முகப்புமறுகாலனியாக்கம்கல்விNEP -2020 : ஒளிந்திருக்கும் சாதியமும் ஆணாதிக்கமும் | பேரா. அனில் சத்கோபால்

NEP -2020 : ஒளிந்திருக்கும் சாதியமும் ஆணாதிக்கமும் | பேரா. அனில் சத்கோபால்

தேசிய கல்விக் கொள்கை - 2020, சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களையும் பெண்களையும் கல்வியிலிருந்து விலக்குவதற்கு அடிகோலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

-

தேசிய கல்விக் கொள்கை – 2020 குறித்து பேரா. அனில் சத்கோபால் எழுதிய கட்டுரை பிரண்ட்லைன் பத்திரிக்கையில் ஆகஸ்ட் 28, 2020 ல் வெளிவந்தது. இக்கல்விக் கொள்கையின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தும் இக்கட்டுரையை தமிழ் வாசகர்களுக்குப் படைக்கும் நோக்கில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவினர் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். அந்தக் கட்டுரையின் இரண்டாம் பாகம் இது. முதல் பாகத்தைப் படிக்க இங்கே அழுத்தவும்

0o0o0o0

சாதி மற்றும் ஆணாதிக்கம் :

ல்விக்கான வாய்ப்புகள், கல்வியில் பங்கெடுத்துக் கொள்வது, அறிவைப் பெறுதல்,    அறிவு வளர்ச்சியில் பங்கெடுப்பது மற்றும் உயர்கல்வி மூலமாக சமூக-பொருளாதார இயக்கத்திற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை தடுப்பதில் சாதி மற்றும் ஆணாதிக்கமானது (patriachy) தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதை NEP அங்கீகரிக்க தவறியுள்ளது. சாதி ஒழிப்பிற்கான மரபில் சாவித்ரிபாய்-ஜோதிராவ் பூலே தொடங்கி  சத்ரபதி ஷாஹு மகாராஜ் மற்றும் டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் (மகாராஷ்டிரா); சி. ஐயோதி தாஸ், சிங்காரவேலர் மற்றும் ‘பெரியார்’ ஈ.வே. ராமசாமி (தமிழ்நாடு); நாராயண குரு மற்றும் அய்யங்காலி (கேரளா); கந்துகுரி வீரசலிங்கம் பந்துலு மற்றும் குராஜாதா அப்பராவ் (பிரிக்கப்படாத ஆந்திரா); குட்முல் ரங்க ராவ் மற்றும் கிருஷ்ணராஜா வாடியார் IV (கர்நாடகா); இறுதியாக, 1930 களில் சாதி பற்றிய மகாத்மா காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் வரை NEP புறக்கணிக்கிறது.

சாதி மற்றும் ஆணாதிக்கத்தை அங்கீகரிக்க மறுப்பதானது வரலாற்று ரீதியான வேர்களைக் கொண்ட இந்த இரட்டை சிக்கல்கள் பற்றி NEP ன் குறைபாடான புரிதலையே வெளிப்படுத்துகிறது. இது சாதி மற்றும் ஆணாதிக்கத்தைப் “தகுதி(merit)”மற்றும் பாலின உணர்வூட்டுதல் (gender sensitization) என்ற கண்ணாடியின் மூலம் பார்க்க  முயற்சிக்கிறது. NEP இல் இடஒதுக்கீடுக்கு இடமில்லை. இது, அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 16 ஐ மீறுவதாகவும் சுதந்திரத்திற்குப் பின்னர் சமூக நீதிக்கான போராட்டங்கள் மூலம் பெறப்பட்ட அனைத்து ஆதாயங்களையும் மறுப்பதாகவும் உள்ளது.

சாதி எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற இரட்டை போராட்ட மரபுகளை உள்ளடக்கிய சுதந்திர போராட்டத்தினால் உத்வேகம் பெற்று வடிவமைக்கப்பற்ற அரசியலமைப்பின் நிலைப்பாடுகளுக்குப் பதிலாக உலக வங்கியின் நிதியுதவியை பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள்-4 (Sustinable Development Goal-4 – SDG-4) விழுமியங்களே  இடம் பெற்றுள்ளன. இரண்டு ஆவணங்களுக்கு இடையே ஒரு சாதாரண ஒப்பீடு செய்தால் கூட, அரசியலமைப்பு உறுதிப்படுத்துகின்றன கல்வி மற்றும் அது தொடர்புடைய பிற சமூக உரிமைகள்   SDG-4 ன் இலக்குகளை விட மிகவும் மேம்பட்டது என்பதை அறிந்துகொள்ள முடியும். இதனால்தான் NEP, SDG-4 ன் நிலைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் அரசியலமைப்பை குறைத்தும் மதிப்பிடுகிறது.

