அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 04

பாடவேளையின் போது குழந்தைகளுடன் காரிய ரீதியான
உறவுகளை ஏற்படுத்தும் கோட்பாடு..

தற்கு என்ன பொருள்? சோவியத் ஆசிரியரியல் நிபுணராகிய எஸ்.ஷாத்ஸ்கி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். இவரிடமிருந்து தான் இக்கருத்தை நான் பெற்றேன். “…விஷயம் என்னவெனில், ஆசிரியரியல் பிரச்சினைகள், சாதாரண மானுடப் பிரச்சினைகளிலிருந்து பெரிதும் மாறுபடுகின்றன. ஆசிரியருக்கு தன் கேள்விக்கான பதில் தெரியும், ஆசிரியர் கேட்ட கேள்விக்கான பதில் ஆசிரியருக்குத் தெரியும் என்பதை மாணவனும் அறிவான். நாம் ஒருவரையொருவர் கேள்விகள் கேட்டுக் கொள்ளும்போது நமக்குத் தெரியாததைத்தான் கேட்கிறோம். எனவே, ஆசிரியர் தெரிந்து கொண்டே கேள்வி கேட்கும் போது, இக்கேள்வி ஒரு விதமான பொறி என்னும் கருத்து மாணவனின் மனதில் உறுதிபெறுகிறது, அவன் சாராம்சத்தில் பதில் சொல்லாமல், ஆசிரியரின் மனதில் உள்ள பதிலைக் கண்டுபிடிக்க முயலுகிறான்.

நாம் நம் மாணவர்களிடம் கேட்கும் இக்கேள்விகள் இறுதியில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையில் காரிய ரீதியல்லாத உறவுகளைத் தோற்றுவிக்கின்றன. ஆசிரியர் பல அணுகுமுறைகள், பொறிகளைப் பயன்படுத்துகிறார், மாணவர்களோ இவரது நோக்கங்களைப் புரிந்து கொண்டு தற்காப்பு நிலையை மேற்கொள்ள முயலுகின்றனர். சரி, பிரச்சினையை வேறு எப்படி முன்வைப்பது? கேள்வி பதில்களில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே காரிய ரீதியான உறவுகளை, மனநிலைகளை ஏற்படுத்தலாமா? ஆசிரியர் எதைப் பற்றிக் கேட்க வேண்டும்? அவர் காரிய ரீதியான உறவுகளை ஏற்படுத்த விரும்பினால் தனக்குத் தெரியாததை, மாணவர்களுடன் கலந்து பழகுவதில் தான் அறியாததைக் கேட்க வேண்டும்.

மாணவர்கள் சந்தித்த இடர்ப்பாடுகளும், அவர்களது சந்தேகங்களும், மாணவர்களிடம் கல்வியின் பால் தோன்றும் ஆர்வங்களும் அல்லது வெறுப்புகளும் ஆசிரியருக்குத் தெரியாது. ஆகவே, ஆசிரியர் தன் மாணவர்களை எதைப் பற்றியாவது கேட்க விரும்பினால், அவர்களின் கஷ்டங்கள், சந்தேகங்கள், அக்கறைகள் போன்றவற்றைப் பற்றிக் கேட்பது தான் நல்லது. இப்படிச் செய்தால், தம் பதில்களின் மீது மாணவர்கள் பெரும் அக்கறை காட்டும்படி செய்ய முடியுமென நான் உறுதியாக நம்புகிறேன், அப்போது அவன் ஆசிரியர் இயன்றவரை அதிகமாகத் தன்னைக் கேள்விகள் கேட்க வேண்டுமென விரும்புவான், ஏனெனில் இக்கேள்விகள் அவன் வேலை செய்ய உதவுகின்றன; இதில் தான் மாணவர்கள் எப்போதும் அக்கறை கொண்டுள்ளனர்; இப்படிப்பட்ட கேள்வி பதில்களுக்குப் பின் மாணவர்களுக்கு வேலை செய்வது எளிமையாக இருக்கும்!”

