கிருஷ்ண ஜெயந்தி முடிந்த பிறகும், சென்னை அயோத்தியா மண்டபமும் அதன் சுற்றுப் பகுதியும், ஜெயந்தியின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. சென்னையின் அக்மார்க் பார்ப்பன ஆண்களும், பெண்களும் பிளாஸ்டிக், பித்தளை பூக்கூடை, பேப்பர், மெட்டல், களிமண், பிளாஸ்ட் ஆஃப் பேரிஸ் இவற்றாலான கிருஷ்ணன் பொம்மைகளுடன் தங்கள் கலாச்சார உடையான கச்சம், மடிசார் பூண்டு குடும்பம் சகிதமாக குறுக்கும் நெடுக்குமாகப் போய்க் கொண்டிருந்தனர்.

பரபரக்கும் சாலையின் நடைபாதையில் சாயம்போன, ’மூலியான’ கிருஷ்ணன் பொம்மைகள் யாரும் கவனிப்பாரின்றி கிடந்தன. அருகில் நடுத்தர வயதுள்ள ஒருவர் பிய்ந்துபோன செருப்புக் குவியல்களுக்கிடையே வாடிக்கையாளர்களை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தார்.

கிருஷ்ணனுக்கு அருகே பிஞ்ச செருப்பா, என்று பக்தர்கள் வருந்தும் வண்ணம் அந்தக் கோலமிருந்தது. ஆனால், செருப்புத் தைக்கும் தொழிலாளி எந்தச் சலனமும் இல்லாமல், “என்ன வேண்டும்” என்று கண்களால் ஏறிட்டார்.

“என்ன இது கிருஷ்ணன் சிலையும் செருப்புகளும் ஒரே இடத்தில்?”

“ஓ… அதுவா… நான் பெயின்டர். ரியல் எஸ்டேட் – பில்டிங் படுத்ததிலேருந்து வேல இல்ல, இப்படி சீசனுக்கு ஏத்தத் தொழில செஞ்சிகிட்டிருக்கேன். மொதல்ல, செருப்புக் கட போடலாமுன்னு இதே எடத்துல பங்க் கட போட்டேன். போலீசு, அதிகாரிங்க வந்து, பப்ளிக் நியூசென்சுன்னு சொல்லி தூக்கிட்டாங்க. சரின்னு அப்படியே கோனிய விரிச்சு கீழே உக்காந்துட்டேன். இப்படி இருக்க எங்கிட்டே புது செருப்பு வாங்க வருவாங்களா? அதான் பழைய செருப்புகளை தைக்க ஆரம்பிச்சேன். எதுவாயிருந்தாலும் நமக்குத் தொழில்தான். கூடவே பக்கத்திலிருந்த பொம்மைக் கடைக்குப் போயி, ஒடஞ்சி போன புது பொம்மைகள பெவிக்கால், எம்சீல் போட்டு ஒட்டி, பெயிண்ட் அடிச்சு புதுசாக்கிடுவேன்.

குமார்.

கடைக்கு வர்றவங்க, இதப் பாத்துட்டு, ‘எங்கிட்டே பழய பொம்மை இருக்கு, சீர் பண்ணி தருவீயா?’ன்னாங்க. அதுலேருந்து இந்தத் தொழில் பிக்கப் ஆயிடுச்சு. பண்டிகைக் காலங்கள்ல நல்லா போகுது. இப்போ பழைய பொம்மைக்கு பெயிண்ட் அடிக்கிற வேலைக்கு ரெண்டு பெயின்டர கூட்டா சேத்துகிட்டேன்” என்றார் குமார்.

அவரிடம் பணிபுரியும் சேலத்தைச் சேர்ந்த பரமேஸ்வர்:

“ஊர்ல கொத்தனார் வேல பாத்தேன். பூசுவேல, கட்டு வேல எல்லாம் செய்வேன். அங்கே வேல இல்லாததனால சென்னை வந்தேன். இங்கே வீடுகளுக்கு சுண்ணாம்பு, பெயிண்ட் அடிக்கிறதுனு பல வேலங்க செஞ்சேன்.

பரமேஸ்வர்.

