அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 08

“பள்ளியின் ஆன்மா“

வர்கள் பேசிவைத்துக் கொண்டா வருகிறார்கள்? திடீரென பத்து – பன்னிரண்டு மகிழ்ச்சிகரமான புன்முறுவல்கள் வெடிக்கின்றன.

“வணக்கம்!”

“வணக்கம்!”

கண்களை மூடியபடியே ஒவ்வொரு “வணக்கமும்” யாரால் சொல்லப்பட்டது என்பதை என்னால் யூகிக்க முடியும். வகுப்பில் உயிர் வந்துள்ளது, மலர்களின் மணம்…

“வணக்கம், குழந்தைகளே!” என்று ஒவ்வொருவரிடமும் கையை நீட்டுகிறேன்.

சாதாரணமாக, குழந்தை வகுப்பில் நுழைந்ததும் நேராக என்னிடம் வந்து முகமன் கூறுவான், நான் கை வேலையாக இல்லாமலிருந்தால் கை குலுக்குவோம். இது ஒரு பழக்கமாக எங்கள் வகுப்பில் நிலவி வருகிறது. குழந்தைகள் இந்தக் கை குலுக்கலைப் பெரிதும் மதிக்கின்றனர், இது நாள் பூராவும் எங்களது காரிய ரீதியான மற்றும் நட்பு ரீதியான கூட்டை பலப்படுத்துகிறது.

“இன்று நமக்கு நிறைய வேலைகள் உள்ளன. பெற்றோர்களும் விருந்தினர்களும் வரும் முன் இவற்றைச் செய்து முடிக்க வேண்டும்!”

“செய்து முடிப்போம்!”

“நாம் என்ன செய்ய வேண்டும், பாருங்கள்!”

நான் கரும்பலகையில் எழுதியுள்ளதைக் குழந்தைகள் வாய்விட்டுப் படிக்கின்றனர்:

முதல் பாடம்: ரகசிய பாக்கெட்டுகளை நிரப்பி ஒட்ட வேண்டும்.

இரண்டாவது பாடம்: கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மூன்றாவது பாடம்: மரங்களிடம் விடை பெற வேண்டும்.

நான்காவது பாடம்: எதிர்காலத்தைப் பற்றிப் பேச வேண்டும்.

பின்னர்?

”பின்னர் பெற்றோர்களும் விருந்தினர்களும் வருவார்கள். நாம் நமது நாடகத்தை நடித்துக் காட்டுவோம். பின்னர் ஒருவருடன் ஒருவர் விடை பெறுவோம்.”

“எனக்கு விடை பெற விருப்பமில்லை!”

“வாருங்கள், மணியடிப்பதற்காகக் காத்திராமல் வேலையைத் துவங்குவோம்!”

குழந்தைகள் டெஸ்குகளின் பின் அமருகின்றனர். ஒவ்வொருவரும் டெஸ்க் உள்ளிருந்து ஒரு பாக்கெட்டை எடுத்து காரியத்தில் இறங்குகின்றனர். உள்ளிருப்பதைப் பார்த்து, சரிசெய்து, ஒழுங்குபடுத்துகின்றனர். நான் ஒவ்வொருவரையும் அருகே அழைத்து, ரகசிய பாக்கெட்டில் என்ன இருக்கிறது என்று பார்த்து, அதில் குழந்தையைப் பற்றிய விவரங்களடங்கிய தாளைப் போட்டு, அதை ஒட்ட அனுமதி தர வேண்டும். – முதல் அரையாண்டு முடிவில் இதே போன்ற முதல் பாக்கெட்டுகளைப் பெற்றோர்கள் பெற்றனர். இது இரண்டாவது பாக்கெட். முதல் பாக்கெட்டைப் பற்றிய இவர்களுடைய கருத்துக்களை வைத்து பார்த்தால் இந்த இரண்டாவது பாக்கெட்டிற்காக இவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க வேண்டும்.