மாபெரும் சோவியத் ஆசிரியரின் நூலிலிருந்து, பாட வேளையில் குழந்தைகளுடனான காரிய ரீதியான உறவுகளைப் பற்றிய கருத்துக்களைக் கண்ட நான் என்னையறியாமலேயே, நீண்ட நாட்களுக்கு முன் எப்போதோ இதே மாதிரி காரிய ரீதியற்ற கேள்விகளைக் கேட்டதையும் அக்குழந்தைகளின் முகங்களையும் எண்ணிப் பார்த்தேன். “எனக்கு எல்லாம் தெரியும், உங்களுக்குத் தெரியுமா?” என்பது தான் இக்கேள்விகளின் சாரமாயிருந்தது. இச்சமயங்களில் குழந்தைகளின் முகங்களில் சலிப்புத் தென்பட்டது, கண்களில் ஒளியில்லை, குறும்புக்காரர்கள் குறைவு, கட்டுப்பாடோ சாலச் சிறந்த தாயிருந்தது, அறையில் முன்னும் பின்னும் நடந்த படி கேள்விகளை யோசித்து கேள்! இப்படிப்பட்ட போதனை முறைக்காக யார் குற்றஞ் சொல்ல முடியும்?

இப்போது? குழந்தைகளுடனான காரிய ரீதியான உறவுகள் பற்றிய ஏதோ கோட்பாட்டை முன்வைக்கிறேன்! இக்கருத்தை வெளியிட்டவர் இது போதனைமுறைக் கோட்பாடு என்று சொல்லவில்லையே, ஆசிரியர் தனக்குத் தெரியாததைக் கேள்வியாக கேட்க வேண்டும் என்று தானே சொன்னார். நானோ எனக்கும் என்னைப் பின்பற்ற விரும்பும் மற்றவர்களுக்கும் எல்லாவற்றையும் சிக்கலாக்குகிறேன். எப்படிச் சிக்கலாக்குகிறேன்? இதோ நீங்களே பாருங்கள்.

“6+2 எவ்வளவு?” என்று குழந்தைகளிடம் கேட்கிறேன்.

“எட்டு!” என்று ஒரே குரலில் பதில் வருகிறது.

“5+3?”

“எட்டு!” என்று பதில் சொல்கின்றனர்.

இந்த இடத்தில் முகத்தில் வியப்பை வெளிப்படுத்துகிறேன், சிந்தனை வசப்படுகிறேன், என் உதடுகள் எதையோ முணு முணுக்கின்றன; குழந்தைகள் தம் கண்களை அகல விரித்தபடி “என்ன நடக்கிறது?” என்று என்னைப் பார்க்கின்றனர்.

“என்ன சொல்கின்றீர்கள்? 5 + 2 எட்டா?”

அவ்வளவு தான்: “நீங்கள் ‘5 +3′ என்று சொன்னீர்கள்!”

“இல்லை, நான் அப்படிக் கேட்கவில்லை!” என்று நான் உறுதியாகச் சொல்கிறேன். ‘5+2’ எவ்வளவு என்று தான் கேட்டேன், நீங்கள் தான் ‘எட்டு’ என்றீர்கள்!”

“இல்லை, நீங்கள் ‘5+3’ என்றீர்கள். அது 8.”

“சரி, நல்லது!” என்றாலும் எனது குழப்பத்தை பேச்சிலும் முகத்திலும் வெளிப்படுத்தியபடி கேட்கிறேன்:

”7+1 எவ்வளவு?”

“7+1 எட்டு.”

“மன்னியுங்கள், நான் 7+1 கேட்க விரும்பவில்லை. 4+4 எவ்வளவு என்று கேட்க விரும்பினேன்.”

“4+4 எட்டுதான்.”

“என்ன நீங்கள், எல்லாவற்றிற்கும் ‘எட்டு, எட்டு’ என்கின்றீர்கள்! ‘ஒன்பது’ அல்லது ‘பத்து’ என்று வேறு பதில் சொல்ல முடியாதா?” என்று உண்மையான குரலில் கேட்கிறேன்.

ஆனால் தம் ஆசிரியர் “ஞாபகமறதியானவர்”, “கவனக் குறைவானவர்” என்பதற்கு குழந்தைகள் பழகிவிட்டதால், நிரூபிக்கத் துவங்குகின்றனர்:

“நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் விடை 8 தான்! அப்படியிருக்கும் போது ‘ஒன்பது’, ‘பத்து’ என்று எங்களால் எப்படிச் சொல்ல முடியும்?”

“நான் எந்த கணக்குகளைத் தந்தேன்?”

“6+2, 5+3, 7+1, 4+4!”

