பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் சார்பு கல்லூரிகளில் 2021 -22 கல்வி ஆண்டிற்கான ஆராய்ச்சி படிப்பின் ஆய்வறிக்கை மற்றும் ஆய்வு சுருக்கத்தை சமர்ப்பிப்பதற்கான கட்டணம் 160 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை எதிர்த்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் நடத்தப்பட்டது.

இதுவரை 7000 ரூபாயாக இருந்த ஆய்வறிக்கைக்கான சமர்ப்பிப்பு கட்டணம் 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆய்வுச்சுருக்கத்திற்கான கட்டணமும் 3500 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை கண்டித்து பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் தனிமனித இடைவெளியுடன்  பதாகைகள் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் சார்பு கல்லூரிகளில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் பெரும்பாலும்  ஊக்கத் தொகை இல்லாமலேயே ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்கின்றனர். மேலும் ஏழை எளிய, மற்றும் முதல் தலைமுறை மாணவர்களின் உயர்கல்வி வாழ்க்கையை இது போன்ற பெரும்  கட்டண உயர்வு கேள்விக்குறியாகும்  என்பதை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது.

இதைப்பற்றிய பேச்சுவார்த்தையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர். முனைவர். காளிராஜ் அவர்கள் “foreign evaluation fees” அதிகரித்ததே இந்த கட்டண உயர்விற்கு காரணம் என்று கூறினார். இருப்பினும் இதுபோன்ற பன்மடங்கு  கட்டண உயர்வை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சிண்டிகேட் கமிட்டிக்கு கோரிக்கை மனு கொடுக்கப் போவதாகவும் ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்தனர்.

 

அதீத கட்டண உயர்வு என்பது சாதாரண பின்புலத்தில் இருந்து வரும் ஏழை ஆராய்ச்சி மாணவர்களை உயர்கல்வியில் இருந்து தூக்கி எறிந்து விடும் ! இந்தக் கட்டண உயர்வை உடனடியாக பல்கலை நிர்வாகம் பின் வாங்க வேண்டும் !

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கோவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க