privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாசுருக்கப்படும் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் !

சுருக்கப்படும் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் !

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், அக்டோபர் மாதம் வரை இந்த ஆண்டு, 2.51 கோடி குடும்பங்களுக்கு பணி மறுக்கப்பட்டுள்ள விவரத்தை வெளியிட்டுள்ளது.

-

ந்தியா மோசமான பொருளாதார மந்த நிலையுடன், வேளாண் பொருளாதாரம் வெறும் 2 சதவீத வளர்ச்சி நிலையில் உள்ளது. அதிர்ச்சியூட்டும் விதமாக ஊரக வேலையின்மை 8 சதவீதமாக உள்ளது. உண்மையில் இந்த நெருக்கடிகளிலிருந்து கிராமப்புற ஏழைகளின் கைகளில் அதிக பணத்தை ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், கொடுத்திருக்கும். ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு இது ஒரு நிரப்புதலைக் கொடுத்திருக்கும்.

ஆனால், அதற்கு தலைகீழான நிலைமையே தற்போது நடந்துகொண்டிருக்கிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலில், அக்டோபர் மாதம் வரை இந்த ஆண்டு, 2.51 கோடி குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் பணி மறுக்கப்பட்டுள்ளன. அதாவது 19 சதவீதம் பேர், ஐந்து குடும்பங்களில் ஒருவர், இந்தத் திட்டத்தின் கீழ் பணி கோரிய நிலையில், பணி மறுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, 13.2 கோடி குடும்பங்கள் பணி கோரிய நிலையில் 10.71 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே பணி தரப்பட்டுள்ளது. சமீப காலங்களில் இது மிக உயர்ந்த விகிதமாகும். ஊரக வேலைவாய்ப்புப் பணிகள் மறுப்பின் அளவானது இந்த ஆண்டு மிகவும் கூர்மையடைந்துள்ளது என புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு 33% அதிகரித்துள்ளது.

மாநிலங்கள் வாரியாக எடுக்கப்பட்ட பகுப்பாய்வில் ஆந்திர பிரதேசமும் தெலுங்கானாவும் பணி மறுப்பில் முன்னணியில் உள்ளன. ஆந்திராவில் பணி கேட்டிருந்த 35 சதவீதம் பேர், அதாவது 61 லட்சம் குடும்பங்கள் பணி மறுப்புக்கு ஆளாகியுள்ளன. தெலுங்கானாவில் 32%, 24 லட்சம் குடும்பங்களுக்கு பணி மறுக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் அரியானாவில் 28 சதவீதம் பேரும், பீகாரில் 26 சதவீதம் பேரும், கர்நாடகாவில் 21 சதவீத பேரும் உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 18 சதவீதம் பேரும் பணி நிராகரிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

படிக்க :
♦ வட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்கள்! இரையாகும் கிராமப் பொருளாதாரம்!!
♦ நூறு நாள் வேலை திட்டம் : 25% நிதியைக் குறைத்த மோடி !

நிதி ஒதுக்குவதலில் சரிவு :

இந்த ஆண்டு இதுவரையில் மத்திய அரசின் நிதி விடுவிப்பு சற்றே குறைவாக இருந்த போதிலும், 10% நிதியை பங்களிக்கும் மாநில அரசுகள் குறைந்த அளவிலான நிதியை மட்டுமே விடுவித்திருப்பதால் இந்த நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.

மத்திய அரசாங்கம் தனது பட்ஜெட்டில் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்துக்கு ரூ. 60,000 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் இதுவரை ரூ. 51,950 கோடியை விடுவித்துள்ளது. அதாவது 86% நிதியை ஒதுக்கியுள்ளது.

இந்த நிதியாண்டில் இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில், இந்தத் திட்டத்தை எப்படி இனி அமலாக்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1000 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இந்தத் திட்டம் முடக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அதுபோல, மாநிலங்களும் எதிர்ப்பார்த்ததைவிட மிகக் குறைவாகவே நிதி விடுவிப்பு செய்துள்ளன. இன்றுவரை அனைத்து மாநிலங்களும் தங்களுடைய இருப்பை பூஜ்ஜிய நிலையிலேயே வைத்திருக்கின்றன.

படிக்க :
♦ சிவக்க வைப்போம் இந்தியாவை ! காரப்பட்டு நவம்பர் புரட்சி தின நிகழ்வு !
♦ நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !

ஆனால், பொருளாதார மந்த நிலை காரணமாக பொது நிதியில் ஏற்பட்டிருக்கும் சரிவை ஈடுகட்ட, இந்த நிதியை ஒதுக்குவதை மாநில அரசுகள் மறுக்கின்றன என்பதே உண்மையான காரணமாகும். இது மாநில அரசுகளின் சுயமான முடிவாகவும் இருக்கலாம், அல்லது மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரிலும் செய்யப்பட்டிருக்கலாம்.

எப்படியாயினும் சென்ற ஆண்டின் நிலுவைத் தொகை ரூ. 5,428 கோடியும் இந்த ஆண்டின் ரூ. 12,546 கோடியும் மாநிலங்கள் ஒதுக்க வேண்டியுள்ளது.

பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருக்கும் காலத்தில், பணிக்கான தேவை அதிகம் உள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் இப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்கின்றன என்பதை நினைவு கொள்ள வேண்டும். சமீபத்திய வெள்ளம் காரணமாக பயிர்கள் அழிவுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கு தேவை அதிகரித்துள்ளது. ஆனால், அரசாங்கம் அதை கருத்தில் கொள்ள மறுக்கிறது. புதிய தாராளவாத கொள்கையால் உந்தப்பட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கியபோதும், குறைந்த அளவு நிதியையே விடுவிக்கிறது. மக்களுக்கு இது இன்னும் துயரத்தை அதிகப்படுத்தும் என்பது தெரிகிறது; வரப்போகிற மாதங்களில் இது இன்னும் மோசமாகலாம்.


கலைமதி
நன்றி :  நியூஸ் கிளிக். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க