தியாகராயர் நகர் (தி. நகர்) – சென்னையின் பிரம்மாண்டமான துணிக்கடைகளும் நகைக்கடைகளும் மண்டிக்கிடக்கும் பகுதி. இங்கு வரும் நடுத்தர, மேட்டுக்குடி வாடிக்கையாளர்களின் நாற்சக்கர வாகனங்களால் முற்றுகையிடப்பட்ட பனகல் பூங்கா, பேரிறைச்சலுக்கும் மண்டையைப் பிளக்கும் வெயிலுக்கும் மத்தியில் சில்லென்ற குளிர்காற்றை வீசிக்கொண்டிருந்தது. நிழல் படர்ந்த மரங்கள், அடைக்கலம் தேடிவந்த உழைப்பாளர்களைத் தாலாட்டிக் கொண்டிருந்தது.

நெருக்கடியான தி. நகரின் மத்தியில் அமைதியான பனகல் பூங்கா.

லாபம் முதலாளிக்கு, அதன் வேதனை தொழிலாளிக்கு என்பது போல ஆட்டோ மொபைல், செல்ஃபோன், துரித உணவு ஊழியர்களும் மார்கெட்டிங் துறை இளைஞர்களும் தங்களின் தற்காலிக அலுவலகமாக இதைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, தங்கள் ஊழியர்கள் கூடுவதற்கு ஒரு இடம் கூட இல்லாமல் ப்ளேடு கம்பெனிபோல் இயங்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் சூப்பர்வைசர்கள் இங்குதான் அன்றாட வேலைகளை ஊழியர்களுக்குப் பிரித்துக் கொடுக்கிறார்கள். அந்த ஊழியர்கள் அலைந்து திரிந்துவிட்டு, மதிய உணவை முடித்து ஓய்வெடுக்கும் இடமும் இதுதான். இவர்கள் அவசரமாக சாப்பிட்டு வீசும் மிச்சம் மீதிகளுக்காக அணிவகுத்து வருகின்றன, தின்று கொழுத்தப் பெருச்சாளிகள்.

பலரும் ஆங்காங்கே மூன்று நான்கு பேர் கொண்ட சிறுசிறு குழுக்களாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்; சிலர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். யூனிஃபார்ம் போட்ட சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தது, நமது கண்களை ஈர்த்தது. அருகே சென்றதும் அவர்கள் அனைவரும் பக்கத்தில் இருக்கும் RMKV துணிக்கடை ஊழியர்கள் என்பதைத் தெரிந்துகொண்டோம்.

“உங்க ஷோரூமில் சாப்பிட இடம் இல்லையா?” என்றதற்கு, அவசரமாக “அப்படியில்லை, இங்கு அமர்ந்து சாப்பிட்டா கலகலப்பா இருக்கும். திரும்பப் போகும்போது ஃப்ரெஷாக வேலை செய்வோம். அங்கேயே சாப்பிட்டால் போரடிக்கும், வெறுப்பாக இருக்கும். திரும்பவும் வேலை செய்வது சலிப்பாக இருக்கும்” என்றனர்.

கடையில் வேலை செய்யும் அனுபவம் பற்றி கேட்டதற்கு, பலரும் இறுக்கமாக வாய் மூடி மவுனமாயிருந்தனர்.

rmkv workers
அருகில் உள்ள பனகல் பூங்காவில் சாப்பிட வந்திருக்கும் RMKV துணிக்கடை ஊழியர்கள்.

சிலரை வற்புறுத்தி கேட்ட போது, “அவரைக் கேளுங்க, அவன கேளுங்க…” என்று ஒருவரையொருவர் கைகாட்டி ஒதுங்கி நின்றனர். சிறு மவுன இடைவெளிக்குப் பிறகு, ஒருவர் சேல்ஸ் கவுன்டரில் கஸ்டமரை அட்டன் பண்ணுவதைப்போல் நம்மிடம் பேசத் தொடங்கினார்.

“காஞ்சிபுரம் பக்கம் ஆரணிதான் சொந்த ஊர். இங்கே வேலைக்குச் சேர்ந்ததினால, குடும்பத்தை சென்னைக்கே கூட்டி வந்துவிட்டேன்.

