அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 05

பிப்ரவரி 20. தனிநபரும் பேனா மையின் நிறமும்

குழந்தைகளின் நோட்டுப் புத்தகங்களை எந்த மை நிரப்பிய பேனாவால் திருத்துவது என்பது பற்றி முன்னர் நான் யோசித்ததில்லை. சிவப்பு மையால் திருத்தினால் என்ன? சமீபத்தில் லேலா இந்த மையின் நிறத்தை ஒரு வளர்ப்புப் பிரச்சினையாகப் பார்க்கும்படி செய்தாள்: நான் திருப்பித் தந்த கணிதப்பாட நோட்டுப் புத்தகத்தைத் திறந்த அவள் அழத் துவங்கினாள்.

“என்ன விஷயம் லேலா?” நான் கவலையோடு கேட்டேன்.

பாடம் தடைப்பட்டது. லேலா அழுகிறாள், திறந்துகிடக்கும் நோட்டுப் புத்தகத்தின் மீது கண்ணீர் துளிகள் விழுகின்றன. அவள் செய்த தப்புகளைத் திருத்திய சிவப்பு மை அழுகிறது.

“என்னால் கணிதப் பாடத்தைப் படிக்க முடியாது!.. என்னால் கணக்குகளைப் போட முடியாது!.. நான் என்ன செய்வது? நான் எப்போதும் தப்பு செய்கிறேன்!.. என் நோட்டுப் புத்தகத்தில் வெறும் சிவப்பு மை மட்டுமே உள்ளது!..”

நான் சிறுமியை சாந்தப்படுத்தி, உற்சாகப்படுத்தினேன். ஆனால் என் முன், மையின் நிறத்திற்கும் குழந்தையின் மனநிலை வளர்ப்பிற்கும் இடையில் இருக்கக் கூடிய தொடர்பு பற்றிய பிரச்சினை தோன்றியது. அதாவது எழுதும் போது குழந்தை செய்யும் தப்புகளைச் சுட்டிக் காட்டித் திருத்த ஆசிரியர் சிவப்பு மையைப் பயன்படுத்துகிறார். நான் எனது பள்ளி நாட்களில் ஆசிரியர் திருப்பித் தரும் நோட்டுப் புத்தகத்தை எப்படிக் கவலையோடு திறந்தேன் என்று நினைத்துப் பார்த்தேன். அதிலிருந்த சிவப்புக் கோடுகள் என்றுமே எனக்கு சந்தோஷத்தை அளித்ததில்லை. “மோசம்! தப்பு! உனக்கு வெட்கமாயில்லையா!” என்றெல்லாம் என் ஆசிரியரின் குரலில் இவை என்னைப் பார்த்துக் கூறியதைப் போலிருக்கும். என் நோட்டுப் புத்தகத்தில் ஆசிரியர் சுட்டிக் காட்டிய தவறுகள் என்னை எப்போதுமே அச்சுறுத்தின, இந்த நோட்டுப் புத்தகத்தைத் தூக்கியெறிய அல்லது என்னை இழிவுபடுத்தியதாக எனக்குப்பட்ட அக்குறிகளடங்கிய பக்கத்தைக் கிழித்தெறியக் கூட நான் விரும்பினேன். சில சமயங்களில் நான் நோட்டுப் புத்தகத்தைத் திரும்பப் பெறும் போது அதில் சிவப்பு மையால் இடப்பட்ட குறிகளைத் தவிர ஒவ்வொரு வரியின் கீழும் வளைகோடுகளும் இடப்பட்டிருக்கும். இந்த வளைகோடுகள் கோபம் கொண்ட எனது ஆசிரியரின் நரம்புகளாக என் கண்களுக்குப் பட்டன.