இது என்ன ரகசிய பாக்கெட்? ஏன் பாக்கெட்? ஏன் ரகசியம்? இதற்கான பதில்கள் என்னிடம் உள்ளன, இவற்றிற்கு என் சிந்தனைகளும் பரிசோதனையும் ஆதாரம்.

பூர்வாங்கத் தயாரிப்பிற்காகப் பள்ளிக்கு வந்துள்ள ஆறு வயது மாணவர்களுக்கு மதிப்பெண்கள் போடக் கூடாது. எனது இளம் மாணவர்களுக்கு முதல் வகுப்பிலோ, இரண்டாவது வகுப்பிலோ, மூன்றாவது வகுப்பிலோ நான் நீண்ட நாட்களாகவே மதிப்பெண்களைப் போடுவதில்லை. என் கருத்துப்படி, மதிப்பெண்கள் காலுடைந்த போதனை முறையின் ஊன்றுகோல், ஆசிரியரின் அதிகாரத்தை நிலை நாட்டும் தடியாகும். ஊன்று கோல்களுடன் வகுப்பறையில் நுழைவது, ஆறு வயதுச் குழந்தைகளின் கண்களில் படும்படி தடியை வைத்து படிப்பு சொல்லித் தருவது என்பது எனக்கு போதனை முறையின் ஒழுங்கின்மையாகப்படுகிறது. இந்த மதிப்பெண்கள் யாருக்கு வேண்டும்?

“குழந்தைகளுக்கு!” என்று ஒரு சில ஆசிரியர்கள் கூறுவது காதில் விழுகிறது.

இல்லை, என்னருமை சக ஆசிரியர்களே! இவை குழந்தைகளுக்கு வேண்டவே வேண்டாம்! மதிப்பெண்கள் என்றால் என்ன, இவை எதற்காகக் கண்டு பிடிக்கப்பட்டன, யாருடைய வாழ்க்கையை இவை எளிதாக்குகின்றன என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியாது. ஆசிரியர்களும் பெற்றோர்களுமாகிய நாம்தான் குழந்தைகளுக்கு மதிப்பெண்களைப் பற்றிச் சொல்லித் தருகிறோம், இவற்றின் மீது இவர்களுக்கு வெறியையே ஏற்படுத்துகிறோம், பின்னர் இவர்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்கப் பாடுபடும் போது, இந்த மதிப்பெண்களுக்காகப் படிக்கத் துவங்கும் போது, “பார்த்தீர்களா, குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் எப்படி அவசியம், இவை இல்லாவிடில் படிக்கவே மாட்டார்கள்” என்று கூறுகிறோம்.

நான் பல்வேறுவிதமான மதிப்பெண்களுடன் அன்றாடம் வகுப்பிற்கு வந்தால், இதோ தமது ரகசிய பாக்கெட்டுகளில் மூழ்கியிருக்கும் இந்த ஆறு வயதுக் குழந்தைகளுக்கு வாழ்க்கை எப்படியிருந்திருக்குமென என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க இயலவில்லை. “சிக்கலான கணக்கைத் தரட்டுமா?” என்று எப்படி நான் அவர்களிடம் கூற முடியும்? நானே எப்படி “பிழை செய்யத்” துணிவது? பாடத்தில் வாழ்க்கைக் கோட்பாடும் காரிய ரீதியான உறவுகளின் கோட்பாடும்… குழந்தைகளின் முன்னோக்கிய அறிதல் வளர்ச்சிக் கோட்பாடும் எங்கு போயிருக்கும்? கசப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும் விதைகளை விதைத்து எப்படி நான் ஒவ்வொரு சிறுவனுக்கும் மகிழ்ச்சியைத் தரமுடியும்?

