சாதி ஒழிப்புப் பற்றி பல்வேறு தருணங்களில் தந்தை பெரியார் ஆற்றிய உரைகளை தொகுத்து சிறு நூலாக வெளியிட்டிருக்கிறது, திராவிடர் கழகம்.

சாதியின் கொடுமையால், நாற்றமெடுத்த மலத்தைவிட மனிதன் கேவலப்படுத்தப் படுகிறான். இது உண்மை , வாய்ப் பேச்சுக்காக நான் சொல்லவே இல்லை. எப்படி என்றால், மல உபாதைக்குச் சென்றவன் அந்த பாகத்தை மட்டும் ஒரு சொம்பு தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்கிறான். மலத்தைக் காலில் மிதித்துவிட்டால் அந்தக் காலைமட்டும் தண்ணீரை விட்டுக் கழுவிவிட்டால் அந்தக் குற்றம் போய்விடுகிறதாகக் கருதப்படுகிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தொட்டுவிட்டால் அவனைத் தொட்டதால் ஏற்பட்ட தோஷம், தன்னுடைய உடலை உச்சி முதல் உள்ளங்கால்வரை குளிர, நனையக் குளித்தாலொழியப் போவதில்லை என்கிறார்கள். ஆகவே, மலத்தைவிட மனிதன் எவ்வளவு கேவலமாக மதிக்கப்படுகிறான் என்பதைப் பாருங்கள். மனிதனை மனிதன் தொடுவதால் ஏற்படுகிற கெடுதலென்ன? தோஷமென்ன? குற்றமென்ன ? எதுவுமில்லை. ஆனால், பிறகு ஏன் தோஷம் கூறப்படுகிறது? ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழ்வதற்காகவே கூறப்படுகிறது. இதைவிட வேறு இரகசியமில்லை .

… வேறு சிலர், செத்த மாட்டைத் தின்னுகிறார்களே என்கிறார்கள். இதனால் என்ன தீட்டு, எந்த உருவாக வந்து அவர்களிடம் ஒட்டிக்கொள்கிறது? பதறப் பதற, கதறக் கதறமாட்டை அறுத்துச் சாப்பிடுவது பாவமா; மாண்டு மடிந்து மண்ணுக்குள் போவதை இல்லாத கொடுமையால் வயிற்றுக்குள் போடுவது பாவமா? புழுத் தின்னும் கோழியையும், மலந்தின்னும் பன்றியையும்விடப் புல்லையும் பிண்ணாக்கையும் தின்னும் மாடு கேவலமானதா? (நூலிலிருந்து பக்.3-5)

… சாதி வித்தியாசத்தையே அழித்தாக வேண்டும். சாதி வித்தியாசத்தைப் போக்குவதற்கு எல்லாவிதமான தியாகத்தையும் செய்வதற்கு முன் வரவேண்டும். இந்த மாநாட்டில் செய்கிற தீர்மானங்களைச் செய்கையில் நிறைவேற்றி, அதன்படி நடக்க எல்லோரும் முன்வரவேண்டும். ‘பள்ளர்’ என்று அழைப்பதா, ‘வேளாளர்’ என்று அழைத்துக் கொள்ளுவதா என்பதில் காலத்தை விருதாவாக்கி, அடித்துக்கொண்டிருப்பதில் பயனில்லை; அது கூடவே கூடாது. மேல்நாட்டில் ஆராய்ச்சி செய்வதில் அடித்துக் கொள்கிறார்கள். நாம் பெயருக்காக அடித்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் தேவேந்திர குலப்பிராமணர் என்று வைத்துக்கொண்டாலும் சரி, பிராமணர்கள் என்று தங்கள் சாதிப் பெயர்களை வைத்துக் கொண்டு திண்டாடுவோரின் யோக்கியதை எனக்குத் தெரியும், விஸ்வப் பிராமணர், தேவாங்கப் பிராமணர், சவுராஷ்டிரப்பிராமணர் என்று தங்களை அழைத்துக் கொள்வதால் அவர்களுக்குப் புதிதாக முளைத்திருக்கும் யோக்கியதையை நான் அறிவேன். ஆதித் திராவிடன் எல்லார் வீட்டிலும், எவ்வளவு பாடி (வைது) இட்டாலும் தின்றுவிடுகிறான்; எந்த இடத்தில் வைத்து ஊற்றினாலும் குடித்துவிடுகிறான். ஆனால் விஸ்வப்பிராமணர் என்னும் பிராமணர்கள் வீட்டில் பச்சைத் தண்ணீரைக் கூடத்தொட மறுக்கிறான், இதன் காரணமென்னவென்று கேட்டால், நாங்களெல்லாம் வலக்கையர்கள், விஸ்வப்பிராமணர்கள் இடக் கையர்கள்; என்கிறார்கள். இம் மாதிரிதான். பிராமணர் பட்டத்தைத் தாங்கியவர்களெல்லாம் இருக்கின்றனர்.

