விஷயம். இந்த அரசியல் அமைப்புச் சட்டம் விளைவித்துள்ள தீங்குகளுடன் ஒப்பிடும் போது 200 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி நாட்டுக்கு ஏற்படுத்திய சேதாரங்கள் மிகவும் குறைவானதே. பாரதத்தை இந்தியாவாக மாற்றுவதற்கான சதி தொடர்கிறது. உலகம் முழுவதும் தற்போது இந்தியர்கள் என்றே அறியப்படுகிறோம்” என்று வருத்தப்படுகிறார். ”இந்துஸ்தானைப் பெறுவதற்காக விடுதலைப் போராட்டம் நடத்தப்பட்டது. வந்தே மாதரம்தான் தேசிய கீதமாக இருந்தது. விடுதலைக்குப் பிறகு உருவான இந்தியாவில் இந்துஸ்தானமும் வந்தேமாதரமும் அழிக்கப்பட்டு விட்டன. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்பதற்காகப் பாடப்பட்ட பாடல் தேசிய கீதமாக மாறியுள்ளது. ”
உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவாக அந்தப் பிரசுரம் உருவாக்கப்பட்டதாகக் கருதக் கூடாது. முழுமையான விவாதத்திற்குப் பிறகு திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை அது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சில நாட்களுக்குப்பிறகு 1992ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதியன்று சுவாமி முக்தாநந்த் ஒரு பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். சுவாமி வாமதேவ் மஹாராஜும் அவருடன் பேட்டியில் கலந்து கொண்டார்.
இந்து எதிர்ப்பு அரசியல் சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் தேசத்திற்கு அறைகூவல் விடுத்தனர். “இந்த நாட்டின் சட்டங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சாதுக்கள் நாட்டின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியாவின் இயற்கையான குடிமக்கள் என்று இந்தியாவின் குடியுரிமைச் சட்டங்கள் கூறுவது ஒரு மோசடி ஆகும்.” ஒரு வாரம் கழித்து முக்தானந்தின் பிரசுரம் வெளியிடப்பட்டது.

சங்பரிவாரின் தாய் ஸ்தாபனமான ஆர்.எஸ்.எஸ் தான் வெள்ளை அறிக்கை பற்றி கருத்துக்களை முதலில் வெளியிட்டது. இது மிகவும் பொருத்தமானதே. 1993ஆம் ஆண்டு ஜனவரியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அப்போதைய தலைவராக இருந்த ராஜேந்திர சிங் பின்வருமாறு எழுதினார்:
“இந்தியாவின் இன்றியமையாததேவைகளை ஈடுசெய்யும் வகையிலோ, அதன் பாரம்பரியம், அது உயர்வாகப் போற்றும் அம்சங்கள், அதன் உயர்ந்த பண்புகள் ஆகியவற்றுக்கு ஏற்றதாக இல்லாத வகையில் நமது அமைப்புகள் இருப்பதே தற்போது நடைபெறும் மோதலுக்கு ஓரளவு காரணமாக அமைந்துள்ளன என்று கூறலாம். இந்த நாட்டின் சில சிறப்புத்தன்மைகள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் பிரதிபலிக்க வேண்டியது அவசியம். இந்தியா எனப்படும் பாரத் என்பதற்கு பதிலாக பாரத் எனப்படும் இந்துஸ்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரம் என்று அதிகாரப்பூர்வமான ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் நமது கலாச்சாரம் பன்முகத்தன்மை கொண்டதல்ல என்பது உறுதி. அணியப்படும் ஆடைகளோ, பேசும் மொழிகளோ கலாச்சாரமல்ல. அடிப்படை யான நிலையில் பரிசீலித்தால் கலாச்சார ரீதியில் நாடு ஒன்றுபட்டு நிற்பது தெரிய வரும். எந்த ஒரு நாடும் நீடித்து நிலைக்க வேண்டுமானால் பல பிரிவுகளாகப் பிரிந்திருக்கக் கூடாது. இவைகளெல்லாம் மாறுதல் செய்யப்பட வேண்டியதன் தேவையைக் காட்டுகின்றன. இந்த நாட்டின் உயர்பண்புகளுக்கும், அறிவுத்திறனுக்கும் ஏற்ற ஒரு அரசியல் அமைப்புச்சட்டம் எதிர்காலத்தில் உருவாக்கப்படவேண்டும்” (இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜனவரி 14,1993)
அன்றைய பா.ஜ.க. தலைவரான எம்.எம். ஜோஷி 1993 ஆம் ஆண்டு ஜனவரி 24ந் தேதி ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் நகரத்தில் பேசும் போது, “அரசியல் அமைப்புச்சட்டத்தைப் புதிதாகப் பரிசீலிக்க வேண்டும் ‘என்ற தமது கோரிக்கையை வலியுறுத்தினார்” இது தான் சங்பரிவாரின் பிரத்தியேக பாணி. அதனையே இம்முறையும் கடைப் பிடித்தனர்.
படிக்க:
♦ தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?
♦ அஞ்சாதே போராடு ! தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram
சங்பரிவார் கும்பல் முழுமையுமே அடிப்படையில் தாராளமான சிந்தனைப் போக்கு கொண்டதல்ல, அவை அறிவாளிகளுக்கு எதிரானது, மேற்கத்திய அறிவுப் பாரம்பரியத்தை நிராகரிக்கும் அமைப்புகள் அவை. பிரசுரம் புகார் கூறுகிறது, “ இந்தியாவின் கலாச்சாரத்துடனும் வரலாற்றுடனும் அறிமுகமில்லாத மேற்கத்திய பாணி சிந்தனை கொண்ட மக்கள் உருவாக்கியதுதான் நமது அரசியல் அமைப்புச்சட்டம்.” தாழ்த்தப்பட்ட பிரிவினர், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு எதிராகப் பிரசுரம் கண்டனம் முழங்குகிறது. சிறுபான்மையினர் தொடர்பான விமர்சனங்கள் மிகவும் மோசமானவை. அதுவும் அமைப்புச்சட்டத்துக்கு எதிராக நிதானமற்ற சொற்களைப் பயன்படுத்தி கடுமையாகத் தாக்குதல் தொடுத்துள்ளனர். அரசியல் அமைப்புச்சட்டமே ஒரு குப்பைக் குவியல் என்று வருணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அரசியல் அமைப்புச்சட்டம் ஒரு விரோதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (நூலிலிருந்து பக்.150-153)
நூல் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும்
ஆசிரியர் : ஏ.ஜி.நூரனி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
எண்:7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 24332424, 24332924.
மின்னஞ்சல்: thamizhbooks@.com
பக்கங்கள்: 176
விலை: ரூ 70.00
வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க