குழந்தைகளுக்கு மதிப்பெண்களே தேவையில்லை. ஏனெனில் படிப்பு என்பதை புதியவற்றை அறியும் முயற்சிகளின் வளர்ச்சிப் போக்காக நாம் மாற்றினால், நமது நிர்ப்பந்த நடவடிக்கைகளை அவர்கள் உணராமலிருந்தால் அவர்கள் மதிப்பெண்கள் இல்லாமலேயே படிப்பார்கள். தாங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை விட எவ்வளவு முன்னால் இருக்கிறோம் என்றோ அல்லது மற்றவர்களிடமிருந்து பின் தங்கியுள்ளோம் என்றோ அறிந்து கொள்வதும் மாணவர்கள் “புத்திசாலிகள்”, “மந்தமானவர்கள்” “நன்கு படிப்பவர்கள்”, “பின்தங்கியுள்ளவர்கள்” என்றெல்லாம் பிரிக்கப்படுவதைத் தெரிந்து கொள்வதும் குழந்தைகளுக்கு அவசியமே இல்லை.

ஒவ்வொரு குழந்தையின் மன நிலையையும், குறிப்பாக யாரையெல்லாம் வெறுமனே “மந்தமானவர்கள்”, “பின் தங்கியவர்கள்” என்று கருதுகின்றோமோ அவர்களின் மனநிலையை நம்மால் தெரிந்து கொள்ள முடியாததற்காக, இவர்களுக்கு (இப்போது விஞ்ஞானத்தில் கூறுகின்றார்களே அதே போல்) மிகவும் ஏற்புடைய தனிப்பட்ட முறையை ஏற்படுத்த முடியாமைக்காக மேற்கூறிய பிரிவு குழந்தைகள் முன் நம்மை வெட்கமடையச் செய்யவில்லையா? சுருட்டை முடியுடைய எனது வகுப்புச் சிறுவன் ஒருவன் முன், அவன் சோகமாகப் பார்க்கும் போது நான் வெட்கித் தலை குனிகிறேன். “என்னால் தனியாக ஒன்றும் செய்ய முடியாது! நீதான் பெரியவன் ஆயிற்றே, புத்திசாலி ஆயிற்றே. என்னைத் தொல்லையில் விடாதே!” என்று அக்கண்கள் என்னை நோக்கிக் கூறுவது போலிருக்கும்.

“அவன் மந்தமானவன், பின் தங்கியவன்” என்று ஆசிரியர் கூறுகிறார். ஆனால் இது நமது பலவீனத்தை நியாயப்படுத்துவதாகாதா? நாம் அவனை பலவீனமானவனாகக் கருதினால் நம்மை நாமே எப்படி மதிப்பிடுகிறோம்? நான் ஆசிரியர்கள் நடத்தும் பல பாடங்களைப் பார்த்திருக்கிறேன், அவர்களுக்கு நிச்சயமாக பெயில் மதிப்பெண் போட்டு அதை அவர்களின் உழைப்புப் பதிவேட்டில் எழுதலாம். இப்படிப்பட்ட ஆசிரியர்களால் “ஊன்று கோல்களும்”, “தடிகளும்” இல்லாமல் வகுப்பறையில் நுழைய முடியாது தான், இவர்களோ இம்மாதிரி பாடத்தை நடத்தி இப்பாடத்தில் தம் மாணவர்களுக்கு பெயில் மதிப்பெண்களையும் நல்ல மதிப்பெண்களையும் போடுகின்றனர்! என்ன விந்தை!