ஃப்ரெண்டு ஒருத்தரு சிலைக்கு பெயிண்ட் அடிக்கிறத பத்தி சொன்னாரு. பண்டிகை சீசனுல இங்கே வருவேன். கிருஷ்ண ஜெயந்திக்கு முன் வந்தா, கார்த்திகை தீபம் முடிஞ்சி போவேன். சாப்பாடு, தூக்கம் எல்லாம் இந்த பிளாட்பாரம்தான். குளிக்க பைசா கொடுத்து போற இடம்தான். செலவுன்னு பாத்தா, ஒரு நாளைக்கு 300 ரூபா ஆயிடும். மீதி இருந்தாத்தான் வீட்ட பத்தி நெனப்பு வரும். சில நாளு ஐநூறு, ஆயிரமுன்னு வேல வரும். பால நாளு அம்பது, நூறுதான் கெடைக்கும்.

வாடிக்கையாளர்கள்.

ஒரு பொம்மைய சீர் செய்ய 50, 100-ன்னு கேட்டா ரொம்ப படுத்துவாங்க. வர்றவங்க பெரும்பாலும் ஐயருங்கதான். முழம் நீள பொம்மைய எடுத்து வந்து, அதன் பெருமையப் பத்தி ஒரு கிலோ மீட்டர் நீளம் பேசுவாங்க. ‘எங்க தாத்தா வச்சிருந்தது, அத்திம்பேர் கொடுத்தது, ராசியான சிலெ. இது இல்லேன்னா எங்கக் குடும்பமே இல்ல, இத பழசுன்னு தூக்கிப் போட்டா எம் மாட்டுப் பொண்ணு கோச்சுக்கும்’ – இப்படி ஏதேதோ சொல்வாங்க.

அந்த இத்துப் போன பொம்மைய காமிச்சு, ‘கிருஷ்ணரோட சிரிப்பப் பாரு, அதோட முகத்துல களையைப் பாரு, இதே மாதிரி மாசு மரு இல்லாம – ரிப்பேர் பண்ணுனது தெரியாம இருக்கனு’முன்னு சொல்லிட்டு கடைசியில ‘கூலிய பாத்துக் கேளு’ன்னு முடிப்பாங்க.

வர்றவங்க எல்லாரும் சொல்லி வச்சாப்ல ஒரே மாதிரிதான் பேசுவாங்க. நாம பொம்மைக்கு ஏத்த மாதிரி இது மூனு அடி பொம்மை, நீங்க கேக்குற மாதிரி வேணுமுன்னா, 15, 20 ஷேடு அடிக்கணும், வேல அதிகம், 700 ரூபா ஆகுமுன்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள, ‘இத 200 ரூபாய்க்குத்தான் வாங்கினேன்’ என்று சொல்லி, அதன் மதிப்ப அவங்களே கொறைச்சிடுவாங்க. கடைசில 300 ரூபாய்க்கு ஒத்துக்க வைக்கிறதே பெரும்பாடு.

பெயின்டிங் செய்யிறத விட, அவங்ககிட்ட பேசுறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கும்; திரும்பவும் பொம்மைய வாங்கும் போதும் அதையே பேசுவாங்க; காதே வலிக்கும். அப்புறம் எதிர்பார்த்த ரிசல்ட் வரலன்னு கொற சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க. ‘பொம்ம அப்படி இல்ல, இப்படி இல்ல, சொன்ன மாதிரி இல்ல, சிரிச்ச மூஞ்சி போயிடுச்சு, அந்தக் கொழந்த சிரிப்பே காணோமுன்னு’ மூடவுட்டாயிடுவாங்க. நமக்கோ பயமாயிடும். பணம் கொடுக்கலேன்னாகூட பரவாயில்ல, பொம்மைய எடுத்துப் போனாலே போதுமுன்னு எங்க சாமிகிட்டே வேண்டிப்போம்.