விக்கிற விலைவாசியில சென்னையில குடும்பம் நடத்துறது ரொம்ப சிரமம்தான். என்ன செய்றது! பட்டுத் தறி நெய்யிற படிக்காத குடும்பத்துல பிறந்த எனக்கு இந்த வேல கெடச்சதே பெரிய விசயம்தான். ஆனா, பட்டு நுணுக்கம் அனைத்தும் தெரிந்தவர்கள் நாங்கள். அதனால்தான், பட்டு செக்சனில் போட்டிருக்காங்க.

கடைக்கு வரும் கஷ்டமரிடம் RMKV பட்டுப் புடவையின் பாரம்பரியத்தை, இழையிழையாக எடுத்துச் சொல்வோம். அதில் அவர்கள் மயங்கி புடவையை வாங்கும் வரை விடமாட்டோம். சில சமயங்களில் கஸ்டமர் கேட்கும் கேள்விகளால் நாங்கள் சோர்ந்து போய் மயக்கமாவதும் உண்டு” என்றார்.

சேல்ஸ்மேன் மூர்த்தி.

“கஷ்டமரை அட்டன் பண்ணாத நேரத்தில் உட்கார அனுமதி உள்ளதா?” என்றோம்.

“சார் நான் கவுன்டரில் கேசியர் வேலை பார்க்கிறேன். எனக்கே உட்கார சேர் இல்ல. சேல்ஸ்மேன் கவுன்டர்ல சொல்லவா வேணும். அப்புறம் எங்கே உட்காருவது. கால் வலித்தால், காலை மாற்றி ஒரே காலில் நின்றுகொள்ள வேண்டியதுதான். அதிகம் நின்று நின்று காலிலிருந்து அடிவயிருக்கும் வலி பரவும். அப்போது யாருக்கும் தெரியாத மாதிரி கவுன்டரில் சாய்ந்து கொள்வோம். வலி அதிகமாச்சுன்னா, கீழே கிடக்கும் பொருட்களை அடுக்கி வைப்பது போல, தரையில் உட்கார்ந்து வலியைச் சமாளிப்போம்” என்றனர்.

“கேரள மாநிலத்தில் விற்பனை ஊழியர்கள் நாற்காலியில் அமர்வதற்கு உரிமை உள்ளது என்று சட்டம் கூட போட்டுவிட்டார்களே” என்றோம்.

ஒருவர் மாற்றி ஒருவராக பேச ஆரம்பித்தார்கள்: “நம்ம ஓபிஎஸ், இபிஎஸ்-ஏ சின்னம்மா பெரியம்மா முன்னால சேர்ல உட்கார்ந்ததில்ல. அவங்களா நாங்க உட்கார சட்டம் போடுவாங்க!

சேல்ஸ்மேன் குமார்.

கடைக்கு வர்ற கஸ்டமர்கள்தான் முதலாளிக்கு தெய்வம். அந்தத் தெய்வங்களுக்கு எதிராக நாங்க எப்படி சார் உட்கார முடியும். இதுமட்டுமல்ல, சேல்ஸ் கவுன்டரில் நாங்கள் அனுபவிக்கிற நரக வேதனையை உங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. எங்களோடு வாழ்ந்தால்தான் அது உங்களுக்குத் தெரியும். கஸ்டமரை கவனிக்கும் கவுன்டரை தவிர, மற்ற கவுன்டர்கள் காலியாக இருந்தாலும், அங்கிருக்கும் சேல்ஸ்மேன்கள் தங்களுக்குள் பேசக்கூடாது. குறிப்பாக சிரித்தால் – பேசினால் கடுமையான தண்டனை. சம்பளம் கூட கட்டாகும்.

கஸ்டமர் வி.ஐ.பி. என்றால் காலியான கவுன்டரில் சிரித்து பேசிய சேல்ஸ்மேனை அன்றைக்கே வேலையை விட்டு அனுப்பி விடுவார்கள். ‘நம்மைத்தான் கேலி செய்கிறார்கள் என்று கஸ்டமர் மூடவுட்டாகி வாங்காமல் கடையை விட்டுப் போய்விட்டார்’ என்று பழியை நம் மீது போடுவார்கள்.