படிக்க :
♦ மாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி !
♦ NEP 2020 : என்னவாகும் உயர்கல்வி ? | சசிகாந்த் செந்தில் உரை | CCCE

தெளிவின்மை, உள்ளார்ந்த முரண்பாட்டுகள், குழப்பமான கருத்தியலைக் கொண்ட பரிந்துரைகள் மற்றும் போலித்தனம் ஆகியவற்றின் குறியீடாக  NEP உள்ளது. அடிப்படைக் கடமைகளை பற்றி பேசும் NEP அடிப்படை உரிமைகள் குறித்து மவுனம் காக்கிறது. ‘இலவச’ கல்வி என்று இருந்தது ‘குறைந்த கட்டண கல்வி’ என்பதாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கிறது; முறையானக் கல்வி மற்றும் எழுத்தறிவு-எண்ணறிவு இடையேயான வேறுபாட்டையும் முறையானக் கல்வி மற்றும் ‘முறைசாரா கல்வி’ க்கும் இடையிலான வேறுப்பாட்டை மங்கலாக்குகிறது. அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவுகளானபட்டியல் சாதிகள் (எஸ்.சி), பழங்குடியினர் (எஸ்.டி), இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி),  மதம் மற்றும் மொழியியல் சிறுபான்மையினர் என்ற பிறிவினரை “சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழுக்கள் (Socio-economically disadvantaged groups SEDGs)”அல்லது “பிரதிநிதித்துவப்படுத்தப்படாத குழுக்கள்”, எனச் சொல்வதன் மூலம் பெரும்பான்மை மக்களின் மீது பல நூற்றாண்டுகளாகச் செய்துவந்த ஒடுக்குமுறையையும் மற்றும் சுரண்டலையும் முக்கியமற்றதாக்குகிறது.

அரசியலமைப்பின் பிரிவு 1 (1), “இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியம்” என்றுக் கூறுகிறது. நவம்பர் 25, 1949 அன்று அரசியலமைப்புச் குழு கூட்டத்தில் அரசியலமைப்பு வரைவை தாக்கல் செய்து பேசிய வரைவுக் குழுவின் தலைவரான டாக்டர் அம்பேத்கர், “கூட்டாட்சியின் அடிப்படை விதியானது சட்டம் இயற்றுதல் மற்றும் நிர்வாக அதிகாரம் மத்திய-மாநிலங்களுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது…… அரசியலமைப்பின் படி மாநிலங்கள் தங்களுடைய சட்டமியற்றுதல் மற்றும் நிர்வாகத்திற்காக எந்த வகையிலும் மத்திய அரசை சார்ந்திருக்க வேண்டியதில்லை…….. மத்திய அரசு இந்த பகிர்வு எல்லையை தானாக விரிவு படுத்த முடியாது.” என்றார்.உச்ச நீதிமன்றத்தில் நடந்த கேசவானந்த பாரதி வழக்கில் (1973) 13  நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புக் அமர்வு (constitutional bench), “கூட்டாட்சி தன்மைதான் அரசியலமைப்பின் அடிப்படை” எனக் கூறியது.

காவிமயமாகும் கல்வி

ஆனால் கல்விக் கொள்கையோ,  ஆரம்பகால குழந்தை பாதுகாப்பு மற்றும் கல்வி (Early Childhood care and Education- ECCE) திட்டம் தொடங்கி  உயர்கல்வி வரை முடிவுகள் எடுப்பதற்கு புதிய மத்திய அமைப்புகளை உருவாக்கியுள்ளது. உதாரணத்துக்கு இந்திய உயர்கல்வி ஆணையம் (HIGHER EDUCATION COMMISION OF INDIA), தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (THE NATIONAL RESEARCH FOUNDATION)  தேசிய தேர்வு முகமை (NATIONAL TESING AGENCY) மற்றும் NATIONAL CURRICULAR AND PEDAGOGICAL FRAME WORK FOR ECCE , ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை மதிப்பீடுகள் (NATIONL PROFESSIONAL STANDARDS FOR TEACHERS) மற்றும் பல.