அதுக்கு நாங்க செஞ்ச வேல கொஞ்சமில்ல. மொதல்ல உப்புக் காகிதம் தேய்ச்சு, அழுக்கெடுப்போம். பிறகு வார்னிஷ் அடிச்சு மெருகேத்துவோம். ஒடஞ்ச மூஞ்சு, கையி எல்லாம் களிமண்ணோ, பேப்பரோ, எம்சீலோ எடத்துக்கு ஏத்தமாதிரி ஓட்டைய அடைப்போம். சிலையில ஒட்டி வச்சிருக்கிற மாலை மணி இத்துப் போயிருந்தா, அத பெவிக்கால் வச்சி ஒட்டுவோம். அதுக்கப்புறம் நல்லா வெயில்ல காயவைப்போம். கடைசில 15 கலர், 20 கலருன்னு உருவத்துக்கு ஏத்த மாதிரி கலர் கொடுப்போம்.

உப்பு காகிதம், தின்னரு, வார்னிஷ், எம்சீல், பெவிக்கால், பிரஷ், காட்டன் வேஸ்ட் இப்படி ஆயிரத்தெட்டு செலவு. நமக்குத் தேவையான அளவு மட்டுமே வாங்க முடியாது, சிலது மொத்தமாத்தான் கிடைக்கும். இந்த முடிச்சு கூலி வாங்குறதுக்குள்ள எங்களுக்கு மூச்சே முட்டிடும்.

என்ன இருந்தாலும் நிழலோடு வேல, உக்காந்த எடத்துல செய்யிறோம்” என்று சொல்லிவிட்டு, நம்மைப் பார்த்து ஒரு ஞானியைப் போல சிரித்தார்.

சிவலிங்கம்.

பக்கத்தில் இருந்த இன்னொரு ஆர்ட்டிஸ்ட் சிவலிங்கம், “சார் அவன் சொன்னது கொஞ்சம்தான். ஒரு நாள் நீங்க இங்கே உக்காந்து வர்ற கஷ்டமர் பேசுறத கவனிங்க, நாங்க எவ்வளவு வேதனைய அனுபவிக்கிறோமுன்னு தெரியும். வர்ற ஐய்யருங்க எத்தன விதவிதமா பேசினாலும் அவங்க சொல்ல வர்ற விசயம் சிம்பிள் சார். நாமதான் புரிஞ்சிக்கணும். ‘என் எடத்துக்கு நீ வர முடியாது, உன் இடத்துக்கு நான் வரமாட்டேன், அத நீ புரிஞ்சிக்கோ’. இதுக்குத்தான் சார் ஐயருங்க நம்மகிட்டே நீள நீளமா பேசுறாங்க. அதுக்குதான் சார் அவங்க படிக்கிறாங்க. அவங்க ஒழப்பும் பொழப்பும் அதுதான் சார். இத எவன் புரிஞ்சிகிட்டாலும் இங்கே குப்ப கொட்டலாம்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : ஜாதி ஒழிய வேண்டும் – ஏன் ?
ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி : யாருக்கு லாபம் ? யாருக்கு இழப்பு ?

இதவுட கொடுமை ஒன்னு இருக்கு சார். பல வருசத்துக்கு முன்னாடி ஒரு பொம்மைய சீர் பண்ணிகிட்டுப் போயிருப்பாங்க, அது ஒடஞ்சிருச்சின்னா, என்னதான் ரிப்பேர் பண்ணுனியோ, ஒழுங்காவா செஞ்சிருக்கேன்னு சொல்லி, நம்மளயே குற்றவாளியாக்குவாங்க. அதுமட்டுமல்ல, ஓசியில திரும்பவும் ரிப்பேர் பண்ணிகிட்டுப் போயிடுவாங்க.

வினவு புகைப்படச் செய்தியாளர்

நாம சத்தம் போட்டு நியாயம் கேட்டா, பொறுக்கி மாதிரி நம்மள காமிச்சுக்குவாங்க, போனாப் போகுதுன்னு விட்டுத் தொலைச்சிடுவோம்” என்று செருப்புகளை தைக்க ஆரம்பித்தார். அவரது கைகளின் இசைவிற்கேற்ப அழகிய வடிவம் பெற்றது, அந்தப் பிய்ந்துபோன செருப்புகள்.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

1 மறுமொழி

  1. ஒட்டவைக்கும் தொழில் செய்யும் நாமெல்லாம் ஒன்று சேர்ந்து விட்டால் சமூக வேற்றுமைகள் யாவையும் உடைத்தெறிந்து விடலாம்…

Leave a Reply to c.nepolian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க