‘இனி, அந்த கஸ்டமர் நம்ம கடைக்கு வருவாரா, வியாபாரமே போய்விட்டது’ என்று கதறுவார்கள். ஆதாரமாக, அந்த கஸ்டமர் சாதாரணமாக சேல்ஸ்மேனை திரும்பிப் பார்த்த வீடியோ ஃபுட்டேஜை போட்டுக் காண்பிப்பார்கள். இதைவிட கொடுமை, கஸ்டமர் மார்வாடி என்றால், ‘அவருக்குப் பிடித்த கச்சோலி ரகத்தை நீ ஏன் காண்பிக்கவில்லை?’ என்று அப்போது பதிவான வீடியோ ஃபுட்டேஜை போட்டுக் காண்பிப்பார்கள். அதில் பழைய மோட்டா ரகம், திக்கான கலர் புடவைகளை வேண்டா வெறுப்பாக காண்பித்ததால்தான் அவர்கள் வாங்காமல் போய்விட்டார்கள்’ என்று ஏதேதோ சொல்லி எல்லோர் முன்னிலையிலும் வேலைக்கு லாயக்கு இல்லை என்று அவமானப்படுத்துவார்கள்.

‘வந்தவுங்க ரிச் கஸ்டமர், அவங்க எப்படி எதுவும் வாங்காமல் போவாங்க. நீதான் சரியில்லை’ என்பார்கள். சூப்பர்வைசர்களுக்கு வேலையே இதுதான். வாங்காமல் போனவர்கள் எந்தக் கவுன்டரிலிருந்து போனார்கள் என்று வீடியோ கவரேஜ் வைத்து ஆதாரத்துடன் காண்பிப்பார்கள். சம்பந்தப்பட்ட சேல்ஸ்மேன்களின் நிலை பெரும்பாடாயிடும். இதுல எங்க RMKV   முதலாளி கடவுள் மாதிரி. மற்ற கடைகளிளெல்லாம் இதவிடப் பெரிய பெரிய கொடுமைகளே நடக்குது.

கவர்ண்மெண்டுல கூட ஒன்னாந் தேதிதான் சம்பளம். இங்கே ஒவ்வொரு மாதமும் 28-ம் தேதியே கைக்கு வந்திரும். 4 ஞாயிறு, 2 மெடிக்கல் லீவுன்னு மாதத்துக்கு 6 நாள் லீவு எடுத்துக்கலாம். லீவு போடலன்னா அந்த 6 நாள் சம்பளமும் சேர்த்து கொடுப்பாங்க. பேட்டா, போக்குவரத்துக்கு மாதம் 950 ரூபாய் கிடைக்கும். 20 வருடம் வேலை செய்த சேல்ஸ்மேனுக்கு 12 ஆயிரம் சம்பளம், அப்புறம் 6 ஆயிரம் எக்ஸ்ட்ரா கொடுப்பாங்க. தினமும் டூட்டி காலை 9-லிருந்து மாலை 8; காலை 11.30-லிருந்து இரவு 9.45 வரைன்னு ரெண்டு ஷிப்ட். இதுல எந்த டூட்டி வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம். இ.எஸ்.ஐ., பி.எஃப் எல்லாம் கரெக்டா புடிச்சி கொடுப்பாங்க. வேலையிலேருந்து நிக்கிறோமுன்னா உடனே செட்டில் பண்ணிடுவாங்க.

இங்கே வேலை செஞ்சவுங்க மத்த கடையில போயி வேலை செய்யவே முடியாது. அடங்காத சேல்ஸ்மேனை அடக்குறதுக்கு அங்கெல்லாம் ரவுடிகளை (bouncer) வேலைக்கு வச்சிகிறாங்க. அந்த மாதிரி துணிக்கடைகதான் தி. நகருல அதிகம். எங்கக் கடை சொர்க்கம். பிரச்சினை எங்கதான் சார் இல்ல. அத தினமும் நினைச்சா நம்ம கஷ்டம் பெரிசா தெரியும்” என்று சொல்லிவிட்டு ஆர்.எம்.கே.வியை நோக்கி ஓடினார்கள்.

கணக்காளர் நந்தினி.