இவ்வமைப்புகளின் மூலமாக கல்வி தொடர்பான மாநில / யூனியன் அரசாங்கங்களின் அனைத்து அதிகாரங்கள்/பொறுப்புகள் பறிக்கப்படும்.ஐந்தாவது-ஆறாவது அட்டவணைகளின் கீழ் அங்கிகரிக்கபட்டுள்ள பழங்குடியினர் கவுன்சில்கள், கிராம பஞ்சாயத்துகள்/ஜில்லா பரிஷத் மற்றும் நகராட்சிகளுடன் பகிந்தளிக்கப்பட்டுள்ள கல்வி சார்ந்த பல்வேறு சட்டங்கள் விட்டுக்கொடுக்கப்படவோ அல்லது முற்றிலுமாகத் திரும்பப் பெறுவதாகவோ அமையும். அரசியலமைப்பு சட்டகத்திலிருந்தே விலகியுள்ள இந்த பாரிய மாற்றமானது, நாடு தழுவிய ஜனநாயக விவாதத்திற்கும், கல்விக் கொள்கையை பாராளுமன்றத்தின் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்துவதற்கும் அழைப்பு விடுகிறது.

NEP-யில் சொல்லப்பட்டுள்ள 3-8 வயதுக்குட்பட்டவர்களுக்கான ECCE திட்டம் ஊடகங்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது. 3-6 வயதினருக்கான ECCE திட்டமானது முந்தைய அனைத்து கொள்கை ஆவணங்களிலும்   இருந்துள்ளது. 1974 முதல், அங்கன்வாடி திட்டம் என்று பிரபலமாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் (Integrated Child Development Scheme – ICDS) நாடு முழுவதும் செயல்படுத்தபட்டு வருகிறது. இது முதன்மையாக ஆரம்பக் கல்விக்கானதாக இல்லாமல், ஊட்டச்சத்து – சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமாகவே இருந்தது. 2009-ல் கொண்டு வரபட்ட கல்வி உரிமை சட்டத்தில் (RTE) 3-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சேர்க்கவில்லை. எனவே, NEP-ல் முன்தொடக்கக் கல்வியை( Pre school 3-6 வயது) முதல் இரண்டு ஆண்டு தொடக்கக் கல்வியுடன் (I-II வகுப்பு) இணைத்து அடிப்படையான எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பெறுவதற்கான (literacy and numeracy) ஒரு திட்டத்தை முன்வைத்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் உள்ளடக்கத்தை ஆராய்வோம்.

ECCE-லிருந்து மேல்நிலைப் பள்ளிகள் வரை, “உள்ளூர் சமூக அமைப்புகளிடம் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கவுன்சிலர்கள் பள்ளி கட்டமைப்பில்  முறைசாரா பங்களிப்பை செலுத்த NEP கோருகிறது.   யார் இந்த நபர்கள்?, அங்கன்வாடி அல்லது பள்ளிகளில் முறைசாரா பணிகளை மேற்கொள்வதற்கான அவர்களின் தகுதி என்ன?

படிக்க :
♦ பாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் !
♦ பாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு !

தாங்கள் முன்வைத்த பெரும்பானால “கோரிக்கைகள்” NEP-ல் சேர்த்துக் கொள்ளப்பட்டதென RSS  பகிரங்கமாகவே கூறுகிறது. அரசு நிதியில் RSS ஊழியர்களுக்கே மேற்கூறிய முறைசாரா பணிகள் ஒதுக்கப்படும் என்பதே நிதர்சனம். 3-6 வயதிற்குள் 80 சதவிகித மூளை வளர்ச்சி நடைபெறுவதால் இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஆழ் மனதில் இந்துத்துவா கருத்துக்கள் மற்றும் “ethical” values “நெறிமுறை” விழுமியங்களை (அதாவது கட்டுக்கதைகள், தப்பெண்ணங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளைப் -) புகுத்துவதே இந்து ராஷ்ட்ராவிற்கான அடியாட்களை தயாரிப்பதற்கு மிகச் சிறந்த வழி என்று RSS ன் கல்வி அமைப்புகள் நீண்ட காலமாக வாதிட்டுவருகின்றன.