நெடுங்காலத்திற்கு முன், கையில் கம்புடன் குழந்தையை பள்ளிக்கு கூட்டிச் சென்று திரும்ப அழைத்து வருபவரை ஆசிரியர் என்றனர். ஆனால் பின்னர் இச்சொல் முற்றிலும் வேறு உள்ளடக்கத்தைப் பெற்றது: ஆசிரியர் என்றால் குழந்தைக்குப் படிப்பு சொல்லித் தந்து வளர்ப்பவர் என்றாயிற்று. ஆசிரியராக, குழந்தையை வளர்ப்பவராக மாறியதும் இவர் தன் கம்பை விட்டெறிந்தாரா? இல்லை! மத்திய கால ஓவியங்களிலும் படங்களிலும் ஆசிரியர் தன் வலது கையில் கம்பு அல்லது பிரம்புக் கட்டையும் இடது கையில் திறந்த புத்தகத்தையும் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்குக் கல்வி போதிப்பதைக் காணலாம். ஒரு வேளை நமது மதிப்பெண்கள் உருமாறிய கம்பு அல்லது பிரம்புக் கட்டோ? ஆரம்ப வகுப்பில் யாருக்கு மதிப்பெண்கள் வேண்டும்?

ஆறு வயதுக் குழந்தைகளுக்கா? அவர்களுக்கு இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளக் கூட விருப்பமில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் – பள்ளியிலும் வீட்டிலும் வெளியிலும் – அவர்கள் வாங்கிய மதிப்பெண்களைப் பொறுத்து தான் நாம் அவர்களை எடை போடுகிறோம், மதிப்பிடுகிறோம் என்று காட்டும் போது, குழந்தைகள் என்னதான் செய்வார்கள்? அவர்கள் நம்மை முழுமையாகச் சார்ந்திருப்பதைப் புரிந்து கொள்கின்றனர், நாம் இல்லாமல் வாழ அவர்கள் விரும்பவில்லை, அவர்கள் நம்மை நேசிக்கின்றனர், எனவே நம்மை திருப்திப்படுத்த, சந்தோஷப்படுத்த மதிப்பெண்களை நாடுவதைத் தவிர வேறு வழி அவர்களிடம் இல்லை.

இவ்வாறாக பிரச்சினை, குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் தேவை என்பதில் இல்லை; மதிப்பெண்கள் இருப்பதை ஆரம்ப வகுப்பு ஆசிரியர் மறந்து விட்டு, தன் அதிகாரத்தைக் குறிக்கும் தடியை வீசியெறிந்து விட்டு வெறுமனே வந்து குழந்தைகளுக்குக் கல்வி போதித்து வளர்க்க முடியுமா என்பதில்தான் பிரச்சினை அடங்கியுள்ளது. இதைச் செய்வது எளிதா?

இல்லை, தன் தடியையும் மதிப்பெண்களையும் விட்டுப் பிரிவது ஆசிரியருக்கு எளிதல்ல. ஏனெனில் எந்த கல்வி போதனை, குழந்தை வளர்ப்பு முறைக்கு ஆசிரியர் மிகவும் பழக்கப்பட்டு விட்டாரோ அந்த முறை இவற்றுடன் தொடர்புடையது. கல்வி முறையியலை மாற்றியமைப்பது என்றால் முறைகள், வழிகள், படிப்பு சொல்லித் தரும் வகைகளை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளின் தொகுப்பு என்று பொருளாகாது; ஆசிரியர் தன்னையே, தன் கண்ணோட்டங்களை, கருத்துக்களை, தன் அனுபவத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.

படிக்க:
பிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு !
துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !

இப்படி முறையியலையும் இதன் மூலம் தன்னைத் தானேயும் மாற்றியமைப்பது யாருக்குப் பிடிக்காது தெரியுமா? யார் ஒரே மாதிரியாக, இயந்திரகதியில் வேலை செய்கின்றார்களோ, யாருக்கு முதல் வரிசையிலும் மூன்றாவது வரிசையிலும் உட்கார்ந்துள்ள குழந்தைகள் ஒரே மாதிரியானவர்களாகப் படுகின்றனரோ (இது எல்லோரையும் ஒரே மாதிரியாக அணுகும் ஆசிரியரின் வாழ்க்கையை எளிதாக்குகிறது) அந்த ஆசிரியருக்குப் பிடிக்காது.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க