நான் இவற்றை கரும்பலகையில் ஒரே வரிசையில் எழுதி விட்டு சிறிதே சிந்தித்து, அவற்றின் எதிரே சமன் குறியிட்டு, எட்டு என்று பெரிதாக எழுதி விட்டு பின் எனக்குள்ளேயே கூறிக் கொள்வதைப் போல் நடிக்கிறேன்: “ஆமாம், ஆமாம், எட்டுதான்!” இக்கணக்குகளைப் போட்ட அந்த குறுகிய நேரத்தில் குழந்தைகளின் முகங்களில் வியப்பும் கவலையும் மகிழ்ச்சியும் பொறுமையின்மையும் மாறி மாறி வருகின்றன. கண்கள் ஒளிர்கின்றன. சில சமயங்களிலோ வகுப்பில் யார் என்ன சொல்கின்றனர் என்பதைக் கேட்க முடியாத படி ஒரே சத்தம். ஆனால் அவர்கள் உண்மையை அறிவதைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர்.

இங்கே நான் குழந்தைகளுடன் எப்படிப்பட்ட காரிய ரீதியான உறவுகளை நிலை நாட்டினேன்? நான் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் எனக்குத் தெரியும், எனக்கு ஏதோ புதியதை சொல்லித் தருவதாக அவர்களும் நினைக்கவில்லை. அதாவது இங்கே புதியது எதுவும் இல்லை. ஆனாலும் உறவுகள் முற்றிலும் காரிய ரீதியாக இருந்தன என்று எனக்குத் தோன்றுகிறது. நான் முற்றிலும் காரிய ரீதியாக, கவலையோடு கணக்குகளைக் கொடுத்ததால், வேறொன்றை நிரூபிக்க முயன்றதால் தான் அவை இப்படி ஆயின. எனது “கவனக் குறைவு”, “ஞாபகமறதி”, “தவறுகள்” இவர்கள் மத்தியில் என்னைத் திருத்தும் நாட்டத்தை, என்னோடு விவாதம் புரியும் நாட்டத்தைத் தூண்டி விடுகின்றன.

ஏனெனில், உண்மையில் எனக்குத் தெரியாத கேள்விகளை மட்டுமே குழந்தைகளிடம் கேட்டுக் கொண்டிருக்க முடியாதே. எனவே தான் அவர்களுடன் கலந்து பழகுவதன் மூலம் அவர்கள் தம்மை எனக்குச் சரிசமமானவர்களாக உணர, அவர்கள் எனக்கு அவசியம், அவர்களின்றி எனக்குக் கஷ்டமாக இருக்கும் என்று புரிந்து கொள்ள நான் வாய்ப்பளிக்கிறேன். குழந்தைகளுடன் நான் கலந்து பழகி அனுபவம் கிடைக்கக் கிடைக்க, ஆசிரியரியல் என்பது குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி போதனையைப் பற்றிய விஞ்ஞானம் மட்டுமல்ல, இது குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி போதனைக் கலையைப் பற்றிய விஞ்ஞானம் என்ற விவாதத்திற்குரிய கருத்து நிலை சரியானது என்பதை மேன்மேலும் உறுதியாக நம்பி வருகிறேன். வகுப்பறையில் அமர்ந்து, என்னைப் பார்த்தபடியே, என்னிடமிருந்து முக்கியமான எதையோ எதிர்பார்த்துக் காத்திருக்கும் குழந்தைகள் உண்மையிலேயே ஒவ்வொரு பள்ளி நாளையும் மகிழ்ச்சியோடு கழிக்க வேண்டுமென நான் விரும்பினால், தாம் வளர்க்கப்படுகிறோம், தமக்கு படிப்புச் சொல்லித் தருகின்றனர் என்பதை உணராமலேயே வளர்க்கப்பட வேண்டும், கல்வி பெற வேண்டும் என்று நான் விரும்பினால், எங்களுடைய காரிய ரீதியான உறவுகள் உறுதியானவையாக, தொடர்ச்சியானவையாக இருக்க வேண்டும் என்பதன் மீது நான் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த உறுதியையும் தொடர்ச்சியையும் பேணிக் காக்கும் அவசியம் ஏற்படும் போது நான் துணிவாக, ஈடு இணையற்ற ஆசிரியர் – நடிகராக நடிக்க வேண்டும். அதாவது, எனக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான காரிய ரீதியான உறவுகள் உண்மையானவையாக இருக்க வேண்டும், சுதந்திரமாக முடிவு செய்யும் உரிமையை இவை குழந்தைகளிடமிருந்து பறிக்கக் கூடாது, பாடத்தில் தமது உண்மையான பங்கேற்பின் உணர்வை அவர்களிடமிருந்து பிடுங்கக் கூடாது என்பவை தான் மேற்கூறியதன் சாரமாகும். இது ஒரு எளிய காரியமல்ல, ஆனால் நான் என் தொழிலைத் தேர்ந்தெடுக்கும் முன் கலந்து பேசிய யாருமே குழந்தைகளுடன் வேலை செய்வது சிக்கலான காரியமல்ல என்று எனக்கு உறுதி தரவில்லை.