இதில், “ஏ… மாமியாரே” என்று சேல்ஸ்மேன்களால் அன்போடு அழைக்கப்பட்ட சக பெண் தொழிலாளி. ஓட்டலில் வாங்கி வந்த சாப்பாட்டை அனைவருக்கும் பங்கிட்டு கொடுத்து அவரும் சாப்பிட்டார்.

“ஏன் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டுவரவில்லை?” என்று கேட்டோம்.

அதற்கு, “வீட்டுல கேஸ் சிலிண்டர் காலியாகி ரெண்டு நாளாகுது. கேஸ் வந்தாதான் வீட்டு சாப்பாடு” என்றார்.

“எக்ஸ்ட்ரா சிலிண்டர் வாங்க வேண்டியதுதானே?” என்றோம்.

“அதுக்குன்னு தனியா ரெண்டாயிரம் ரூபா வைக்கணும் இல்லையா. வாங்குற சம்பளத்துல அதுக்கு எங்கே போறது” என்றார்.

கேஸ் கவுன்டரில் வேலை செய்யும் மற்றொரு பெண் ஊழியர் கூறும்போது,

“எங்க ப்ராஞ்ச்ல 500 பேருக்குமேல வேல செய்யிறோம். நாங்க ஒரே குடும்பமாத்தான் பழகுறோம். குடும்பத்துல ஒவ்வொருத்தருக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். சில சின்ன வயசு பொண்ணுங்க உள்ளே நுழையும்போதே கண்ணீரோடு வருவாங்க. கொஞ்சம் நேரம் ஒதுக்கி அவங்க பிரச்சினைகளைக் கேட்டு ஆறுதல் சொல்வோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

என்னோட குடும்பத்துலயும் பிரச்சினைதான். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு, டேலியும் முடிச்சிருக்கேன். வேல எதுவும் அமையல. அம்மா, அப்பாவ காப்பாத்தணும், தங்கச்சியை கரைசேர்க்கணும். இங்கே வந்து சேந்துட்டேன். 9,500 ரூபாயில குடும்பத்த ஓட்டுறோம்” என்றார்.

28 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் கூறும்போது, “நாள் முழுக்க நிக்கிறதுனால, கெண்டக்கால் வலி தாங்க முடியாது. வீட்டுக்குப் போயி சாப்பிட்டு முடிச்சதுமே தயிலம் தேச்சிட்டுப் படுத்துடுவேன். அந்த அசதியிலேயே தூங்கி எழுந்திருப்பேன்.

எங்களோட பொழுதுபோக்கு சக ஊழியர்களோட சிரித்துப் பேசி சந்தோசமா இருக்குறதுதான். மற்றவங்க மாதிரி டிவி சீரியல், சினிமான்னு பொழுத கழிக்க முடியாது. இங்கேயிருந்து போறவுங்க வேற எந்த நிறுவனத்துலயும் வேலைக்குச் சேர்ந்து நீடிக்க முடியாது” என்றார் உறுதியாக.

***

வாடிக்கையாளர்கள் உள்ளே நுழைந்ததும் மங்களகரமாக உணரவேண்டும் என்பதற்காக, சீருடையோடு சீரணியாக நெற்றியில் சந்தனப் பொட்டு வைக்கச் சொல்வது கட்டாயப்படுத்துவதுதான். கெண்டைக்கால் வலி வந்து துவளும்போதும் நாள் முழுக்க நின்றுகொண்டே இருப்பது நரக வேதனைதான். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சிரித்துப் பேசி உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பது மனிதத்தன்மையற்றதுதான். மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் துணி வாங்காமல் செல்லும்போது, அதற்குக் காரணமாக வீடியோ ஃபுட்டேஜ் போட்டு சக ஊழியர்கள் மத்தியில் அவமானப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதுதான்.

ஆனாலும், அந்தத் தொழிலாளர்கள் அனைத்துத் துன்பங்களையும் சகித்துக் கொள்கிறார்கள்; வாழப் பழகிக்கொள்கிறார்கள். காரணம், வாழ்வதற்குத் தகுதியற்ற நரகமாய் வெளி உலகம் இருக்கும்போது, RMKV சொர்க்கமாக இருப்பதில் ஆச்சரியமில்லை அல்லவா!

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்