தீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 ! தம்பி பர்சு பத்திரம் !

சென்னை - நெல்லை ‘சுவிதா’ தீபாவளி சிறப்பு இரயிலின் கட்டணம் ரூ. 5300 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி பல ஆயிரம் செலவு செய்தால் தான் பண்டிகைக்கு ஊருக்கு போக முடியும்.

1

மோடியின் ‘புதிய இந்தியா’வில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்ல ரயில் கட்டணம் ரூ. 5,300. தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் பர்சை பதம் பார்த்திருக்கிறது, இந்திய இரயில்வே துறை.

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாள் முன்னதாக அக்-25 அன்று இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயிலில் (82601) இரண்டாம் வகுப்பு ஏ.சி.யில் ஒரு டிக்கெட் ரூ.5300; மூன்றாம் வகுப்பு ஏ.சி. டிக்கெட் ரூ3,745. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப வேண்டுமெனில்,  திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு அக்-28 அன்று இயக்கப்படும் சுவிதா சிறப்பு இரயிலில் (82602) இரண்டாம் வகுப்பு ஏ.சியில் ஒரு டிக்கெட் ரூ. 5,175; மூன்றாம் வகுப்பு ஏ.சி.யில் ரூ. 3,655. ஆக, நபர் ஒன்றுக்கு போக திரும்ப வர குறைந்தபட்ச கட்டணம் ரூ. 7400; அதிகபட்சம் ரூ.10,475.00. நபர் ஒன்றுக்கு சராசரியாக எட்டாயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை செலவழிக்க முடிந்தவன்தான் இனி சொந்த ஊருக்குச் செல்வதை நினைத்துப் பார்க்க முடியும்.

வழக்கமாக, இதுபோன்ற சீசன்களில் விரைவு இரயில்களின் கட்டணத்தில்தான் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும். ஆனால், இரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சந்தையின் டிமாண்டின் அடிப்படையில் சரக்கின் விலையை தீர்மானிப்பது என்ற அடிப்படையில் சுவிதா வகை சிறப்பு இரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

வழக்கமாக இயக்கப்படும் சாதாரண – விரைவு இரயில்களின் கட்டணத்தை விட 20 முதல் 40 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்ட கட்டணம்தான் சுவிதா இரயில்களில் குறைந்தபட்ச கட்டணம். சுவிதா இரயில்களின் அனைத்து டிக்கெட்டுகளும் ஒரே நேரத்தில் விற்கப்படுவதில்லை. 20 சதவிகித டிக்கெட்டுகள் வீதம் ஐந்து சுற்றுகளாக விற்கப்படும். ஒவ்வொரு சுற்றுக்கும் அப்போதைய டிமாண்டுக்கு ஏற்ப அந்த சுற்று டிக்கெட்டின் விலை நிர்ணயிக்கப்படும். அதாவது சந்தைதான் விலையைத் தீர்மானிக்கும்.

ஏலச்சீட்டு நடத்துபவனும், கமிசன் மண்டி வைத்திருப்பவனும் கடைபிடிக்கும் இந்த உத்தியைத்தான் இந்திய இரயில்வே துறை பின்பற்றுகிறது. வார விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் வழக்கமான கட்டணத்தைவிட பலமடங்கு உயர்த்திக் கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்து முதலாளிகளே பரவாயில்லை என்று நினைக்குமளவுக்கு இருக்கிறது, அரசே நடத்தும் கட்டணக்கொள்ளை.

இந்த சுவிதா சிறப்பு இரயில்களில் குழந்தைகளுக்கு முழுக்கட்டணம்; இரயில் புறப்படும் 6 மணி நேரத்திற்கு முன்னால் மட்டுமே ரத்து செய்ய முடியும். அப்போதும்கூட கட்டிய பணத்தில் பாதிதான் கிடைக்கும். அதுக்கும் முன்னரே ரத்து செய்வதென்றால் அதுவும் கிடையாது. குறிப்பாக, இந்த ரயிலில் பொதுப்பெட்டிகளே கிடையாது.

