‘இஸ்லாமிய தீவிரவாதம்’; ‘இடதுசாரி தீவிரவாதம்’ என ஓயாமல் அலறும் ஊடகங்கள் கடந்த சில வாரங்களாக வெளிவரும் இந்துத்துவ தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா குறித்த செய்திகளை அடக்கியே வாசிக்கின்றன. இந்த செய்திகளை அடக்கி வாசிப்பதற்காகவே ‘நகர நக்ஸல்’ கைதுகள் இந்து தீவிரவாதத்தை ஊட்டி வளர்க்கும் அரசு தரப்பிலிருந்து அரங்கேற்றப்படுகின்றன.

சனாதன் சன்ஸ்தாவின் பின்னணி என்ன?

‘இந்துராஷ்டிரம் அமைக்க யுத்தத்தில் போராடுகிறவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள். அவர்களை இந்த உலகம் என்றென்றும் நினைவுகொள்ளும்’ சனாதன் சன்ஸ்தா என்கிற அமைப்பு தன்னுடைய இணைய பக்கத்தில் இப்படி சொல்கிறது.

ஜெயந்த் அத்வாலே, குந்தா அத்வாலே என்ற மருத்துவம் படித்த தம்பதி 1995-ஆம் ஆண்டில் தொடங்கியதே சனாதன் சன்ஸ்தா. இந்த அமைப்பு கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மையமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘இந்து ராஷ்டிரம்’ என்பதே இலட்சியம் என தன்னுடைய இணைய பக்கத்தில் அறிவிக்கிறது சனாதன் சன்ஸ்தா. சமூக விரோதிகளை அழிக்க மூன்றாம் உலகப் போரை 2016லிருந்து 2018 வரை நடத்தும் என்றும் 2019-2022 வரை கடவுளின் இராஜ்ஜியத்தை அமைப்பது குறித்து ஒத்திகைகள் நடத்தப்படும் என்றும் 2023-ஆம் ஆண்டு இந்து ராஜ்யம் அமையும் என்று உறுதியாக அறிவிக்கிறது.

சனாதன் சன்ஸ்தா வெளியீடுகளைப் படிப்பவர்கள் யார் தங்களுடைய எதிரிகள் என்று அறிவார்கள் என்றும் கூறுகிறது. தன்னுடைய எதிரிகள் என இவர்கள் கைகாட்டுவது கடவுள் மறுப்பு பேசுகிறவர்கள், சிறுபான்மையினர் மற்றும் இடதுசாரிகளை.  கோவா, மகாராஷ்டிராவில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புள்ளதாகக் கூறி 2011-ஆம் ஆண்டு இந்த அமைப்பைத் தடை செய்ய பரிந்துரைத்தது காங்கிரஸ் தலைமையிலான மகாராஷ்டிர அரசு. ஆனால், அப்போது உள்துறைச் செயலாளராக இருந்த ஆர்.கே.சிங் இதை நிராகரித்தார். அரசு பணியில் இருந்த ஆர்.கே.சிங், தற்போது பாஜக எம்பி.

‘இந்துத்துவ’ தீவிரவாத அமைப்பை வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ். அரசு

2013-ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட வழக்கில் ‘சனாதன் சன்ஸ்தா’வுக்கு தொடர்புள்ளதாக மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படை விசாரிக்கத் தொடங்கியது. காவல்துறையையும் இராணுவத்தையும் தோற்கடிக்காமல் இந்து ராஷ்டிர கனவு நிறைவேற வாய்ப்பில்லை என பகிரங்கமாக வெளிப்படையாக தன்னுடைய வெளியீடுகளில் எழுதியது இவ்வமைப்பு. ஆனால், ‘ஆதாரங்க’ளைத் தேடிக்கொண்டிருந்த தீவிரவாத தடுப்புப் படையால், இடதுசாரி செயல்பாட்டாளர் கோவிந்த் பன்சாரே (2015), எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி (2015), பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (2017) ஆகியோரின் படுகொலைகளை தடுக்க முடியவில்லை. இந்த நான்கு படுகொலைகளும் திட்டமிட்டு, ஒரே மாதிரியான செயல்முறைகளுடன் அரங்கேற்றப்பட்டிருந்த போதிலும் ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. இந்துத்துவ அரசின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்த குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடியவில்லை.

கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கடந்த ஜூன் மாதம் முதல் நிகழ்ந்த அடுத்தடுத்த கைதுகளும் கைதானவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் வெளிவந்த உண்மைகளும் சனாதன் சன்ஸ்தா தடை செய்யப்பட வேண்டிய தீவிரவாத அமைப்பு என்பதற்குப் போதுமான ஆதாரங்களாக இருந்தன.