இதன் மூலம் எதிர்கால தலைமுறையின் சிந்தனை மற்றும் சமூக நடத்தையை தீர்மானிப்பவைகளின் ஒருங்கிணைந்த கூறுகளாக இக்கருத்துருவாக்கம் அமையும்.  இதனால் தான் இரண்டாண்டு தொடக்கக் கல்வியுடன் ECCE ன் மூன்று ஆண்டுகளை இணைக்க NEP வலியுறுத்துகிறது. மேலும் RSS ன் புதிய நபர்களை தொடக்கப்பள்ளி ஊழியர்களாகக்குவதற்கான நம்பத்தகுந்த(Plausible) அடிப்படையை  NEP முன்வைக்கிறது.

மொழிகள் மற்றும் கல்வி கற்பிக்கும் மொழி :

ஆரம்பக் கல்வியும் அதற்கு மேலும் “தாய்மொழி/வீட்டு மொழி”வழியாக கற்பிக்க வேண்டும் என்ற விவாதமானது மகாத்மா ஜோதிராவ் பூலே காலத்திலிருந்தே இருந்து வருகிறது. பூலே ஹண்டர் கமிஷனிடம் (1882) தாய்மொழி வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை விவரித்தார். தாய்மொழி வழிக் கல்வியானது உலகளவில் கல்வியாளர்கள் மற்றும் மொழியியலாளர்களால் அங்கீகரிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக முன்னேறிய அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் உள்ள ஒரு முறையாகும். காந்தி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் இருவரும் கூட ஆங்கிலம் உட்பட வேறு எந்த மொழியையும் திறமையாகக் கற்பதற்கான அடித்தளத்தளமாகவும் அறிவைப் பெறுவதற்கான  மிகவும் சக்திவாய்ந்த ஊடகமாகவும் தாய்மொழி வழி கல்வியைக் கருதினர். இருவரும் தாய்மொழி வழி கல்வியின் தீவிர ஆதரவாளர்களாகவும் இருந்தனர்.

பகுத்தறிவான மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இக்கொள்கை இந்தியாவில் உயர் சாதியினர் மற்றும் மேல்தட்டு வர்க்கங்களின் குறுகிய நலன்களால் நிராகரிக்கப்படுகிறது. குழந்தைகள் சரளமாக ஆங்கிலம் கற்கக்கூடாது என்று யாரும் வாதடவில்லை. விவாதிக்கப்படுவது என்னவென்றால், ஆங்கிலம் அல்லது வேறு ஏதேனும் அந்நிய மொழியை ஊடகமாகப் கொண்டு அம்மொழியை சிறப்பாக கற்க முடியுமா அல்லது குழந்தையின் தாய்மொழியின் வலுவான அடித்தளத்தின் வாயிலாக அம்மொழியை சிறந்த முறையில் கற்றுக்கொள்ள முடியுமா? என்பது தான்.

2017-ம் ஆண்டு பிரிட்டிஷ் கவுன்சில் ஆய்வின்படி, ஆங்கிலத்தை சரளமாக கற்பதற்கு EaS (English as Subject) தாய்மொழி வழியைக்  காட்டிலும் ஆங்கிலத்தின் வாழியிலாக கற்பது EMI (English as Medium of Instruction) தான் சிறந்த அல்லது உறுதியான வழி என்ற பரவலான கருத்தை ஆதரிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. . . தெற்காசியா மற்றும் துணை-சஹாரா ஆபிரிக்காவில் பொதுவாகக் காணப்படும் ஆங்கில வழி கற்பிக்கும் (EMI) முறை ஆங்கில மொழியின் ஆழமற்ற அடிப்படையின் மூலம் தான் தொடக்க கல்விக்கு மேல் உள்ள பாடங்களை கற்பதற்கு உதவுகிறது. ஆரம்ப காலத்திலேயே EMI அறிமுகம் செய்வதானது கற்றலைக் குறைப்பதாகவும் கல்வி இலக்குகளை அடைவதைக் கட்டுப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.”

தாய்மொழி/வீட்டு மொழி வழி கல்வி குறித்த NEP ன் பரிந்துரைகள் தெளிவற்றதாகவும் குழப்பமானதாகவும் மட்டுமல்லாமல்  மொழிப் பாடங்களினால் குழந்தைகளுக்கு அதிக சுமையையும் ஏற்படுத்துகிறது. ஏனென்றால் கல்வியின் அனைத்து மட்டங்களிலும் (கல்லூரி கல்வியிலும் கூட) செம்மொழியை (சமஸ்கிருதம்) படிக்க  சொல்லி NEPகட்டாயபடுத்துகிறது. அதே சமயம் மற்ற வளமிக்க செம்மொழிகளான தமிழ், பாலி மற்றும் பாரசீக போன்ற மொழிகளை மாற்றாந்தாய் மனநிலையுடன் அணுகுகிறது. இந்திய மொழிகளை பார்ப்பனிய சமஸ்கிருதமயமாக்கலுக்கு எதிராக NEP எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.