தேவேந்திர குலம் என்பதும் எனக்கு இழிவாகத்தான் தோன்றுகிறது. என்ன காரணத்தின் பொருட்டு இந்தப் பெயரை வைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது எனக்குத் தெரியாது. ஆனால், ‘தேவேந்திரன்’ என்றால் எனக்குப் பெருத்த அசிங்கமாகயிருக்கிறது. ஏனென்றால், தேவேந்திரனைப் பற்றிக் கூறும் புராணக் கதைகள்  தேவேந்திரனை அவ்வளவு இழிவாகக் கூறுகின்றன. அவன் வேசி மகனிலும் இழிந்த ஜென்மம் என்பதாகவே அவைகள் உரைக்கின்றன. பல்வேறு பெயர்களைக் கொண்டு சாதி பிரிந்துபோவது கூடாது. நாயக்கரிலும் பல வித்தியாசம்; செட்டியிலும் வித்தியாசம்; பள்ளனும் பிள்ளை என்று வைத்துக்கொள்ளுகிறான் என்று சொல்லிப் பட்டணத்திற்குப் போகும் பிள்ளைகளும் அங்கு இருக்கும் பிள்ளைகளும் ஆகாயக் கப்பல் வேகத்தில் தங்கள் பெயர்களை முதலியார்களாக மாற்றி வருகின்றனர். எனவே, இந்த விதமான போக்கெல்லாம் கூடாது. சாதி வித்தியாசம் என்கிற எண்ணத்தையே அடியுடன் இடித்துத் தள்ள வேண்டும். நாம் பிறந்த சாதியை இழிவாக மதித்து இன்னொரு சாதியை உயர்வாக மதித்து, அதனிடம் அடைக்கலம் புகுவதைவிட இழிவு வேறொன்று மில்லை. இவ் வழியில் இறங்கவே கூடாது. (நூலிலிருந்து பக்.7-8)

‘பள்ளர்’ என்று அழைப்பதா, ‘வேளாளர்’ என்று அழைத்துக் கொள்ளுவதா என்பதில் காலத்தை விருதாவாக்கி, அடித்துக்கொண்டிருப்பதில் பயனில்லை… தேவேந்திர குலம் என்பதும் எனக்கு இழிவாகத்தான் தோன்றுகிறது… ‘தேவேந்திரன்’ என்றால் எனக்குப் பெருத்த அசிங்கமாகயிருக்கிறது.

சாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளே! ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள் 4000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் – ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறிமாறிக் கலந்ததால் ஏற்பட்டது என்று குறித்தோம். அப்படி இருந்தும் இன்னும் நம்ம வரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது, தங்களை வேளாளர்’ என்று சொல்லுபவர்களில் ஒருசிலர் –  மேற்படி சாதிக் கிரமத்தை – அதாவது ஆதிசாதி என்பவைகளான பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக்கொண்டு – தங்களை மாத்திரம் சற்சூத்திரர்’ என்று அழைத்துக் கொண்டும், மற்றும் சிலர் அச் சாதிக் கிரமவார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொண்டு – அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு ஆகப் பிரித்து – அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே – அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்தனவென்றும், அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும் ஒரு கற்பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்டவர்களான தாங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய – அடிமையாய் இருக்க வேறுபல சாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள்தான் ‘பள்ளு, பறை பதினெட்டுச் சாதிகள்’ என்பது என்றும் ஒரு புதிய எற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள்.