ஆனால் நான் மாணவன் தானே, எல்லாவற்றையும் பிழையின்றி செய்ய என்னால் முடியாதே! “மோசம்! தப்பு! வெட்கமாயில்லையா!” என்ற இந்தப் பயங்கர சமிக்கைகளைக் கண்டு, என்னால் இந்தப் பிழைகளைத் தவிர்க்க இயலவில்லையே (அதுவும் எளியவற்றை) என்று என் மீது நானே கோபப்படுவேன். இந்த சிவப்பு மையை விரும்பும் ஆசிரியர் மீதும் எனக்குக் கோபம் வரும். “நில்! பிழைகளைத் திருத்தாவிடில் மேற்கொண்டு முன்னால் செல்ல முடியாது!” என்று இந்த சிவப்பு வளைகோடுகள் என்னிடம் கூறின. எனக்கோ முன்னால் செல்ல அவ்வளவு விருப்பம்! பிழைகள் இருக்கட்டுமே, என்னைத் தடுத்து நிறுத்தாதீர்கள்! ஓ, சிவப்பு மையே நீ இல்லாமலிருந்தால், இன்னும் நூறு ஆண்டுகள் விஞ்ஞானிகள் உன்னைக் கண்டுபிடிக்காமலிருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!

இந்த சிவப்புக் குறிகள் எப்படி என் மனநிலையைப் பாழ்படுத்தியிருக்கின்றன, பல சமயங்களில் எப்படிக் கண்ணீரை வரவழைத்துள்ளன! உலகில் உள்ள எல்லா ஆசிரியர்களும் மாணவர்களின் பிழைகளை வேட்டையாடிக் கண்டுபிடித்து அதில் மகிழ்ச்சியடைவதென சதித் திட்டம் தீட்டியுள்ளனர்! இப்படி இருந்தால், நாம் அவர்களுக்கு இவ்வளவு திருப்தி தந்திருக்கலாம்: அனேகமாக நாம் நமது நோட்டுப் புத்தகங்களில் எவ்வித கஷ்டமும் இன்றி ஒரு சில மில்லியன் பிழைகளைச் செய்திருக்கின்றோம்! நமது எழுத்து வேலைகளில் உடனடியாகப் பிழைகளைக் கண்டுபிடிப்பதைத் தவிர வேறு எதையும் பார்ப்பது ஆசிரியர்களின் வேலையில்லையோ என்று எனக்குத் தோன்றும். அதனால் தான் நோட்டுப் புத்தகங்களில் பிழைகளைத் “திருத்துவது” என்று கூறுகின்றார்களோ! “திருத்துவது” என்பது இந்தச் செயலின் சாரத்தை சரிவர வெளிப்படுத்தவில்லை; “பிழைகளைக் கண்டுபிடிப்பது” என்று கூறுவது தான் சரியாக இருக்கும். ஏனெனில் இவர்கள் எதையும் திருத்தவில்லை.

அப்போது இந்த சிவப்புக் குறிகளை நான், எனது எதிர்காலம் பற்றிய அக்கறையால் எனது ஆசிரியர் எனக்களிக்கும் “ஊக்கமாக” பார்த்தேன். ஆனால் அவருக்கு எத்தகைய நல்ல நோக்கங்கள் இருந்த போதிலும் இந்த சிவப்புக் குறிகள் என்னை வருத்தமடையச் செய்தன. ஏனெனில் ஒரு பிழை கூட விடாமல் வேலையை சரிவர நான் செய்யாததால் ஆசிரியருக்கு ஏற்பட்ட எரிச்சலை நோட்டுப் புத்தகத்தில் பார்க்க நான் விரும்பவில்லை, ஆசிரியருடைய அன்பு, மென்மை, பாசம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் அடையாளங்களையே நான் பார்க்க விரும்பினேன். சிவப்புக் குறிகள் என் தோல்விகளைச் சுட்டிக் காட்டின, நானோ எனது முன்னோக்கிய பாதையில் ஆசிரியருக்கு என்ன பிடித்துள்ளது என்றறியத் துடித்தேன்.

ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போது, நான் ஒரு ஆசிரியராக இருக்கும் போது அதைப் பற்றியெல்லாம் மறந்து விட்டேன். நானும் மாணவனாயிருந்தேன், இந்த சிவப்பு மையை நினைத்து கஷ்டப்பட்டிருக்கிறேன் என்பதை மறந்து விட்டு அதே சிவப்பு மையால் என் மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களில் பிழைகளைக் கோடிட்டுக் காட்டுகிறேன். எழுத்து கோணலாக, சாய்வாக எழுதப்பட்டுள்ளதா -அதனடியில் சிவப்புக் கோடு, வாக்கியம் தவறா அதனடியில் சிவப்பு வளைகோடு. எவ்வளவு கவனக் குறைவு, விஷயம் தெரியாமை, திறமையின்மை என்று எண்ணிக் கோபப்படுகிறேன், பதட்டப்படுகிறேன், உணர்ச்சி வசப்படுகிறேன். நானும் ஒரு சமயம் மாணவனாக இருந்தேன் என்பதையும், ஆசிரியரின் சிவப்பு மையை அவள் எப்படிப் பார்க்கிறாள் என்பதற்கும் நான் குழந்தைப் பருவத்தில் எப்படிப் பார்த்தேன் என்பதற்கும் சிறிது கூட வித்தியாசமில்லை என்பதையும் சமீபத்தில் லேலா எனக்கு நினைவுபடுத்தினாள். இதே மாதிரியான சிவப்புக் குறிகளால், கோடுகளால் நான் இவர்களைப் பதட்டமடையச் செய்கிறேன், அழச் செய்கிறேன். நானோ எல்லாம் வேறு மாதிரியாக இருக்க வேண்டும் என்றல்லவா விரும்புகிறேன்.

என்னை இச்சிந்தனைக்கு இட்டுச் சென்ற சிறுமிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இது பின்வரும் “முதுமொழிக்கு” வழிகோலியது:

மனிதாபிமான அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் என் முறையை நான் மேம்படுத்த விரும்பினால், நானும் ஒரு சமயம் மாணவனாக இருந்தேன் என்பதை மறக்கக் கூடாது, அன்று என்னைத் துன்புறுத்திய அதே உணர்வுகள் எனது இன்றைய சிறுவர் சிறுமியரைத் துன்புறுத்தாமலிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறாக குழந்தையைத் தனி நபராக வளர்ப்பதில் என் முன் மையின் நிறம் பற்றிய பிரச்சினை தோன்றியது.

குழந்தை செய்யும் பிழைகளை அடிக்கடி சுட்டிக் காட்டுவது குழந்தைக்கு அதிகம் உதவுமா, அல்லது அவனது வெற்றிகளைக் குறிப்பிடுவது அதிகம் உதவுமா? எப்படிச் செய்யக் கூடாது என்பதன் மீது குழந்தையின் கவனத்தை அதிகம் திருப்ப வேண்டுமா, அல்லது எப்படிச் செய்ய வேண்டும் என்பதன் மீது கவனம் செலுத்த வேண்டுமா? தோல்வி குறித்த வருத்தமா அல்லது வெற்றியின் மகிழ்ச்சியா, எது அவன் வளர்ச்சிக்கு அதிகம் உதவும்? இக்கேள்விகள் அனைத்தையும் ஒரு பிரச்சினையாக ஒன்றிணைத்தால் அது பின்வருமாறு ஒலிக்கக் கூடும்: “மோசம்! தப்பு! வெட்கமாயில்லையா!” என்பது போன்ற எண்ணற்ற குறிப்புகளாக மாறும் சிவப்பு மைக்குப் பதிலாக, “நல்லது! மகிழ்ச்சி! அப்படியே இரு! அற்புதம்!” என்பன போன்ற எண்ணற்ற ஊக்குவிப்புகளாக மாறும் பச்சை மையைப் பயன்படுத்தலாமா?