தனியார்மயமாக்கப்படும் உயர்கல்வி

உயர்கல்வி :

NEPல் சொல்லப்பட்டுள்ள உயர்கல்வி பற்றிய பரிந்துரைகள் உணர்த்துபவை:

a) நிதிபற்றாக்குறையுள்ள அரசு கல்லூரிகள் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களை, வலுக்கட்டாயமாக சந்தையின் பிடிக்குள் கொண்டு சென்று, இறுதியில் அவைகளை மூடுவது.

b)உயர்கல்வியில் புரவலர்கள் – கொடைவள்ளல் (Philanthropists) ஊக்குவிப்பதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்களை (HEIs) சிறிது சிறிதாக தனியார் மூலதனத்திடம் ஒப்படைப்பது.  இது மாற்றியமைக்கப்பட்ட PPP ன் கீழ், அரசு மற்றும் கொடைவள்ளல் கூட்டுடன் (Public Philanthropic Partnership), அரசு நிதியை தனியார்  நிறுவனங்களிடம் மடைமாற்றுவதற்காக தாராளமயக் கொள்கையின் புதிய கண்டுபிடிப்பு.

c) உயர்கல்வியிலிருந்து பகுஜங்கள் மற்றும் ஊனமுற்றோரை (இந்த ஒவ்வொரு பிரிவிலும் பெண்களின் விகிதம் அதிகம்) வெளியேற்றுகின்ற தற்போதைய விகிதத்தை மேலும் மோசமைடையச் செய்வதற்கு, HEI க்கு அவர்களின் கட்டணங்களை சுதந்திரமாக உயர்த்துவதன் மூலம் மட்டுமல்லாமல், இடஒதுக்கீடு போன்ற சமூக நீதி திட்டங்களை நீக்குவதும், ‘தகுதி (merit)’ என்பதின் வாயிலாக உதவித்தொகை என்ற கருத்தை சிதைப்பதன் மூலமும் நடத்தப்படுகிறது.

(d) ECCE லிருந்து உயர்கல்வி வரை தொழிற்கல்வி என்ற போர்வையில் அறிவை(Knowledge) வெறும் திறன்களை(skills)கற்பதாக சுருக்கப்படுகிறது. பல இடங்களில் “கல்விக்கும்  தொழிற்கல்விக்கும்  இடையில் கடினமான வரையறைகள் இல்லை” என்று கூறப்பட்டாலும். . .”, தொழிற்கல்வி மூலம் பகுஜன் மாணவர்களை கல்வியிலிருந்து விலக்கி சாதி அடிப்படையிலான தந்தை வழித் தொழில்கள் மற்றும் குறைந்த ஊதிய வேலைகளை நோக்கி திருப்புதல்; விமர்சன கண்ணோட்டம், படைப்பாற்றல் மற்றும் அறிவியல் விஞ்ஞான மனநிலையை வெறும் திறன்களாகப் பார்ப்பது; அறிவு தொடர்பானக் கருதுகோள்களை  திறன் இந்தியாவுக்கான (skill India) கருத்தாக சுருக்குவது(பிரிவு 18.6);

(e) தேசிய ஆராய்ச்சி ஆணையத்தின் வாயிலாக ஆராய்ச்சிக்கான திட்டங்களை மையப்படுத்துதலின் மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் ஆராய்ச்சி அடிப்படையிலான அறிவு உற்பத்தியை தகர்ப்பது, அதாவது ஆராய்ச்சிக்கான  உற்சாகத்தை அகற்றுவது;

(f) இணையவழிக் கல்வியின் மேலாதிக்கத்தை நிறுவுவதின் மூலம் சந்தையின் தேவைகக்கு ஏற்ப அறிவை ஒற்றை தன்மை கொண்டதாக மாற்றுதல்; அறிவை வெறும் திறன்களாகக் சுருக்குதல் – குறைந்த ஊதியம் (அமைப்புசாரா துறையைப் போல) மற்றும் அதிக ஊதியம் (சிலிக்கான் பள்ளத்தாக்கு / தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகத்தைப் போல) பிரிப்பது; மேலும் ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையேயான  தொடர்புகளை நீக்குவதன் மூலம் கல்வியை மனிதநேயமற்றதாக்குதல், இது கல்வி முறையிலிருந்தே அரசியல் கூறுகளை நீக்கிவிடும்.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி :

“வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின்”மீது ஆதிகாரத்திலுள்ள மேல்தட்டு வர்க்கத்திற்கு  இருக்கும் மோகம் அவர்களை உண்மையை பார்க்க அனுமதிப்பதில்லை. உலக வங்கி மற்றும் யுனெஸ்கோ (The Task Force, 2000) வின்  கூட்டு ஆவணம் “வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த மதிப்புமிக்க பல்கலைக்கழகங்கள் ஏழை மற்றும் வளரும் நாடுகளில் தரம் குறைவான படிப்புகளை வழங்குகின்றன, அவற்றின் புகழ்பெற்ற பெயர்களைப் பயன்படுத்தி சமமான தரத்தை உறுதிப்படுத்தாமல் உள்ளன.”என்று கூறுகிறது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் தங்களுடைய 150 ஆண்டுகால அறிவுசார் மரபுகளை வளர்ப்பதன் மூலம் உலகளவில் நற்பெயரைப் பெற்றுள்ளன. அவர்களின் அறிவு  மரபை அப்படியே இந்திய கல்வி வளாகங்களுக்கு இயந்திரத்தனமாக பொருத்துவது என்பது குழந்தைத்தனமானது. நமக்கு தற்போது இருக்கும் ஒரே வழி, நமது சொந்த அறிவுசார் மரபுகளைக் கொண்டு சிறந்த பல்கலக்கழகங்களை உருவாக்குவது  மட்டுமே.

படிக்க :
♦ பொறியியல் கல்வியின் சீரழிவும் ! கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும் !!
♦ மறுகாலனியாக்கத்திற்காக மாற்றப்படும் அரசுக் கட்டமைப்பு

பிரச்சனைக்குறிய பகுதிகள் மற்றும் சிக்கல்கள் :

i) சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், அனைத்து குழந்தைகளுக்கும் அருகாமை பள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான பள்ளி முறைக்கு NEP உறுதியளிக்கவில்லை.;

ii) பாகுபாடுகள் அடிப்படையிலான பல அடுக்கு பள்ளி முறையை(multi layered school system)அகற்ற எந்த திட்டமும் இல்லை;

iii) ஒப்பந்தம் மற்றும் தற்காலிக ஆசிரியர்களை கண்ணியமான வேலை நிலைமைகளுடன் மாற்றுவதற்கு இது உறுதியளிக்கவில்லை; மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் (கிராம பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம்) மற்றும் பேரழிவு-நிவாரண வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவதற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை;

iv) 3-6 வயது மற்றும் 14-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைச் RTE 2009 சட்டத்திற்குள் கொண்டுவர எந்த பரிந்துரையும் செய்யவில்லை. இதன் மூலம் ECCE, உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கு சட்டரீதியான பாதுகாப்பை மறுக்கிறது;

v) அறிவு கடைச்சரக்காக்குவதையும் கல்வி வர்த்தகத்தையும் தடை செய்ய மறுக்கிறது;

vi) பள்ளி கல்வியில் உலக வங்கியின் தலையீட்டிற்கும், உயர்கல்வியில் உலக வர்த்தக நிறுவனத்தின் ஆதிக்கத்துக்கும் எதிராக எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.

இந்த பின்னணியில், “இந்தியாவின் இயற்கை மற்றும் மனித வளங்களை கொள்ளையடிப்பதற்காக புதிய தாராளமய மூலதனம் இந்து ராஷ்டிர படைகளின் முதுகில் சவாரி செய்கிறது”என்று கருதுவது நியாயமானது! முன்பை விட இந்தியாவுக்கு இன்று அம்பேத்கர், காந்தி மற்றும் தியாகி பகத்சிங் தேவை.

(முற்றும்)

00o00

கட்டுரையாளர் : அனில் சத்கோபால்
தமிழாக்கம் : பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு
நன்றி : பிரண்ட்லைன்

குறிப்பு :
அனில் சத்கோபால் –  கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றத்தின் நிறுவன உறுப்பினர் மற்றும் டெல்லி பல்கலைக்கழக கல்வித் துறையின் முன்னாள் டீன்.
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – பொதுக்கல்வியை வலியுறுத்தும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி கல்வியாளர்களின் அமைப்பு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க