அந்தப்படிக் கூறப்படும் ‘பள்ளு, பறை பதினெண் குடிமக்கள்’ என்பவர்களைக் குறிக்கும் முறையில் பணிசெய்யும் பதினெண்வகைச் சாதியார் என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் – இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகன், ஒச்சன், கல்தச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோயிற்குடியன், தச்சன், தட்டான், நாவிதன், பள்ளி, பறையன், பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்று அகராதியில் உள்ளது.

ஆனால் இதே பதினெண் மக்களை ‘அபிதானகோசம்’ என்னும் ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறிக்கின்றதென்ன வெனில், ஏவலாள்களாக சிவிகையர், குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர் திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணெய் வாணிகர் அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர், எனப் பதினெண் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

இவை ஒருபுறமிருக்க, வேளாளர்களிலும் பல பிரிவுகளைக் காட்டியிருப்பதென்ன வெனில் – சூத்திரருள்ளே வேளாளர் தலையாயினார்; அவருள்ளே முதலிகள் தலையாயினார்; இவர்களுக்கு  அடுத்தபடி வேளாஞ்செட்டிகள். இதற்கு அடுத்த படியிலுள்ளோர் கார்காத்தார்; அடுத்த வரிசையிலுள்ளோர் சோழிய வேளாளர் – இவர்கள் சைவர்களாவார்கள் – சம்பந்தி போசனத்திற்கும் உரியவர்கள். இதற்கு அடுத்த படியிலுள்ளவர்கள் சோழிய, துளுவ, கொடிக்கால் முதலிய பலவகை வேளாளர் களாவார்கள். இவரில் தாழ்ந்தோர் அகம்படியர்; அவரில் தாழ்ந்தோர் மறவர்; அவரில் தாழ்ந்தோர் கள்ளர்; அவரில் தாழ்ந்தோர் இடையர்; இவர்களுக்கடுத்தபடியிலுள்ளோர் – கவரைகள், கம்மவர்கள்.

படிக்க:
சாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை | அம்பேத்கர்
கேள்வி பதில் : தேவேந்திர குல வேளாளர் – பட்டியல் வெளியேற்ற கோரிக்கை !

இவற்றுள் எதிலும் பிராமணர்கள் விஷயத்தில் எவ்விதமான பாகுபாடும் தாழ்வுக் கிரமமும் சந்தேகமோ, ஆட்சேபணையோ சொல்லுவதற்கு இடமில்லாமல் செய்துகொள்ளப் பட்டிருப்பதைக் கவனித்தால் சாதியின் சூழ்ச்சித் தத்துவம் நன்றாய் விளங்கும். மற்றபடி க்ஷத்திரியர்களிலும் வைசியர்களிலும் இருக்கும் சண்டைகளும், ஆட்சேபணைகளும் – க்ஷத்திரியர், வைசியர் என்று சொல்லிக்கொள்ளுவதில் எவ்வித உயர்வுத் தத்துவமும் இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களில் வீண் வழக்காடிக்கொண்டு, பொதுஜனங்களாலும் ஒப்புக்கொள்ளப்படாமல் ஒருவரை ஒருவர் இழித்துரைத்துக் குறைவுபடுத்தி வருவதும் அனேக இடங்களில் பிரத்தியட்சமாய்க் காண்கிறோம். மற்றும் ஒவ்வொரு சாதியாரும் தங்கள் தங்கள் சாதிகளைப் பற்றி எவ்வளவு மேன்மை ஆதாரங்கள் கற்பித்துக்கொண்டாலும் – கண்டுபிடித்தாலும், எந்தவிதத்திலும் பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள் எல்லாம் கீழ்ப்பட்டவர்கள் தான் என்பதை நிலைநிறுத்துவதற்கு மாத்திரம் அவ்வாதாரங்கள் பயன்படுகின்றனவே தவிர, மற்றபடி எந்தக் கருத்தைக் கொண்டு கஷ்டப்பட்டு இவ்வித ஆதாரங்கள் கற்பிக்கப்பட்டதோ – கண்டுபிடிக்கப்பட்டதோ அவற்றிற்குச் சிறிதும் பயன்படுவதில்லை .

