privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஜெர்மனி : வேற்றுமையில் ஒற்றுமை - ஆனால் பீஃப் கூடாது !

ஜெர்மனி : வேற்றுமையில் ஒற்றுமை – ஆனால் பீஃப் கூடாது !

இந்திய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி இடம்பெறுவதாக வந்த அறிவிப்பை, மிரட்டி திரும்பப் பெற வைத்துள்ளது ஜெர்மனியில் உள்ள ஒரு காவி கும்பல்.

-

காவி பாசிஸ்டுகளின் மாட்டிறைச்சி அரசியல் பாசிசத்தின் தாயகமான ஜெர்மனி வரை பரவியிருக்கிறது. அண்மையில் நடந்த இந்திய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி இடம்பெறுவதாக வந்த அறிவிப்பை, மிரட்டி திரும்பப் பெற வைத்துள்ளது ஜெர்மனியில் உள்ள காவி கும்பல் ஒன்று.

ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகம் ஃபிராங்க்பர்ட் நகரில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தலைப்பில் இந்திய திருவிழாவை நடத்தியது. இதில் பல்வேறு இந்திய மாநிலங்களின் கலாசாராத்தை பிரதிபலிக்கும் உணவு, கைவினைப் பொருட்கள் போன்றவற்றின் கண்காட்சியும் நடத்தப்பட்டது.

Kerala Samajam Frankfurtஇந்த விழாவில் கேரள மாநில மக்களின் உணவுப் பழக்கத்தை அடிப்படையாக வைத்து கேரள சாமாஜம் ஃபிராங்க்பர்ட் என்ற அமைப்பு உணவு திருவிழா ஒன்றை ஒருங்கிணைத்திருந்தது. அந்த மெனுவில் பரோட்டாவும் பீப் கறியும் இடம் பெற்றிருந்தன. கேரள மக்கள் மத்தியில் மாட்டிறைச்சி ஒரு தவிர்க்க முடியாத உணவு. அந்த வகையில் கேரளத்தின் புகழ்பெற்ற உணவுகளோடு பீப் கறியும் இடம் பெற்றிருந்தது.

இந்நிகழ்வுக்கு மூன்றுநாள் முன்னதாக சேஞ்ச் இணையதளத்தில் ‘சைமா இந்து’ என்ற பெயரிலான ஒருவர், “இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கலாச்சார விழாவில் பரோட்டோ, பீப் கறி பரிமாறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாட்டிறைச்சி நிச்சயம் இந்திய உணவு அல்ல. இந்திய கலாச்சாரத்தில் மாடுகள் வெட்டப்படுவது நினைத்துப் பார்க்க முடியாதது, சகிக்க முடியாதது. புனித பசுவின் இறைச்சியை விற்பது இந்திய கலாச்சாரத்தின் மீது விழுந்த அடி. எனவே, நிறுத்த கையெழுத்திடுங்கள்” என கேட்டிருந்தார்.

படிக்க:
மாட்டுக்கறி என் உணவு என் உரிமை – சங்கிகளுக்கு சவால் !
♦ அரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33

இதே போன்ற மனுவும் கூட அந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டிருக்கிறது. இணையதளத்தில் இந்தப் பிரச்சாரங்களை முன்னெடுத்தது விசுவ இந்து பரிசத் என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்ப்பார்த்த திருப்பமாக, இந்திய தூதரகம் மெனுவை திரும்பப் பெறும்படி வலியுறுத்தியதால் திரும்பப் பெற்றுக்கொண்டதாக தனது முகநூல் பக்கத்தில் கேரள சமாஜம் விளக்கமளித்துள்ளது.

கேரள சமாஜத்தின் முகநூல் பதிவு :

“ஏற்கெனவே என்ன உணவு பரிமாறப்போகிறோம் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகிவிட்டது. ஆனாலும் எங்களுக்கு வந்த அழுத்தத்தின் காரணமாக பீப் கறியை மெனுவிலிருந்து அகற்றிவிட்டோம். இந்த நகரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக அழுத்தத்தின் பேரில் இதை செய்ய வேண்டியதாகிவிட்டது” என பெயர் கூற விரும்பாத கேரள சமாஜ உறுப்பினர் ஒருவர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சிலர் மாட்டிறைச்சி பரிமாறப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என மிரட்டியதாக இந்திய தூதரகம் கூறியிருந்தது.

கேரள சமாஜத்தின் சில உறுப்பினர்கள் இந்த நிகழ்வை புறக்கணித்ததோடு, பதாகைகளை தாங்கியும் காவி கும்பலின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

படிக்க:
பொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !
♦ Live: மாட்டுக்கறியை தடுப்பது யார் ? மோடி அரசே மோதிப்பார் !

“அடுத்தமுறை வேற்றுமையை சிலர் மதிக்கவில்லை என்றால், பொறுப்புள்ள அமைப்பாக காவலர்களை அழைத்து தாங்கள் எதை உண்ண விரும்புகிறார்களோ அதை உண்ணுபவர்களின் உரிமையை காப்பாற்றுங்கள்” எனவும்.

“இதுபோன்ற பாசிச சித்தாந்தத்தை புகுத்துகிறவர்களை எதிர்த்து உறுதியாக நிற்க வேண்டும். நாம் அனைவரும் ஜெர்மனியில் இருக்கிறோம் என்பதை நினைவில் வையுங்கள். நாம் அனைவரும் வலதுசாரித்தனத்துக்கு எதிரானவர்கள். எனவே அறிவுள்ளவர்களாக இருங்கள்” எனவும் ”சிலர் கேரள சமாஜம் காவி கும்பலை எதிர்த்து உறுதியாக நிற்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் மாட்டிறைச்சி உணவு கலாச்சாரத்தின் ஒரு பகுதி. இவை அனைத்தும் சேர்ந்ததே இந்திய கலாச்சாரம். இதன் வேற்றுமையை அழித்து ஒற்றைத் தன்மையுடன் காவிமயமாக்கும் முயற்சிகளை வெளிநாடுகள் வரை பரப்பத் தொடங்கியுள்ளது காவிக் கும்பல்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு எதிரானவர்கள்தான் ‘இந்திய தேசியக் காவலர்களான’ சங்கிகள். இந்தக் கேடுகெட்டவர்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் எதிர்த்து நிற்பது மட்டுமே இந்தியாவை சிதறுண்டு போகாமல் காப்பதற்கான ஒரே வழி.


அனிதா
நன்றி
: ஸ்க்ரால்.