பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் மோடி அரசு, தற்போது ரயில்வே துறையைத் தனியாருக்கு விற்பதில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. கடந்த மாதம் நிதிஆயோக் தலைவர் அமிதாப் கண்ட் இது குறித்து ரயில்வே துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக 50 ரயில் நிலையங்கள் தனியார்வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், 150 வழித்தடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நிதி ஆயோக் தலைவரின் கடிதம் கிடைத்த மறுநாளே களத்தில் இறங்கிய ரயில்வே துறை, இதற்கென சிறப்பு அதிகாரக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது. விமான நிலையங்களை தனியார்வசம் ஒப்படைத்தைப் போன்று ரயில் நிலையங்களையும் படிப்படியாக தனியார்வசம் ஒப்படைக்கவிருக்கிறார்கள்.
ஏற்கெனவே தில்லி-லக்னோ, மும்பை-அகமதாபாத் வழித்தடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு, தில்லி-லக்னோ வழித்தடத்தில் தனியார் ரயில் போக்குவரத்து தொடங்கிவிட்ட நிலையில் தில்லி-மும்பை, தில்லி-கொல்கத்தா, தில்லி-பாட்னா மற்றும் சென்னை-மும்பை உள்ளிட்ட 150 வழித்தடங்கள் தற்போது தனியாருக்கு விற்கப்படவிருக்கின்றன.
இவை மட்டுமன்றி ரயில்வே துறையில் புளூ சிப் என்று அழைக்கப்படும், சிறந்த லாபமீட்டும், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் படிப்படியாக தனியாருக்கு விற்கப்படவிருக்கின்றன.
இந்திய ரயில்வேயின் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதில் ஏகபோகமாக, போட்டியின்றி செயல்பட்டு வரும் நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தின் 12.6 சதவீத பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதே போன்று இந்திய ரயில்வே பினான்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் 5% பங்குகளும், ரயில் நிலையங்களில் இணைய இணைப்பு (வைஃபை) கட்டமைப்பை ஏற்படுத்தி வரும் நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தின் 10% பங்குகளும் தனியாருக்கு விற்பனை செய்யப்படவிருக்கின்றன.
படிக்க:
♦ தீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 ! தம்பி பர்சு பத்திரம் !
♦ கார்ப்பரேட் இரயில் : தனியார் கையில் மேலும் 150 இரயில்கள் !
முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில் கட்டணத்தில் வழங்கப்பட்டுவரும் சலுகைகள் அனைத்தும், சமயல் எரிவாயு திட்ட மானியம் படிப்படியாக குறைக்கப்படுவது போல, மறைமுகமாக ஒழிக்கப்படவிருக்கிறது. அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக ரயில் கட்டண சலுகைகளைத் தாமே முன்வந்து கைவிடும் திட்டத்தை அறிவித்திருந்தது மோடி அரசு.
இந்தியாவில் மொத்தம் மூன்று ரயில் இன்ஜின் தயாரிப்பு நிறுவனங்களும், மூன்று ரயில் பெட்டி தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளன. இவற்றை தனியாருக்கு விற்பனை செய்வதன் முதல்படியாக அவற்றை கார்ப்பரேசன்களாக மாற்றப் போகிறார்கள். மேற்குவங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் லேகோ ஒர்க்ஸ், உத்தரப்பிரதேசம் வாரணாசியில் செயல்பட்டுவரும் டீசல் லோகோமோடிவ் ஒர்க்ஸ், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இயங்கிவரும் டீசல் லோகோ மாடர்னைசேஷன் ஒர்க்ஸ் ஆகியவை ரயில் இன்ஜின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ள ரயில் கோச் ஃபேக்டரி, உத்தரப்பிரதேசம், ரேபரேலியில் உள்ள மாடர்ன் கோச் ஃபேக்டரி, சென்னையில் உள்ள இன்டகிரேடட் கோச் பேக்டரி (ஐ.சி.எஃப்) ஆகியவை ரயில் பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. இவைபோக, பெங்களூரில் ரயில் வீல் ஃபேக்டரி என்ற தொழிற்சாலை ரயில் சக்கரங்களைத் தயாரிக்கிறது. இவை அனைத்தும் தனியார் வசம் ஒப்படைக்கப்படவிருக்கின்றன.
ரயில்வே துறை மட்டுமன்றி மற்ற பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்துவிட மோடி அரசு திட்டமிட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்) நிறுவனத்தின் 53.3 சதவீதப் பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறது.
மற்ற எந்த பொதுத்துறை நிறுவனத்தை விடவும் ரயில்வே துறை மக்களுடன் நெருங்கிய பிணைப்பைக் கொண்டுள்ளது. விவசாயத்தின் சீரழிவால் நாடு முழுவதும் துரத்தியடிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் ஆண்டுக்கு ஒருமுறையேனும் தங்கள் சொந்த பந்தங்களைப் பார்க்க ரயில்களே வழிசெய்து கொடுக்கின்றன. சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு அருகிலிருக்கும் சிறு நகரங்கள், கிராமங்களிலிருந்து தினசரி வந்து வேலை செய்து திரும்பும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ரயில்களைத்தான் நம்பியிருக்கிறார்கள். இதுமட்டுமன்றி நகரங்களில் சரக்கு வாங்கி வந்து விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள், மாணவர்கள் என கோடிக்கணக்கான அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் ரயில்கள் பிரிக்கவொன்னா அங்கமாக இருக்கின்றன.
படிக்க:
♦ இனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம்
♦ வாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு !
இப்படிப்பட்ட துறையை, லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தனியார் கார்ப்பரேட்டுகளின் வசம் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் கோடிக்கணக்கான சாமனியர்களின் வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். ரயில்வே வழித்தடங்களை வாங்கும் தனியார் நிறுவனங்கள் செய்யும் முதல் விசயம் முன்பதிவில்லாத (unreserved) பெட்டிகளை ஒழிப்பதுதான். இதனை ஏற்கெனவே மத்திய அரசே ஆரம்பித்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அனைத்து ரயில்களிலும் அன்ரிசர்வ்டு பெட்டிகள் இல்லை.
அடுத்ததாக, பெட்டிகள் அனைத்தும் ஏ.சி. வசதி செய்யப்பட்டவையாக மாற்றுவது, விமான கட்டணம் போல தினசரி மாறும் கட்டண (dynamic pricing) முறை கொண்டுவரவது என தனது நோக்கத்தைப் படிப்படியாக நிறைவேற்றிவருகிறது மோடி அரசு. இதன் மூலம், தரமான சேவை என்ற பெயரில் கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்கும். முதியோருக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுவரும் சலுகைகள் நிறுத்தப்படும். இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும். இவை அனைத்தையும் அரசு ஆரம்பித்துவிட்டாலும் தனியார்வசம் ஒப்படைக்கப்படும் போது இவை முழுமையாக நடந்தேறும்.
ராஜேஷ்