எனவே, இந்த நிலையில் இன்று நமது நாட்டில் பார்ப்பான் ஒருவனைத்தவிர மற்றவர்கள் தாழ்ந்த சாதியார்கள் – அதாவது பார்ப்பனனால் தொடவும், சமபந்தி போஜனம் பண்ணவும் மற்றும் சில பொது உரிமைகள் பெறவும் கூடாத சாதியார்கள் என்பதும்; அவனுக்கு அடிமையாய் இருக்கவும் விபச்சாரம்’, ‘கீழ் மேல் சாதிக் கலப்பு’ என்று சொல்லும்படியான இழிவுத் தன்மையில் பிறந்தவர்கள் என்பதும் இன்றைய நமது சாதித் தத்துவமாக இருக்கின்றது. (நூலிலிருந்து 10-13)

தோழர் காந்தியார் தீண்டாமையை ஒழித்துவிட வேண்டும் பெறு வரட்டுக் கத்து கத்திப்பார்த்து விட்டார்; பல இலட்ச ரூபாயும் வசூலித்து மேல் சாதிக்காரர், மேல் வருணக்காரர் என்பவர் கையில் ஒப்படைத்து விட்டாரே தவிர, மற்றபடி தீண்டாமையின் ஒரு சிறு தூசியைக்கூட அசைக்க முடியவில்லை. ஏனென்றால், அவர் மற்றொரு பக்கம் கீதையையும் மனுதர்ம சாஸ்திரத்தையும், வருணத்தையும், சாதிக் கிரமத்தையும் ஆதரித்து வருகிறார். இன்று தீண்டாமை விலக்க வேலையிலும், சாதி வித்தியாச ஒழிப்பு வேலையிலும் ஈடுபட்டிருப்பவர்களில் 100 -க்கு 100 பேரும் கீதை, மனுதர்ம சாஸ்திரம் ஆகியவற்றை நம்பும் – ஆதரிக்கும் சோணகிரிகளே ஆவார்கள். இவர்கள் எவ்வளவு நாளைக்குப் பாடுபட்டாலும் – அடியற்ற ஓட்டைக் குடத்தில் தண்ணீர் இறைக்கும் மூடர்களுக்கு ஒப்பானவர்களே யாவார்கள். ஆகவே, தீண்டாமை ஒழிப்புக்கோ, சாதி ஒழிப்புக்கோ நீங்கள் முதலில் உங்கள்  மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க உங்களால் முடியவில்லையானால் மதத்தைவிட்டு நீங்களாவது விலகியாக வேண்டும். உங்கள் மதம் போகாமல் ஒரு நாளும் உங்களது தீண்டாமைத் தன்மையோ, பறைத் தன்மையோ ஒழியவே ஒழியாது என்பது கல்லுப்போன்ற உறுதி. உதாரணம் வேண்டுமானால், இதுவரையில் தீண்டப்படாதவர்களாயிருந்து மனித சமூகத்தில் தீண்டக் கூடியவர்களாக ஆன எவரும் தீண்டப்படாதவர்களாய் இருந்த போது அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த மதத்தை உதறித் தள்ளிவிட்ட பின்புதான், தீண்டத்தக்கவர்கள் ஆகி இருக்கிறார்கள். இதற்குக் கோடிக்கணக்கான மக்களை ஊர், பெயருடன் புள்ளி விவரத்தோடு காட்டலாம்.

படிக்க:
சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !

ஆதலால், மதத்தைக் காப்பாற்றிக் கொண்டு தீண்டாமையை விலக்கி விடலாம் என்று நினைத்து ஏமாற்றமடையாதீர்கள். தோழர் காந்தியார் ஒரு மதவாதியே யொழிய, மனித ஜீவ அபிமான வாதி’ அல்லவே அல்ல. அவர் தனது இந்து மதம் காப்பாற்றப்படுவதற்காகத்தான் தீண்டாமையை  அழிக்க வேண்டும் என்று சொல்லி வந்திருக்கிறாரே ஒழிய தீண்டப்படாத மக்களின் கொடுமைகள் தீரவேண்டுமென்பதை முக்கியமாய்க் கொள்ள இல்லை.  (நூலிலிருந்து பக்.20-21)

நூல் : ஜாதி ஒழிய வேண்டும் – ஏன் ?
ஆசிரியர் : தந்தை பெரியார்

வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
84/1, (50), பெரியார் திடல், ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை – 600 007.
தொலைபேசி எண் : 044 – 2661 8161
மின்னஞ்சல் : info@periyar.org

பக்கங்கள்: 32
விலை: ரூ 15.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : dravidianbookhouse

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க