நிச்சயமாக, இப்பிரச்சினையை ஒரு தலைப்பட்சமாகத் தீர்க்க முடியாது. மையின் நிறத்தின் பின் ஆசிரியரின் கருத்து நிலைகள் உள்ளன, இவற்றில் எதையாவது தேர்ந்தெடுக்க, அல்லது வேறொன்றைத் தேடத் தீவிர சிந்தனை அவசியம். லேலாவுடன் நடந்த சம்பவம் குழந்தைகளின் நோட்டுப் புத்தகங்களில் மையின் நிறத்தை மாற்றும்படி செய்தது. இப்போது என் மேசையில் சிவப்பு மை நிரப்பப்பட்ட பேனாவும் பச்சை மை நிரப்பப்பட்ட பேனாவும் உள்ளன. நோட்டுப் புத்தகங்களைத் திருத்தும் போது எனக்குப் பிடித்தவற்றைச் சுற்றி, நான் வெற்றி என்று கருதுவதைச் சுற்றி பச்சை மையால் கோடிடுகிறேன். இந்தப் பச்சைக் குறிகள் குழந்தைகளின் முயற்சிகளுக்கும் வெற்றிகளுக்குமான என் பாராட்டுகள். ஒவ்வொரு முறை நோட்டுப் புத்தகங்களைத் திருத்தும் போதும் நான் பச்சை மையைப் பயன்படுத்தினால், என் மனநிலை மேம்படுவதையும் அவர்களுக்கு என்ன தெரியும், அவர்களால் என்ன முடியும் என்று அதிகம் அறிய முடிவதையும் உணர்ந்தேன். நான் சிவப்பு மையால் எழுதும் போது வருவதை விட பச்சை மையால் எழுதும் போது கோடுகளும் வட்டங்களும் அடைப்புக் குறிகளும் நன்கு துல்லியமானவையாக வருவதை உணர்ந்தேன்.

அனேகமாக, எரிச்சலை விட சந்தோஷம் அழகானதாயிருக்க வேண்டும், எனவே குழந்தைகளுக்கு சந்தோஷம் தர வேண்டிய மையால் செய்த குறிகள் அழகானவையாக வருகின்றன. சரி, பிழைகளை என்ன செய்வது? குழந்தைகள் எழுதும் போது செய்யும் பிழைகளை முதலில் கல்வி போதனையின் முறையியல் மேம்பாடின்மையின் விளைவாக நான் கருதுவதால், இவற்றை என் பிழைகளாக ஏற்று, தனி நோட்டுப் புத்தகத்தில் சிவப்பு மையால் எழுதுகிறேன். கவனக் குறைவு, கவனமின்மையால் ஏற்படும் பிழைகளை, அதாவது இயந்திரகதியான பிழைகளை ஒரு பிரிவாகச் சேர்க்கிறேன். இத்தகைய பிழைகள் அதிகமிருந்தால் இந்த இயந்திரகதியான பிழைகளைத் திருத்துவதில் பயிற்சியளிக்காமல் கவனத்தை, செயல் முனைப்பை வளர்க்கும் பயிற்சிகளைத் தருகிறேன். திறமையில்லாததால், தெரியாததால், புரியாததால் செய்யும் பிழைகளை வேறு விதமானவையாகக் கருதுகிறேன். இந்தப் பிழைகளுக்கு ஏற்ப புதிய பயிற்சிகளைத் தருகிறேன், எழுத்து வேலைகளைக் கொடுக்கிறேன், அல்லது பாடத்தை மீண்டும் விளக்குகிறேன்.

படிக்க:
அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் !
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !

பிழைகளைத் திருத்துவதை புதிய பாடத்தை கிரகிக்கும் நிகழ்ச்சிப் போக்கில், புதிய வேலைகளைச் செய்வதில் சேர்ப்பது எனும் கோட்பாட்டைப் பின்பற்றுகிறேன். பாடங்களை மேற்கொண்டு படிக்கும் போக்கில் பிழைகளைத் திருத்தும் வாய்ப்பு இருந்தால், குழந்தைகளுக்கு மிக சலிப்பேற்படுத்தும் பிழைத் திருத்தம் என்றழைக்கப் படுபவற்றில் நேரத்தை வீணாக்குவதில் பொருள் இல்லை. இப்படியாக இந்தப் பழக்கமான வேலை என் பாடங்களிலிருந்து மறையும், ஆனால் இதனால் என் வகுப்புக் குழந்தைகளின் வெற்றி ஒரு சிறிதும் குறையாது.

இன்று லேலா என்னிடமிருந்து கணித நோட்டுப் புத்தகத்தைப் பெற்றதும், “இதோ, எவ்வளவு கணக்குகளை நான் போட்டிருக்கிறேன், கணிதப் பாடம் எனக்குப் பிடிக்கும்!” என்று மகிழ்ச்சியாகக் கூறிய போது இந்தப் புதிய அம்சத்தைப் பற்றிய குழந்தைகளின் மதிப்பீட்டை அறிந்தேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க