கடந்த ஆகஸ்டு 10-ஆம் தேதி மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப்படை  வைபவ் ராட், சரத் கலாஸ்கர், சுதன்வா கொண்ட்லேகர் என்ற மூன்று இந்து தீவிரவாதிகளை கைது செய்தது. சனாதன் சன்ஸ்தா அமைப்பின் துணை அமைப்பான இந்து ஜன் ஜக்ருதி அமைப்பைச் சேர்ந்த வைபவ் ராட்டுக்கு சொந்தமான இடத்தில் வெடிகுண்டுகள், ஜெலட்டின் குச்சிகள், எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள், பேட்டரிகள், விஷ மருந்துகள், சர்க்யூட்டுகள், வயர்கள் என வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான பொருட்களை தீவிரவாத தடுப்புப் படை கைப்பற்றியது. சுதன்வா கொண்ட்லேகர் என்ற தீவிரவாதிக்கு சொந்தமான இடத்தில் நாட்டு துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள்  உள்ளிட்டவற்றை கைப்பற்றியது.  கலாஸ்கர் என்பவர் தபோல்கரின் படுகொலையில் நேரடியாக தனக்கு தொடர்புள்ளதை ஒப்புக் கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், புனேயில் நடக்கவிருக்கும் சன்பர்ன் இசைத்திருவிழாவில் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டதும் தெரிய வந்தது.

இந்துத்துவ தீவிரவாதத்தின் அடுத்த இலக்கு சிவாஜி வரலாற்றாசிரியர்!

சனாதன் சன்ஸ்தா அமைப்பு தன்னுடைய அறைகூவலாக முன்வைக்கும் முழக்கங்களில் ‘சத்ரபதி சிவாஜி வழியில் இந்து ராஜ்ஜியம் அமைப்போம்’ என்பதும் ஒன்று. மகாராஷ்டிர தீவிரவாத தடுப்பு படை வெளியிட்ட தகவலில் சிவாஜி குறித்து நூல் எழுதியதற்காக வரலாற்றாசிரியர் ஸ்ரீமாண்ட் கோகடே  இந்து தீவிரவாதிகளின் ‘தர்மவிரோதிகள்’ ஹிட் லிஸ்டில் இடம்பெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இந்தப் பட்டியலில் காவல் அதிகாரிகள் இருவருடைய பெயரும் இருந்தது.

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கேட்டு போராடிவரும் ‘சம்போஜி படை’ என்கிற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான கோகடே, ஏன் இந்து தீவிரவாதிகளால் குறிவைக்கப்படுகிறார்?

“இந்துத்துவ அமைப்புகள் சொல்லிக் கொள்வதைப் போல சத்ரபதி சிவாஜி இந்துக்களுக்காக முசுலீம் அரசுகளை எதிர்த்து போரிட்ட மன்னர் இல்லை. அவர் மதச்சார்பற்றவராக இருந்தார் அனைத்து மக்களுக்கானவராகவும் இருந்தார். சாதியைக் கடந்தவராக அவர் இருந்தார். இந்த விஷயங்களை தீவிர ஆய்வின் வழியாகக் கொண்டு வந்தேன். சிவாஜியின் குருவாக தாதோஜி கொண்ட்தேவ் என்ற பார்ப்பனர் இருந்ததாகச் சொல்கிறார்கள். அது முற்றிலும் தவறானது. சத்ரபதி சிவாஜி முற்போக்காளராக அறிவியலை ஏற்றுக் கொள்ளும் தன்மையுள்ளவராகவும் இருந்தார். சனாதன் சன்ஸ்தா, சிவாஜி இப்படி காட்டப்படுவதை விரும்பவில்லை. சிவாஜியை தவறான முறையில் காட்டவே அவர்கள் விரும்புகிறார்கள்” என்கிறார் ஸ்ரீமாண்ட் கோகடே.

இந்து தீவிரவாதிகளால் குறிவைக்கப்படும், கோகடே.

அதாவது சிவாஜி, பார்ப்பனர்களை காப்பதற்காகவே முசுலீம் மன்னர்களை எதிர்த்து போரிட்டதாக இந்துத்துவ அமைப்புகள் கூறிக் கொள்கின்றன. மராட்டியத்தில் கடவுளைப் போல வணங்கப்படும் சிவாஜி மீதான காவி சாயம் பூசும் வேலையை நீண்ட காலமாக செய்துவரும் காவிகளுக்கு கோகடே போன்ற வரலாற்றாசிரியர்கள் பிரச்சினைக்குரியவர்களாக தெரிவதில் வியப்பில்லை.

“கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார கும்பலால் எழுதப்பட்ட சிவாஜியின் தவறான வரலாற்றை அடித்தளத்திலிருந்து மாற்ற போராடி வருகிறேன். ராமதாஸ், தாதோஜி கொண்ட்தேவ் என்ற பார்ப்பனர்தான் சிவாஜிக்கு குருவாக இருந்து வழிகாட்டியதாக கூறுகிறார்கள். அதாவது சிவாஜி சுய அறிவு அற்றவராக, பார்ப்பனர்களின் அறிவு பலத்தால் வெற்றிகளைச் சூடியவராக வரலாற்றைத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  பகுஜன்கள், பார்ப்பனர்களைக் காட்டிலும் கீழானவர்கள் என்பதைக் காட்டவே இந்தத் திருத்தல், செருகல்களை செய்தார்கள்.

பரிவார் கும்பலால் சொல்லப்படும் சிவாஜி முசுலீம்களுக்கு எதிரானவர் என்கிற பிம்பமும் முற்றிலும் தவறானது. சிவாஜி அதிகார மையங்களை எதிர்த்து போரிட்டாரே தவிர, குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக அல்ல! அவருடைய படையில் முசுலீம்கள் இருந்தார்கள். அவருடைய மெய்க்காப்பாளர்களாக முசுலீம்கள் இருந்தார்கள் என்பது வரலாறு” என்கிறார் கோகடே.

சத்ரபதி சிவாஜி யார்?

சிவாஜியின் மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்கும் முயற்சி கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மராட்டியத்தின் சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ் புலே, 1870-களில் ‘சிவாஜி – சூத்திரர்களின் தலைவர்’ என எழுதியிருக்கிறார். சிவாஜி, ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாவலராக இருந்தார் எனவும் புலே எழுதினார்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் மராட்டியத்தில் உருவான பார்ப்பனர்களின் ஆதிக்கத்துக்கு எதிரான பார்ப்பனர் எதிர்ப்பியக்கம் வரலாற்றில் முக்கியமானது.  19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்துத்துவத்தை உள்ளூர தூக்கிப் பிடித்த, அப்போது காங்கிரசில் இருந்த பால கங்காதர திலகர் முன்னெடுத்த சிவாஜி விழாக்கள், பார்ப்பனர்களுக்கு எதிரான மராத்திகளின் போராட்டத்தை முனைமழுங்க வைக்கும் முயற்சி என புலே அச்சப்பட்டார். 1895-ஆம் ஆண்டு தன்னுடைய இதழில் ஒரு கவிதை ஒன்றை எழுதினார்…

“நம்பிக்கையற்ற இவர்கள் எப்படி சிவாஜி கொண்டாட முடியும்?
இவர்கள் அறிவை மற்றவர்களுக்கு பரிசாக அளிப்பதை விரும்பாதவர்கள்
இவர்கள் சத்ரபதியை மறைத்து வைத்திருந்தார்கள்
இவர்கள் சிவாஜியின் வழிதோன்றல்களை அழித்தவர்கள்…
சிவாஜி குறித்து பெருமை கொள்ள வேண்டியவர்கள் சத்திரியர்களே
பார்ப்பனர்கள் பேஷ்வாக்களின் புகழை பாடட்டும்”

இடதுசாரி செயல்பாட்டாளரான கோவிந்த் பன்சாரே, மன்னர் சிவாஜி மறைக்கப்பட்ட வரலாற்றை ‘சிவாஜி யார்?’ என்கிற பெயரில் நூலாக  எழுதியிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார் பன்சாரே. இவருடைய கொலையிலும் சனாதன் சன்ஸ்தா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

சிவாஜி யாருக்கு சொந்தமானவர்கள் என்கிற போராட்டத்தில் இப்படி தொடர்ச்சியாக வரலாற்று திரிபுகளை பலர் அம்பலப்படுத்தி வந்துள்ளனர் . 2004-ஆம் ஆண்டு அமெரிக்க கல்வியாளர் ஜேம்ஸ் லெயின் என்பர் எழுதிய ‘சிவாஜி – இஸ்லாமிய இந்தியாவில் ஒரு இந்து மன்னர்’ என்ற நூல் வெளியீடு, புனே பண்டார்க்கர் ஆய்வு மையத்தில்  நடந்தது. அந்த நூல் வெளியீட்டுக்கு எதிராக சம்பாஜி படை என்கிற அமைப்பு போராடியது. அதன் பின்பே, சிவாஜியின் உண்மையான வரலாற்றை நிறுவும் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியதாக சொல்கிறார் இந்த அமைப்பில் செயல்படும் வராலாற்றாசிரியர் கோகடே.

சிவாஜி குறித்த உண்மையை காக்கும் சம்போஜி படை!