எனது ஆறு வயதுக் குழந்தைகளுடன் நான் வேறு வழிகளிலும் காரிய ரீதியான உறவுகளை நிலை நாட்டுகிறேன். எந்தப் பாடத்தை எப்படி படிக்கப் போகின்றோம் என்று அவர்களுக்குச் சொல்லி, தம் கருத்தை வெளியிட வாய்ப்பளிக்கிறேன்.

“குழந்தைகளே, இன்று என்ன கணக்குகள், பயிற்சிகள் உங்களை எதிர்நோக்கியுள்ளன பாருங்கள்! இவற்றை எல்லாம் இன்று படிக்கப் போகின்றோம்!” என்று பாட ஆரம்பத்தில் சொல்லி கரும்பலகையில் உள்ளவற்றைக் காட்டுவேன் அல்லது வாய் மொழியாக விளக்குவேன். குழந்தைகளைக் “கவரும்படி” இதைச் செய்வேன். ஒவ்வொரு வேலையும் முடிந்ததும், வரைபடத்திற்குத் திரும்பி, “இதோ இதைச் செய்தாகி விட்டது, அடித்து விடலாம்” என்பேன்.

அல்லது, “இன்று பாடம் எப்படியிருக்க வேண்டுமென விரும்புகின்றீர்கள்!” என்று கேட்பேன்.

“சிக்கலானதாக… கவர்ச்சிகரமானதாக… விந்தையானதாக… அதிகம் சிந்திக்க வைப்பதாக… சுயமாக வேலை செய்யத்தக்கதாக… விவாதிக்கத்தக்கதாக… சிரிக்கவும் இடமிருக்கும்படியாக…”

“இப்படிப்பட்ட பாடம் நடத்த உதவுவீர்களா?”

“கண்டிப்பாக!”

பாட இறுதியில் நான் கேட்பேன்: “பாடம் உங்களுக்குப் பிடித்திருந்ததா?”

பாடம் பிடிக்காவிடில், பின்வருமாறு பதில் வரும்:

“ரொம்ப இல்லை….. சுமார்… பரவாயில்லை…. சிக்கலான கேள்விகளே இல்லை… சுயமான வேலையில்லை…”

அப்போது அவர்களிடம் உதவி கோருவேன்: “என்ன ஆலோசனை சொல்கின்றீர்கள்? நாளைய பாடத்திற்கு எந்த மாதிரி கேள்விகள், கணக்குகளைத் தயாரிக்கட்டும்?”

படிக்க:
நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல !
இனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம்

பாடம் பிடித்திருந்தாலோ இப்படிப் பதில் வரும்: “ரொம்ப….. சுவாரசியமாயிருந்தது. நன்கு விவாதித்தோம்…. சிக்கலான கணக்குகளைப் போட்டோம்… புதியதைக் கற்றுக் கொண்டோம். பல்வேறு தவறுகளைத் திருத்தினோம்.”

“குழந்தைகளே! இப்படிப் பாடம் நடத்த உதவியதற்கு நன்றி!”

“உங்களுக்கும் நன்றி!”

என் அன்பு ஆசிரியர்களே! அப்போது தான் எழுதக் கற்றுக் கொண்ட ஒரு சிறுவன் இடைவேளையில் தாழ்வாரத்தில் “சுவாரசியமான கணிதப் பாடத்திற்காக நன்றி!” என்று எழுதியதைப் படிக்கும் போது உங்களுக்கு எம்மாதிரியான உணர்ச்சிகள் ஏற்படும்? இந்தத் தருணத்தில் என்னிடம் எந்த உணர்வுகள் தோன்றுகின்றன என்று சொல்ல எனக்கு சக்தியிருக்காது, ஆனால் ஒவ்வொரு முறையும் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் என்ன நினைக்கிறேன் என்று சொல்ல முடியும்: “குழந்தைகள் என் பாடங்களில் நன்கு பழகுகின்றனர், அவர்களுக்கு சுவாரசியமாக உள்ளது. அப்படியெனில் நான் சரியான பாதையில் செல்கிறேன் என்று பொருள்”.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க