படிக்க:
கார்ப்பரேட் இரயில் : தனியார் கையில் மேலும் 150 இரயில்கள் !
♦ அயோத்தி தீர்ப்பை முன்னதாகவே எழுதிய பாஜக ஆதரவு ஊடகங்கள் !

பண்டிகை காலங்களில் சென்னை முதல் திருச்சி செல்லும் பேருந்துகளில் விழுப்புரம் வரை செல்பவர்களை ஏற்றமாட்டார்கள். வேண்டுமானால், திருச்சி டிக்கெட் எடுத்துக்கொள்வதென்றால் ஏறு எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள் என்பார்கள். அநியாயம் செய்கிறீர்கள் என்று நடத்துனரிடம் நடக்கும் தகராறுகளை பார்த்திருப்பீர்கள்.

இதுவரை ஆம்னி பேருந்து முதலாளிகள் சட்டவிரோதமான முறையில் அடித்துவந்த கொள்ளையை சட்டபூர்வமாக்கியிருக்கிறது, மோடி அரசு. இவர்களை இனி யாரும் கேள்வி கேட்கக்கூட முடியாது. ”சுவிதா ட்ரைன்ல 5000 ரூபா டிக்கெட். என்கிட்ட 4000 தான். இஷ்டம்னா ஏறு. கஷ்டம்னா போயிட்டே இரு” னு சட்டவாதங்களை திமிரோடு எடுத்துரைப்பார்கள். நீங்கள் எங்கு போய் முறையிட முடியும்?

ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, ஜி.எஸ்.டி., பணமதிப்பழிப்பு நடவடிக்கை என மோடியின் அடுத்தடுத்த பொருளாதார தாக்குதல்களால் விவசாயம் அழிந்து, சிறுதொழில் நசிந்து அன்றாட வாழ்க்கையே நிலைகுலைந்து பெருவாரியான உழைக்கும் மக்கள் நாடோடிகளாய் நாட்டின் பல முனைகளுக்குத் துரத்தியடிக்கப்பட்டிருக்கின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் ஓட்டல், டீக்கடைகள், கட்டுமான வேலைகள் உள்ளிட்டு கிடைக்கும் வேலையை செய்து காலந்தள்ளும் அமைப்பு சாராதொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.

பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் ஐ.டி. துறை ஊழியர்களைப் போல வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு சென்று திரும்பும் வாய்ப்பும் வசதியுமற்றவர்கள் இந்த உதிரித் தொழிலாளர்கள். பொங்கல், தீபாவளி போன்ற விசேச நாட்களிலோ தொடர்ந்தார் போல நான்கு ஐந்து நாட்களுக்கு அரசு விடுமுறை அமையும் நாட்களிலோதான் சொந்த ஊருக்கு சென்று திரும்ப முடியும். அவர்களின் பொருளாதார நிலைமை அப்படி.

ஆனால், அமைப்பு சாராத உதிரி தொழிலாளர்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்கூட இனி பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதை பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது, இந்திய இரயில்வே துறை.

அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய இரயில்வே துறையிலே இதுதான் நிலைமை எனில், இனி தனியார் முதலாளிகள் இயக்கப்போகும் இரயில்களை நாம் காட்சிப் பொருளாகத்தான் கண்டு ரசிக்க முடியும் போல!

– இளங்கதிர்

1 மறுமொழி

  1. இந்தளவுக்கு காசு காெடுத்து பாேகின்றவர்கள் இடம் பெயர்ந்து வந்த தாெழிலாளத் தாேழர்களாக இருக்க முடியாது ..எந்தளவு விலை .. கட்டணம் உயர்ந்தாலும் அதை ஈடு கட்ட கையூட்டை அதிகப் படுத்துகிற துறையில் பணியில் இருப்பவர்களும் …மக்களை பல வழிகளில் ஏய்த்து சம்பாதிக்கிற கூட்ட எத்தர்களும் பயணம் செய்ய தயங்குவதில்லை ….! அதை கருத்தில் காெண்டே உயர்த்துகிறார்கள் … பாமர, அன்றாடங்காய்ச்சி மக்களுக்குகான அரசு இங்கே இல்லை …!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க