சிவாஜியின் குருவாக சொல்லப்பட்ட பார்ப்பனர் தாதோஜி கொண்ட்தேவ் – இன் சிலை புனேயின் வரலாற்று சிறப்பு மிக்க லால் மஹாலிலிருந்து 2010-ஆம் ஆண்டு இவர்களின் போராட்டம் காரணமாக அகற்றப்பட்டது. 2015-ஆம் ஆண்டு    மராட்டிய மாநிலத்தின் மதிப்பிற்குரிய விருதான மகாராஷ்டிர பூஷன் என்கிற விருது வலதுசாரி வரலாற்றாசிரியரான பாபாசாகேப் புரந்தாரிக்கு வழங்கப்படும் என பா.ஜ.க. அரசு அறிவித்திருந்தது. இதை இந்த அமைப்பு கடுமையாக எதிர்த்திருக்கிறது. சிவாஜியின் மகனான சம்போஜியை அவமதித்த ராம் கணேஷ் கட்காரி என்கிற எழுத்தாளரின் சிலையை  புனே பூங்காவிலிருந்து அகற்றியது இவ்வமைப்பு.  மராட்டிய மாநிலத்தில் இடஒதுக்கீடு கேட்டு போராடிவரும் அமைப்புகளில் சம்பாஜி படைக்கு முக்கியமான இடம் உண்டு.

சூரத்தில் நடைபெற்ற சிவாஜி ஜெயந்தி விழாவில்…

“மராத்திகளின் அடையாளம் சிவாஜி. அவரை பயன்படுத்தாமல் யாரும் அரசியல் செய்துவிட முடியாது. அவருக்கு எதிராக எது சொன்னாலும் அது பெரும் பிரச்சினையை கிளப்பிவிடும். எனவே, அவரை பலர் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். இப்போதைய அரசியல் போராட்டம் மராத்திகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையே நடக்கிறது. இன்னொரு வகையில் சொல்வதென்றால் காங்கிரசுக்கும் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையே நடக்கும் அரசியலைப் போன்றது.” என்கிறார் மராட்டிய வரலாற்றாசிரியர் பலாண்டே தாதர்.

எனவேதான் பார்ப்பன சங்பரிவாரங்களுக்கு எதிராக மராத்திகளை திரட்டிக்கொண்டிருக்கும் கோகடே, படுகொலை செய்யப்படவேண்டியவர் பட்டியலில் ‘முன்னுரிமை’ பெற்றிருக்கிறார்.

சனாதன் சன்ஸ்தா தடை செய்யப்பட வேண்டும்.

“சத்ரபதி சிவாஜி குறித்த என்னுடைய கருத்துக்களுக்காக பல முறை இந்துத்துவ அமைப்புகளால தாக்கப்பட்டிருக்கிறேன். ஒரு முறை எனக்கு பார்சல் குண்டுகூட வந்தது. ஆனால், இதுவரை எந்தவொரு பாதுகாப்பும் எனக்கு வழங்கப்படவில்லை. மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள ஹிட் லிஸ்டின் அடிப்படையிலாவது எனக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என நம்புகிறேன்” என்கிறார் கோகடே.

மராட்டியத்தின் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது ‘சனாதன் சன்ஸ்தா’ அமைப்பின் தீவிரவாத செயல்பாடுகள் குறித்து சுமார் ஆயிரம் பக்கங்களில் அனுப்பப்பட்ட அறிக்கைக்கு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் தொடர்ச்சியாக பகுத்தறிவாளர்கள், செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்கிற கோகடே, இப்போதாவது சனாதன் சன்ஸ்தா தடை செய்யப்பட வேண்டும், இல்லையென்றால் இன்னும் பல அப்பாவி உயிர்களை பலிகொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறார்.

– கலைமதி

உதவிய கட்டுரைகள்:

2 மறுமொழிகள்

  1. அறிஞர் அண்ணா எழுதிய “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்ற நூல் சிவாஜி எப்படி பார்ப்பனர்களால் மிகுந்த தொல்லைக்கும் அவமானத்துக்கும் உள்ளானர் என்பதை சிறப்பாக எடுத்து சொல்லும்.அந்த நூல் பிற (குறிப்பாக இந்தி) மொழிகளில் மொழிபெயரரக்கப்பட வேண்டும்.

  2. அறிஞர் அண்ணா எழுதிய “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” நூலை வினவில் அறிமுகம் செய்யுங்கள்.இன்றய பார்ப்பனீய பாசிச சூழலில் பயனுள்ளதாக இருக்கும்.பார்ப்பனீயம் பற்றி தொடர்ந்து நூல்களை படித்து விவாதிப்பது பாசிச பயங்கரவாதத்தை ஆழமாக புரிந்து கொள்ளும் தேவை உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க